Read in : English
தமிழகத்தில் வரும் (2019 2020) கல்வி ஆண்டு முதல் 10, 12ஆம் வகுப்புகளுக்கு செப்டம்பர், அக்டோபர் மாதங்களுக்கு நடைபெறும் துணைத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது.
இதன் மூலம் 1952ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வரும் செப்டம்பர் தேர்வு அடுத்த ஆண்டிலிருந்து முடிவுக்கு வருகிறது. அத்துடன், அடுத்த கல்வி ஆண்டிலிருந்து மார்ச், ஏப்ரல் பொதுத்தேர்வு, ஜூன், ஜூலை சிறப்பு துணைத் தேர்வுகள் மட்டும் நடத்தப்பட உள்ளது. இதனால், தேர்வில் தோல்வியடையும் மாணவர்களுக்கும் தனித் தேர்வர்களுக்கும் ஓராண்டில் கிடைத்து வந்த மூன்று தேர்வு வாய்ப்புகள் இரண்டாகக் குறைந்துள்ளது.
“மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடத்தப்படும் 10, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டவுடன் ஜூன், ஜூலை மாதம் சிறப்பு துணைத் தேர்வுக்கான ஆயத்த பணிகள் தொடங்கி தேர்வுக்கு பின் அனைத்து பணிகளும் ஆகஸ்டு மாதத்தில் நிறைவடையும். இதைத்தொடர்ந்து செப்டம்பர், அக்டோபர் பருவத் தேர்வுக்கான ஆயத்த பணிகள் தொடங்கப்பட்டு தேர்வுக்கு பின்னர் அனைத்து பணிகளும் நவம்பர் மாத இறுதியில் நிறைவடையும். மார்ச் பொதுத்தேர்வுக்காக புதிய தேர்வு மையம் அமைத்தல், பெயர் பட்டியல் தயாரித்தல் போன்ற பணிகள் ஆகஸ்டு மாதத்திலேயே தொடங்கிவிடும். மார்ச் பொதுத் தேர்வுக்கான முன்னிலை பணிகள் நடைபெறும் போதே செப்டம்பர் தேர்வுக்கான பணிகளையும் மேற்கொள்ள வேண்டிய நிலை உள்ளது. இதனால் ஆசிரியர்களின் கற்பித்தல் பணி மிகவும் பாதிக்கப்படுகிறது. எனவே, செப்டம்பர், அக்டோபரில் நடத்தப்படும் வரும் துணைத் தேர்வை ரத்து செய்ய வேண்டும்” என்று அரசுத் தேர்வுகள் இயக்குநர் தமிழக அரசுக்குக் கடிதம் எழுதியதை அடுத்து, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகப் பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.
“மார்ச், ஏப்ரல் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு ஓரிரு மாதங்களுக்குள் உடனடி மறுதேர்வு நடைபெற்றாலும்கூட, அந்தக் குறுகிய காலத்தில் நடைபெறும் தேர்விலும் தேர்ச்சியடைய முடியாவிட்டால், அந்த மாணவர்கள் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் காத்திருக்க வேண்டியுள்ளது” என்று கூறும் பொதுப் பள்ளிக்கான மாநில மேடை பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, “அரசுத் தேர்வுகள் துறை, இலவசமாகத் தேர்வுகளை நடத்துவதில்லை. தேர்வுக்காகக் கட்டணம் வாங்கும்போது இந்த ஒரு தேர்வையும் கூடுதலாக நடத்துவதில் என்ன பிரச்சினை?” என்று கேள்வி எழுப்புகிறார்.
பத்தாம் வகுப்பு, பிளஸ் டூ தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் ஒராண்டு காலம் காத்திருக்கக் கூடாது என்பதற்காகத்தான், ஜூன், ஜூலையில் உடனடி மறுதேர்வு நடத்தும் முறை கொண்டு வரப்பட்டது.
“11ஆம் வகுப்புக்குப் பொதுத் தேர்வு என்று அரசு அறிவித்த போதே, அந்த மாணவர்களுக்கு செப்டம்பர், அக்டோபர் தேர்வு எழுத வாய்ப்புத் தரப்படவில்லை. ஜூன், ஜூலையில் நடைபெறும் உடனடி மறுதேர்வு எழுதி, தேர்ச்சி பெறாவிட்டால், அந்த மாணவர்கள் பிளஸ் டூ தேர்வு எழுதும் போதுதான் பிளஸ் ஒன் வகுப்பில் தோல்வியடைந்த பாடங்களை மீண்டும் எழுத முடியும். அதாவது, பிளஸ் டூ பாடங்களுக்கும், பிளஸ் ஒன் வகுப்பில் தோல்வியடைந்த பாடங்களுக்கும் தேர்வு எழுத வேண்டியதிருக்கும். இது மாணவர்களுக்குக் கடும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும்” என்கிறார் எழுத்தாளரும் பள்ளித் தலைமை ஆசிரியருமான `ஆயிஷா’ நடராஜன்.
“பத்தாம் வகுப்பு, பிளஸ் டூ தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் ஒராண்டு காலம் காத்திருக்கக் கூடாது என்பதற்காகத்தான், ஜூன், ஜூலையில் உடனடி மறுதேர்வு நடத்தும் முறை கொண்டு வரப்பட்டது. அந்தத் தேர்வைக கொண்டு வந்து விட்டு, ஏற்கெனவே இருந்து வரும் செப்டம்பர், அக்டோபர் தேர்வுகளை ரத்து செய்து விட்டு மீண்டும் தேர்வு எழுத பல மாதங்கள் காக்க வைப்பது சரியாக?” என்பது சுமாராகப் படிக்கும் மாணவர்களின் கேள்வி..
“பள்ளிகளில் உள்ள ஆசிரியர் பற்றாக்குறை ஒரு காரணமாக இருக்கக்கூடும். ஆனால், அதற்காக ஆசிரியர் காலிப் பணி இடங்களை நிரப்புவதை விட்டு விட்டு, ஒரு மறுதேர்வையே ரத்து செய்வது என்பது சராசரியாகப் படிக்கும் மாணவர்களையும் படிக்கத் திணறும் மாணவர்களும் பாதிக்கும். 66 ஆண்டுகளாக இருந்து வரும் ஒரு தேர்வு நடைமுறையை நீக்கும் முன்னதாக, பெற்றோர்கள், ஆசிரியர்கள், கல்வி நிபுணர்களைக் கலந்து ஆலோசனை செய்து முடிவெடுக்க வேண்டும்” என்கிறார்கள் சில ஆசிரியர்கள்.
Read in : English