துணைவேந்தர் நியமனத்துக்குக் கோடிக்கணக்கில் பணம் புரண்டுள்ளது என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பொது மேடையில் பகிரங்கமாகக் கூறியுளளதன் பின்னணியில் அரசியல் இருப்பதாகக் கருதப்படுகிறது.
தமிழகப் பல்கலைக்கழக முறைகேடுகள் குறித்த செய்திகள் வெளியானபோதும், துணைவேந்தர் நியமனங்களின் போதும் இந்த ஊழல் பற்றி எதுவும் கூறாமல் இதுவரை ஆளுநர் அமைதியாக இருந்தது ஏன் என்றும் கேள்விகள் எழுந்துள்ளன.
பல்கலைக்கழக வேந்தர் என்ற அடிப்படையில் ஆளுநர் இதற்கான ஆதாரங்களை வெளியிடுவதுடன் சம்பந்தப்பட்டவர்களின் மீது நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அரசியல் கட்சிகள் உள்பட பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.
“துணைவேந்தர் நியமனத்தில் அரசுக்கோ உயர்கல்வித் துறைக்கோ எந்தவித சம்பந்தமும் இல்லை. துணைவேந்தர் நியமனம் ஆளுநர் மூலமே நடைபெறுகிறது. தேடுதல் குழுவை அமைப்பதோடு அரசின் கடமை முடிந்து விடுகிறது. துணைவேந்தர் தேடுதல் குழுவில் ஒரு நபரை மட்டுமே அரசு நியமனம் செய்கிறது” என்று விளக்கமளித்துள்ள உயர்கலவித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன், “ஆளுநர் எதை மனதில் வைத்துச் சொன்னார் என அவர் சொன்னால்தான் தீர்வு கிடைக்கும்,” என்கிறார்.
துணைவேந்தர் நியமனத்தில் ஊழல் நடைபெற்றதாக குற்றம்சாட்டுகின்ற ஆளுநர், அதற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தற்போது வரை 9 துணைவேந்தர்களை நியமித்துள்ள ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தன்னால் நியமனம் செய்யப்பட்ட அனைத்துத் துணைவேந்தர்களும் தகுதியின் அடிப்படையில் நியனம் செய்யப்பட்டிருக்கிறார்கள் என்கிறார்.
“ஆளுநர் கூறியிருப்பது நூற்றுக்கு நூறு உண்மை. துணைவேந்தர் நியமனத்தில் அரசியல் சக்தி, பணம், ஜாதி ஆகியவற்றின் செல்வாக்கு இருந்து வருகிறது.”- அண்ணா பல்கலைகழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி
“இதுவரை பிற மாநிலத்தைச் சேர்ந்த மூன்று பேரை தமிழகப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக ஆளுநர் நியமித்து இருக்கிறார். அபபடியானால் தமிழகத்தில் தரமான பேராசிரியர்களே இல்லையா? யாருக்காக இந்த நியமனம் நடைபெற்றது? துணைவேந்தர் நியமனத்தில் பணம் புரண்டுள்ளது என்றால் ஆளுநர் இதுவரை என்ன நடவடிக்கை எடுத்து இருக்கிறார்” என்று கேள்வி எழுப்புகிறார் பொதுப் பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு.
“ஆளுநர் கூறியிருப்பது நூற்றுக்கு நூறு உண்மை. துணைவேந்தர் நியமனத்தில் அரசியல் சக்தி, பணம், ஜாதி ஆகியவற்றின் செல்வாக்கு இருந்து வருகிறது. அரசியல்வாதிகளின் உறவினர்கள் தகுதி இல்லாமல் இருந்தும் துணைவேந்தர்களாகி விடுகிறார்கள்.”என்று கூறும் அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி, “துணைவேந்தர் தேர்வுக்குழுவில் தேர்வுக் குழுவில் சுயநிதிக் கல்லூரிகளைச் சேர்ந்தவர்களை நியமிக்கக்கூடாது. அரசு நியமன உறுப்பினர்கள் இருக்கக்கூடாது. தேர்வுக் குழுவில் நேர்மையான தகுதி வாய்ந்தவர்களை நியமிக்க வேண்டும். அந்தத் தேர்வுக் குழு சுதந்திரமாக இயங்க வேண்டும்” என்கிறார்.
“துணைவேந்தர் நியமனத்தில் ஊழல் நடந்திருப்பதாகக் கூறும் ஆளுநர், அதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்” என்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வே.வசந்திதேவி வலியுறுத்தியுள்ளார்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் தேர்வுக் குழுவில் தனக்கு வந்த நிர்பந்தங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அக்குழுவிலிருந்து வெளியேறிய பேராசிரியர் மு.ராமசாமி, ஆகாயத் தாமரைகளும் ஆகாத ஊருக்கு வழி கூறும் திசைகாட்டிகளும்’ என்ற நூலில் தனது அனுபவங்களை விரிவாகப் பதிவு செய்துள்ளார். அதன்பிறகு, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத் துணைவேந்தராக செல்லதுரை விதிகளுக்குப் புறம்பாக நியமிக்கப்பட்டுள்ளது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது.
“கோவை அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்த ராதாகிருஷ்ணன் ஊழல் புகாரில் தண்டனை பெற்று சிறையில் இருக்கிறார். பெரியார் பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் அங்கமுத்து, தற்கொலை செய்து கொண்டதன் மர்மம் இன்னமும் நீடிக்கிறது. கோவை பாரதியார் பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்த கணபதி, பணி நியமனத்துக்காக லஞ்சம் வாங்கியதாகக் கைது செய்யப்பட்டார். அண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் மறு மதிப்பீட்டில் நடந்த முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன என்று கடந்த கால ஊழல் சம்பவங்களைச் சுட்டிக்காட்டும் சில கல்வியாளர்கள், “தமிழகப் பல்கலைக்கழகங்களின் தொடர்கதையாகி வரும் ஊழலுக்கு முறறுப்புள்ளி வைக்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்கிறார்கள்.
திமுக பொருளாளர் துரைமுருகன் கூறுவதைப்போல, “விடிவதற்கு முன் சேவல் கூவுவதுபோல், ஏதோ நடக்கவிருக்கிறது என்பதை ஆளுநர் சூட்சமமாக உணர்த்தியிருப்பதாகக் கருதலாமா?” பொது மேடையில் ஆளுநரின் ஆவேசப் பேச்சு, ஊழலுக்கு எதிரான நிஜ யுத்தமா? நிழல் யுத்தமா? ஆளுநரின் உண்மை முகம் இனிமேல்தான் தெரியும்.