Read in : English
இந்தக் காலத்தில்கூட ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் மிருதங்க இசை உலகில், இந்திய விடுதலைக்கு முந்தைய காலத்திலேயே மிருதங்கம் வாசித்து புகழ் பெற்றவர் திருக்கோகர்ணம் டி.எஸ். ரெங்கநாயகி அம்மாள் (1910 -1998). இவர்தான் முதல் பெண் மிருதங்க வித்வானும்கூட.
மைசூர் மகாராஜா அரண்மனையில் தாயார் மதுரை சண்முகவடிவுக்குப் பதிலாக எம்.எஸ். சுப்புலட்சுமிக்கு முதன் முதலாக மேடையேறும் வாய்ப்புக் கிடைத்தபோது, அப்போது அவருக்கு மிருதங்கம் வாசித்தவர் ரெங்கநாயகி. எம்.எஸ். சுப்புலட்சுமியின் தாயார் மதுரை சண்முகவடிவுக்கும் மிருதங்கம் வாசித்திருக்கிறார் அவர்.
அரியகுடி ராமானுஜ அய்யங்கார், டி.ஆர். மகாலிங்கம், மைசூர் சௌடையா, வீணை தனம்மாளின் மகளான சென்னை லட்சுமி ரத்னம்மாள், எம்.எல். வசந்தகுமாரி, அவரது தாயார் லலிதாங்கி, டி.கே.பட்டம்மாள், கே.பி.சுந்தராம்பாள்…இப்படி அந்தக் கால இசை பிரபலங்களுக்காக ரெங்கநாயகி மிருதங்கம் வாசித்திருகிகறார்.
1926ஆம் ஆண்டில் சென்னையில் நடந்த காங்கிரஸ் மாநாட்டையையொட்டி நடைபெற்ற இசை மாநாட்டில் தனது 17 வயதில் திருவனந்தபுரம் மகாவித்வான் லட்சுமண பிள்ளையின் வீணை இசை நிகழ்ச்சியில் மிருதங்கம் வாசித்தார் அவர். அதையடுத்து, அங்கு நடந்த உஸ்தாத் அப்துல் கரீம் கானின் இந்துஸ்தானி இசை நிகழ்ச்சியிலும் அவருக்கு மிருதங்கம் வாசிக்கும் வாய்ப்பு கிடைததது.
புதுக்கோட்டை சமஸ்தானத்தில் ஆஸ்தான வித்வானாக விளங்கிய சிவராம நட்டுவனாருக்கும் நல்லம்மாளுக்கும் (இவரது நெருங்கிய உறவினர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி) இரண்டாவது மகளாக 1910ஆம் ஆண்டில் மே 28ஆம் தேதி பிறந்தவர் ரெங்கநாயகி. புதுக்கோட்டை அடப்பன் வயலில் இருந்த சிவராம நட்டுவனாரின் நண்பரான தட்சிணாமூர்த்தி பிள்ளையிடம் 13 ஆண்டுகள் குருகுலவாசம் இருந்து மிருதங்கம் கற்றார். 13 வயதில் புதுக்கோட்டை சமஸ்தான வித்வான் இலுப்பூர் பொன்னுசாமி பிள்ளை, அவரது புதல்வர் ராமச்சந்திரம் பிள்ளை ஆகியோர் வயலின் வாசிக்க ரெங்கநாயகி அம்மாளின் மிருதங்க அரங்கேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. சிறிய வயதில் பரத நாட்டியத்தை முறைப்படி கற்றிருந்தாலும்கூட, 15 வயதில் நாட்டியம் ஆடுவதை நிறுத்தி விட்டு மிருதங்கத்தில் முழுவதும் இறங்கிவிட்டார்.
திருச்சி அகில இந்திய வானொலியில் அவரது இசை நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகியுள்ளன. அங்கு இசைக் கலைஞர்களைத் தேர்வு செய்யும் குழுவிலும் இருந்திருக்கிறார். இசை நிகழ்ச்சி நடத்துவதற்காக சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளுக்கும் சென்று வந்திருக்கிறார். 1966ஆம் ஆண்டில் திருப்பதி ஸ்ரீ பத்மாவதி கல்லூரியில் மிருந்தங்க ஆசிரியராக ஏழு ஆண்டுகள் பணியாற்றினார். அதன் பிறகு மதுரையில் உள்ள ஸ்ரீ சத்குரு சங்கீதா சபாவில் பகுதி நேரமாக மிருதங்க ஆசிரியராகப் பணியாற்றினார்.
1971-72 ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருதை அன்றைய முதல்வர் கருணாநிதியிடமிருந்து பெற்றார். அப்போது அவருடன் கலைமாமணி விருது பெற்றவர் ஜெயலலிதா 1977ஆம் ஆண்டில் அப்போதைய முதல்வர் எம்ஜிஆரிடமிருந்து, கலைமாமணி விருதுக்கான பொற்கிழி ரொக்கப் பரிசைப் பெற்றார்.
ஆறு மாணவிகளுக்கு பரதநாட்டியம் கற்றுத் தந்திருக்கிறார். அவரது மிருதங்க தனி ஆவர்தனதனம் ரசிகர்களின் பாராட்டுப் பெற்றது. இதய நோய் காரணமாக மிருதங்கம் வாசிப்பதை நிறுத்தி விட்ட ரெங்கநாயகி அம்மாள், 14 ஆண்டுகளுக்குப் பிறகு, 1994இல் எனது திருமண நிகழ்ச்சியின்போதுதான் சிறிது நேரம் மிருதங்கம் வாசித்தார். அதுதான் அவரது கடைசிக் கச்சேரி” என்று பழைய சம்பவங்களை நினைவுகூர்கிறார் புதுக்கோட்டை திலகவதியார் திருவருள் ஆதீனம் தயாந்த சந்திரசேகர சுவாமிகள்.
Read in : English