Read in : English

இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு, புலியூர் கோட்டம் தான் பழைய சென்னையாக இருந்தது. கிட்டத்தட்ட 1,800 ஆண்டுகளுக்கு மேலாக, பல்வேறு அரசர்களின் ஆட்சியின் கீழ், சென்னையின் நிர்வாகம்  புலியூர் கோட்டத்தின்  அமைப்பாகத்தான் திகழ்ந்தது. இன்று சென்னையின் முக்கிய பகுதிகளான எழும்பூர்,   மைலாப்பூர், திருவல்லிக்கேணி, அடையாறு, திருவான்மியூர், சைதாப்பேட்டை, நந்தனம், பரங்கிமலை, ஆலந்தூர், நங்கநல்லூர், ஆதம்பாக்கம், பல்லாவரம், பம்மல், திருநீர்மலை, குன்றத்தூர், மாங்காடு, பூந்தமல்லி, தாம்பரம், சோமங்கலம், மணிமங்கலம், பொழிச்சலூர் போன்ற இடங்களையெல்லாம் புலியூர் கோட்டம் தான் நிர்வகித்தது என்பதற்கு ஆதாரமாக ஏகப்பட்ட கல்வெட்டுகள் சென்னையின் பல்வேறு பகுதிகளில் கிடைக்கின்றன.

ஆங்கிலேயர்கள் மிரட்டியம், பணம் கொடுத்து சில கிராமங்களை தங்கள் கீழ் கொண்டு வந்து, வரிகளை வசூல் செய்வதற்காக மெட்ராஸ் எனும் ஒரு சிறிய அமைப்பாக, ஒரு சுரண்டல்     பகுதியாக அமைத்துக்கொண்டார்கள். ஆனால், அதற்கு முன்னர், பல்வேறு அரசர்கள் ஆட்சியிலிருந்தாலும்,  புலியூர் கோட்டம் என்கின்ற பழைய சென்னை நகரம், இன்றைய சென்னை பெருநகர் போன்ற பெரிய அமைப்பாக, பெரும் அளவிற்கு எல்லா பகுதிகளுக்கும் மக்கள் தேர்ந்தடுக்கும் சபைகளின் மூலமாக, உள்ளாட்சிகளின் மூலமாக சிறப்பாக நிர்வாகம் செய்தது. புலியூர் கோட்டம்  வரலாறு என்கின்ற இந்த தொடர் கட்டுரைகளில் உங்களுக்கு ஆதாரப்பூர்வமாக அதன் சிறப்புகளை வழங்குகிறேன். இன்றைய கட்டுரையில், புலியூர் கோட்டத்தின் ஒரு பகுதியாக திகழ்ந்த, குறைந்தது ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக உள்ள பதிவுசெய்யப்பட்ட செய்திகளுடன்  புகழ்பெற்ற திரிசூலம் வரலாற்றைப் பற்றி அலசுகிறோம்.

மீனம்பாக்கம் விமான நிலையம் வந்த பிறகு திரிசூலம் அனவைவரும் அறிந்த பகுதியாக உள்ளது. நவீன போக்குவரத்தின் மெட்ரோ ரயில் நிலையம், புறநகர் ரயில் நிலையம் என பல வசதிகள் வந்துவிட்டன. கல்குவாரிக்கும் இந்த ஊர் புகழ் வாய்ந்தது. கடந்த காலத்தில் சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில்  கட்டப்பட்ட  பல  கோயில்களுக்கு திரிசூலம் குவாரிகளிலிருந்து எடுக்கப்பட்ட கிரானைட் கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

திரிசூலம் வரலாற்றுச் சிறப்புமிக்கதும் பழமையானதுமான ஊர், 1000 வருடங்களுக்கான வரலாறு கல்வெட்டுகளில்  பதிவு செய்யப்பட்டுள்ளது. திரிசூலத்தில் பெறப்பட்ட கல்வெட்டுகளில், இந்த  ஊர் சோழர் காலகட்டத்தில், முதலாம் குலோத்துங்கசோழன்   காலத்திலிருந்து உள்ளது (கி.மு 1070-1118) திரிசூலம், புலியூர் கோட்டத்தில் சுரத்தூர் பகுதியில்  பல்லாவரத்தில் இருந்த ஒரு சிற்றூர் (SII VII.  538, 541, 542, 543, 547). வெவ்வேறு கல்வெட்டுகளில் சென்னையைச் சுற்றியிருந்த  வரலாற்று சிறப்புமிக்க இடங்களாக செம்பியன் – திருமங்கலம், மணிமங்கலம், பம்மல், பல்லாபுரம் (பல்லாவரம்), மணற்பாக்கம், பூந்தமல்லி உள்ளிட்ட பல இடங்கள் இந்த கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.

புலியூர் கோட்டத்திலுள்ள சுரதுர் நாட்டில்,  இந்த ஊர் திருச்சூரம் என்று முன்னர்  பெயரிடப்பட்டது.  தெற்குப் பகுதியில் தாம்பரத்திலிருந்து தொடங்கி ஆதம்பாக்கம், ஆலத்தூர்(ஆலந்தூர்) என விரிவடைந்தது. வடக்கு பகுதியில் பம்மல், பல்லாவரம், திருநீர்மலை ஆகிய ஊர்கள் புலியூர் கோட்டத்தில் அடங்கியவையாக இருந்தன.

திரிசூலத்தில் கண்டெடுக்கப்பட்ட பழமையான முதுமக்கள் தாழி:

கற்காலத்துக்குப் பிறகு, சென்னை இரும்பு காலத்தின் பழமைக்கு சென்றது. பல முதுமக்கள் தாழியும் புதையிடங்களும் சென்னையைச் சுற்றி காணப்பட்டன. அவை இரும்பு காலத்தைச் சேர்ந்தவையாக இருக்கும். தொல்லியலாளர்கள் அங்கு இது போல் ப்ல புதியிடங்கள் இருந்ததாகக் கூறுகின்றனர்.

தொல்லியலாளர் ரியா இதே போன்ற புதையிடங்ககளை பல்லாவரம் மற்றும் திரிசூலத்தில் கண்டுபிடித்தார். (அரசு ஆணை எண். 1135-12 ஆகஸ்டு 1887) அதுமட்டுமில்லாமல் தமிழ் இலக்கியத்தில்  புறநானூறு போன்ற  சங்ககால பாடல்களிலும் முதுமக்கள் தாழி பயன்படுத்தப்பட்டதற்கு சாட்சியங்கள் உள்ளன. புகழ்பெற்ற தமிழறிஞர் ஜி.யூ போப் புறநானூறு  குறித்து   குறிப்பிடுகையில், தாழிகள் பற்றிய குறிப்பு சங்கப்பாடல்களில் இருப்பதை உறுதி செய்கிறார். ( இந்திய பழமை சரித்திரம் தொகுதி- xxxix பக்கம், 285. ஆன்சியன்ட் நம்பர் 2, ஜூலை 1946)

சென்னையில் நீலாங்கரையர்கள்:

சென்னையில் கண்டெட்டுக்கப்பட்ட கல்வெட்டுகளில், 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுகளில் நீலாங்கரையர்கள் பற்றிய குறிப்பு அடிக்கடி தென்பட்டது. நீலாங்கரையர்கள் அப்பகுதியில் கொடை தன்மைக்காக அறியப்பட்ட அலுவலர்கள் அல்லது தலைவர்கள். நீலாங்கரையர்கள் சோழ அரசர்கள் முதலாம் ராஜாதி ராஜா, மூன்றாம் குலோத்துங்கன், மூன்றாம் ராஜராஜன், கடவ அரசர்கள் கோப்பெருஜிங்கா, தெலுங்கு – சோடா அரசர்கள் விஜயகண்டகோபாலன், மற்றும் பாணிய மன்னர்கள் இரண்டாம் ஜடவர்மன் சுந்தர பாண்டியன்,  முதலாம் மாறவர்மன் குலசேகரன் ஆகியோர்  வெவ்வேறு காலகட்டத்தில் தொண்டைமண்டலத்தைக் கைப்பற்ற வந்தபோது  சேவை புரிந்துள்ளார்கள்.

நீலாங்கரையர்கள் பற்றிய குறிப்புகள் 11ஆம் நூற்றாண்டிலிருந்து 14ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலகட்டத்திலுள்ள கல்வெட்டுகளில் காணக் கிடைக்கிறது. திருநீர்மலை விஷ்ணு கோயிலில் இருக்கும் கல்வெட்டில், நீலாங்கரையாளர்கள் வெவ்வேறு காலகட்டத்தில் அளித்த வெகுமதிகள் பற்றிய குறிப்புகள் உள்ளன. அதில் ஒன்று (1912-ல் 535) விஷ்ணு கோயிலுக்கு இரண்டு விளக்குகளை  திருச்சூர்- கண்ணப்பன் அபயம்புக்கான் நீலாங்கரையான் கடகன் – சோழகங்காதேவன் கொடையாக  அளித்தது. இதனை மூன்றாம் ராஜராஜனின் ஆட்சியில் 6ஆவது வருடம் அளித்துள்ளார், கி.பி 1222ஆம் ஆண்டில். (இதில் முக்க்கியமாக குறிக்கப்படவேண்டியது, மற்றொரு நீலாங்கரையான் குடும்பம் பற்றியும் கூறப்பட்டுள்ளது. அவர் பூலியூர் கோட்டத்திலுள்ள திருச்சூரம் அதாவது பல்லாவரம் அருகிலுள்ள திரிசூலம், (சென்னை – 1909-ல் 275-திருக்காசூர், செங்கப்பட்டு தாலூகா) சார்ந்தவர்.

திரிசூலம் ரயில் நிலையம்

திரிசூல மலையில் சோழர் கால கல்வெட்டுகள் திரிசீலம் நகரம், திரிபுரசுந்தரி திருசூலநாதர் கோயிலிலிருந்து தோன்றியதாகக் கூறப்படுகிறது. இந்த கோயில் முதலாம்  குலோத்துங்க சோழனால் 12ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது .   அக்கோயிலின் சுவர்களில் சோழர் கால கல்வெட்டுகள் உள்ளன. அக்கோயிலின் சுவர்களுக்கு பின்னே மிகப் பெரிய புதிர்கள் ஒளிந்துள்ளன. பூமிக்கடியில் விலைமதிப்பில்லாத உலோகங்களும் நகைகளும் புதைக்கப்பட்டுள்ளதாகவும் அங்கே செல்ல ரகசிய பாதை    உள்ளதாகவும் கதைகள்  உள்ளன. முதலாம் குலோத்துங்க சோழன் பொக்கிஷங்களை,  இக்கோயிலின் உள்ளே  மறைத்து வைப்பதற்கு பதிலாக  பூமிக்கடியில் வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இக்கோயிலுக்கும் அருகிலுள்ள பஞ்சபாண்டவர் மலைக்கும் இடையே சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு இரு பகுதியும் இணைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.அங்குதான் அரசனின் அரண்மனை இருந்துள்ளது.

திரிசூலம் மலையில் பல தமிழ் படங்களும் டிவி சீரியல்களும் எடுக்கப்பட்டுள்ளன. அதில் ‘’பைரவி’’, ’’ஊர்காவலன்’’, ‘’இன்று போய் நாளை வா’’, ‘’ஜென்டில்மேன்’’, மற்றும் ’’தீராத விளையாட்டு பிள்ளை’’ ஆகிய படங்கள் அடங்கும். மத்திய அரசு மலைமீது, ஆராய்ச்சி நிலையம் ஒன்றை  அமைத்துள்ளது.

திரிசூலம் மலை:

சென்னை நகரில் உயர்ந்த மலை இதுதான். இங்கு பல கோயில்களும் உள்ளன. திரிசூல மலையைச் சுற்றி அதன் நான்கு புறங்களிலும் 5 கோயில்கள் உள்ளன. விமான நிலயம் அருகிலுள்ள சந்தியம்மன் கோயில், முக்கனியம்மன் கோயில், பச்சையம்மான் கோயில், வேம்புலியம்மன் கோயில் மற்ரும் துலுக்காத்தம்மன் கோயில் என 5 கோயில்கள் உள்ளன.

கலிங்கத்துப்பரணியின் நாயகனான முதலாம் குலோத்துங்கன் (1070-1120) பற்றிய கல்வெட்டு திரிசூலம் அருகே கண்டுபிடிக்கப்பட்டது. மூன்றாம் குலோத்துங்கன் குறித்து பல கல்வெட்டுகள் இப்பகுதியில் உள்ளன. பாண்டியர்களைப் பற்றிய கல்வெட்டுகள் குன்றத்தூர், திரிசூலம், திருநீர்மலை பகுதிகளில் காணப்படுகிறது. சோழர் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட கோயில் கட்டும் பணி விஜயநகர் காலம் வரை நீடித்துள்ளது. விஜயநகர் அரசர்களைக் குறித்த கல்வெட்டுகள் 14 -17ஆம் நூற்றாண்டுவரை உள்ள கல்வெட்டுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மூன்றாம் ராஜராஜனை பற்றி தகவல்கள் முற்றுப்பெறாமல் உள்ளது. பம்மலில் உள்ள ஒரு கோயிலில் நன்கொடை அளிக்கப்பட்டு, எரிந்த விளக்கு சுரத்தூர்நாட்டுக்கு சொந்தமானது என குறிப்பிடப்பட்டுள்ளது.

திரிசூலநாதர் கோயில்:

வழக்கம் போல்,  வரலாற்று பெயர் மற்றும் எழுத்துக்களில் வேறுபாடு உள்ளது. திரிசூலத்தில் உள்ள கோயிலுக்கும் பெயர் வேறுபாடு உள்ளது. திரிசூலம், திருசூலம், திருச்சுரம், திருசூலநாதர், திரிசுலநாதர், ஶ்ரீ திரிசூலநாதர் கோயில், அருள்மிகு திரிசூலநாதர் ஆலயம் என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது.திரிசூலத்தில் பிரம்மனுக்கு இருந்த தொடர்பை பெருமைப்படுத்தவே முதலாம் குலோத்துங்கசோழன் கோயில் கட்ட முடிவெடுத்தான் என கூறப்படுகிறது. திரிசூல கோயில் பின்பு சுந்தர பாண்டியனால் புனரமைக்கப்பட்டது.

கோயில் கருவறையில், ஶ்ரீ திரிசூலநாதர் லிங்க ரூபத்தில் கிழக்காக பார்த்து எழுந்து அருளியுள்ளார். தெற்கு முகமாக அன்னை திரிபுரசுந்தரி கருவறைக்கு வெளியே  எழுந்தருளியுள்ளார். முதன்மை கருவறையில் அன்னை திரிபுரசுந்தரியின் மற்றொரு திருவுருவம் மூலவருக்கு முன்புறத்தில் உள்ளது. இஸ்லாமியர்கள் படையெடுப்ப்பின்போது, கருவறைக்கு வெளியே இருந்த தேவி சிதைக்கப்பட்டார். ஆகையால் அங்கு புதிய மூர்த்தி வைக்கப்பட்டார். அப்போது கோயில் பூசாரியின் கனவில் வந்த கடவுள், சிதைக்கப்பட்ட அன்னையின் திருவுருத்தை மூலவருக்கு அடுத்து வைக்கச் சொல்லி கட்டளையிட்டுள்ளார். ஆகையால் சிதைக்கப்பட்ட தேவியின் திருவுருவம் திருசூலநாதருக்கு அடுத்து வைக்கப்பட்டு, புதிதாக எழுப்பபட்ட திருவுருவம் கருவறைக்கு வெளியே வைக்கப்பட்டது.

புராணம்:

திரிசூலம் என்றால், பார்வதியின் ஆயுதம்(திரிசூலம்) என்று அர்த்தமானாலும், கோயிலின் புராணம்  இதன் பின்னுள்ள சுவாரசியமான தகவலை தெரிவிக்கிறது. படைத்தல் தொழிலின் கர்த்தாவான பிரம்மன், சிவனை இங்கு வழிபட்டுள்ளார். அதனால் இது பிரம்மபுரி என்றே அழைக்கப்பட்டுள்ளது. இந்தக் கோயிலில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டின்படி, திருசூலம் வானவன் மாதேவி சதுர்வேதி மங்கலத்தின் ஒரு பகுதி. அது பல்லபுரம், பல்லவபுரம்(இன்றுள்ள பல்லாவரம்) என்றழைகக்ப்பட்டிருக்கிறது. இது முதலாம் ராஜேந்திரனின் மனைவியின் பெயரால் அழைக்கப்பட்டுள்ளது.

தமிழில், மலைகளுக்கு இடைப்பட்ட பகுதி சுரம் என்று அழைக்கப்படுவதால் இந்த இடம் திரு சுரம் என்றழைக்கப்பட்டு பின்பு மருவி திரிசூலம் என்று அழைக்கப்படலானது. புராணத்தின்படி, பிரம்மாவுக்கு 5 தலைகள். இதுகுறித்து பிரம்மாவுக்கு பெருமிதம் உண்டு. அதை குறைக்க நினைத்த சிவன், பிரம்மனின் ஒரு தலையை வெட்டியுள்ளார். அதனையடுத்து பிரம்மா, சிவனிடம் தன் ஒரு தலை வெட்டப்பட்டதால் தன்னால் வேலைகளில் கவனம் செலுத்த முடியவில்லை என்று  வேண்டியுள்ளார். அதனால் சிவன் அவரை  ஆசிர்வதித்து , மன அமைதியை வழங்கி வேலைகளில் மனநிம்மதியுடன் ஈடுபட வைத்துள்ளார்.

பிறகு, பிரம்மா தேவலோகா திலோத்தமை என்ற பேரழகியைப் படைத்துள்ளார். அவளை படைத்த பிறகு பிரம்மனே அவளது பேரழகைக் கண்டு  அவள் மேல் காமம் கொண்டுள்ளார். ஆனால் திலோத்தமை அதற்கு  ஒப்புக்கொள்ளவில்லை. காரணம் தன்னைப் படைத்த பிரம்மன் தகப்பனைப் போன்றவர் என கூறியுள்ளாள். இதனை அறிந்த சிவ சேனைகள் பிரம்மனை துரத்தி அவர் செய்த பாவத்துக்காக அவரை தண்டிக்க நினைத்துள்ளனர். அப்போது பிரம்மன் இந்த மலைகளின் இடையே மறைந்திருந்து,   குற்றத்தை உணர்ந்து,  தன் பாவங்களிலிருந்து விடுபெற சிவ லிங்கம் எழுப்பி சிவனை வழிபட்டுள்ளார். அவரை மன்னித்துள்ளார் சிவன். இந்த தொன்மையான கோயில் நாற்புரங்களில் திரிசூல மலைகளுக்கிடையில் மிக அழகாக எழுந்துள்ளது. நான்கு றங்களும், நான்கு வேதத்தை குறிப்பிடுவதாகக் கூறப்படுகிறது. கோயிலின் உட்பிரகாரம்  விநாயகர் தெற்கு நோக்கி அமர்ந்துள்ளார்.  இங்கு விநாயகர் முப்புரி நூலாக நாகத்தை அணிந்திருப்பதால்,  ‘நாக யாக்னோபவவீதா கணபதி’ என்றழைக்கப்படுகிறார். பிரதோஷம் மற்றும் மகாசிவராத்திரி இக்கோயிலில் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது.

கட்டுமானம்:

திரிசூலத்திலுள்ள தர்மபுரீஸ்வரர் கோயில் சோழர் காலத்தைச் சேர்ந்தது. இது பல்லாவரம் ரயில் நிலையத்திலிருந்து கிழக்காக ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. இச்சிறு கோயிலின் நுழைவாயிலில் கோபுரம் கிடையாது. அதன் விமானம் மிக அழகாக நிறுவப்பட்டுள்ளது. இக்கோயில், திருவொற்றியூர், திருமுல்லைவாயில், பாடி கோயில்களில் கட்டப்பட்டுள்ள கஜபிரஸ்தா அல்லது தூங்கானை மாட வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. 7.62 மீட்டர் உயர்ந்துள்ள விமானம், அழகிய சிற்ப வேலைப்பாடுகளால் அமைக்கப்பட்டுள்ளது. வடக்கில் சிறு விமானம் அம்மன் கோயிலில் நிறுவப்பட்டுள்ளது. முதன்மை கோயிலில் அமைக்கப்பட்டுள்ள விமானம் போல் இருந்தாலும் அளவில் சிறியதாக இருக்கிறது. சோழர் காலத்தில் கோயில் என்பதை  சோழர் கால கல்வெட்டுகள் உறுதிப்படுத்துகின்றன. அவை ராஜாதிராஜ மற்றும் முதலாம் குலோத்துங்கன் காலத்தைச் சேர்ந்தவை.

திரிசூலத்தில் கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ள விபரங்கள்

திரிசூலம்    747/2017

மாவட்டம்:காஞ்சிபுரம்,வட்டம்:தாம்பரம்,ஊர்:திரிசூலம்,மொழி:தமிழ்,எழுத்து:கிரந்தங்  கலந்த  தமிழ், அரசு: சோழர்,அரசன்:ஸ்ரீராஜேந்திரச்சோழ தேவர் (முதலாம் குலோத்துங்கன்),  ஆட்சிஆண்டு:3,வரலாற்றுஆண்டு:கி.பி.1073,இ.க.ஆ.அறிக்கை : 315/1901, முன் பதிப்பு: 541/VII   ஊ.க.எண் : 1, இடம்:  தர்மபுரீஸ்வரர்கோயில் தெற்கு சுவர்.

குறிப்புரை: செம்பூர் கோட்டத்து செம்பூர் நாட்டுக் கவிகுளத்துவாயுடையான் கோயில் மண்ணைகொண்டசோழ பல்லவராயன் என்பவரிடமிருந்து புலியூர் கோட்டத்து சுரத்தூர் நாட்டுச் சோழதிவாகரச் சருப்பேதி மங்கலத்து திருச்சுரமுடையார் கோயில் சிவபிராமணர்கள் 150 காலம் நெல் பெற்றுக்கொண்டு, ஆண்டுக்கு இதன் வட்டியாக வரும் 37 கலம் நெல்லிருந்து திருச்சுரமுடையார் இறைவனுக்கு அமாவாசை, பௌர்ணமி, அட்டமி, திருவாதிரை ஆகிய நாட்களில் சிறுகாலைச் சந்தியின்போது பஞ்சகவ்யம், பால், தயிர், கோமூத்திரம், கோமயம் ஆகியவற்றை கொண்டு அபிஷேகம், திருமஞ்சனம், திருவாராதனை, திருவழுது செய்வதாகவும், தினமும் மந்திர புஷ்பம் சாத்துவதாகவும் உறுதியளித்துள்ளனர்.

திரிசூலம்    748/2017

மாவட்டம்    : காஞ்சிபுரம், வட்டம்:தாம்பரம்,ஊர்  : திரிசூலம், மொழி : தமிழ், எழுத்து:  கிரந்தங் கலந்த தமிழ், அரசு : சோழர், அரசன் : முதலாம் குலோத்துங்கன், ஆட்சி ஆண்டு :  38, வரலாற்று ஆண்டு : கி.பி.1108,  இ.க.ஆ. அறிக்கை  :   315/1901, முன் பதிப்பு : 543/VII , ஊ.க.எண் :  2 , இடம்: தர்மபுரீஸ்வரர்கோயில் தெற்கு சுவர்.

குறிப்புரை  :     ஐயங்கொண்ட சோழ மண்டலத்துக் குலோத்துங்க சோழ வளநாட்டு சுரத்தூர் நாட்டு வானவன் மாதேவிச் சதுர்வேதிமங்கலத்துத் திருச்சுரமுடைய மகாதேவர் கோயிலில் இரண்டுச் சந்தி விளக்கு எரிக்க இவ்வூரைச் சேர்ந்த வெள்ளாளன் பட்டன் சோறுடையான் என்பவன் இக்கோயிலைச் சார்ந்த சிவபிராமணர்கள் வசம் 24 ஆடுகள் தானமளித்துள்ளான்.

திரிசூலம்    749/2017

மாவட்டம்: காஞ்சிபுரம்,வட்டம்: தாம்பரம், ஊர் : திரிசூலம், மொழி: தமிழ், எழுத்து: தமிழ், அரசு : சோழர், அரசன்  :  முதலாம் குலோத்துங்கன், ஆட்சி ஆண்டு :  39, வரலாற்று ஆண்டு : கி.பி.1109, இ.க.ஆ. அறிக்கை  : 312/1901, முன் பதிப்பு: 538/VII ,ஊ.க.எண்:  3 , இடம்:  தர்மபுரீஸ்வரர்கோயில்  வடக்குச் சுவர்.

குறிப்புரை   :     சுங்கந்தவிர்த்த குலோத்துங்கச் சோழன் திருச்சுரம் உடைய நாயனார் கோயில் பதிபாத மூலப்பட்டுடை பஞ்சாசாரியர், தேவகன்மி, ஸ்ரீ மாகேசுவரக் கண்காணி, கோயிற்கணக்கன் ஆகியோருக்கு அனுப்பிய அரசாணையாகும். ஐயங்கொண்ட சோழ மண்டலத்து புலியூர் கோட்டம் எனும் குலோத்துங்க சோழ வள நாட்டு சுரத்தூர் நாட்டுப்பிரிவில் உள்ள பல்லாபுரம் என்கிற வானவன்மாதேவிச் சதுர்வேதி மங்கலத்து உடையார் திருச்சுரமுடைய நாயனார் கோயிலில் திருவைகாசித் திருநாளன்று திருவெழுச்சிப்படிக்காக  முந்நலூர் ஊரிலுள்ள நீர் நிலம் முப்பது வேலியும், கொல்லை நிலம் பதினொரு வேலியும் சேர்த்து திருநீற்றுச் சோழ நல்லூர் என்னும் பெயரிட்டு புதிய ஊரினை உருவாக்கி இறையிலித் தேவதானமாக வழங்கியுள்ளான். இந்நிலத்தின் மூலம் பெறப்படும் கடமை, குடிமை, ஆகியவற்றினைக் கோயிலுக்கு அளித்திட வழிவகை செய்துள்ளான்.

திரிசூலம்    750/2017

மாவட்டம்:காஞ்சிபுரம்,வட்டம்:தாம்பரம்,ஊர்:திரிசூலம், மொழி : தமிழ்,எழுத்து:   கிரந்தங்  கலந்த தமிழ்,அரசு:சோழர்,அரசன்:முதலாம்குலோத்துங்கன்,ஆட்சிஆண்டு:-, வரலாற்று  ஆண்டு : கி.பி.(1070-1120),இ.க.ஆ. அறிக்கை  : 316/1901, முன் பதிப்பு: 542/VII, ஊ.க.எண் : 4, இடம்:   தர்மபுரீஸ்வரர்கோயில் தெற்கு சுவர்.

குறிப்புரை  :ராஜேந்திர சோழ வள நாட்டுப் புழல் நாட்டுச் செம்பியன் திருமங்கலம் ஊர்த்தலைவன் சீயாரூர் வெள்ளி என்கிற தென்னவன் பல்லவராயன் என்பவனுக்கு இக்கோயில் இறைவனுக்கு திருஅர்த்தசாம பூசை வழிபாட்டிற்காக நிலம் ஒன்றினை மகாசபையினர் விற்று நிலவிலை ஆவணம் செய்து கொடுத்துள்ளனர். இந்நிலத்தின் மீது வசூலிக்கப்படும் வரிகளையும் நீக்கியுள்ளனர்.

திரிசூலம்    752/2017

மாவட்டம்:காஞ்சிபுரம்,வட்டம்:தாம்பரம்,ஊர்:திரிசூலம்,மொழி:தமிழ்,எழுத்து:  கிரந்தங்  கலந்த தமிழ், அரசு: சோழர், அரசன்:விக்கிரம சோழன், ஆட்சி ஆண்டு  :  9, வரலாற்று ஆண்டு :  கி.பி.1127, இ.க.ஆ. அறிக்கை  : 314/1901, முன் பதிப்பு : 540/VII ,ஊ.க.எண் :6, இடம்:            தர்மபுரீஸ்வரர்கோயில்  மேற்குச் சுவர்.

குறிப்புரை       :     ஐயங்கொண்ட சோழ மண்டலத்து குலோத்துங்க சோழ வளநாட்டு பேறூர் நாட்டுப் பிரிவு மணற்பாக்கம் ஊரார் சுரத்தூர் நாட்டுப் பல்லாபுரம் என்கிற வானவன் மாதேவிச் சதுர்வேதிமங்கலத்து திருச்சுரமுடைய மகாதேவர் வழிபாட்டிற்கு, திருமந்திர போநகம் வழங்குவதற்காக, பேறூர் நாட்டு நென்மேலி ஊரைச் சார்ந்த பள்ளி சாத்தை செல்வன் எனும் தொண்டை நாட்டயன் என்பவனிடமிருந்து பணம் பெற்றுக் கொண்டு 970 குழி நிலத்தினை விற்பனைச் செய்து கொடுத்துள்ளனர்

திரிசூலம்    753/2017

மாவட்டம்:காஞ்சிபுரம்,வட்டம்:தாம்பரம்,ஊர்:திரிசூலம்,மொழி:தமிழ்,எழுத்து:கிரந்தங்  கலந்த  தமிழ்,அரசு:சோழர்,அரசன்:விக்கிரமசோழன்,ஆட்சிஆண்டு:14,வரலாற்றுஆண்டு:  கி.பி.1132, இ.க.ஆ.அறிக்கை:315/1901,முன்பதிப்பு:542/VII,ஊ.க.எண்:7,இடம்:தர்மபுரீஸ்வரர்கோயில்  தெற்குச் சுவர்

குறிப்புரை       :     ஐயங்கொண்ட சோழ மண்டலத்துக் குலோத்துங்க சோழ வள நாட்டு புலியூர் கோட்டத்து பேறூர் நாட்டுப் பிரிவைச் சார்ந்த கசவம்பாக்கத்து ஊர் நிர்வாகத்தினர், சுரத்தூர் நாட்டுப் பல்லாபுரம் என்கிற வானவன் மாதேவிச் சதுர்வேதிமங்கலத்து திருச்சுரமுடைய மகாதேவர் கோயில் பள்ளியறை நம்பிராட்டியார் இறைவிக்கு திருப்படிமாற்று வழிபாட்டிற்காக, திருச்சுரம் ஊரைச் சார்ந்த கண்ணப்பன் பொன் தம்பி முகுந்தன் எனும் விக்கிரம சோழ மலையரையன் என்பவன் 1000 குழி நிலத்தினை விலைக்கு வாங்கி, கோயிலுக்கு விற்றுக் கொடுத்த நிலவிலையாவணம் ஆகும்.

திரிசூலம்    754/2017

மாவட்டம் : காஞ்சிபுரம்,வட்டம்:தாம்பரம்,ஊர் :திரிசூலம், மொழி :தமிழ், எழுத்து:  கிரந்தங் கலந்த தமிழ்,அரசு : சோழர், அரசன் :இரண்டாம் இராசாதிராசன், ஆட்சிஆண்டு :4, வரலாற்று ஆண்டு :   கி.பி.1157, இ.க.ஆ. அறிக்கை  : 315/1901, முன் பதிப்பு :  542/VII,ஊ.க.எண் : 8, இடம்: தர்மபுரீஸ்வரர்கோயில் தெற்குச் சுவர்.

குறிப்புரை       :     ஐயங்கொண்ட சோழ மண்டலத்துக் குலோத்துங்க சோழ வள நாட்டு சுரத்தூர் நாட்டுப் பல்லாபுரம் எனும் வானவன் மாதேவிச் சதுர்வேதிமங்கலத்து ஆளுடையார் திருச்சுரமுடையார் கோயிலில் இவ்வூர் காடி பள்ளி நூற்றெண்ம முதவரையன் பேரனும் அருளாளன் என்கிற கலிங்கத்தரையனின் மகனுமான நாயகன் என்பவன் சந்திவிளக்கு ஒன்று எரிப்பதற்காக மூன்று பசுக்கள் கொடையளித்துள்ளான். இம்மூன்று பசுக்களையும் பெற்றுக் கொண்டு திங்கள் தோறும் நாழி நெய் கோயிலில் அளப்பதாக இவ்வூர் மன்றாடி முல்லை நாயகக் கோன் என்பவன் சம்மதம் தெரிவித்துள்ளான்

 திரிசூலம்    755/2017

மாவட்டம்:காஞ்சிபுரம்,வட்டம்:தாம்பரம்,ஊர்:திரிசூலம்,மொழி:தமிழ்,எழுத்து:கிரந்தங் கலந்த தமிழ்,அரசு:சோழர்,அரசன்:இரண்டாம் இராசாதிராசன்,ஆட்சிஆண்டு:4, வரலாற்று  ஆண்டு : கி.பி.1167, இ.க.ஆ. அறிக்கை  : 321/1901, முன் பதிப்பு:   547/VII, ஊ.க.எண் : 9, இடம் :    தர்மபுரீஸ்வரர்கோயில் தெற்குச் சுவர்.

குறிப்புரை: ஐயங்கொண்ட சோழ மண்டலத்துப் புலியூர் கோட்டம் எனும் குலோத்துங்க சோழ வள நாட்டு சுரத்தூர் நாட்டுப் பிரிவான பல்லாபுரம் என்கிற வானவன் மாதேவிச் சதுர்வேதிமங்கலத்து திருச்சுரமுடையார் கோயிலில் ஒரு நந்தாவிளக்கு எரிக்கத் தேவையான நெய்யிற்காக 31 பசுக்களும் ஒரு காளையும் திருச்சுரம் ஊரைச்சேர்ந்த கண்ணப்பன் மலை அரையன் மகன் அருளாளப் பெருமாள் என்றழைக்கப்படும் இராஜ இராஜ மலை அரையன் அளித்துள்ளான்.இவ்வூர் மன்றாடி ஆனைக்கோன் என்பானின் மகன்கள் தினமும் அருமொழித்தேவன் மரக்கால் அளவுக்கு இணையாக உழக்கு நெய் அளிப்பதற்கு உறுதியளித்துள்ளனர்.

திரிசூலம்    756/2017

மாவட்டம் : காஞ்சிபுரம், வட்டம்:தாம்பரம், ஊர்:திரிசூலம்,மொழி :தமிழ், எழுத்து: தமிழ்,அரசு: சோழர், அரசன் : மூன்றாம் குலோத்துங்கன், ஆட்சி ஆண்டு :  31, வரலாற்று ஆண்டு : கி.பி.1201, இ.க.ஆ.அறிக்கை:311/1901,முன்பதிப்பு:539/VII,ஊ.க.எண்:10,இடம்:தர்மபுரீஸ்வரர்கோயில் வடக்குச் சுவர்.

குறிப்புரை :திருச்சுரக்கண்ணப்பன் ஆதிநாதன் மனவாலைய முகுந்தன் என்கிற சித்திரமேழி முனையதரையன் என்பவன் செயங்கொண்ட சோழ மண்டலத்துப் புலியூர்க் கோட்டத்துச் சுரத்தூர் நாட்டுப்பிரிவு பல்லாபுரம் எனும் வானவன்மாதேவிச் சதுர்வேதி மங்கலத்து ஆளுடையார் திரிச்சுரமுடையார் கோயில் இறைவனுக்குத் திருநந்தாவிளக்கு  ஒன்று எரிப்பதற்கு 10 எருமைகள் வழங்கியுள்ளான்.

திரிசூலம்    757/2017

மாவட்டம்: காஞ்சிபுரம்,வட்டம்: தாம்பரம்,ஊர்: திரிசூலம்,மொழி: தமிழ்,எழுத்து:கிரந்தங் கலந்த  தமிழ்,அரசு: சோழர்,அரசர்: விக்கிரமசோழர்,ஆட்சி ஆண்டு: -,வரலாற்று ஆண்டு: கி.பி

இ.க.ஆ அறிக்கை: 324/1901,முன்பதிப்பு : 550/VII,ஊடக எண்: 14,இடம்: தர்மபுரீஸ்வரர் தெற்கு சுவர்

குறிப்புரை: இக்கல்வெட்டின் பின்பகுதி கட்டடப்பகுதிக்குள் மறைந்துள்ளாது. திருசுரமுடைய மகாதேவர் இறைவன் பெயர் மட்டும் அறிய முடிகிறது.

திரிசூலம்    758/2017

மாவட்டம்:காஞ்சிபுரம்,வட்டம்: தாம்பரம்,ஊர்: திரிசூலம்,மொழி: தமிழ்,எழுத்து:கிரந்தங் கலந் ததமிழ், அரசு:பாண்டியர்,அரசர்:மாறவர்வர்மன் குலசேகரதேவர், ஆட்சிஆண்டு: 38, வரலாற்று ஆண்டு: கி.பி 1306, இ.க.ஆ அறிக்கை: 323/1901, முன்பதிப்பு : 549/VII,ஊடக எண்: 13,இடம்: தர்மபுரீஸ்வரர் தெற்கு சுவர்

குறிப்புரை: இளவரசர் நீலகங்கரையர் படைத்தளபதிகளில் ஒருவரான வாணாண்டை என்கிற தொண்டைமானார் என்பவர் பல்லாபுரம் என்கிற வானவன்மாதேவிச் சதுர்வேதிமங்கலத்துத் திருச்சுரமுடைய மகாதேவர் கோயிலில் திருவிளக்கு ஒன்று எரிப்பதற்காக இக்கோயில் சிவபிராமணர்கள் 92 பசுக்களைப் பெற்றுக்கொண்டு எரிப்பதாகச் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

திரிசூலம்    759/2017

மாவட்டம்: காஞ்சிபுரம்,வட்டம்: தாம்பரம்,ஊர்: திரிசூலம்,மொழி: தமிழ்,எழுத்து: கிரந்தங் கலந்த தமிழ்,அரசு: சோழர்,அரசர்: மூன்றாம் இராசராசன், ஆட்சி ஆண்டு: 16,  வரலாற்று ஆண்டு: கி.பி 1232, இ.க.ஆ அறிக்கை: 320/1901,முன்பதிப்பு : 546/VII, ஊடக எண்: 12,இடம்: தர்மபுரீஸ்வரர் தெற்கு சுவர்

குறிப்புரை: மணிமங்கலம் என்னும் ஊரைச் சேர்ந்த குடிப்பள்ளி சாத்தன் மகாதேவன் என்பவர் ஆளுடையார் திருச்சுரமுடையார் இறைவனுக்கு ஒரு சந்தி விளக்கெரிக்க ஆறு பசுக்கள் தானமளித்துள்ளான். ஒரு பசுவுக்கு நாலு ஆடுகள் வீதம் ஆறு பசுக்களுக்கு 24 ஆடுகளைக் கொண்டு தினமும் நெய்யளக்க மாங்காட்டு நாட்டு மலையம்பாக்கம் ஊரினான இடையன் கருணாகரக் கோன் உறுதியளித்துள்ளான்.

திரிசூலம்    760/2017

மாவட்டம்: காஞ்சிபுரம்,வட்டம்: தாம்பரம்,ஊர்: திரிசூலம்,மொழி: தமிழ்,எழுத்து:கிரந்தங் கலந்த தமிழ்,அரசு: சோழர்,அரசர்: திரிபுவன வீரதேவர்(மூன்றாம் குலோத்தங்கன்),ஆட்சி ஆண்டு: 37, வரலாற்று ஆண்டு: கி.பி 1215,இ.க.ஆ அறிக்கை: 311/1901,முன்பதிப்பு : 537/VII,ஊடக எண்: 11, இடம்: தர்மபுரீஸ்வரர் மேற்குச் சுவர்

குறிப்புரை: பூந்தமலி என்கிற உய்யக்கொண்டான் சோழபுரம் வாணிகர் நகரச் சபையினர் திருச்சுரம் கோயில் திருச்சுரமுடைய நாயனார்க்குத் திருவடி நிலை(பீடம்) திருவாலத்தி தட்டு, கொம்பு, (ஊதுகுழல்) ஆகியவை தானமளித்துள்ளனர்.

Share the Article

Read in : English

Why we always find lots of cashews on top of Deepavali mixture why tangedco need to pay us for damaging household appliances why eating on banana leaves is healthier What the Tamil Nadu Organic policy needs what is the real story of onam festival