Read in : English
சமீபத்திய உச்சநீதிமன்ற தீர்ப்பு காரணமாக, வரதட்சிணை கொடுமை புகார் குறித்து 498(ஏ) பிரிவின் கீழ் போலீசாரே நேரடியாக நடவடிக்கை எடுக்கும் பழைய முறை மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ளது.
‘வரதட்சிணை தொடர்பான புகார்களை குடும்ப பொது நலக் குழு விசாரித்து, குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது குற்றம் நிருபிக்கப்பட்டால் போலீசார் நடவடிக்கை எடுக்கலாம் என்று நீதிபதிகள் ஏ.கே.கோயல் மற்றும் யு.யு.லலித் ஆகியோரடங்கிய அமர்வு கடந்த ஆண்டு தீர்ப்பளித்தது.
இதை எதிர்த்து மும்பையைச் சேர்ந்த ‘நியாயாதர்’ என்ற பெண் வழக்கறிஞர்கள் அமைப்பு மேல்முறையீடு செய்தது. இதனை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய். சந்திர சூட் ஆகியோரடங்கிய அமர்வு, புதிய சட்டப் பிரிவுகளை உருவாக்க நீதிமன்றத்துக்கு உரிமை இல்லை என்று கூறி , குடும்ப பொதுநல கமிட்டி அமைத்து விசாரிப்பதை ரத்து செய்தது.
“வரதட்சணை என்பது ஒருமுகப்படுத்தப்பட்ட சித்திரவதை. இதனால் பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள்.” வழக்கறிஞர் அஜிதா.
“வரதட்சணை என்பது ஒருமுகப்படுத்தப்பட்ட சித்திரவதை. இதனால் பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள். பாதிக்கப்படும் பெண்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என இச்சமூகம் நினைப்பதில்லை. குடும்ப வன்முறையால் மனதளவிலும் உடலளவிலும் ஒரு பெண் பாதிக்கப்பட்டாலும், குடும்பத்திலுள்ளவர்களின் நலனையும் தங்களது எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு அவள் அதை தாங்கிக்கொள்ள வேண்டும் என்றே இந்த சமூகம் நினைக்கிறது. இது முற்றிலும் தவறானது” என்று குறிப்பிடும் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் அஜிதா, “ஒரு பெண் தவறான வழக்கை தொடர்ந்தால் அவரது எதிர்காலம் பாதிக்கப்படும் என்பது அவளுக்கு தெரியும். யாரும் அதை விரும்பி செய்வதில்லை” என்கிறார் அவர்.
’’கைது நடவடிக்கை தேவையா? என்று பார்த்தால், அது ஒரு எச்சரிக்கை நடவடிக்கையே. ஆயிரம் வழக்குகளில் சுமார் 50 கைது நடவடிக்கைகளையே போலீசார் மேற்கொள்கின்றனர். பல வழக்குகளில் போலீசாரே சம்பந்தப்பட்ட இருதரப்பினரிடையே பேசி சமரசம் செய்கின்றனர். அல்லது நீதிமன்றங்கள் முன்கூட்டியே குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்குகிறது. பெண் உடல்ரீதியாக சித்திரவதை செய்யப்பட்டால் மட்டுமே உடனடியாக கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. எனவே கைது நடவடிக்கை என்பது சட்டத்தின் ஒரு பகுதிதான்’’ என்று விவரித்தார் வழக்கறிஞர் அஜிதா.
போலீசார் விசாரணை நேர்மையாக இருக்குமா என்ற நம் கேள்விக்கு, ‘’அவர்கள் சட்டத்தின் கீழ் பணிபுரிபவர்கள். விசாரணையில் முரண்பாடு இருந்தால் உயரதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கலாம். இத்தனை காலமாக காவல்துறை மீது லஞ்சப் புகார் எழுந்தபோதும், காவல் துறையை யாரும் அகற்றவில்லை’’ என்பதைச் சுட்டிக்காட்டினார்.
“புகாரின் அடிப்படையில் போலீசார் கைது செய்யலாம் என்பதால், காவல்துறையினரின் கரங்கள் ஓங்கும்.” – வழக்கறிஞர் குருமூர்த்தி
‘’இது வரதட்சணை கொடுமைக்கு ஆளாகும் பெண்களுக்கு கிடைத்த வலுவான தீர்ப்பு. வரதட்சணை கேட்கும் கணவனுக்கோ, மாமனார், மாமியாருக்கோ இத்தீர்ப்பு அச்சத்தை உண்டாக்கும். ஆனால், கிராமங்களில் இருக்கும் பெரும்பாலானா பெண்களுக்கு இதுகுறித்த விழிப்புணர்வு இல்லை. அதனால் அவர்கள் குடும்பத்தினரின் அனைத்து வகையான வன்முறைகளையும் பொருத்துக் கொள்கின்றனர் என்கிற உயர்நீதிமன்ற வழக்கறிஞர் குருமூர்த்தி, அதேசமயம், நகரத்தில் வாழும் நவீன உலக பெண்களுக்கு குடும்பத்தினரை பழிவாங்குவதற்கு ஒரு வாய்ப்பாக அமையக்கூடும் என்பதையும் குறிபிடுகிறார்.
“புகாரின் அடிப்படையில் போலீசார் கைது செய்யலாம் என்பதால், காவல்துறையினரின் கரங்கள் ஓங்கும். ஊழல் அதிகரிக்க வாய்ப்புண்டு. இதனால் இருதரப்புமே நேர்மையான விசாரணையை எதிர்கொள்ள முடியாது. புகார் கொடுத்த அப்பெண்னின் வாழ்வு பல்வேறு பாதிப்புகளை சந்திக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. குழந்தைகள் இருந்தால் அவர்களது வாழ்வும் பாதிக்கப்படுகிறது. இதனைக் கருத்தில்கொண்டு, ‘குடும்ப பொதுநல கமிட்டி’யை நீக்கும் உத்தரவை நீதிமன்றம் வழங்கியிருக்கக் கூடாது’’ என்றார் வழக்கறிஞர் குருமூர்த்தி.
Read in : English