Read in : English

Share the Article

கன்னியாகுமரி மாவட்டம் ராஜக்கமங்கலம் துறையில் வாடகை வீட்டில் வசிக்கும் செலீனின் குடும்பம், அவரது கணவர் ஜோசப்பின் உழைப்பை நம்பித்தான்  இருக்கிறது. கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் அவர்கள் குடும்பத்தினருக்கு தெரிந்த ஒருவர் மூலம் கிடைத்த விசா மூலம், ஈரானுக்கு சென்றவர். அவருடன் அதே ஊரிலிருந்தும், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்திலிருந்தும் மேலும் 20 மீனவர்கள் உடன் சென்றிருந்தனர். தொடர்ந்து ஆறு மாதங்களாக, தங்கள் ஸ்பான்சரான முகம்மது சலாவிற்கு ஈரானின் கடல் பகுதிகளில் மீன்களை பிடித்து கொடுத்த பின்னர், ஏற்கனவே பேசிய லாபவிகிதத்தை மீனவர்கள் கேட்ட போது அதனை வழங்க மறுத்துள்ளார் அவர். கூடவே, கடந்த 18 ஆம் தியதி ஜோசப்பையும் அவருடன் இருந்த 20 மீனவர்களையும்,  பாஸ்போர்ட் மற்றும் அடையாள அட்டை எதுவும் திரும்ப வழங்காமல் அவர்களுக்கு தங்க வழங்கப்பட்டிருந்த அறையிலிருந்து வெளியேற்றியுள்ளார் அவர்.

தமிழக மீனவர்கள் ஈரானில் தவிப்பு

இதனால் பணமும் இல்லாமல், உணவும் இல்லாத நிலைக்கு தள்ளப்பட்ட மீனவர்கள் தங்கள் உடைமைகளுடன் ஈரானில் நகல்-தகி என்ற ஊரில் நடுத்தெருவுக்கு வரவேண்டிய நிலைக்கு ஆளாயினர். அங்கிருந்த படியே, ஊரில் உள்ள தங்கள் குடும்பத்தினரைத் தொடர்பு கொண்டு தங்கள் நிலையை போனில் எடுத்துக் கூறவே, குடும்பத்தினர் பதைபதைப்புடன் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். தமிழக முதல்வரும் இந்த பிரச்சினைக் குறித்து பிரதமருக்கு கடிதம் எழுத, இவ்விவகாரத்தை சம்பந்தப்பட்டவர்கள் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்து மீனவர்கள் விரைந்து நாடு திரும்பும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெற்காசிய மீனவர் கூட்டமைப்பின் தலைவர் சர்ச்சில் கூறுகிறார்.

வெளிநாடுகளில் வாழ்வாதாரத்தை தேடும் மீனவர்கள்
ஆனால், வெளிநாடுகளில் இவ்வாறு மீனவர்கள் இன்னலுக்குள்ளாகி வருவது இது முதல் முறையல்ல. தென் மாவட்டங்கள், குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரும்பாலான மீனவர்களும் வெளிநாட்டில் சென்று மீன் பிடித்தொழில் செய்தே  தங்களது குடும்பத்தை கவனித்து வருகின்றனர். இராஜக்கமங்கலம் துறையில் மட்டுமே சுமார் 1800 பேர் வளைகுடா நாடுகளில் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர். அவர்கள், கடலில் நாடுகளின் எல்லைகளை தாண்டுதல் மற்றும் ஸ்பான்ஸர்களால் போதிய விகிதம் தரப்படாமை என இருமுனை நெருக்கடிகளை எதிர்கொள்வதாகக் கூறுகிறார் சர்வதேச மீனவர் வளர்ச்சி நிறுவனத்தின் தலைவர் ஜஸ்டின் ஆன்றணி.

கடல் எல்லை தாண்டுவதால் ஏற்படும் நெருக்கடி
அரபிக் கடலின் பகுதியில், வளைகுடா நாடுகள் மிகவும் நெருக்கமான கடல் எல்லைகளைக் கொண்டுள்ளன. அவற்றில் மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள், இந்த எல்லைகளைக் குறித்த போதிய அறிவினைக் கொண்டிருப்பதில்லை. “கடலுக்கும் எல்லை இல்லை. மீன்களுக்கும் எல்லை இல்லை. ஆனால், மீன் பிடிக்கும் மனிதர்களுக்கு எல்லையிருக்கிறது” எனக் கூறும் தேசிய மீனவர் பேரவைச் செயலாளர் பீட்டர், ஒரு கடல் எல்லையிலிருந்து மற்றொரு கடல் எல்லையை கடக்கும் மீன்களை பிடிக்கும் வேகத்தில் இருக்கும் மீனவர்கள் அவர்களை அறியாமலேயே கடக்கும் போது, கடல் எல்லையைத் தாண்டி விடும் சூழல் ஏற்பட்டுவிடுவதாகக் கூறுகிறார். இருப்பினும் சில மீனவர்கள், மீன் வளம் நிறைந்த பகுதிகளில் மீன்களைப் பிடிப்பதற்காக கடல் எல்லையை தாண்டிச் செல்லும் போதும் அந்த நாட்டு கடற்படைகளால் கைது செய்யப்படும் நிலைக்கு ஆளாவதையும் மறுப்பதிற்கில்லை என்கிறார் அவர்.

வளைகுடா பகுதிகளில் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள் தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள், கடலில் மீன் பிடிக்க செல்லும் போது தங்களுக்குள் தமிழிலேயே தொடர்பு கொள்ளுகின்றனர். இவ்வாறு, கடல் எல்லை தாண்டுவதால் கைது செய்யப்படும் மீனவர்கள் தாங்கள் கைது செய்யப்பட்ட தகவலை சக மீனவர்களுக்கு வயர்லெஸ் மூலமோ அல்லது சிக்னல் கிடைக்கும் இடங்களில் போன் மூலம் உறவினர்களுக்கோ தெரியப்படுத்துகின்றனர். ஆனால், கைது செய்யப்படும் மீனவர்கள் எல்லா நேரங்களிலும் உடனடியாக சம்பந்தப்பட்ட நாடுகளில் இருக்கும் நீதிமன்றங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்படுவதில்லை எனக் கூறுகிறார் பாதர் சர்ச்சில். அவர்கள் சில நேரங்களில் அவர்களின் விசைப்படகுகளிலோ அல்லது அங்கிருக்கும் காவல் நிலையங்களிலோ சிறை வைக்கப்படுகின்றனர். இதனால், அந்த நாடுகளில் இருக்கும் தெரிந்தவர்களைக் கொண்டு தொடர்பு கொள்ள முடிந்தாலும் சில நேரங்களில் இயலாமல் போய்விடுவதாகக் கூறுகிறார் அவர்.

“இந்திய தூதரக அதிகாரிகளுடன் 4 அல்லது 5 முறை இந்தியில் தான் பேசினோம். ஆனாலும் அவர்கள் எங்களுக்கு பதில் அளிக்கவில்லை.” — பீஜு

பிற நாடுகளில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் மீனவர்களின் விபரங்களை உடனடியாக அந்த நாடுகள் இந்திய தூதரகத்திற்கு தெரியப்படுத்த வேண்டும். ஆனால், பெரும்பாலான நாடுகள் அவ்வாறு செய்வதில்லை எனக் கூறும் பாதர் சர்ச்சில், இந்திய தூதரகத்தினர் தகவல் தெரிந்தால் கூட, டெல்லியிலிருந்து உத்தரவு வராத வரை வந்து பார்ப்பதில்லை என்கிறார். அவரது இந்த கருத்தை  ராஜாக்கமங்கலம் துறையை சேர்ந்த 24 வயதேயான பிஜுவும் உறுதி செய்கிறார். இவர், கடந்த 9 மாதங்களுக்கு முன்னர் தான் ஈரான் மற்றும் சவுதி அரேபிய சிறைகளில் கடல் எல்லை தாண்டி மீன் பிடித்ததற்காக தலா மூன்று மாதங்கள் சிறையில் இருந்துள்ளார். “இந்திய தூதரக அதிகாரிகளுடன் 4 அல்லது 5 முறை இந்தியில் தான் பேசினோம். ஆனாலும் அவர்கள் எங்களுக்கு பதில் அளிக்கவில்லை.” எனக் கூறிய அவர், ஈரானிய சிறையில் இருந்த தங்களை சவுதி அரேபியாவில் இருந்த தங்கள் ஸ்பான்ஸர் பணம் கட்டி மீட்டதாகக் கூறுகிறார். “ஈரான் சிறையிலிருந்து விடுதலைப் பெற்ற நாங்கள் பின்னர் எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றத்திற்காக சவுதி அரசால் 3 மாதங்கள் சிறையில் தள்ளப்பட்டோம்”  என்றார்.

மீனவர்கள் எதிர்கொள்ளும் ஸ்பான்ஸர்கள் பிரச்சினை
இவ்வாறு வெளிநாடுகளில் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள், தங்கள் எதோ ஒரு முகவர் மூலமோ அல்லது ஏற்கனவே, தொழில் செய்து வரும் மீனவர் மூலமோ தான் வளைகுடா நாடுகளுக்கு மீன் பிடித் தொழிலுக்காக வருகின்றனர். பிற தொழில்களைப் போல் மாதம் குறிப்பிட்ட தொகை என நிரந்தர சம்பளமாக  இல்லாமல் லாபப்பங்கீடு முறையே பின்பற்றப்படுகிறது. அதுவும் எழுத்துப்பூர்வ ஒப்பந்தமாக இல்லாமல் வாய்மொழியாகவே இவை பின்பற்றப்படுவதாகக் கூறுகிறார் ஜஸ்டின் ஆன்றனி. இதனால், அவர்களின் ஸ்பான்ஸர்கள், மீனவர்களை ஏமாற்றும் பட்சத்தில், குறிப்பிட்ட அந்த நாடுகளின் தொழிலாளர்  நல சட்டங்களிலிருந்து தப்பி விடுகின்றனர். அதுமட்டுமல்லாமல், மீனவர்கள் வளைகுடா நாடுகளில் வந்திறங்கியவுடன் அவர்களுக்கான, பாஸ்போர்ட்டை வாங்கி அவர்கள் வசம் வைத்துக் கொண்டு, அரசின் சார்பில் வழங்கப்படும் அடையாள அட்டையை வழங்கிவிடுகின்றனர். பிரச்சினை என்று வந்துவிட்டால், இந்த அடையாள அட்டையைக் கூட, இந்த ஸ்பான்ஸர்கள் மீனவர்களிடமிருந்து பிடுங்கி வைத்து விடுகின்றனர். இதனால், அந்தந்த நாட்டு போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைபட வேண்டிய நிலைக்கு மீனவர்கள் ஆளாகின்றனர்.

மீனவர்கள் பிரச்சினையில் கேரளாவின் முன்னுதாரணம்
காலங்கலமாகவே இருக்கும் இப்பிரச்சினைகளில் சில நேரங்களில் தமிழக மீனவர்களுடன் கேரள மீனவர்களும் சிக்குவதுண்டு. இவ்வாறு, அவர்கள் சிக்கும் போது, கேரள அரசின் அயல் நாட்டு கேரளியர் சங்கம் தலையிடுகிறது. சிறையில் இருக்கும் கேரள மீனவர்களை உடனடியாக இச்சங்கத்தின் பிரதிநிதிகள் சந்தித்து, அவர்களை மீட்க உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ளுகின்றனர். ஆனால், இப்படிப்பட்டதொரு அமைப்பு தமிழகத்தில் இருந்தாலும், “ வளைகுடா நாடுகளில் வலுவாக செயல்படுத்த ஆள்கள் இல்லாததால் தமிழக மீனவர்கள் நெருக்கடிக்கு ஆளாகின்றனர்” எனக் கூறுகிறார் பாதர் சர்ச்சில்.


Share the Article

Read in : English

What the Tamil Nadu Organic policy needs Music to homecoming Chennaiites: the sound of the Chennai auto Should you switch from meat to plant-based alternatives? Indian kitchen staples are great for building immunity Pickle juice for muscle cramps? Find out more fascinating facts about pickles