Read in : English

Share the Article

இரண்டாயிரம் தேவ  ஆண்டுகள் கொண்ட காலமே துவாபரயுகம் எனப்படும் இக்காலத்தில் பிரம்மனின் மானசீக புத்திரரான பிருகு முனிவரின் வழியில் மிருகண்டு எனும் முனிவர் அவதரித்தார்.

இவர் உரிய பருவத்தில் முத்கல முனிவரின் மகளான மருத்துவதியைத் திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியருக்கு வெகுகாலமாக மகப்பேறு வாய்க்கவில்லை.

எனவே இருவரும் காசி மாநகர் சென்று சிவபெருமானைக் குறித்துத் தவம் புரிந்தனர்.  முனிவரின் மனவுறுதியை மெச்சிய ஈசன் காட்சி அளித்து அவர்களது விருப்பத்தை கேட்டார்.  “நீண்ட ஆயுள் உடைய அறிவிலி, அற்ப ஆயுளுடைய குணவான் ஆகிய இருவரில் எவரை மகளாகப் பெற விரும்புகிறீர்கள்?”  என ஈசன் கேட்டார்.  நற்குணங்களின் இருப்பிடமாக உள்ள புத்திரனையே மிருகண்டு முனிவர் விரும்பினார்.  புத்திக்கூர்மையுடைய குணக்குன்றான ஒரு மகன் பிறப்பான் எனவும் அவனுக்கு ஆயுள் பதினாறு ஆண்டுகள் மட்டுமே” எனவும் இறைவன் அருளினார்.  இறையருளால் பிறந்த புத்திரனுக்கு மார்க்கண்டேயன் எனப் பெற்றோர்கள் பெயரிட்டனர். மார்க்கண்டேயன் தனது குலத்திற்குரிய கலைகளிலும், நூலிலும் தேர்ச்சிப் பெற்று அனைவராலும் மதிக்கப்பட்டுவந்தான்.

மகன் பதினாறு வயதை நெருங்கியபோது,  அவனது விதி பற்றிப் பெற்றோர்கள் துயருற்றனர். பெற்றோரின் மனசஞ்சலத்திற்கான காரணத்தை மார்க்கண்டேயர் அறிந்தார்.   “தந்தையே எதற்கும் துக்கப்பட்டுப் பயனில்லை. சிவபெருமானின் திருவுள்ளப்படியே எல்லாம் நடக்கும். காலனால் உண்டாகும் அச்சத்தை நீக்கும் மார்க்கத்தை நான் அறிவேன். எனக்கு நல் ஆசிகள் கூறி வழியனுப்புங்கள்” என மார்க்கண்டேயர் கூறினார்.

பெற்றோரிடம் விடைபெற்றுக்கொண்டு தென்திசையிலுள்ள திருக்கடவூர் எனும் திருத்தலத்திற்குச் சென்றார்.

திருக்கடவூரில் எழுந்தருளியுள்ள அமிர்தகடேஸ்வரர் எனும் சிவத்திருமேனியைப் புனித நீரால் சுத்தம் செய்து பலவகையான வாசனை மலர்களால் அர்ச்சனை செய்தார். இவ்வாறு மனதாரப்  பூசித்து வருகையில் மார்க்கண்டேயரின் ஆயுள் முடியும் நேரம் வந்தது. சிவபக்தியில் திளைத்த பக்தரின் கண்களுக்கு யமதேவரின் உருவம் புலப்பட்டது. யமனைக் கண்டு வேதியர் சிறிதும் அஞ்சவில்லை. சிவபெருமானே கதியெனச் சிவலிங்கத்தை இருக்க தழுவினார்.  உயிர்களை உரிய காலத்தில் கவர்ந்து செல்வது யமனின் கடமையாகும்.

இருப்பினும் சிவலிங்கத்தைத் தழுவிய மார்க்கண்டேயரின் உயிரைக் கவர முற்பட்டபோது சிவலிங்கத்தையும் சேர்த்து பாசக்கயிற்றால் பிணைத்து இழுக்க முற்பட்டது அடாத செயலாகும். ஆணவத்துடன் எமன் பாசக்கயிறை வீசி இழுக்க முற்பட்ட பொது சிவபெருமான் லிங்கத்திருமேனியிலிருந்து வெளியே வந்தார்.

எமன் தனது கடமையைச் செய்ய முயன்றபோது ஈசன் அவனைத் தனது காலால் உதைத்துத் தள்ளி அவனது தண்டத்தைப் பறித்தார். மார்க்கண்டேயரை மார்பொழுகத் தழுவிக் கொண்டார். இதே தோற்றத்துடன் எந்நாளும் சிரஞ்சீவியாக வாழும் பாக்கியத்தை முனிகுமாரருக்கு அளித்தார்.

சிவபெருமானிடம் உண்மையான தூய அன்பு செலுத்தினால் விதியையும் மதியையும் வெல்லலாம் என்ற உண்மையை இச்சம்பவம் உணர்த்துகிறது.

உயிர்களை உரிய காலத்தில் வானுலகிற்கு அழைத்து செல்லும் எமதர்மன் செயலற்றுக்  கிடந்தால்  பூமியில் பாரத்தை தாங்க இயலாது என பூமிதேவி பரிதவித்தாள். மார்க்கண்டேயரின் விண்ணப்பத்தை ஏற்றுக்  காலன்  மீண்டும் முன்போல் செயல்படுமாறு ஈசன் அருளித்தார்.   விழித்தெழுந்தபின் காலன் மார்கண்டேயரைத் தொழுது விடைபெற்றான்.  இழந்த தண்டத்தை மீண்டும் பெறுவதற்காகக் கயிலாயம் நோக்கி வடதிசையில் சென்றான்.

கயிலைக்கு நேராக செல்வதைவிடப்  பூவுலகில் தொண்டைமண்டலத்தில் வேதங்கள் பூசித்தருள்பெற்ற வேதச்சிரேணியில் எழுந்தருளியுள்ள சுயம்புமூர்த்தியை ஏகாந்தமாகப் பூசிப்பதே ஏற்றது என நாரதர் அருளினார்.

எமதர்மனும் வேதச்சிரேணி சென்று ஒரு தீர்த்தத்தை உருவாக்கினான். இத்தீர்த்தத்தில் நீராடி அங்கு எழுந்தருளிய லிங்கத் திருமேனியை அபிஷேக ஆராதனைகளுடன் முறைப்படி வழிபட்டான்.

எமனின் பூசைகளை ஏற்ற ஈசர் அங்கு நேரில் காட்சியளித்தார். எமனிடத்திலுருந்து தான் பறித்துச் சென்ற தண்டத்தை மீண்டும் வழங்கினார். தனக்குத் தரிசனம் அளித்து தண்டத்தை  மீண்டும் வழங்கிய  ஈசருக்கு தண்டீஸ்வரர் எனப்  பெயர் வழங்கப்பட வேண்டும் எனவும் எமன் வரம் வேண்டிப்பெற்றான். இதுவே இத்தலத்தில் வழங்கப்படும் வரலாறு.

திருவான்மியூர் தலபுராணத்தில் இச்சம்பவம் சிறிது மாறுதல்களுடன் விவரிக்கப்பட்டுள்ளது. இத்தலபுராணத்தில் சிவபெருமான் எமனை உதைத்துத் தள்ளியதாக மட்டும் கூறப்பட்டுள்ளது. தண்டத்தைக் கவர்ந்ததாக கூறப்படவில்லை.


Share the Article

Read in : English

What the Tamil Nadu Organic policy needs Music to homecoming Chennaiites: the sound of the Chennai auto Should you switch from meat to plant-based alternatives? Indian kitchen staples are great for building immunity Pickle juice for muscle cramps? Find out more fascinating facts about pickles