Read in : English
இந்த ஆண்டு முதல் நேர்காணல் மூலம் தகுதியுடைய ஆசிரியர்கள் தேசிய ஆசிரியர் விருது பெற தேர்வு செய்யப்படுவாரகள். இதுகுறித்து மனித வள மேம்பாட்டுத் துறை புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது.
அத்துடன், தமிழக ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் தேசிய நல்லாசிரியர் விருதுகளின் எண்ணிக்கை 22லிருந்து 6 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.நாடு முழுவதும் இதுவரை 374 பேருக்கு தேசிய ஆசிரியர்கள் விருதுகள் வழங்கப்பட்டு வந்தன. இந்த ஆண்டிலிருந்து இந்த எண்ணிக்கை 145 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
அரசுப் பள்ளி, உள்ளாட்சிப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளிகள், மத்திய அரசுப் பள்ளிகள் (கேந்திரிய வித்யாலயா, ஜவஹர் நவோதயா வித்யாலயா, திபேத்தியர்களுக்கான சென்ட்ரல் ஸ்கூல், சைனிக் பள்ளி, அணுசக்தி கல்வி சங்கம் நடத்தும் பள்ளிகள்) மற்ற சிபிஎஸ்இ பள்ளிகள், கவுன்சில் ஃபார் இந்தியன் ஸ்கூல்ஸ் சர்டிபிகேட் எக்ஸாமினேஷன் (சிஐஎஸ்சிஇ) பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் இந்த தேசிய விருதுக்கு பரிசீலிக்கப்படுவார்கள்.
புதிய விதிமுறைப்படி, மெட்ரிக்குலேஷன் மற்றும் சுயநிதி பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் இந்த விருதுக்கு விண்ணப்பிக்க முடியாது. டியூஷன் எடுக்கும் ஆசிரியர்களும் இந்த விருது பெற பரிசீலிக்கப்படமாட்டார்கள்.
இந்த விருதுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். முதல் கட்டமாக மாவட்டக் கல்வி அதிகாரி தலைமையிலான மாவட்ட தேர்வுக்கு குழு விண்ணப்ப விவரங்களை சரிபார்த்து, மூன்று ஆசிரியர்களின் பெயர்களை மாநிலத் தேர்வுக் குழுவுக்கு ஆன்லைன் மூலம் அனுப்பி வைக்கும். கல்வித் துறைச் செயலாளர் அல்லது முதன்மைச் செயலாளர் தலைமையிலான மாநிலத் தேர்வுக் குழு, விண்ணப்பங்களை மீண்டும் சரிபார்த்து, தகுதியுடையவர்களை தேசியத் தேர்வுக் குழுவுக்குப் பரிந்துரை செய்யும். மத்திய மனித வள மேம்பாட்டுத் துறையின் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறையின் ஓய்வு பெற்ற செயலாளர் இந்தத் தேர்வுக் குழுவின் தலைவராக இருப்பார்.
“தேசிய ஆசிரியர் விருதுக்கு மாநில அரசு தேர்வு செய்து பரிந்துரை செய்வதில் அரசியல் தலையீடு இருந்தது. அதனால், தகுதியில்லாத பலர் இந்த விருது பெறும் நிலை இருந்து வந்தது.” – வா. அண்ணாமலை
இந்த ஆண்டிலிருந்து மாநில அரசு பரிந்துரைக்கும் ஆசிரியர்கள் பட்டியலை தேசிய அளவிலான தேர்வுக் குழு புதிதாக மதிப்பீடு செய்யும். அத்துடன், மாநில அரசு பரிந்துரை செய்யும் ஆசிரியர்கள் (அதிகபட்சமாக 45) நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். அதிலிருந்து தகுதியுடையவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுவரை மாநில அரசுகளின் பரிந்துரையின் அடிப்படையில் ஆசிரியர்களுக்கு தேசிய ஆசிரியர் விருது வழங்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
“தேசிய ஆசிரியர் விருதுக்கு மாநில அரசு தேர்வு செய்து பரிந்துரை செய்வதில் அரசியல் தலையீடு இருந்தது. அதனால், தகுதியில்லாத பலர் இந்த விருது பெறும் நிலை இருந்து வந்தது. தற்போது அகில இந்திய அளவில் அமைக்கப்படும் தேசிய அளவிலான தேர்வுக் குழு, இந்த விருதுக்குத் தகுதியுடையவர்களை தேர்வு செய்வது என்பது நல்லதுதான். இதன் மூலம் தகுதியுடைய ஆசிரியர்களுக்கு விருது கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம். ஆனால், நான்கு லட்சம் பள்ளி ஆசிரியர்கள் உள்ள தமிழ்நாட்டில் ஆசிரியர்களுக்கு 6 விருதுகள்தான் என்பது சரியல்ல. கடந்த காலத்தைப் போல இந்த எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும்” என்கிறார் அகில இந்திய துவக்கப் பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் (AIFCTO) அகில இந்தியப் பொதுச் செயலாளர் வா. அண்ணாமலை.
இதற்கிடையில், தமிழக அரசு சார்பில் சிறந்த ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கும் புதிய நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கல்வி மாவட்டங்களின் எண்ணிக்கை 67லிருந்து 120ஆக பிரிக்கப்பட்டுள்ளதால், கல்வி மாவட்ட எண்ணிக்கை அடிப்படையில் இந்த விருதுகள் வழங்கப்பட்டால் விருதுகளின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருக்கும். எனவே, கல்வி மாவட்டங்கள் அடிப்படையில் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படாமல் மாவட்ட அளவில் உள்ள பள்ளிகள், ஆசிரியர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் வருவாய் மாவட்ட அளவில் தேர்வு செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
அதாவது, 32 மாவட்டங்களுக்கு 330 ஆசிரியர்கள் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கத் தேர்வு செய்யப்படுவார்கள். இதுதவிர, சுயநிதி, மெட்ரிக் பள்ளிகள் ஆசிரியர்களுக்காக 32 விருதுகளும் ஆங்கிலோ இந்தியப் பள்ளிகள் சமூகப் பாதுகாப்புப் பள்ளிகளுக்கு தலா 2 விருதுகள், மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று விருதுகளும் வழங்கப்படும். இந்த ஆண்டிலிருந்து புதிய விண்ணப்பப்படிவமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
“பரிந்துரைக்கப்படும் ஆசிரியர்கள் எந்தவித குற்றச்சாட்டுக்கும் ஒழுங்கு நடவடிக்கைக்கும் உட்படாதவராகவும் பொது வாழ்வில் தூய்மையானவராகவும் பொதுச் சேவைகளில் நாட்டம் கொண்டவராகவும் பள்ளி மாணவர்களின் இடைநிற்றலை குறைத்தல், பள்ளி மாணவர் சேர்க்கை, தேர்வில் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்துதல் கல்வித் தரத்தில் பின்தங்கிய மாணவர்களின் தரத்தை முன்னேற்ற பாடுபடுபவராகவும் இருத்தல் வேண்டும். அரசியலில் பங்கு பெற்று அரசியல் கட்சிகளுடன் தொடர்புடைய ஆசிரியர்களின் பெயர்கள் கண்டிப்பாகப் பரிந்துரைக்கப்படக்கூடாது. கல்வியை வணிகரீதியாகக் கருதி செயல்படும் ஆசிரியர்களையும் நடத்தை விதிகளுக்கு முரணாக இருக்கும் ஆசிரியர்களையும் இந்த விருதுக்கு தகுதியற்றவர்களாகக் கருத வேண்டும்” என்பது போன்றவை டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெறும் ஆசிரியர்களுக்கான விதிமுறைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
Read in : English