Read in : English

இன்மதி.காம் தனது வாசகர்கள் மற்றும் சென்னை பெரு நகர மக்களுக்கும் சென்னை பிறந்த நாள் வாழ்த்தினை தெரிவித்துக் கொள்கிறது.

ஆம். செப்டம்பர் 30 சென்னையின் அதிகாரப்பூர்வ பிறந்த நாள். 22 ஆண்டுகளுக்கு முன்னர், அதுவரை பிரிட்டீஷ் ஆட்சி காலத்திலிருந்தே அறியப்பட்டு வந்த ‘மெட்ராஸ்’ என்ற பெயர் ஒரு அரசு உத்தரவின் மூலம் சென்னை என மாற்றப்பட்டது.

ஆங்கிலேய ஆட்சியின் எச்சங்களுக்கு முடிவு கட்டும் வகையில் மறைந்த முன்னாள் முதல்வரான அறிஞர் அண்ணா தலைமையிலான திமுக அரசு, 1969 ஆம் ஆண்டு ‘மெட்ராஸ் ஸ்டேட்’ என இருந்த மாநிலத்தின் பெயரை தமிழ் நாடு எனப் பெயர் மாற்றம் செய்தது. தொடர்ந்து கருணாநிதி தலைமையிலான திமுக அரசு செப்டம்பர் 30, 1996 அன்று  மாநகரின் பெயரை சென்னை என மாற்றியது.

புனித ஜார்ஜ் கோட்டையை கட்டுவதற்காக கிழக்கிந்திய கம்பெனி ஆகஸ்ட் 22, 1639 இல் நிலம் வாங்கிய நாளாக தவறாக கருதப்பட்டு ,  சென்னை உருவான நாளாக வரலாற்றுக்கு புறம்பாக தவறாக சித்தரிக்கப்படுகிறது.

புனித ஜார்ஜ் கோட்டையை கட்டுவதற்காக கிழக்கிந்திய கம்பெனி ஆகஸ்ட் 22, 1639 இல் நிலம் வாங்கிய நாளாக தவறாக கருதப்பட்டு ,  சென்னை உருவான நாளாக வரலாற்றுக்கு புறம்பாக தவறாக சித்தரிக்கப்படுகிறது.  ஆங்கிலேயரும், இந்தியாவின் முதல் சர்வேயர் ஜெனரலுமான கலோனல் மெக்கன்ஸி, பழமையான சென்னை கடந்த 2000 ஆண்டுகளாக புலியூர் கோட்டம் என்ற பெயரில் இருந்து வந்ததாக கூறியிருப்பதை அவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். குறும்பர்கள் இப்பகுதியை ஆண்டு வந்ததைத் தொடர்ந்து, தொண்டமான், சோழர்கள், பல்லவர்கள், பாண்டியர்கள், ராஷ்ட்ரகூடர்கள்,சதவனகர்கள் மற்றும் விஜய நகர பேரரசர்கள் உள்பட பல மன்னராட்சிகளைக் கண்ட பகுதி இது. ஆங்கிலேயர்கள் சென்னையின் கடைசி ஆட்சியாளர்கள் மட்டுமே.

புலியூர் கோட்டம் எனப்படும் பழைய சென்னையானது, முழு அளவிலான நிர்வாகப் பிரிவாக இருந்தது. அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள், நீதி பரிபாலனம், வரிகள், வணிகம், பாசனம்,வியாபார அமைப்புகள், எடைகள் மற்றும் அளவுகள் என பல இருந்தன.

புலியூர் கோட்டமானது, எழும்பூர்,மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, அடையாறு முதல் திருவான்மியூர், பல்லாவரம், திருநிர்மலை, தாம்பரம், சோமங்கலம், பொழிச்சலூர் மற்றும் மணிமங்கலம் வரை நீண்டு பரவி இருந்தது. மேலும் ஆலந்தூர், நங்கனல்லூர், வேளச்சேரி, திரிசூலம், திருவள்ளூர், வளசரவாக்கம், நந்தம்பாக்கம், போரூர் மற்றும் பூந்தமல்லி வரையும், வடபழனியிலிருந்து கோயம்பேடு, மாங்காடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியையும் கொண்டிருந்தது. அது இன்றைய சென்னை மாநகரத்தையும், காஞ்ச்புரம் மாவட்டத்தையும் உள்ளடக்கியதாக இருந்தது. இந்த பகுதிகளை எல்லாம் உள்ளடக்கிய பகுதியாக புலியூர் கோட்டம் இருந்ததாக கலோனல் மெக்கன்ஸி பதிவு செய்துள்ளார்.

பிறந்த நாளை இன்னும் சிறப்பான வடிவில் கொண்டாட, உங்களுக்கு ஒரு புலியூர் கோட்டத்தின் தலைநகரான புலியூர் குறித்த ஸ்தல புராணத்தை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறோம். பழைய சென்னையில் கோடலம்பாக்கம் என அழைக்கப்பட்ட நவீன கோடம்பாக்கம் தான் புலியூர்.

இந்தியாவின் முதல் சர்வேயர் ஜெனரலுமான கலோனல் மெக்கன்ஸி, பழமையான சென்னை கடந்த 2000 ஆண்டுகளாக புலியூர் கோட்டம் என்ற பெயரில் இருந்து வந்ததாகக் கூறுகிறார்.

தொண்டை மண்டலத்தின் 24 கோட்டங்களில் (அது வட தமிழ் நாட்டுக்கு இணையான பகுதியாக இருந்தது) ஒன்றாக இருந்தது தான் இந்த புலியூர் கோட்டம் என பல்வேறு பழங்கால நூல்கள் குறிப்பிடுகின்றன.  சேக்கிழாரின் திருத்தொண்டர் புராணம் அல்லது பெரியபுராணம் தொண்டை நாடு அல்லது தொண்டை மண்டலம் என அழைக்கப்பட்ட பகுதியின் 24 கோட்டங்களில் ஒன்றான புலியூர் கோட்டத்தில் குன்றத்தூரில் இருந்ததாக கூறப்பட்டுள்ளது. இது புலியூரின் ஸ்தலப் புராணம் மூலம் அறியப்படுகிறது.

புலியூர்க் கோட்டம் வரலாறு:

சென்னை  கோடம்பாக்கத்தில், புலியூர் என்னும் பகுதியில் உள்ள அருள்மிகு வேங்கீஸ்வரர் திருக்கோயில், மிக்க பழமையும் சிறப்பும் வாய்ந்தது.     பெரியபுராணம் பாடிய சேக்கிழார்  பெருமானின்  காலத்திற்கு முன்பே,  சோழ பேரரசர்களின்  காலத்திலேயே,  அதாவது சுமார் ஆயிரம் ஆண்டுகட்கு முன்னரே  புலியூரும்,  வேங்கீஸ்வரர்திருக்கோயிலும் புகழ்மிக்க விளங்கியிருந்தன.

இத்தகைய பழமையும் பெருமையும் மிக்க புலியூர் வேங்கீஸ்வரர் திருக்கோயில், இராச கோபுரம் அமையப்பெறாமலும், திருக்கதவுகள் இல்லாமலும், விமானங்கள் சிறிதுசிதைந்ததும் பழுதுற்றுள்ளது.

அருள்மிகு வேங்கீசுவரர்  திருக்கோயில் தலவரலாறு

சென்னையில் இந்நாளில் சிறப்புடன் விளங்கி வரும் பகுதிகளில் கோடம்பாக்கம் என்பது ஒன்று என அனைவரும் அறிந்தது.  கோடம்பாக்கம்  என்னும்  ஊர்ப்பெயரின்  காரணம்  பற்றி  தலபுராண  முறையில், பலவகை விளக்கங்கள் கூறப்படுகின்றன.    சிவபெருமான், திரிபுர  அசுரர்களை அழிப்பதற்காக, மேருமலையை வில்லாக ஆக்கிவளைத்த இடம் கோடம்பாக்கம் (கோடு + அம்பு+ ஆக்கம்= கோடம்பாக்கம்;  கோடு – மலை) என்று ஒருசிலர் கூறுவார்.  மற்றும் சிலர் ஆதிசேடவனின் வழியில் வந்த கார்க்கோடகன் என்னும் நாக அரசன், திருமாலை வழிபட்ட இடம் கோடம்பாக்கம் (கோடகன் + பக்கம் = கோடம்பாக்கம்) எனக் கூறுவர்.  இச்செய்திக்கு அடையாளமாக ஆதிமூலப் பெருமாள்  என்னும் பெயரில், இங்கே திருமால் கோயில் கொண்டு எழுந்தளியிருந்ததலை,  இவர்கள் தம் கருத்துக்குச் சான்றாகக் காட்டுவர்.

இத்தகைய  விளக்கங்கள்  எங்ஙனம் இருப்பினும், இந்நாளில் கோடம்பாக்கம் என் வழங்கி வருவது, பண்டைக்காலத்தில் கோடலம்பாக்கம் எனப்  பெயர்ப் பெற்றிந்ததாகத் தெரிகின்றது. இலக்கியங்களில் இது ‘கோடலம் பாகை’ எனவும், ‘கோடல்’ எனவும் குறிப்பிடப் பெற்றுள்ளது. ‘பாகை’ என்பது ‘பாக்கம்’ என்பதன் மரூஉ.   கோடலம்பாக்கம் என்பதே இந்நாளில் கோடம்பாக்கம் என மருவி வழங்கி வருகின்றது.    இவ்வுண்மை பின்வரும் செய்திகளாலும், சான்றுகளாலும் உணரப்படுகின்றது.

‘ஞானாமிர்தம்’ என்பது ஒரு சிறந்த சைவ சித்தாந்த சாத்திர ஞான பெரு நூல். இது சித்தாந்த சாத்திரங்கள் பத்திநான்கிலும் பழமை வாழ்ந்தது. சங்க இலக்கியங்களைப் போன்ற  தமிழ் நடைநலம் சார்ந்தது.    சிவஞான போதத்திற்கு உரை இயற்றிய பாண்டிப் பெருமாள், சிவஞான சுவாமிகள் என்பவர்களால் மேற்கோள் நூல் என மதித்துப் போற்றப் பெற்ற  மாட்சிமையுடைது.  சிவஞான சித்தியார்களுக்கு  உள்ள  அறுவர் உரையிலும்,  சிவப்பிரகாசத்துக்கு  மதுரைச் சிவப்பிரகாசர் வகுத்த நல்லுரையிலும், ஞானாமிர்தப்பகுதிகள் மேற்கோளாகக் காட்டப் பெற்றுள்ளன.  சிவப்பிரகாசப் பெருந்திரட்டு, முத்தி முடிவு என்னும் பழைய நூல்களிலும், இதன் பாடல்கள் பல தொகுக்கப்பட்டுள்ளன.

வாகீச முனிவர்:

இத்தகைய சிறந்த ஞானப்பெருநூலை இயற்றியவர் வாகீச முனிவர் என்னும்  மாபெறும் சான்றோர் ஆவர்.     இவர் சென்னைக்கு அணித்ததாக  உள்ள திருவொற்றியூரில் சிலகாலம் வாழ்ந்து வந்தார். இரண்டாம் இராசாதி  ராசன் (கி.பி 1163 – 1186 ) காலத்தில், அவனது ஒன்பதாம் ஆட்சியாண்டில், திருவொற்றியூரில் பங்குனி உத்திரபெருவிழாநடைபெற்றது.      அதற்கு இரண்டாம் இராசாதி ராச சோழனும் வந்திருந்தான்.    ஆறாம் திருநாள் அன்று திருவொற்றியூர் இறைவனான புடம்பாக்க நாயக தேவர், அக்கோயிலில் உள்ள மகிழ மரத்தின் கீழ் திருவோலக்கம் (மகிழடி சேவை) செய்தருளினார்.    அது பொது அங்குச சுந்தரமூர்த்தி சுவாமிகள் வரலாறு ஆகிய ‘ஆளுடை நம்பிஸ்ரீ புராணம்’ விரிவுரை செய்யப்பெற்றது.

அதனை இராசாதிராச சோழனுடன்  இருந்து கேட்டவர்களுள் வாகீச முனிவரும் ஒருவர் என்று கல்வெட்டு (S .I. I .  Vol . VI .  நோ. 1354 ) ஒன்று விளக்குகிறது.  இவ்வணம், அரசரும் மதித்துப் போற்றும் மாட்சிமை பட்டறிந்தவரும், கோள்கி  மடம்  என்பதன் தலைவராக விளங்கியவரும், ஞானாமிர்த நூலின் ஆசிரியரும் ஆகிய வாகீச முனிவர்கோடம்பாக்கத்திலும் வாழ்ந்து வந்தார் என்று தெரிகின்றது.

வாகீச முனிவர் கி.பி. 1145  முதல் கி.பி. 1205 வரை வாழ்ந்தவராதல் கூடும் என அறிஞர்கள் கருதுகின்றனர்.   எனவே, ஒரு கல்வெட்டுச் சான்றின்படி கி.பி 1232 ஆண்டிற்கு சிறிதுமுன் பின்னாக வாழ்ந்திருந்தனர் என அறிஞர்கள் ஆராய்ந்து துணிந்துள்ள ஆசிரியர் மெய்கண்டார், இவருக்குப் பிற்பட்டவராதல் வேண்டும்.

சைவ சித்தாந்த சாத்திரங்கள் தனிப் பெருசான்றோராகிய ஆசிரியர் மெய்கண்ட தேவர்க்கும் முற்பட ஒரு சைவச் சான்றோர், கோடம்பாக்கத்தில் வாழ்ந்திருந்தனர் என்றும்செயதி, நாம் அறிந்து பெருமிதம் ஏய்த்துவதற்கு உரியது ஒன்றேயன்றோ?

பரமானந்த  முனிவர்:

இனி, இவ்வாக்கீச  முனிவர் மட்டுமேயன்றி, அவர் தம் ஞானாசிரியர் ஆகிய பரமானந்த முனிவர் என்பவரும் கோடம்பாக்கக்கத்திலியே தங்கி வாழ்ந்திருந்தனராவார்என்பதற்குச் சான்றுகள் உள்ளன. அவர்  தம்  இயற்பெயர் அருள்மொழித்தேவர் என வழங்கியது.

வாகீச  முனிவர்  சைவ சித்தாந்த நூல்களைப் பாடங்கேட்டுப் பயின்றுணர்ந்து, புலமைல் நலம் கைவரப் பெற்று ஒளிர்ந்தார்.

“புண்ணியம் படைத்து மண்மிசை வந்த

தோற்றத்தன்ன ஆற்றல் எங் குரிசில்!

குணப் பொற்குன்றம்: வணக்க வாரோ

ஐம்புல வேயத்து வெந்தொழில் அவியக்

கருணை வீணை காமுறத்  தழீ   இச்

சாந்தக் கூர்முள் ஏந்தினன் நீறி இத்

தன்வழிக் கொண்ட சைவ சிகாமணி!

பரமானந்த திருமா முனிவர்! எனவும்;

பாடல் சான்ற புல்புகழ் நீறிஇ

வாடாத் துப்பின் கோடல் ஆதி !

அருள் ஆபரணன்! அறத்தின் வேலி!

பொருந் மொழி யோகம் கிரியையிற் புணர்த்த

அருண்மொழி திருமொழி போலவும் ..”   

எனவும், ஞானாமிர்தத்திலுள் (4 ,28 ) வாகீச முனிவர் பரமானந்த முனிவரைப் புகழ்ந்து பாராட்டிப் பறவி  மகிழ்கின்றார்.

இச்செய்திகளை –

“இருள்நெறி மாற்றித்தன் தாள் நிழல்

இன்பம் எனக்களித்தான்

அருள்மொழித் தேவன் ! நற் கோடலம்

பாகை அதிபன் ! எங்கோன்!

திருநெறி காவலன்! சைவ

சிகாமணி ! சில் சமய

மருள்நெறி மாற்ற வரும்

பரமானந்த மாமுனியே!”

என வாகீச முனிவர் பாடியுள்ள தனிப்பாடலும் இனிது விளக்குகின்றது.

இவ்வாற்றால் ஏறத்தாழ 800 -900   ஆண்டுகளுக்கும் முன்பே, நம் கோடம்பாக்கம் இலக்கியப் புகழ் பெற்றுச் சிறப்புடன் விளங்கி வந்தமையினை, யாவரும் இனிதுதெளியலாம்.

இதனாற் கோடம்பாக்கம் புதியதாக உண்டானதன்றி, மிகவும் பழமை வாய்ந்ததால் நன்கினிது தெளியப்படும். இந்நாளைய எழும்பூர் (Egmore ) முதற் குலோத்துங்க சோழனின் (1070 AD ) செப்பேடுகளில் குறிக்கப்பெற்றுள்ளது. மேலும், அது கி.பி. ஏழாம் நூற்றாண்டில் மகேந்திரவர்மன் (கி.பி. 600 -630 ), நரசிம்மவர்மன் (கி.பி. 630 -668 ) காலத்தவர் ஆன திருநாவுக்கரசர்  தேவாரத்தில்,

“இடும்பாவனம்  எழுமூர் ஏழூர் தோழர்

எறும்பியூர் ஏராரும் ஏம கூடம்

கடம்பை இளங்கோயில் தன்னினுள்ளும்

கயிலாய நாதனையே காணலாமே”    – ஷேத்திரக்கோவை 5.

எனவரும் பாடலிலும் குறிப்பிடப் பெற்றிருக்கின்றது.

இவ்வாறே, நுங்கம்பாக்கம் என்பது, முதலாம் இராசேந்திர சோழனின் (கி.பி. 1012 )  செப்பேடுகளில் கூறப்பட்டுள்ளது.      புதுப்பாக்கம், வேப்பேரி, செம்பியம், வியாசர்பாடிஎன்பவை விசயநகர அரசர்களின் சாசனங்களில் இடம் பெற்றிருக்கக் காண்கின்றோம்.  திருவொற்றியூர், திருமயிலை, திருவல்லிக்கேணி, திருவான்மியூர் என்னும்தலங்களின் பழமையை அனைவரும் அறிந்ததொன்று.

தொண்டை நாடு:

பண்டைக் காலத்தில் தமிழகத்தின் வடபகுதி  “தொண்டை நாடு” என வழங்கப்பெற்று வந்தது.   “தொண்டை நன்னாடு சான்றோர் உடைத்து” என்பது அவ்வைப் பிராட்டியார்திருவாக்கு.

இத்தொண்டை நாடு 24  கோட்டங்களாகப் பிரிக்கப் பெற்றிருந்தது.

  1. புழற்கோட்டம் 2. புலியூர்க் கோட்டம் 3. ஈக்காட்டுக்கோட்டம் 4. மனவிற் கோட்டம் 5. செங்காட்டுக்கோட்டம் 6. பையூர்க் கோட்டம்  7. எழிற் கோட்டம் . 8. தாமல்கோட்டம் 9. ஊற்றுக்காட்டுக் கோட்டம் 10. களத்தூர்க் கோட்டம் 11. செம்பூர்க் கோட்டம்  12. ஆம்பூர்க் கோட்டம்  13. வெண்குன்றக் கோட்டம் 14. பல்குன்றக் கோட்டம்15.இளங்காட்டுக் கோட்டம் 16. காலியூர்க் கோட்டம் 17. செங்கரைக் கோட்டம் 18. படுவூர்க் கோட்டம்  19. கடிகூர்க் கோட்டம் 20. செந்திருக்கைக் கோட்டம் 21. குன்றவர்த்தன கோட்டம்   22. வேங்கடக் கோட்டம்  23. வேலுர்க் கோட்டம் 24. சேந்தூர்க் கோட்டம்.

புலியூர்க் கோட்டம்:

இவற்றுள் புலியூர்க் கோட்டம் என்பது மிகவும் புகழ்பெற்ற தொன்றாக விளங்கியது. பெரியபுராணம் இயற்றிய சேக்கிழார் சுவாமிகள் அவதரித்த குன்றத்தூர் வளநாடு, புலியூர்க் கோட்டத்தின் ஓர் உட்பிரிவேயாகும்.

“தொண்டை நாடு, பாலாறு பாய்ந்து வளம் சுரந்து நல்கும் மாட்சிமையுடையது. அதன் கண், எங்கணும் சோலைகள் சூழ்ந்து காணப்படும்.   அச்சோலைகளில் பாளைகள்  விரிந்து மனம் கமழும்.   அப்பெருஞ்சோலைகளுக்குள்  வண்டுகள் இசை பாடும்.   மயில்கள் களித்து நடனஞ்செய்யும்.  இத்தகைய சிறப்பு மிக்க தொண்டைநாட்டில் 24 கோட்டங்கள் உண்டு.  அவற்றுள் புலியூர்க் கோட்டம் என்பது ஒன்று.  அதன் கண் ஒரு பகுதியாகத் திகழ்வது குன்றை வளநாடு.   அவ்வள நாட்டின் தலைநகரம் குன்றத்தூர்.  அக்குன்றத்தூரிலேயே திருத்தொண்டர் புராணம் என்னும் பெரிய புராணத்தைப் பாடிய சேக்கிழார் என்னும் அருண்மொழித் தேவர் அவதரித்த சேக்கிழார் திருமரபு சிறந்துவிளங்கியது. “

தொண்டை நாடு – புலியூர்க் கோட்டம்- குன்றத்தூர் வளநாடு ஆகியவற்றின் சிறப்பினை,

“பாலாறு வளஞ்சுரந்து நல்க மல்கும்

பாளைவிரி மணங்கமழ்பூஞ்சோலை தோறும்

காலாறு  கோலி இசை  பாட நீடுங்

களிமயில் நின்றாடும் இயல்தொண்டைநாட்டுள்

நாலாறு கோட்டத்துப் புலியூர்க்  கோட்டம்

நன்றிபுனை குன்றைவள நாட்டு மிக்க  

சேலாறுகின்ற வயற் குன்றத்தூரில்

சேக்கிழார் திருமரபு சிறந்த தன்றே”

எனத் திருத்தொண்டர் புராண வரலாற்றில் உமாபதி  சிவம்  புகழ்ந்துரைத்தல் காணலாம்.    குன்றத்தூர், போரூர், மாங்காடு, அமரூர், கோட்டூர் ஆகிய வளநாடுகளைத்தன்னகத்தே கொண்ட புலியூர்க் கோட்டத்தில் தலைமையிடம் ஆகிய  புலியூர்  என்பது, இந்நாளைய  கோடம்பாக்கமேயாகும்.

புலியூர்:

இந்நாளில் கோடம்பாக்கத்தின் ஒரு பகுதியாகத்  திகழும் புலியூர் என்பது, பண்டைக்காலத்தில் கோடலம்பாக்கத்தைத் தன்னுள் அடக்கி கொண்டிருந்த ஒரு பெரும் ஊராகும்.  இதற்குப்  புலியூர் எனும் பெயர் அமைந்ததற்கு உரிய காரணம் பின்வருமாறு:

முன்னொரு காலத்தில் மத்தியந்தினர் என்னும் ஒரு பெரு முனிவர் இருந்தார்.     அவருக்கு  ஒரு தவப்புதல்வர் தோன்றினார்.  அப்புதல்வரின்  பெயர்  மழ  முனிவர்(இளங்குழந்தையாகிய முனிவர்) என்பது. அவர் தன தந்தையாரிடத்தில் நான்கு வேதம், ஆறு அங்கம், மீமாம்சை, புராணம், தருக்கம், தரும சாத்திரம் முதலிய பலகலைகளையும் கற்றுத்தேர்ந்தார். கல்வியின் பயன் கடவுளை வழிபடுதலும், இறைவன் அருளைப் பெறுதலும் என உணர்ந்தார்.    ஆதலால் மண்ணுலகில் உள்ள புண்ணியத்தளங்களையெல்லாம் தரிசித்து வணங்கவும், இறைவனைப் பூசித்து வழிபடம் விழைந்தார்.    பூக்களை பொழுது விடிந்தபின் எடுத்தால் வண்டுகள் தீண்டும்.  இரவில் எடுக்கச்  சென்றால் வழி தெரியாது.  கோங்கு மூலரான மரங்களில் மலர் பறிக்கலாமெனில், அவற்றின் அடிமரம் உயர்ந்து  வளர்ந்திருத்தலின் கையும் காலும் பனியால் வழுக்கும்.  ஆதலின், யாது செய்யலாம் என்று பலவாறு எண்ணினார். முடிவில்  இறைவனை  துதித்துப்  போற்றி “அடியேன் நுமக்கு ஏற்ற இனிய எழில் மலர்களைப் பறித்துப் பூசைசெய்வதற்குப் பயன்படும் வகையில் அடியேனுடைய கையும் காலும் புலியைப் போல வலிமையான நகங்களை பெறவும், அவைகளில் காணும் திறன்மிக்க சிறந்த கண்கள்அமையப் பெறவும் திருவருள் சுரந்தருள்க”   எனப் பணிந்து வேண்டினார்.     இறைவனும்  அதற்கு  இசைந்து  அவ்வாறே  அளித்து  அருளினன் . இங்ஙனம் மலர் பறித்துச்சாத்தி இறைவனை வழிபடுதற் பொருட்டுத் தம்  கைகால்களில் புலியைப் போன்ற வலிமை மிக்க நகங்களைப் பெற்றதனால் இவருக்கு புலிக்கால் முனிவர் (வியாக்கிரபாதர், வியாக்கிரம் – புலி; பாதம் – கால்) என்னும் காரணப் பெயர் ஏற்படுவதாயிற்று.

புலிக்கால் முனிவர்: (வியாக்கிரபாதர்)

இவ்வாறு புலிக்கால் முனிவர் என்னும் பெயர் பெற்ற (வியாக்கிரப்பதை) முனிவர், பல புண்ணியத் தலங்களைத் தரிசித்துக் கொண்டு வந்து, தாம் தில்லை என்னும்சிதம்பரத்திற்குச் சென்று நடராசப் பெருமானை வழிபட்டு அருள் பெறுவதற்கு முன்னர், இங்கு நெடுநாள் தங்கித் தம் பெயரால் ஒரு சிவலிங்கத் திருமேனியை நிறுவி, வழிபட்டு வாழ்ந்து வந்தார்.  புலிக்கால் முனிவர் தங்கி வழிபடப் பெற்ற ஊராதலின்  இதற்குப் புலியூர் என்றும், இங்குள்ள சிவப்பெருமானுக்குப் புலியூரைடையார் என்றும்பெயர்கள் வழங்குவனவாயின.    புலியூர் என்பது, வியாக்கிரபுரி எனவும் வழங்கும்.    ஆதலின் இங்குள்ள இறைவனின் பெயர் வியாக்கிரபுரீசுவரர் எனவும் வழங்கப்படும். புலிக்கு வேங்கை எனவும் ஒரு பெயர் உண்டாதலின், புலியூருக்கு வேங்கைப்புறம் எனவும், அங்குள்ள இறைவனுக்கு வேங்கீசுவரர் எனவும் பெயர்கள் அமைந்தன.   எனவே  புலியூரைடையார்  – வியாக்கிரபுரீசுவரர் – வேங்கீசுவரர் என்னும் பெயர்கள் அனைத்தும், இங்குள்ள சிவபெருமானுக்குரிய திருப்பெயர்களாகும்.

புலிக்கால் முனிவர், இப்புலியூரில் நெடுங்காலம் தங்கிச் சிவபெருமானை வழிபட்டதன் பயனாகவே, பின்னர்த் தில்லைச் சிதம்பரம் (பெரும்பற்றப்புலியூர்) சென்று, அங்கேயும் தம் பெயரால் திருப்புலீச்சுரம் என்னும் திருக்கோயிலை அமைத்து வழிபட்டு தவம் புரிந்து, தில்லை நடராசப் பெருமானின் திருநடம் கண்டு  மகிழும் பேறுபெற்றார்.  திருப்பாதிரிப்புலியூர், திருப்பெரும் புலியூர் முதலிய தலங்களிலும், வியாக்கிரபாதர் இறைவனை வழிபட்டு மகிழ்ந்தார் என்பது வரலாறு.

பதஞ்சலி முனிவர்:

ஒரு சமயம் திருமால் திருப்பாற்கடலில் பள்ளிகொண்டிருந்தார். அவர் தமது அறிதுயில் (யோகநித்திரை) நீங்கி, அரகர சிவசிவ என்னும் திருப்பெயர்களைச்  சொல்லி,கைகளைத் தலைமேல் குவித்து வணங்கி கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருகப் பத்மாசனம் என்னும் நிலையில் எழுந்தருளியிருந்தார்.     அங்ஙனம் அவர் மனமகிழ்ச்சியுடன் எழுந்தருளியிருக்கும்   நிலைக்கு காரணம் யாது? எனத் திருமகளும் ஆதிசேடனும் பிரமதேவனும் பணிந்து அன்புடன் வினவினர்.

அதற்கு திருமால் முன்பொரு கால் சிவபெருமான் தருக வன முனிவர்களின் செருக்கை அடக்கித் திருத்துவதற்காகப்  பிச்சை தேவர் (பிட்சாடனர்) வடிவன்கொண்டுசென்றதனையும், தாருக வன முனிவர்கள் தம் செருக்கடங்கிப் பணிந்த பொது சிவபெருமான் பயங்கர திருத்தம், சுத்த திருத்தம், அநுக்கிரகத்  திருத்தம், சௌக்கியத்திருத்தம், ஆனந்த் திருத்தம் முதலிய திருநடங்களைச் செய்தருளியதனையும் கூறி, அவைகள் எல்லாம் இப்போது எம் நிலையில் எழுந்தன.    இதனாலேயே  யாம் இப்போதுஅறிதுயிலில் நின்று எழுந்து மகிந்ழ்ந்திருந்தோம்  இரு விவரித்து  உரைத்தார்.

அந்நிலையில், சிவபெருமானின் திருநடனங்களின் திறத்தைப் பற்றி திருமால் விவரித்து உறைக்கக் கேட்டு வியந்து மகிழ்ந்த ஆதிசேடன், பக்தியுணர்வால் பரவசப்பட்டு நின்றான்.  ஆதிசேடனின்  பக்திணயர்வைக் கண்டு  மகிழ்ந்த திருமால் “இத்தகைய சிறந்த பக்தனாகிய நீ சிவபெருமானின் திருநடனத்தைக் கண்டு களிக்கவிரும்பினையாயின், அவரை நோக்கித் தவம் செயது அருள் பெறுக” என்று வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்.

அதன்படி ஆதிசேடன், புத்திர பேறு விரும்பித் தவன்கிடந்த அத்திரி முனிவரின் மனைவி ஆகிய அனுசூயை என்பவனின் கைகளில், ஐந்து தலைகள் கொண்ட ஒரு சிறுபாம்பாக வந்து பொருந்தினான். அவள் தன் கைகளில்  ஒரு சிறு பாம்பு வந்து கிடத்தல் கண்டு அஞ்சிக்  கைகளை உதறினாள்.    அப்போது அச்சிறு பாம்பாகிய ஆதிசேடன்அவளது கால்களின் மேல் விழுந்தான்.

இங்ஙனம் பாதத்தில் விழுந்தனால், ஆதிசேடன் பதஞ்சலி (பதம் – கால், சளித்தல் – விழுதல்) எனப் பெயர் பெற்று, அத்திரி முனிவருக்கும் அனுசூயா தேவியார்க்கும்மைந்தராக வளர்ந்து வந்தார்.   இப்பதஞ்சலி முனிவரும் வியாக்கிர பாதரைப் போலவே தில்லைக்கு கூத்துப் பெருமாளின் திருநடனம் காணப் பெருந்தவங்கள் புரிந்துவந்தார்.

என்றபடி தில்லைக் கூத்துப் பெருமானின் திருநடனம் காண விரும்பிய உணர்ச்சி ஒற்றுமையின் காரணமாக, வியாக்கிரபாதரும் பதஞ்சலி முனிவரும் இணையற்ற இனியநண்பர்களாகும் பெருங்கிழமை உரிமை பூண்டனர்.  இவ்விருவரும்  பலதலங்களை ஒருங்கு சேர்த்து வழிபட்டுப் பணிந்து இன்புற்றனர்.

அம்முறையில் கோடலம்பாக்கம் புலியூரில் எழுந்தருளியுள்ள வேங்கீசுவரனையும் பன்னெடுங்காலம் வழிபட்டுப் பணிசெயது போற்றினர்.

இறுதியாக  இவர்கள் இருவரும் தில்லைக்குச்  சென்று முறையே திருப்புலீச்சுரம் திருஅனந்தேச்சரம்   என்னும் திருக்கோயில்களை  அமைத்து வழிபட்டுத் தில்லைக் கூத்தப்பெருமானின் திருநடனம் கண்டு மகிழ்ந்து இன்புற்றார்கள் என்பது வரலாறு.

கோடம்பாக்கம் புலியூர் வேங்கீசுவரர் திருக்கோயிலில், இவ்வரலாறுக்குச் சான்றாக, இன்று வியாக்கிரபாதர், பதஞ்சலி முனிவர் ஆகிய இரு முனிவர்களின் சிலைகளும்எழுந்தருளச் செய்யப் பெற்றிருத்தல் காணலாம்.

இவைகளால் இந்தத் தலவரலாற்றுக் குறிப்புகள் புலனாகின்றன.

கட்டுரையாளர் : ர.ரங்கராஜ், தலைவர், சென்னை 2000 ப்ளஸ் ட்ரஸ்ட்

சென்னை 2000 ப்ளஸ் ட்ரஸ்ட்டானது, சென்னையின் 2000 ஆண்டுகால பழமையான வரலாற்றுத் தகவல்களையும், அதன் பழமையான பண்பாடு மற்றும் கலாச்சார அம்சங்களைக் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஆகஸ்ட் மாதத்தை சென்னை மாதமாக கொண்டாடவிருக்கிறது. வாருங்கள் இணைந்து கொண்டாடுவோம்.

தொடர்புக்கு :  rangaraaj2020@gmail.com, போன்:  9841010821.

Share the Article

Read in : English

Why we always find lots of cashews on top of Deepavali mixture why tangedco need to pay us for damaging household appliances why eating on banana leaves is healthier What the Tamil Nadu Organic policy needs what is the real story of onam festival