ஆரம்பம் முதலே வரவேற்பும் எதிர்ப்பும் இருந்த நிலையில், சபரிமலைக்கு ஐயப்பனை வழிபட பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று கேட்டு தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று இறுதி தீர்ப்பைக் கூறியுள்ளது. வழிபாட்டில், ஆண்- பெண் பாலின வேறுபாடு பார்க்கக் கூடாது என்று கூறும் உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு, சபரிமலையில் பெண்கள் சென்று ஐயப்பனை வழிபடலாம் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பினை வழங்கியுள்ளது.
ஏற்கனவே 10 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளும், 50 வயதிற்கு மேற்பட்ட பெண்களும் சென்று வரும் நிலையில், தற்போது அனைத்து தரப்பு வயது பெண்களும் செல்லலாம் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பு அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இத்தகைய சூழலில், இந்த தீர்ப்புக்கு ஆதரவாகவும், எதிராகவும் குரல்கள் எழ ஆரம்பித்துள்ளன. சபரிமலைக்கு செல்லும் ஆண்களில் பெரும்பாலானோரும் தமிழ் மாதங்களான கார்த்திகை- மார்கழி மாதங்களில் மாமிச உணவுவகைகளைத் தவிர்த்து, பெண்களுடனான உடல் ரீதியான உறவுகளைத் தவிர்த்து 41நாள்கள் கடும் விரதம் இருந்தே சபரிமலைக்கு ஐயப்பனை காண செல்வது வழக்கம் என்கிறார் 43 ஆண்டுகளாக சபரிமலைக்கு சென்று வரும் குருசாமியான டி. சொக்கலிங்கம். “பெண்கள் தீட்டானவர்கள் என்றக் காரணமா என எனக்குத் தெரியவில்லை. ஆனால், ஐயப்பன் திருமணமாகாமல் பிரம்மச்சாரியாக இருந்தவர். அதனால் தான், திருமணமாகாத ஐயப்பனை தரிசிக்க, பெண்களுடன் உள்ள உறவை 41 நாள்களுக்கு தவிர்த்து, விரதம் இருந்து மலைக்கு செல்கிறோம்” என்கிறார் அவர்.
“41 நாள்கள் விரதம் இருந்து, ஐயப்பனைத் தரிசிக்க வரும் உண்மையான பக்தனுக்கு, அந்த ரம்பையே வந்தாலும் கூட விரதம் கலையாமல், ஐயப்பனை தரிசித்து அருள் பெற்று வருவான்” – குருசாமி ராமச்சந்திரன்
கார்த்திகை-மார்கழி மாதக் கடுங்குளிரில் விரதம் இருக்கும் ஐய்யப்ப பக்தர்கள், அதிகாலை 4 மணிக்கு அந்த கடுங்குளிரிலும் குளித்து, ஐயப்பனை உளமுருக வேண்டுகின்றனர். இக்காலங்களில் எவ்வித கெட்டப் பழக்கங்களிலும் ஈடுபடாமல், அசைவ உணவுப் பழக்கவழக்கங்கள் உள்ளவர்கள் கூட, அவற்றை அக்காலங்களில் தவிர்த்து, விரதம் இருக்கின்றனர். “இக்காலக்கட்டங்களில், ஐயப்ப பக்தர்களாகிய நாங்களாகவே சமைத்து சாப்பிடுகிறோம்.” எனக் கூறும் சொக்கலிங்கம், தொடர்ந்து 41 வது நாள் இருமுடிக் கட்டி குழுவாக வாகனங்களில் ஏறி மலைக்கு செல்வதாக கூறுகிறார்.
சபரிமலைக்கு செல்லும் போது, பம்பை வரையே வாகனங்கள் செல்ல இயலும். தொடர்ந்து செங்குத்தான மலைப்பகுதியில் சுமார் 8 மைல்கள் வரை நடந்தே ஐயப்பனின் சன்னதியை அடைய முடியும். கடுமையான நெரிசலாக இருக்கும் பாதையில் திரும்பி பார்க்கும் திசை எங்கும் ஆண்களே காணப்படுவர் என்கிறார் அவர். ஆனால், காலங்காலமாக இருந்து வரும் நம்பிக்கைகளுக்கு எதிராக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக கூறும் அவர், எந்த பெண்களிடமிருந்து விலகியிருந்து விரதம் இருந்தோமோ, அதே பெண்களை ஐயப்பன் சன்னிதியில் வழிபட அனுமதிப்பது என்பது புலிவாலைப் பிடிப்பது போல் தான் தெரிகிறது” எனக் கூறுகிறார்.
28 ஆண்டுகளாக சபரிமலை செல்லும் மற்றொரு குருசாமியான ராமச்சந்திரன், உச்சநீதிமன்றத் தீர்ப்பு பெண்களை அனுமதித்தாலும் பெண்களின் பாதுகாப்புக்கு ஏற்ற சூழலாக இருக்குமா என்ற தனது சந்தேகத்தை எழுப்புகிறார். “ ஐயப்பனை உண்மையான பக்தியுள்ளவர்கள் விரதம் இருந்து வழிபடலாம். சன்னிதானத்திற்கு வரலாம். ஆனால், இங்கு நடப்பதெல்லாம் ஐயப்பனை வைத்து அரசியல் செய்வது மட்டும் தான் நடக்கிறது” எனக் கூறும் அவர்,பெண்களுக்கு பாலின சமத்துவம் என்ற பெயரில் தான் இந்த உத்தரவை பெற்றிருக்கிறார்கள் எனக் கூறுகிறார். அதே வேளையில், பெண்களால் நாங்கள் இருப்பதைப் போல் விரதம் இருந்து, கல்லும் முள்ளும் பாதைக்கு மெத்தை என்று பாடிய படியே வெறுங்காலில் இருமுடி கட்டி, அடர்ந்த காட்டில் செல்வதைப் போல் பெண்களாலும் செல்ல முடியும் என்றால் அவர்கள் வருவதில் ஒன்றும் தவறில்லை. ஆனால், பல லட்சக்கணக்கான ஆண்கள் நெருக்கத்தில் முண்டியடிக்கும் சூழல்களில், அங்கு பெண்களும் வருவது என்பது நிலைமையை இன்னும் நெருக்கடிக்குள் ஆக்கும் என்கிறார்.
“எந்த பெண்களிடமிருந்து விலகியிருந்து விரதம் இருந்தோமோ, அதே பெண்களை ஐயப்பன் சன்னிதியில் வழிபட அனுமதிப்பது என்பது புலிவாலைப் பிடிப்பது போல் தான் தெரிகிறது” – குருசாமி சொக்கிலிங்கம்.
எப்படியிருந்தாலும், இதனை பக்தியின் அடிப்படையிலேயே அணுக வேண்டும், உண்மையாகவே, 41 நாள்கள் விரதம் இருந்து, ஐயப்பனைத் தரிசிக்க வரும் உண்மையான பக்தனுக்கு, அந்த ரம்பையே வந்தாலும் கூட விரதம் கலையாமல், ஐயப்பனை தரிசித்து அருள் பெற்று வருவான் என்கிறார் அவர்.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பு பெண்களையும் சபரிமலையில் அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ள நிலையில், ஒரு குருசாமியாக பெண்களையும் இருமுடிக்கட்டி அழைத்து செல்வீர்களா என்ற கேள்விக்கு ராமச்சந்திரன் கூறுகையில், “பொதுவாகவே, இருமுடிக் கட்டும் போது ஒரு முடியில் வைக்கும் அரிசியில் ஒரு பிடி அரிசி வீட்டில் இருக்கும் பெண்களும் இடும் சடங்கு நடைபெறும். சில குருசாமிகள் தங்கள் குழுவினரின் வீட்டுப் பெண்களையும் அழைத்து செல்வது வழக்கம். அவர்கள் பம்பையிலேயே குளித்து விட்டு, அங்கிருக்கும் கணபதி கோயிலில் தொழுதுவிட்டு வாகனத்தில் தங்கிவிடுவர்.” எனக் கூறும் அவர், ஏற்கனவே 10 வயதுக்குட்பட்ட மற்றும் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களை சபரிமலைக்கு அழைத்துச் செல்லும் நிலையில், இப்படிப்பட்ட ஒரு சூழலில் தங்கள் வீட்டுக் குடும்ப பெண்களுக்கு விருப்பம் இருந்தால், அவர்களை அழைத்து செல்வதில் ஒன்றும் தவறில்லை.” எனக் கூறினார்.