Read in : English
புற்றீசல் போல வளர்ந்துள்ள அதிக எண்ணிக்கையிலான பொறியியல் கல்லூரிகள், அதிகப் பணம் செலவழித்துப் பொறியியல் படிப்பைப் படித்தவர்களுக்கு உடனடி வேலை கிடைக்காதது போன்றவையே பொறியியல் கல்லூரிகளில் காலி இடங்கள் ஏற்படுவதற்கு முக்கியக் காரணம் என்கிறார்கள் கல்வியாளர்கள்.
கடந்த சில ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் 97,860 இடங்கள் காலியாக உள்ளன. இதில் சுயநிதிக் கல்லூரிகளில் உள்ள காலி இடங்கள் மட்டுமே 95,700. துணைநிலைக் கவுன்சலிங்கில்கூட 7531 இடங்கள்தான் பூர்த்தியாகியுள்ளன. அதன் பிறகு, அரசு ஒதுக்கீட்டின் கீழ் உள்ள இடங்களில் சுமார் 90 ஆயிரம் இடங்கள் காலியாக உள்ளன.
அண்மைக் காலத்தில் பொறியியல் கல்லூரிகளில் அதிக அளவில் காலி இடங்கள் ஏற்படுவது தமிழ்நாட்டில் மட்டுமல்ல, பிற மாநிலங்களிலும் இதே நிலைமைதான் உள்ளது என்பதை அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சலின் (ஏஐசிடிஇ) புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. 2016-17 ஆம் ஆண்டில் நாட்டில் உள்ள 3,291 பொறியியல் கல்லூரிகளில் 15.5 லட்சம் இடங்களில் 50 சதவீத இடங்கள் காலியாக இருக்கின்றன. 2015-16 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 14.76 லட்சம். பொறியியல் படிப்புகளில் சேருவதில் மாணவர்களிடம் ஆர்வம் குறைந்து வருவதையே இது காட்டுகிறது.
தமிழ்நாட்டில் தேவைக்கு அதிமான எண்ணிக்கையில் 500க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இருப்பதும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் எந்த அளவுக்கு மாணவர்களைச் சேர்க்க வேண்டும் என்ற வரையறை இல்லாததால் அங்கு பொறியியல் படிப்புகளில் ஏராளமான மாணவர்கள் சேர்க்கப்படுவதும் பொறியியல் கல்லூரிகளில் காலி இடங்கள் ஏற்படுவதற்கு முக்கியக் காரணமாக் கூறப்படுகிறது.
பல பொறியியல் கல்லூரிகளின் தரத்தைப் பார்த்து, அந்தக் கல்லூரிகளுக்கு கேம்பஸ் இன்டர்வியூ மூலம் மாணவர்களைத் தேர்வு செய்வதற்கு தொழில் நிறுவனங்கள் வருவதில்லை.
சமீப காலங்களில் பொறியியல் படிப்புகளைப் படித்த மாணவர்களில் பெரும்பாலான மாணவர்களுக்கு கேம்பஸ் இன்டர்வியூ மூலம் வேலை கிடைப்பதில்லை. பல பொறியியல் கல்லூரிகளின் தரத்தைப் பார்த்து, அந்தக் கல்லூரிகளுக்கு கேம்பஸ் இன்டர்வியூ மூலம் மாணவர்களைத் தேர்வு செய்வதற்கு தொழில் நிறுவனங்கள் வருவதில்லை. அத்துடன், கணிசமான மாணவர்கள் தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவதற்கேற்ற திறன்களைப் பெற்று இருப்பதில்லை. இதனால், ஏராளமான பணத்தைச் செலவழித்து பொறியியல் படிப்புகளை முடித்த பலர் குறைந்த சம்பளத்திலோ அல்லது தங்களது படிப்புக்குச் சம்பந்தமில்லாத பணிகளிலோ சேர வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிறார்கள்.
இதுபோன்ற காரணங்களால், புதிதாகத் தொடங்கப்பட்ட பல பொறியியல் கல்லூரிகளிலும், பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்தாலும்கூட பிரபலமாகாத பொறியியல் கல்லூரிகளிலும் சேருவதில் மாணவர்கள் தயக்கம் காட்டுகிறார்கள். அதனால்தான், அந்தக் கல்லூரிகளில் காலி இடங்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
பொறியியல் படிப்புகளில் சேருவதில் ஆர்வம் இல்லாத பல மாணவர்கள், எப்படியாவது வேலை கிடைக்குமே என்று பொறியியல் கல்லூரிகளில் நினைத்து சேருகிறார்கள். பெற்றோர்களின் வற்புறுத்தலுக்காகச் சேரும் மாணவர்களும் உண்டு. அதுபோன்ற மாணவர்கள் படிக்க முடியாமல் திணறுகிறார்கள். இந்த ஆண்டின் தொடக்கத்தில் அண்ணா பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைந்திருப்பது இதைத் தெளிவாக்குகிறது.
சேர்ந்த படிப்பில் பாஸ் செய்ய முடியவில்லை என்றால் அந்தப் படிப்பில் எதற்குச் சேருவது, அதற்கு பதிலாக குறைந்த செலவில் கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர்ந்து படித்து விடலாமே என்று பல மாணவர்கள் இந்த ஆண்டில் கலை அறிவியல் கல்லூரிகளின் பக்கம் தங்களது பார்வையைத் திருப்பியிருக்கிறார்கள். அதுவும் பொறியியல் படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் காலி இடங்கள் ஏற்படுவதற்கு முக்கியக் காரணம்.
இந்த நிலையில், 30 சதவீதத்துக்கும் குறைவாக மாணவர்கள் சேர்ந்துள்ள 239 பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்துள்ள மாணவர்கள் திரிசங்கு நிலையில் இருக்கின்றனர். இதே கல்லூரியில் தொடர்ந்து படிப்பதற்கு ஏற்ற வகையில் போதிய ஆசிரியர்கள் இருப்பார்களா? தரமான படிப்பு வழங்கப்படுமா? இந்தக் கல்லூரிகள் தொடர்ந்து நடத்தப்படமால் மூடப்பட்டால் தங்கள் நிலைமை என்ன? இதற்குத் தீர்வாக அண்ணா பல்கலைக்கழகம் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பது போன்ற பல கேள்விகள் மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளன.
Read in : English