Read in : English

Share the Article

கொரொனா பெருந்தொற்று காரணமாகத் தமிழ்நாட்டில் தியேட்டர்கள் முடங்கிப்போயிருந்த நிலைமை சற்றே மாறத் தொடங்கியிருக்கிறது. அண்மையில் வெளியான, சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் திரைப்படம் திரையரங்குகளில் வசூலைக் குவிக்கிறது என்கிறார்கள்.

இதனால் இந்தப் படத்தின் இயக்குநர் நெல்சன் திலிப்குமாருடைய சந்தை மதிப்பும் கூடியிருக்கிறது. ஏனெனில், சிவகார்த்திகேயனின் சமீபத்திய படங்கள் பெரிய வெற்றியைக் கொடுக்காத நிலையில் அவருக்கு நம்பிக்கையூட்டிய இயக்குநராக மாறியிருக்கிறார் நெல்சன். சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தையும் அவர் இயக்கப்போவதாகத் தகவல்கள் வருகின்றன.

ஏற்கெனவே நடிகர் விஜயின் பீஸ்ட் படத்தை அவர் இயக்கிவருகிறார். 2018இல் வெளியான கோலமாவு கோகிலா என்ற சராசரியான பொழுதுபோக்குப் படத்தின் மூலம் அவர் இயக்குநராக அறிமுகமானார்.

தமிழ்த் திரையுலகில் அடுத்த தலைமுறை இயக்குநர்கள் காலூன்றத் தொடங்கிவிட்டார்கள் என்பதன் அறிகுறியாக நெல்சன் போன்ற சமீப கால இயக்குநர்களின் வெற்றியைப் பார்க்க முடிகிறது. கடந்த சில ஆண்டுகளில் வெளியான படங்களில் கவனத்தை ஈர்த்த இயக்குநர்கள் பற்றிய விவரத்தை அறியும்போது ஒரு சுவாரசியமான விஷயம் பளிச்சிடுகிறது. இதுவரை தமிழ்த் திரையுலகில் பெயர் வாங்கிய இயக்குநர்களைப் பார்த்தீர்கள் என்றால், அவர்கள் வெறும் வணிகப் படங்களை மட்டும் இயக்கியவர்களாக இருக்க மாட்டார்கள்.

பாரதிராஜா காலம் தொடங்கி வெற்றிமாறன், பா.இரஞ்சித் காலம்வரை இதுதான் நியதி. இந்தப் போக்கில் சிறிய மாற்றம் தென்படுகிறது. அதன் அறிகுறியாலேயே நெல்சன் போன்ற பொழுதுபோக்குப்படத்தை இயக்கியவர்களும் இயக்குநர்கள் என்னும் பெயரில் அறியப்படுகிறார்கள்.

தொண்ணூறுகளில் மணிரத்னம், ஷங்கர் போன்ற இயக்குநர்கள் படங்களை இயக்கத் தொடங்கிய காலத்து நிலைமைக்கும் இப்போதைய நிலைமைக்கும் ஒரு பெரிய வேறுபாடு இருக்கிறது. அதற்கு முந்தைய எண்பதுகளில் காலத்தில் எஸ்பி.முத்துராமனும் இயக்குநராக இருந்தார்; மகேந்திரனும் இயக்குநராக இருந்தார். ஆனால், இருவருக்குமிடையேயான வேறுபாடு இருந்துகொண்டுதான் இருந்தது.

புவனா ஒரு கேள்விக் குறி, ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது, எங்கேயோ கேட்ட குரல் போன்ற மாறுபட்ட கதையம்சம் கொண்ட படங்களை இயக்கியவராக எஸ்பி.முத்துராமன் இருந்தபோதும், அவர் சகலகலா வல்லவன், முரட்டுக்காளை போன்ற பொழுதுபோக்குப் படங்களாலேயே அதிகம் அறியப்பட்டிருந்தார். ஆனால், உதிரிப்பூக்கள் மகேந்திரனுக்குத் திரையுலகில் கிடைத்த இடம் வேறு மாதிரியானது. அவர் ஜானி போன்ற வணிகச் சூத்திரத்தின் அடிப்படையிலான படத்தை இயக்கியபோதும், அது மகேந்திரனின் முத்திரையுடன் அமைந்திருந்தது.

அதுதான் இயக்குநரின் ஆற்றலுக்கும் ஆதிக்கத்துக்கும் சான்று. மகேந்திரனும் எஸ்பி முத்துராமனும் இணைந்தும் ஆடுபுலி ஆட்டம், தையல்காரன் போன்ற படங்களில் பணியாற்றியிருக்கிறார்கள். ஆனாலும் இருவருக்கும் இடையே இருந்த வேறுபாடு தெளிவாக வெளித் தெரிந்தது.

தொண்ணூறுகளில்கூட ஷங்கர் ஆக்‌ஷன், காமெடி கலந்த பொழுதுபோக்குப் படங்களால்தான் அதிகம் அறியப்பட்டார், ஆனால் மணி ரத்னத்துக்கு அளிக்கப்பட்ட இடம் வெறும் ஆக்‌ஷன், பொழுதுபோக்கு இயக்குநருக்கானதில்லை. இப்போதைய திரைப்பட இயக்குநர்களின் பயணத்தில் இப்படியான இடைவெளி சுத்தமாக அழிந்துவருகிறதோ என்ற எண்ணமே ஏற்படுகிறது.

கலைப் படம், வணிகப் படம் என்ற இடைவெளி இப்போது இல்லை. இவை இரண்டும் கலந்த படமாக அது மாறியிருக்கிறது. ஆழமான கதையம்சம் கொண்ட படம் காலாவதியாகிவிட்டதோ என்னும் அளவுக்குத் தமிழ்த் திரைப்படங்களில் திரைக்கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் போன்ற மாறுபட்ட திரைக்கதை வருகிறது ஆனாலும், பாக்யராஜ் அளவுக்குத் தெளிவான திரைக்கதையை எழுதும் இயக்குநர்கள் இப்போது யார் என்பதைத் தேடித்தான் பார்க்க வேண்டியதிருக்கிறது.

பாலுமகேந்திராவின் சீடரான பாலா இயக்க வந்தபோது, பொழுதுபோக்குப் படத்துக்கும் தீவிரப் படத்துக்குமான இடைவெளி குறையத் தொடங்கியது. சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள் எனத் தொடர்ந்து அவர் உருவாக்கிய அனைத்துப் படங்களும் பொழுதுபோக்குக் கதையம்சத்துடன் உருவாக்கப்பட்டிருந்தாலும் அவருடைய படங்கள் மாற்றுப்படங்கள் என்ற மயக்கத்திலேயே மதிப்பிடப்படும்.அவன் இவன் போன்ற சராசரிக்கும் கீழான படங்கள் கூட பாலா படம் என்ற மதிப்புடன் அணுகப்பட்டன. பாலுமகேந்திராவின் மற்றொரு சீடரான வெற்றிமாறன் பொழுதுபோக்குப் படங்களைக் கலாபூர்வமான முறையில் உருவாக்கும் இயக்குநராக இருக்கிறார்.

 

இவருக்கும் அடுத்த தலைமுறை இயக்குநர்கள்தாம் இப்போது உருவாகிவருகிறார்கள். இவர்களை முந்தைய தலை முறையிலிருந்து வேறுபடுத்துவது அவர்களது பின்னணியும் படங்களை உருவாக்கும் முறையும். ஓர் இயக்குநரிடம் உதவி இயக்குநராகப் பல ஆண்டுகள் இருந்து பிறகு படம் இயக்க வந்தவர்கள் அல்ல இவர்கள். நெல்சனையே எடுத்துக்கொண்டால், அவர் விஷுவல் கம்யூனிகேஷன் முடித்துவிட்டு தொலைக் காட்சியில் ரியாலிட்டி ஷோவில் பணியாற்றி அப்படியே சினிமாவுக்கு வந்திருக்கிறார்.

எண்பதுகளின் மத்தியில் ஊமைவிழிகள் திரைப்பட வெற்றியைத் தொடர்ந்து திரைப்படக் கல்லூரியில் படித்துமுடித்த மாணவர்கள் பலர் திரைத் துறையில் காலடி பதித்தார்கள். அதைப் போல் இப்போது விஷுவல் கம்யூனிகேஷன் முடித்து திரைத்துறைக்கு வருபவர்கள் அநேகர்.

சமீப ஆண்டுகளில் முதல் படத்தை இயக்கி, கவனிக்கத் தக்க அளவில் பெயரைப் பெற்றவர்கள் என துருவங்கள் பதினாறு கார்த்திக் நரேன், சதுரங்க வேட்டை வினோத், இரும்புத்திரை பி. எஸ். மித்ரன், உறியடி விஜய குமார், கிடாரி பிரசாத் முருகேசன், மாநகரம் லோகேஷ் கனகராஜ், பாம்புச் சட்டை ஆடம் தாசன், எட்டுத் தோட்டாக்கள் ஸ்ரீகணேஷ், ஒரு கிடாயின் கருணை மனு சுரேஷ் சங்கையா, புரியாத புதிர், இஸ்பேட் ராஜாவும் இதயராணியும் ரஞ்சித் ஜெயக்கொடி, அறம் மீஞ்சூர் கோபி, பரியேறும் பெருமாள் மாரி செல்வராஜ், ராட்சசன் ராம் குமார், 96 பிரேம் குமார், ஜீவி வி ஜே கோபிநாத், க/பெ ரணசிங்கம் பி விருமாண்டி எனச் சிலரைக் குறிப்பிடலாம். சிலர் விடுபட்டிருக்கக்கூடும். இவர்களில் தொடர்ந்து ஒரு படத்துக்கு மேல் படங்களை இயக்கியவர்கள் எனப் பார்க்கும்போது, பலர் பட்டியலிலிருந்து விலகிவிடுகிறார்கள். இருட்டு அறையில் முரட்டுக் குத்து சந்தோஷ் பி ஜெயகுமார், திரௌபதி மோகன் ஜி ஆகியோர்களும் இதே தமிழ்த் திரையுலகில் இயக்குநர்கள் என அறிப்பட்டிருப்பது நகைமுரணே.

மிக இளைய வயதில் இயக்குநராகிவிட்ட கார்த்திக் நரேன் துருவங்கள் பதினாறு மூலம் கவனம் பெற்றிருந்தார் என்றபோதும் அந்தப் படம் மிகவும் சாதாரண த்ரில்லர் வகையைச் சார்ந்ததே. அதன் பின்னர் அவர் இயக்கிய மாஃபியா மிகவும் சுமாரான படமே. இரும்புத் திரையில் புதுமையாக இயக்குநராக வெளிப்பட்ட மித்ரன், ஹீரோ படத்தில் மிகச் சாதாரண இயக்குநராக மாறியிருந்தார்.

உறியடி வழக்கத்திலிருந்து சற்று மாறுபட்ட படம் என்ற அளவில் பொருள்கொள்ளத்தக்கதே தவிர உறியடி 1, 2 ஆகிய படங்களை வைத்து அவர் பிரமாதமான இயக்குநர் என்று சொல்லிவிட முடியாது. இயக்குநர் என்ற வகையில் மதிப்பிடும்போது, லோகேஷ் கனகராஜின் மாநகரம் ஈர்த்த அளவுக்கு அவருடைய கைதியோ மாஸ்டரோ ஈர்க்கவில்லை. ரஞ்சித் ஜெயக்கொடியின் இரண்டு படங்களுமே மாறுபட்டவைதாம். முதல் படமான புரியாத புதிர் கிம் கி டுக்கின் பியட்டா படத்தை நினைவூட்டியது.

இயக்குநராகச் சொல்லிக்கொள்ளும்படியான படங்களைத் தரும் முனைப்பு அவருக்கு உள்ளது என்பதை அவருடைய படங்கள் சொல்கின்றன. பிரசாத் முருகேசன், ஆடம் தாசன், சுரேஷ் சங்கையா, பி.விருமாண்டி ஆகியோரது அடுத்தடுத்த படம் வெளிவரும்போதுதான் அவர்கள் எப்படி இயக்குநராகப் பரிணமிக்கிறார்கள் என்பதைச் சீர்தூக்கிப் பார்க்க இயலும்.

ராம் குமார் இயக்கிய ராட்சசன் பெரிய வெற்றியைப் பெற்றது என்றபோதும், அந்தப் படத்தை அவர் கையாண்டவகையில் வெற்றிபெற்ற படத்தின் இயக்குநர் என்று அவரைச் சொல்ல முடிகிறதே ஒழிய வெற்றிகரமான இயக்குநர் என்று சொல்ல முடியவில்லை.

96 வழக்கமான காதலை வழக்கத்துக்கு மாறாகச் சொன்ன படம். ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு காதல் படம் ரசிகர்களுக்குத் தேவையாயிருக்கிறது. ஒரு தலை ராகம், இதயம், காதல் கோட்டை, ஆட்டோ கிராப் வரிசையில் 96 இடம்பெற்றிருக்கிறது. அவ்வளவுதான். பிரேம் குமார் சிறப்பான இயக்குநராக என்பதைச் சொல்தல் கடினம்.

தொடர்ந்து இரண்டு படங்களையும் நம்பிக்கை ஊட்டும் வகையில் தந்திருக்கிறார் மாரி செல்வராஜ். ஆகவே, அவர் மீது நம்பிக்கைகொள்ள முடிகிறது. தனது மூன்று படங்களிலும் சொல்லிக்கொள்ளும்படியான ஆளுமையைச் செலுத்தியவர் என ஹெச். வினோத் இருக்கிறார். சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை என ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையாக இருந்தது. அடுத்து அஜித்தின் வலிமையை இயக்கிவருகிறார். தொடர்ந்து ஓர் இயக்குநராக அவர் சாதித்திருக்கிறார் என்று நம்புவதற்கான சான்றுகள் இப்படங்கள்.

இயக்குநர் சிகரம் என்ற பெயரை பால்சந்தருக்குக் கொடுத்து தமிழ்த் திரையுயலகம் கௌரவித்திருக்கிறது. ஆனால், அவரைவிட சினிமாவை ஒழுங்காகக் கையாண்டு வெற்றிபெற்றவர் என ஸ்ரீதரைத் தான் சொல்ல முடியும். அவர் பொழுதுபோக்குப் படங்களை இயக்கியவர் என்ற வகையில் அறியப்பட்டிருந்த போதும் சினிமாவை சினிமாவாக உருவாக்கியவர் அவர்.

இப்போதைய இயக்குநர்களில் ஒரு ஸ்ரீதரோ, பாலசந்தரோ பாரதிராஜாவோ பாலுமகேந்திராவோ உருவாவார்களா என்பது சந்தேகமே. வேண்டுமானால், ஒரு ஷங்கரோ, மணிரத்னமோ உருவாகலாம். ஏனெனில், காலம் பெரிய அளவில் மாறியிருக்கிறது. அதற்கேற்பத் தான் இயக்குநர்களும் வெளிப்படுவார்கள்.

தமிழ் இதழ்களில் முன்னர் பொழுதுபோக்கு இதழ்கள், தீவிர இலக்கிய இதழ்கள் என்ற வேறுபாடு பெரிய அளவில் இருந்தது. இப்போது அப்படியான வேறுபாடு அழிந்துவிட்டது. தீவிர இலக்கிய இதழ்களில் எழுதிய பலர் பொழுதுபோக்கு இதழ்களில் பணியாற்றத் தொடங்கிய பின்னர் ஏற்பட்ட மாற்றம் இது. அது போல் தமிழ் சினிமாவின் இயக்கத்திலும் ஒரு புதிய பரிணாம வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. புத்தாயிரத்தின் நவீன இளைஞர்கள் திரைத்துறையில் புகுந்திருக்கிறார்கள். அவர்கள் உலகப் படங்களையும் இணையத் தொடர்களையும் பார்த்த மயக்கத்தில் படமெடுக்க வந்திருக்கிறார்கள். அது அவர்களுடைய படங்களில் வெளிப்படுகிறது. தொழில்நுட்பம் அவர்களுக்குக் கைகொடுக்கிறது.

மேலும், அந்தக் கால இயக்குநர்களுக்குக் குறைந்தபட்சம் பத்து ஆண்டுகள் அவர்கள் இயக்குநராகக் கோலோச்ச கால அவகாசம் இருந்தது. ஆனால், இப்போது படம் இயக்கும் இயக்குநர்களுக்கு அந்தக் கால அவகாசம் இல்லை என்பது வெளிப்படையான விஷயம். இரண்டு மூன்று படங்கள் இயக்கிய பிறகே அவர்களைத் தேடத் தான் வேண்டியதிருக்கிறது. அதற்குள் அவர்கள் பணத்தைச் சம்பாதிப்பார்களா, பெயரைச் சம்பாதிப்பார்களா என்னும் கேள்விக்குக் காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.


Share the Article

Read in : English

What the Tamil Nadu Organic policy needs Music to homecoming Chennaiites: the sound of the Chennai auto Should you switch from meat to plant-based alternatives? Indian kitchen staples are great for building immunity Pickle juice for muscle cramps? Find out more fascinating facts about pickles