Read in : English
ஆங்கில வழிப் பள்ளிக்கு நிகராக கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்களை நுனி நாக்கு ஆங்கிலத்தில் பேச வைத்து அசத்துகிறார் கிராமத்தில் விளிம்பு நிலை தலித் குடும்பத்தில் பிறந்து ஆசிரியரான சே.மா. அய்யப்பன்.
காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் ஒன்றியம் நெல்லிக்குப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் உள்ள குழந்தைகளின் ஆங்கில உச்சரிப்பைக் கேட்பவர்கள் அசந்து போவார்கள். அவர்கள் நுனிநாக்கு ஆங்கிலத்தில் பேசுகிறார்கள். ஆங்கிலப் பாடப்புத்தகத்தைப் பார்த்து சரளமாக வாசிக்கிறார்கள். அரசுப் பள்ளியில் படிக்கும் குழந்தைகளிடம், இப்படி துல்லியமான ஆங்கில உச்சரிப்பா என்று பார்க்கிறவர்கள் வியந்து போகிறார்கள்.
அதனால், 70 பேர் இருந்த இந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தற்போது 146 பேர் படிக்கிறார்கள். பக்கத்தில் உள்ள தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 20 மாணவர்கள், இந்தப் பள்ளியில் சேர்ந்துள்ளனர் என்பதிலிருந்தே இந்தப் பள்ளி அந்தப் பகுதி மக்களிடம் எந்த அளவுக்கு பிரபலமாகி இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம். இந்தச் சாதனைக்குக் காரணம் தலைமை ஆசிரியர் அய்யப்பனின் ஆங்கிலம் கற்பித்தல் திறன்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்டத்தில் உள்ள சேனல் என்ற ஊரில் ஏழ்மையான தலித் குடும்பத்தில் பிறந்தவர் அய்யப்பன். விவசாயக் கூலிகளான அவரது அவரது அப்பாவுக்கும் அம்மாவுக்கும் எழுதப்படிக்கத் தெரியாது. அவரது அக்காவும் இரண்டு தங்கைகளும் பள்ளிப் படிப்பை முடிக்கவில்லை. தம்பி மட்டும் பத்தாம் வகுப்புப் படித்திருக்கிறார்.
20 சென்ட் நிலத்தில் விதைப்பதற்காக வைத்திருந்த நிலக்கடலையை விற்று, அய்யப்பனின் பத்தாம் வகுப்புத் தேர்வுக்குக் கட்டணத்தைச் செலுத்தினார்கள் அவரது பெற்றோர்கள். அந்த அளவுக்கு அவரது குடும்பம் ஏழ்மையானது. கிராமச்சூழலில் வளர்ந்த அவருக்கு பள்ளியில் ஆங்கிலப் பாடத்தைப் படிக்க மிகவும் சிரமப்பட்டவர். இடைநிலை ஆசிரியர் பயிற்சிக்குப் பிறகு, 1991ஆம் ஆண்டு வேலூர் மாவட்டத்தில் திமிரி ஒன்றியம் பின்னந்தங்கல் தொடக்கப் பள்ளியில் ஆசிரியராகச் சேர்ந்தார்.
“தொடக்க காலத்தில் ஆங்கிலப் பாடத்தைக் குழந்தைகளுக்குப் புரியாமல் நடத்தியிருக்கிறேன். எனக்கும் பல விஷயங்கள் புரியாது. திருவண்ணாமலை மாவட்டம் பென்னாட்டகரம் பள்ளியில் பணியில் சேர்ந்த பிறகு, வேலூரில் 1993இல் நடைபெற்ற இங்கிலீஷ் லாங்க்வேஜ் டிரெயினங் கோர்ஸில் (ELTC) சேர்ந்து 13 நாள் பயிற்சி பெற்றேன். அப்போது முறையான ஆங்கில உச்சரிப்புக்கான ஒலிக்குறியீடுகளைக் கற்றுக் கொண்டேன். ஒரு வார்த்தையின் அமைப்பைப் பார்த்ததும் மிகச் சரியாக உச்சரித்துவிட முடியும் என்ற நம்பிக்கை உருவானது. அதைத் தொடர்ந்து, Phonetics முறையில் கற்கவும் அதனை எளிமையாகக் குழந்தைகளுக்குக் கற்றுத்தரவும் முயற்சி எடுத்தேன். பல ஆண்டுகள் உழைப்புக்குப் பிறகு எனக்கு ஆங்கிலம் கைவரப் பெற்றது. அதைபள்ளிக் குழந்தைகளுக்கும் எளிமையாகக் கற்பித்து வருகிறேன்” என்கிறார் அய்யப்பன்.
“தாய் மொழியை நன்றாகக் கற்றால்தான் இரண்டாவது மொழியை நன்கு கற்க முடியும். முதலில் தமிழை நன்றாகக் கற்றுக் கொடுத்த பிறகுதான், ஆங்கிலத்தைக் கற்றுத்தருவேன். தற்போது எங்களது பள்ளிக்கு என தனியே பாடத்திட்டத்தைத் தயாரித்து ஆங்கிலத்தில் வாசித்தல், பேசுதல், எழுதுதல் மற்றும் மொழிப் பயிற்சிக்குப் பயன்படுத்தி வருகிறேன். Sound System மூலம் ஆங்கிலத்தைப் படிப்பதால் மிக எளிதாக பழக்கமில்லாத வார்த்தைகளைக்கூட, குழந்தைகள் எளிதாக சரியாக உச்சரித்துப் படிப்பதைக் காண முடியும். 30 நாட்களுக்குள் குழந்தைகளிடம் நல்ல வாசிப்புத் திறனைக் கொண்டு வந்து விட முடியும்” என்று நம்பிக்கையுடன் பேசுகிறார் அவர்.
றிலீஷீஸீமீtவீநீs முறையில் ஆங்கிலம் கற்பித்தல் அவரது பள்ளியுடன் நின்றுவிடவில்லை. விழுப்புரம், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் வரை நீண்ட அவரது கற்பித்தல் பயணம், தற்போது திருவண்ணமலை மாவட்டத்திலும் அடியெடுத்து வைத்திருக்கிறது. இதுதவிர, மாநிலம் முழுவதும் 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆசிரியர்களுக்கு ஆங்கில கற்பித்தல் முறை குறித்த பயிற்சி அளித்திருக்கிறார்.
தமிழக அரசின் உத்தரவின்படி, Phonetics முறையில் கற்பிக்கத் தேவையான ஆசிரியர் பயிற்சிக் கையேடுகளைத் தயாரித்துக் கொடுத்தவர். இவரது உழைப்பில் உருவான ஆங்கில மொழி கற்பித்தல் வீடியோக்கள் தமிழகத்தில் உள்ள அனைத்துத் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் உலா வருகின்றன.
அனைவருக்கும் கல்வித் திட்ட இயக்கத்தின் வழிகாட்டுதல்படி ஆங்கில உச்சரிப்பு பயிற்சி மேம்பாட்டுக்காக இவர் வடிவமைத்துக் கொடுத்த வண்ணச் சுவர் சித்திரங்கள் 2 ஆயிரம் பள்ளிகளை அலங்கரிக்கின்றன. .
இடைநிலை ஆசிரியராக இருந்த அவர் தனது முயற்சியால் தொடர்ந்து படித்து, பிஏ (வரலாறு) பட்டம் பெற்றார். பிஏ வரலாறு படித்தார். பின்னர் ஆங்கிலத்தில் எம்ஏ பட்டமும் எம்பில் பட்டமும் பெற்றிருக்கிறார் இந்த 48 வயது ஆசிரியர். பொதிகைத் தொலைக்காட்சியில் ஆங்கிலக் கல்வி நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறார்
இவர் முன்பு பணியாற்றிய பள்ளிக்கு அமெரிக்காவிலிருந்து வந்த ஆசிரியர்கள் இவரது ஆங்கில உச்சரிப்பைப் பார்த்து அசந்து போனார்கள். அவர்கள் அந்தப் பள்ளியில் இருந்த இரு வார காலமும் அவர்களுக்கு மொழிபெயர்ப்பாளராக இருந்தார். உத்தரபிரதேச மாநிலத்தில் நடத்தப்பட்ட கல்விக் கருத்தரங்கில் இவரது கற்பிக்கும் முறைக்குப் பெரிய பாராட்டுக் கிடைத்தது. மாவட்ட நல்லாசிரியர் விருது பெற்ற அய்யப்பன், 2013-14 கல்வி ஆண்டுக்கான மாநில நல்லாசிரியர் விருது பெற்றவர். பள்ளிக் குழந்தைகளுக்கும் அவர்களுக்குக் கற்றுத் தரும் ஆசிரியர்களுக்கும் ஆங்கிலம் மொழியைக் கற்றுத்தரும் ஆசிரியர் அய்யப்பனின் அயராத பணி தொடர்கிறது.
“ஆசிரியர் மலைகளாக நின்றால் மாணாக்கர் ஆறுகளாகப் பெருகுவார்கள்.” இது மகாகவி பாரதி வரிகள்.
Read in : English