Read in : English

Share the Article

தன் போக்கில் விடப்பட்ட கதை-கூறும் மீசை, அணிந்துள்ள கண்ணாடியின் உள்ளிருந்து உங்களை ஊடுருவிப் பார்க்கும் கண்கள், நளினமான ஓசை அதிகமற்ற சிரிப்பு,  வார்த்தைகளை உதிர்ப்பதில் ஒரு அலாதித் தன்மை – நெருங்கிப் பழகியவர்களுக்கெல்லாம் இவற்றைக் காணும் பாக்கியம் இனி இல்லை. ஆம் ந முத்துசாமி எனும் ஆளுமை இன்று நம்மிடையே இல்லை. மாற்று வழிகளில் நமது புராதன கலையான கூத்திற்கு மறு-வடிவமும் கொடுத்ததோடு, உலக அளவில் பிரசித்தி பெறச் செய்ததோடு, வித்தியாசமான எண்ணங்களுடன் செயலாற்றியவர் இவர். கூத்துப்பட்டறையின்(1977) காரண கர்த்தாவாகவும் இயக்குநராகவும் விளங்கியவர். இந்தப் பட்டறையில் நாடகக் கலைக்குத் தேவையான நாட்டியமும் மற்றும் கிராமியக் கலைகளின் மொழியும் கற்பிக்கப் படுகிறது. அரங்கின் வெளியை கச்சிதமாக உபயோகிக்கும் திறமை பட்டறையில் பயின்றவர்களுக்கு சரிவர அமைவதாலும், உடல் மொழியினால் பார்வையாளர்களிடம் நேரடியாக உரையாடல் நிகழ்த்துவதாலும், இவர்களின் நாடகங்களுக்கு மேடை அலங்காரங்கள் தேவையற்றவையாகிப் போகின்றன.

சுமார் 60 நாடகங்களை எழுதி/இயக்கிய இவர், இவற்றின் முலம், பல சர்ச்சைக்குரிய கருப் பொருட்களைப் பற்றிப் பேசியுள்ளார். அரசியல் நையாண்டிக்கு ஒரு ”நாற்காலிக்காரர்”, சமூக விமர்சனம் என்றால் ”பரமார்த்த குரு”வும் “இங்கிலாந்து”ம், நமது இதிகாசங்களிலிருந்து பெற்றவை ”அர்ஜுனன் தபசு” “பாஞ்சாலி சபதம்”, “பிரகலாதன்” என்று வகை சொல்லலாம். ஷேக்ஸ்பியரையும் விட்டுவைக்கவில்லை மேக்பெத் – இவரது ஒரு படைப்பு. வரம் பெற்று எழுதியவரோ என்று எண்ணும் அளவிற்கு எழுதவல்ல முத்துசாமியின் எழுத்துக்கள் நிகழ்காலத் தேவைக்கேற்பவும், சிறந்த உணர்வுடனும் நமது கவனத்தை ஈர்க்க வல்லதுமாகவும் இருந்தன. இது நிற்க, புகழ் மிக்க எழுத்தாளர் என்று பெயர் பெற்றுக் கொள்ள முயன்றவரில்லை இவர்.

2009ல் முத்துசாமிக்கும் இவரது சீடர் பசுபதிக்கும் கலைமாமணி விருது வழங்கப்பட்டது. இவருக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. ஒரு புறம் கூத்திற்கு அங்கீகாரம், மற்றொரு புறம் இவரது கூத்துப்பட்டறையின் அடியொற்றி வளர்ந்த ஒரு நடிகனுக்கு போற்றத்தக்க விருது. ஆம் ஒரு காலத்தில் கூத்தை இழிவான ஒன்றாகவே பலரும் பார்த்து வந்தார்கள். அவ்வாறே இதைப் பற்றி எழுதியும் வந்தார்கள். இன்னும் சிலரோ இவரை பழமைவாதி எனவும் நிலப்பிரபுத்துவ காலத்தின் கலை ஒன்றை வாழவைக்க வந்தவர் என்றும் பழித்தனர். பல்கலைக் கழகங்களில் கூத்து ஆராய்ச்சிக்குகந்ததாக எடுத்துக் கொள்ளப்பட்ட பிறகு தான் இதற்கு ஒரு மேலான அங்கீகாரம் கிடைத்துள்ளது என்பார் முத்துசாமி.

முத்துசாமி தூணிலிருந்தும் துரும்பிலிருந்தும் தனது எண்ணங்களை உருவாக்கியவர்

பொதிகை தொலைக் காட்சிக்கு அளித்த பேட்டியொன்றில் கூத்துப்பட்டறைக்கென்று ஒரு சித்தாந்தம் உண்டெனில் முத்துசாமி, ஜெ கிருஷ்ணமூர்த்தி மற்றும் குருட்ஜிஎஃப் (Gurdjieff)  என்ற இருவரையுமே குறிப்பிட்டுச் சொல்வார். முதலாமவரைப் பற்றிய அறிமுகம் தேவையில்லை. இரண்டாமவர் ஆர்மீனிய, கிரேக்க வழி வந்த ஒரு தத்துவவாதி. இவர் மனித சமுதாயத்தில் உலா வரும் பெரும்பாலோற்கு மொத்தமான உணர்வென்று ஒன்றும் இல்லை. முத்துசாமிக்கு இவர்கள் மீது நாட்டம் இருந்ததில் வியப்பில்லை. இவருக்கும் எல்லாவற்றையும் அவர்வர்களே அவர்களுக்குரிய காலம் வரும் போது தெரிந்து கொள்வார்கள், அவரவர்களுக்கான பாதையை வகுத்துக் கொள்வார்கள் என்பன போன்ற என்ண சுதந்திரங்கள் உண்டு. மேலும் நன்றாய் விளங்க தொடர்ந்து கற்றல் என்பதையே தனது இலக்காகக் கொண்டிருந்தவர் தானே முத்துசாமி.

ப்ரீக்‌ஷா என்ற நாடக இயக்கத்தை நடத்தி வந்த ஞாநி அவர்கள் காலச்சுவடு பத்திரிகைக்கு அளித்த ஒரு நேர்முகத்தில் முத்துசாமியைப் பற்றி குறிப்பிடும் போது ”இவர் நடிப்பையே தனது வெளியீட்டு வடிவமாகக் கொண்டு முழு நேரமாக அதில் ஈடுபடக்கூடியவர்களை வைத்தே புதிய நாடகங்களை நடத்த வேண்டும் என்ற கொள்கையுடன் இருந்தார். இத்தனை காலம் கழித்துப் பார்க்கும்போது அவர் தன் கருத்தில் உறுதியாக இருந்து சாதித்துக் காட்டியிருக்கிறார் என்றுதான் தோன்றுகிறது” என்று இவரைப் பற்றி பெருமையாகப் பேசியுள்ளார்.

முத்துசாமி தூணிலிருந்தும் துரும்பிலிருந்தும் தனது எண்ணங்களை உருவாக்கியவர் என்றால் அது மிகையாகாது. உதாரணத்திற்கு, புரட்சி நடிகர் எம் ஜி ஆர் மறைந்தவுடன் அவருக்கு மரியாதை செலுத்த வந்த கூட்டத்தை இதுவரை சரித்திரம் கண்டதில்லை. ஆனால் எம் ஜி ஆர் இந்தக் காட்சியைக் காண உயிருடன் இல்லை. இதுவே எனது ஒரு நாடகத்திற்குக் கருவாக அமைந்து விட்டது என்பார் முத்துசாமி. திறந்த மனதுடன் எப்பொழுதுமே செயல்பட்டதால் கூத்துப்பட்டறை நல்ல வளர்ச்சியைக் கண்டது. இஸ்ரேல் தேசத்து ஜென் மாஸ்டர் கில் ஆலோனுடன் இணைந்து “ஒரு எழுத்தாளரைத் தேடி ஆறு பேர்” (“Six characters in Search of an Author”) என்ற நாடகத்தைத் தந்தார். ஃபோர்ட் ஃபெளண்டேஷனின் ஆன்மோ வேலானியுடன் இவர் சில மேலான படைப்புகளை வெளிக் கொணர்ந்துள்ளார்.

மற்றவர்கள் பார்வையில்

அசோகமித்ரன் “முத்துசாமி சரஸ்வதி பத்திரிகையின் காலத்திலிருந்தே எழுதி வந்திருக்கிறார். தான் ஒரு இலக்கியப் படைப்பாளி என்று கூட இன்றும் உணர்த்திக் கொள்ளவில்லை. இவ்வளவு சிறப்பான சிறுகதைகளைப் படைத்திருந்தும் ஒரு மிகச் சாதாரண எழுத்தாளருக்குள்ள தன்னபிப்ராயம் கூட கிடையாது. கணையாழியில் வெளியான அவரது பத்து கதைகளையும் சேர்ந்தார்ப் போல ஒருவர் வாசிப்பாரேயானால், அவர் அடையும் திருப்தி, அவர் அடையும் பிரமிப்பு, மிகச் சிறந்த இலக்கியப் படைப்புகள் ஏற்படுத்துவதற்கு எந்த விதத்திலும் குறையாது.” அதே வீச்சில் அனைவராலும் மதிக்கப்பட்ட விவரமான விமர்சன கர்த்தாவன திரு வெங்கட் சாமிநாதன் முத்துசாமியின் கதைக்களம் மூலம் அவர் பெற்ற “அந்த அனுபவத்தில், அதன் உக்கிரத்தில், ஆழ்வது எத்தகைய சிகரங்களைத் தொடும் என்பது நினைத்துப் பார்க்க முடியாதது. தானறியாதே எங்கோ ஆழச் செல்லும் எங்கோ உயர்ந்து சென்று சிகரங்களைத் தொடும். உண்மையான தேடல் உன்னதத்திற்கு எடுத்துச் செல்லும் இவரது கதைகள்.“ என்று உளமாரப் பாராட்டியுள்ளார். முத்துசாமிக்கு அவரது சிறுகதைகள் ஒரு அடக்க முடியாத தேடலை மேற்கொள்ளுவதற்கான ஒரு வாகனமாக அமைந்தது. சிறுகதைகள் “நடப்பு” “புஞ்சை”, “வண்டி”, “யார் துணை?” ”கற்பனை அரண்” போன்ற கதைகளைப் பற்றி பிரத்யேகமாகக் குறிப்பிட வேண்டும்.

2016ல் வெளிவந்த ஜோக்கர் (இயக்குநர் – ராஜு முருகன்) திரைப்படத்தில் முதன்மை கதை உறுப்பினராக நல்ல நிர்வாகத்துடன் பணியாற்றியவர் குரு சோமசுந்தரம். இவர் கூத்துப்பட்டறையில் பயின்றவர். ”முத்துசாமி சார் எப்போதும் ஷேவ் செய்யப்பட்ட முகத்துடனே காணப்படுவார்” என்கிறார். மேலும் ஒரு படி சென்று இது எல்லா விஷயங்களிலும் முத்துசாமி எடுக்கும் அணுகுமுறையைப் பிரதிபலிப்பதாகவே கொள்கிறார். உதாரணத்திற்கு, சென்னை சங்கமம் துவங்கும் தருவாயில் அதை நடத்த விழைந்தவர்கள் கூத்துப்பட்டறையிடம் ஆலோசனை கேட்டுள்ளனர். உடனே முத்துசாமி சார் அகராதியை எடுத்து வரச் சொல்லி அதில் இந்த பதத்திற்கான (”சங்கமம்”) அர்த்தத்தைக் சரிவரக் கண்டு, நன்றாகப் புரிந்து, பின்னர் செயல்படத் தொடங்கினார். ”நான் கூத்துப்பட்டறையில் புகும் காலத்தில் முதுகில் ஒரு வளைவைப் பெற்றிருந்தேன். நாடகப் பயிற்சியின் போது எனக்கு வெளிப்படையாக உணர்த்தாமலே எனக்கு வெகுவாகப் பயிற்சியளித்ததன் விளைவாக அந்தக் குறை எனது உடம்பிலிருந்து நீங்கி விட்டது. ஒருவருக்கு திக்கு வாய் உள்ளது என்றால் நாடகத்தில் தனியாகத் தொடர்ந்து பேசும் டயலாக்(monologue) இவருக்கு தாராளமாக அளிக்கப்படும். இன்னும் நினைவிருக்கிறது: பிரகலாதன் நாடகத்திற்குக் காலில் அடிபட்டு படுக்கையில் இருந்த நிலையில் அவர் காட்சிகளை கிரமப்படி டிக்டேட் செய்த விதம்.” என் கிறார் சோமசுந்தரம்.

சென்னையில் வருடந்தோறும் நடக்கும் உலகத்திரைப்பட விழாவில் 2016ம் ஆண்டு லென்ஸ் என்ற திரைப்படம் வெளியிடப்பட்டது. இதை இயக்கியவர் ஜெயபிரகாஷ். அந்த திரைப்படத்தில் பாதிக்கப்பட்ட நாயகன் வேடமேற்று சிரத்தையுடன் செய்து காட்டியவர் ஆனந்த்சாமி. இவர் கூத்துப்பட்டறையில் எட்டு வருடங்கள் பயிற்சி பெற்றவர். “நான் முத்துசாமி சாருக்கு அப்பா ஸ்தானத்தையே அளிப்பேன். எனக்குத்தான் என்றில்லை, இங்குள்ள அனைவருமே அவ்வாறு எண்ணினர். அதே சமயம் அதை தனக்கு சாதகமாகப் பயன்படுத்தாமல், அதை ஒரு பொருட்டாக அவர் நினைத்ததே இல்லை. எல்லோருடனும் சகஜபாவத்துடன் பழகினார், வயது வித்தியாசம் பாராமல் இருந்தார் என்று சொல்ல வருகிறேன்.” அவரது பயிற்சி முறை என்று எடுத்துக் கொண்டால் எனக்கு சிலம்பாட்டம் கற்பிக்கப் பட்டது. ஒரு நாடக நடிகருக்கு சிலம்பாட்டம் ஏன் என்ற கேள்வி எழலாம். முத்துசாமி சாருக்கு கையில் கொம்புடன் இயங்கும் போது, உடலானது எவ்வாறு வினையாற்றுகிறது, சொகுசாக செயல்படுகிறதா, எதிரிலிருந்து வரும் கொம்பை எப்படிப் பார்க்கிறது, உடலானது மேற்கொள்ளும் தற்காப்புச் செயல்கள் யாவை – சாருக்கு இவை பற்றிய எண்ணங்களே மிகும். சிலம்பாட்டம் இதற்கு உதவியாற்றுகிறது. ஒரு நடிகன் எனப்படுபவன் தனது உடம்பை எந்தவிதமான சூழ்நிலைக்கும் சரியான நிலையில் தயாராக வைத்திருத்தல் அவசியம் என்று எண்ணினார் முத்துசாமி சார்.

இந்த இருவருமே ”சுவரொட்டிகள்“ நாடகத்தில் வரும் வசனம் ஒன்றை நினைவு படுத்துகிறார்கள். அது பின் வருமாறு:

”ஆடையில்லாதவன் ஊரில் ஆடையணிந்தவன் பைத்தியக்காரன் எனில், புத்திசாலிகளாய் வருக!”

அவரது எண்ண அலைகள்

சமூகம் முன் நோக்கித்தான் வளர்ந்து போய்க் கொண்டிருக்கிறது. அதனிடம் ஒரு விதமான ஞானம் இருக்கு, இதைப் புரிந்து கொண்டு, காலம் இந்த ஞானத்தை சிதைத்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சுயமாக சிந்திக்கும் முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.

தற்காலத்து இளைஞர்கள் உருவாக்க சக்தி மிக்கவர்கள். இது வளர ஒரு சூழலைத் தர வேண்டும். அவர்கள் பாழாகி, வீணாகிப் போக சமூகம் ஒரு போதும் அனுமதியாது.

பள்ளிகள் என்று எடுத்துக் கொண்டால் அங்குள்ள குழந்தைகளுக்கு விளையாடும் மைதானம் எங்கே? அடைத்துப் போட்டால் அவர்கள் உடலும் உள்ளமும் எப்படி வளரும்? ஆசிரியர்களும் “தொழில்” என்றில்லாமல் “கற்பித்தல், வளர்த்தல்” என்ற கொள்கையின் அடிப்படையில் சேர்பவர்களாக இருத்தல் வேண்டும்.

வேறொரு விஷயம், நகரம் என்று ஒன்று இருக்கிறது, இருக்கும். ஆனால் கிராமத்தின் சௌகர்யங்கள் நகரத்தில் வேண்டும் என்று கனவு காண்கிறார்கள். இது நடக்குமா? நகரம் மேம்பட அதன் தேவையை அனுசரித்து நமது சிந்தனைப் போக்கு அமைய வேண்டும்.


Share the Article

Read in : English

What the Tamil Nadu Organic policy needs Music to homecoming Chennaiites: the sound of the Chennai auto Should you switch from meat to plant-based alternatives? Indian kitchen staples are great for building immunity Pickle juice for muscle cramps? Find out more fascinating facts about pickles