Read in : English
பொறியியல் ஆன்லைன் கவுன்சலிங்கில் 190க்கு மேல் கட் ஆஃப் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கான முதல் சுற்றுக் கவுன்சலிங்கில் 3,431 பேர் பங்கேற்கவில்லை. இந்த அளவுக்கு காலி இடங்கள் இருந்த போதிலும்கூட, 167 மாணவர்களுக்கு அவர்களது விருப்பப்படி எந்த இடமும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆன்லைன் கவுன்சலிங்கின் விளைவு இது.
கடந்த ஆண்டைப் போல நேரடி கவுன்சலிங் நடந்திருந்தால் இந்த அளவுக்கு மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு அவர்களது விருப்பப்படி ஏதாவது ஒர் இடம் நிச்சயம் கிடைத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை
அந்த மாணவர்களின் விருப்பப் பட்டியல் குறுகியதாகவும் அவர்களது கட் ஆஃப் மதிப்பெண்களுக்கு ஏற்ப அந்தப் பட்டியல் இல்லாததும்தான் இடம் கிடைக்காமல் இருப்பதற்குக் காரணம் என்று தெரிகிறது.
இரண்டாம் கட்ட கவுன்சலிங்கிலாவது இருக்கின்ற காலி இடங்களிலாவது அவர்களது விருப்பப்படி இடம் கிடைக்குமா என்பதை உறுதியாகக் கூறமுடியாது. முதல் சுற்றில் காலியாக உள்ள 3,431 இடங்களில் இந்த மாணவர்களின் விருப்பத்திற்கேற்ற இடங்கள் இருந்தால்தான் அதில் இடம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
முதல் சுற்றில் 50 சதவீத மாணவர்களுக்கு அவர்களது முதல் மூன்று விருப்பங்களில் ஒன்றில் இடம் கிடைத்துள்ளதாக அண்ணா பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைப் பிரிவு செயலர் ரைமண்ட் உத்தரியராஜ் கூறியுள்ளார்.
“முதல் சுற்றிலேயே 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட இடங்கள் காலியாக இருப்பதற்குக் காரணம், பல மாணவர்கள் மருத்துவம், கால்நடை மருத்துவம், வேளாண்மை போன்ற பாடப்பிரிவுகளை எடுத்துச் சேர்ந்திருக்கலாம். ஒரு சிலர், நுழைவுத் தேர்வு எழுதி முக்கியத்துவம் வாய்ந்த பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்திருக்கலாம். அதனால், அந்த மாணவர்கள் பொறியியல் கவுன்சலிங்கில் பங்கேற்காமல் நிராகரித்திருக்கலாம்” என்கிறார்கள் கல்வியாளர்கள்.
பொறியியல் ஆன்லைன் கவுன்சலிங்கின் முதல் சுற்றில் கலந்து கொள்ள 190க்கு மேல் கட் ஆஃப் மதிப்பெண்கள் பெற்ற 10,734 பேர் அழைக்கப்பட்டனர். அவர்களில் 7,347 பேர்தான் டெபாசிட் கட்டணத்தைச் செலுத்தினார்கள். அதில் 7,303 பேர் தான் தாங்கள் தேர்வு செய்த கல்லூரிகள் மற்றும் படிப்புகளுடன் தங்களது விருப்பத்தைப் பதிவு செய்தனர். அதில் 7,136 பேருக்குத் தாற்காலிகமாக சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனை ஏற்று மாணவர்கள் உறுதி செய்த பிறகு, அவர்களுக்கு அட்மிஷன் ஆணை ஆன்லைன் மூலம் அனுப்பி வைக்கப்படும்.
முதல் விருப்பப்படி இடம் கிடைத்தவர்கள் அல்லது கிடைத்துள்ள இடம் தங்களுக்கு விருப்பமானதுதான் என்று நினைப்பவர்கள் கிடைத்த படிப்பிலேயே சேர்ந்து விடலாம். அல்லது இந்த தற்காலிக அட்மிஷன் ஆணையில் உள்ள இடங்களை ஏற்பதாகவும் மீதமுள்ள காலி இடங்களில் தங்களுக்கு விருப்ப முன்னுரிமைப் பட்டியலில் உள்ள இடங்கள் இருந்தால் அதை தங்களது தகுதி மதிப்பெண்கள்படி ஒதுக்கீடு செய்யவும் கோரலாம். அவர்களது விருப்பப்படி காலி இடங்கள் இருந்தால் அவர்களது ரேங்க் மற்றும் விருப்ப அடிப்படையில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். அட்மிஷனில் விருப்பமில்லை என்றால் கவுன்சலிங்கிலிருந்து வெளியேறி விடலாம். இதுதான் நடைமுறை.
175 கட் ஆஃப் மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்களுக்கான இரண்டாவது சுற்றுக் கவுன்சலிங்கின் மாணவர்களது விருப்பப் பதிவு ஜூலை 30ஆம் தேதி தொடங்குகிறது.
இந்த ஆண்டு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு 1.5 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். கவுன்சலிங் முதல் சுற்றிலேயே 30 சதவீதத்துக்கு மேற்பட்ட இடங்கள் காலியாக இருப்பதால், இந்த ஆண்டிலும் கடந்த ஆண்டைப் போலவே 40 சதவீத்துக்கு மேற்பட்ட இடங்கள் காலியாக இருக்கும் என்பது நிச்சயம்.
Read in : English