Read in : English
மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் நடித்த மாமன்னன் திரைப்படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. ஒரு திரைப்படத்தின் உள்ளடக்கம் என்பது அதில் சம்பந்தப்பட்டவர்கள் யார் என்பதைப் பொறுத்து பல மாறுதல்களுக்கு உள்ளாகும்.
நடிப்பவர்கள் இவர்கள் என்று முடிவானபிறகு காட்சிகளே தலைகீழாகும்; படப்பிடிப்பு தளங்கள் மாறுதலுக்கு உள்ளாகும். தொழில்நுட்பக் கலைஞர்கள் இவர்கள் தாம் என்றானபிறகு, இயக்குநர் தொடக்கத்தில் தன் மனதில் ஓட்டிய படத்திற்கும் திரையில் ஓடுவதற்கும் இடையே பெரிய இடைவெளி உருவாகும். ஆனால், ‘இந்தப் படம் இப்படிப்பட்டதுதான்’ என்று திட்டவட்டமாக முடிவெடுத்து வார்க்கப்படும் படைப்புகளுக்கு திரைப்பட வர்த்தக உலகம் வகுக்கும் இது போன்ற விதிகள் ஏதும் பொருந்தாது. அதேநேரத்தில், அப்படத்திற்காகக் கைகோர்க்கும் கரங்களே அதன் வர்த்தக எல்லைகளையும் உடைத்தெறிந்து வேறொரு உயரத்திற்கு அழைத்துச் செல்லும்.
‘மாமன்னன்’ அறிவிப்பு வெளியானபோது, அப்படியொரு நம்பிக்கையே பிறந்தது. காரணம், இயக்குனர் மாரி செல்வராஜின் முந்தைய படங்கள் ஏற்படுத்திய தாக்கம். வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ், உதயநிதி ஸ்டாலின் உட்படப் பலர் நடித்திருக்கும் ‘மாமன்னன்’ படம் அந்த நம்பிக்கையைக் காப்பாற்றியிருக்கிறதா? இந்தக் கேள்விக்குப் பதில் தெரியும் முன்பாக, படம் பார்த்த அனுபவம் எப்படியிருந்தது என்று காண்போம்.
இக்கதையில் காட்டப்படும் தொகுதியின் பெயர் காசிபுரம். கிட்டத்தட்ட இதே தொனியில் ஒலிக்கும் ராசிபுரம் தொகுதியின் எம்.எல்.ஏவாக இருந்து பின்னாட்களில் துணை சபாநாயகர், சபாநாயகர் என்ற பொறுப்புகளை வகித்தவர் அதிமுகவைச் சார்ந்த தனபால்…திரைக்கதையில் பொதிந்திருப்பது, உண்மைகளின் அடிப்படையிலான புனைவென்றே இப்படத்தை எண்ணச் செய்கிறது
தமிழ்நாட்டின் தனித்தொகுதிகளில் ஒன்று. அங்கு எம்.எல்.ஏ.வாக இருப்பவர், அவர் சார்ந்த கட்சியின் மாவட்டச் செயலாளரின் கைப்பாவையாகவே இருக்கிறார். தன் தந்தையின் அதிகார எல்லை எப்பேர்ப்பட்டது என்று தெரிந்த காரணத்தால், மகனுக்கு அவரது அரசியலில் ஈடுபாடு இல்லை. சிறுவயதில் மகன் சந்தித்த குரூர சம்பவமொன்று, தந்தையோடு அவருக்கிருந்த பிணைப்பை அறுத்தெறிகிறது. இந்தச் சூழலில், அந்த இளைஞனின் நண்பர்கள் தாங்கள் டியூஷன் சென்டர் நடத்த ஒரு இடம் வேண்டுமென்று அவரைத் தேடி வருகின்றனர்.
அவரும் தான் நடத்திவரும் தற்காப்புக்கலை பயிற்சி மையத்தை அவர்களுக்குத் தருகிறார். ஒருநாள் அந்த இடத்தை ஒரு கும்பல் அடித்து நொறுக்குகிறது. பதிலுக்கு அந்த இளைஞனும் அவரது நண்பர்களும் அவர்களது இடம் மீது தாக்குதல் நடத்துகின்றனர். அப்போது, அந்த விவகாரம் எம்.எல்.ஏவின் மகன் வெர்சஸ் மாவட்டச் செயலாளரின் சகோதரன் என்றாகிறது. பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணலாம் என்ற அழைப்பின் பேரில், எதிர்தரப்பினரின் இடத்திற்குச் செல்கிறார் அந்த இளைஞன். அங்கு தன் தந்தை நின்றுகொண்டிருப்பதையும், அவரைவிட வயதில் சிறியவர்கள் உட்கார்ந்திருப்பதையும் பார்க்கிறார்.தந்தையை நாற்காலியில் அமரச் சொல்கிறார். ‘அவர் உட்காரமாட்டார்’ என்று அந்த மா.செ. சொல்ல, அதற்கு அந்த இளைஞன் என்ன செய்கிறார் என்பதே மீதிக்கதையாகத் திரையில் விரிகிறது.
மேலும் படிக்க: மாமன்னன் திரைப்படம்: புதிய திசையில் ரஹ்மானின் இசை
இந்தக் கதையில் எம்.எல்.ஏ. மாமன்னனாக வடிவேலுவும், அவரது மகன் அதிவீரனாக உதயநிதியும், மாவட்டச் செயலாளர் ரத்தினவேலுவாக பகத் பாசிலும் அவரது சகோதரராக சுனிலும் நடித்துள்ளனர். உதயநிதியோடு கல்லூரியில் ஒன்றாகப் படித்தவராக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். அவரது பாத்திரத்தின் பெயர் லீலா.
இந்தப் படத்தின் முடிவு, இது உண்மைக்கதைதான் என்ற முடிவுக்கு நம்மை அழைத்துச் செல்கிறது. காரணம், இக்கதையில் காட்டப்படும் தொகுதியின் பெயர் காசிபுரம். கிட்டத்தட்ட இதே தொனியில் ஒலிக்கும் ராசிபுரம் தொகுதியின் எம்.எல்.ஏவாக இருந்து பின்னாட்களில் துணை சபாநாயகர், சபாநாயகர் என்ற பொறுப்புகளை வகித்தவர் அதிமுகவைச் சார்ந்த தனபால்.
ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர். அந்த காரணத்தாலேயே, மாவட்ட அரசியலில் அவருக்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லை என்பது போன்ற செய்திகளும் பல்வேறு காலகட்டத்தில் வெளியாகியிருக்கின்றன. அவற்றை அடிக்கோடிடுவது போன்ற பல விஷயங்கள் திரைக்கதையில் பொதிந்திருப்பது, உண்மைகளின் அடிப்படையிலான புனைவென்றே இப்படத்தை எண்ணச் செய்கிறது.
ஒரு சமூகப் பிரச்சனையைப் பேசும் திரைப்படம், சட்டென்று பார்வையாளர்களைத் திரையோடு ஒன்றச் செய்ய வேண்டும். ’மாமன்னன்’ இடைவேளையின்போது பகத் பாசில் – உதயநிதி இடையிலான வார்த்தைப் போர் வன்முறையாட்டமாக மாறுவது அப்படியொன்று. வாழ்வில் ஒடுக்கி அடக்கப்பட்டவராக ஒருமுறையேனும் தன்னை உணர்ந்தவரை, அக்காட்சி எளிதில் பற்றிவிடும். அந்த காட்சியாக்கம்தான் இயக்குநர் மாரி செல்வராஜை நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் விமர்சிக்கத் தூண்டுகிறது.
ஒரு திரைப்படமாக நோக்கினால் முன்பாதிக்கு ஈடாகப் பின்பாதி இல்லை என்பதே உண்மை. அதேநேரத்தில், திரைக்கதை ரொம்ப போரடிக்கும்விதமாகவும் இல்லை. வேட்டைநாய்களையும் பன்றிகளையும் ஒடுக்கப்பட்டோரின் பல்லாண்டு கால வாழ்வோடு உருவகப்படுத்தும் ஷாட்களும் கூட இதில் உண்டு. ‘கர்ணன்’ அளவுக்கு அவை திகட்டவில்லை. தாக்குதலுக்கு அஞ்சும் பெண் பாத்திரம் கட்டிலுக்குக் கீழ் பதுங்கிக் கிடக்க, கட்டில் மீது ஒரு பன்றிக்குட்டி பயமின்றி இருப்பதாகக் காட்டியிருப்பது அவற்றில் ஒன்று.
தான் வளர்க்கும் பன்றிகளுக்கு உணவிடும் காட்சி, கேக்கை வாள் கொண்டு வெட்டும் காட்சி, குலதெய்வக் கோயிலில் மாலை மரியாதையை ஏற்றுக்கொள்ளும் காட்சி என்று அடுத்தடுத்து முறையே உதயநிதி, பகத் பாசில், வடிவேலு ஆகியோர் திரையில் காட்டப்படுகின்றனர். அதற்கு முன்னதாகவே தமிழ்நாடு சட்டமன்றமும் அவிழ்த்து விடப்படும் வேட்டை நாய்களும் பன்றிகளும் தனித்தனியே காட்டப்படுகின்றன.
மொத்தக்கதையையும் இந்த ஷாட்களே சுருக்கமாகச் சொல்லிவிடுகின்றன. இதன்பிறகு ஆதிக்க மனப்பான்மையும் அடிமைத்தனமும், இரண்டையும் தரைமட்டமாக்கத் துடிக்கிற புரட்சிகரமான சிந்தனைகளும் தானாகத் திரையில் விரிகின்றன.
வடிவேலுவும் உதயநிதியும் கையில் ஆயுதங்களோடு காத்திருக்கும் போஸ்டர் வடிவமைப்பு, ஒரு பெரும் ரணகளத்தைத் திரையில் காணவிருக்கிறோமோ என்று பதைபதைக்கச் செய்தது. கர்ணன் படத்தில் வரும் காவல்நிலைய தாக்குதல் காட்சி அதற்கு விதையூன்றிருந்தது. நல்லவேளையாக, இதில் அப்படி ஏதும் இல்லை. ஆனால், வன்முறையின் கோரம் காட்டி நம்மைப் பதறச் செய்கிற மாயாஜாலம் இதில் நிகழ்ந்திருக்கிறது.
உதயநிதிக்கு இதுவொரு சிறப்பான படம். சாதீயச் சமூகத்தின் மீதான விரக்தியை உடலில் முரட்டுத்தனமானத் தேக்கி வைத்திருக்கும் பாத்திரம் அவருடையது. அதனைத் திரையில் நன்கு வெளிப்படுத்தியிருக்கிறார்… இக்கதை கடந்த காலத்தில் அல்ல, நிகழ்காலத்தோடும் பொருந்திப் போவதை உணர்த்துகிறது
நிச்சயமாக உதயநிதிக்கு இதுவொரு சிறப்பான படம். சாதீயச் சமூகத்தின் மீதான விரக்தியை உடலில் முரட்டுத்தனமானத் தேக்கி வைத்திருக்கும் பாத்திரம் அவருடையது. அதனைத் திரையில் நன்கு வெளிப்படுத்தியிருக்கிறார். போலவே, ஆதிக்கத்தில் ஊறிக் கிடக்கும் ஒரு மனிதனை கண் முன்னே நிறுத்துகிறார் பகத் பாசில். இவ்விருவருக்கும் நடுவே, தனது சொந்தங்கள் தந்த ஆதிக்கத் தளைகளை அறுத்தெறிந்து அனைவரையும் சமதளத்திற்குக் கொண்டு வரத் துடிக்கிறவராகத் தோன்றியிருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.
இவர்கள் தவிர்த்து ஒரு பெருங்கூட்டமே இப்படத்தில் உண்டு. அவர்களை மீறி வடிவேலு – கீதா கைலாசம் ஜோடியின் நடிப்பு நம்மை மெய்சிலிருக்க வைக்கிறது. கீதா வரும் காட்சிகள் மிகக்குறைவு என்றபோதும், ஒரு சாதாரண பெண்ணின் இயல்புகளை உணரச் செய்திருக்கிறார்.
மேலும் படிக்க: தண்டட்டி: ஆணவக் கொலை பற்றிய வித்தியாசமான திரைப்படம்
அதற்கு மாறாக, திரை முழுக்கத் தன்னை வரைந்துகொண்டாற்போல பெரும்பாலான காட்சிகளில் வலம் வருகிறார் வடிவேலு. தொண்டர்களைப் பார்த்து புன்னகைக்கும் இடங்கள் தவிர, படத்தில் வேறெங்கும் அவர் சிரிக்கவும் இல்லை, நம்மைச் சிரிக்க வைக்கவும் இல்லை. ஒரு கலைஞனின் வெற்றி அதுவே!
தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு, ஆர்.கே.செல்வாவின் படத்தொகுப்பு, குமார் கங்கப்பனின் கலையாக்கம் அனைத்தும் ஒன்று சேர்ந்து ரொம்பவே சீரியசான படம் பார்க்கும் உணர்வை இன்னும் அதிகப்படுத்துகின்றன. அது பார்வையாளர்களுக்கு போரடித்துவிடாமல் இருக்க வேண்டுமென்ற நோக்கில், தகுந்த இடங்களில் பாடல்களைத் தந்திருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். போலவே, சோகக் காட்சிகளில் உச்சக்குரலெடுத்து ஓலமிடும் கோரஸ் குரல்களுக்கு அவர் இடம் தரவே இல்லை.
மாறாக, இதுவரையிலான தனது பாணியில் இருந்து முற்றிலுமாக விலகி நிற்கிறேன் என்று சொல்லும் வகையிலேயே இப்படத்திற்குப் பின்னணி இசை அமைத்திருக்கிறார்.
’மாமன்னன்’ படத்தில் வடிவேலு சார்ந்திருக்கும் ஆளும் கட்சியின் பெயர் ‘சமத்துவ சமூகநீதி மக்கள் கழகம்’ என்று காட்டப்படுகிறது. எதிர்க்கட்சியின் பெயரில் ‘மறுமலர்ச்சி’ சேர்ந்திருக்கிறது. இரண்டு கட்சிகளின் தலைவர்களாகவும் ஆண்களே காட்டப்பட்டுருக்கின்றனர். ஆனால் ஒற்றை நட்சத்திரம், அரிக்கேன் விளக்கு இரண்டும் இக்கட்சிகளின் சின்னங்கள் என்று சொல்கிறபோதும், ஆளும் கட்சியே மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதாகச் சொல்கிறபோதும், எந்தக் கட்சிகளை இயக்குநர் குறிப்பிடுகிறார் என்பது புரிந்து போகிறது.
அது போதாதென்று காசிபுரம், சேலம் என்று ஊர்ப் பெயர்கள் திரையில் காட்டப்படுகின்றன. அனைத்துக்கும் மேலே, படத்தின் முடிவு இக்கதையில் உண்மை எத்தனை சதவிகிதம் என்பதைச் சொல்லிவிடுகிறது. ‘எனக்கு பிடிக்கக்கூடாது என்று மாரி செல்வராஜ் சொன்ன கதையே மாமன்னன் படம்’ என்று சமீபத்தில் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார் உதயநிதி.
அதற்கான காரணம், படம் பார்க்கத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே தெரிந்துவிடுகிறது. அப்படியிருந்தும், மாரி செல்வராஜ் உடன் பணியாற்றுவதில் அவர் காட்டிய முனைப்பு உண்மையிலேயே ஆச்சர்யப்படத்தக்கது.
அதேநேரத்தில், இந்தக் கதையில் நாயகிக்கு லீலா என்று பெயர் வைத்ததாகட்டும். தமிழ்நாட்டின் இரு பெரும் கட்சிகளில் ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்கு உரிய மரியாதை கிடைப்பதில்லை என்பதைத் திரைக்கதையில் காட்டிய விதத்தில் ஆகட்டும்; கிட்டத்தட்ட இரு பெரும் திராவிடக் கட்சிகளையும் வெளிப்படையாக விமர்சித்திருக்கிறார் மாரி செல்வராஜ். தனித்தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் மாவட்டச் செயலாளர்களின் உத்தரவுகளை ஏற்பது அதிகாரப்பூர்வமற்ற நியதியாக இருப்பதைக் காட்டியிருக்கிறார். அரசியல்வாதியின் மனைவி என்பதாலேயே சில பெண்கள் வேட்பாளர் ஆக்கப்படுவதனை விமர்சித்திருக்கிறார்.
இவையனைத்தையும் நம்மால் புலனாய்வு இதழ்கள், இணையதளங்கள், யூடியூப் சேனல்களின் உள்ளடக்கத்தோடு நம்மால் பொருத்திப் பார்த்துவிட முடியும். அதுவே இக்கதை கடந்த காலத்தில் அல்ல, நிகழ்காலத்தோடும் பொருந்திப் போவதை உணர்த்துகிறது. நிச்சயமாக இதுவொரு அவலம்.
அனைத்துக்கும் மேலாக, ஆதிக்கச் சாதியினரைவிட ஒடுக்கப்பட்ட இனக்குழுக்களில் ஆண், பெண் சமத்துவம் நிரம்பவே இருப்பதை மனைவியின் கால்களைப் பிடித்தவாறே வடிவேலு வசனம் பேசும் காட்சியில் உணர்த்தியிருக்கிறார்.
‘மாமன்னன்’ படம் கொண்டாடப்படுவதற்கும் தூற்றப்படுவதற்கும் இப்படிப் பல விஷயங்கள் காரணங்களாக அமையலாம். அனைத்தையும் எதிர்கொண்டு, தமிழ் திரையுலக வரலாற்றில் ’மாமன்னன்’ இடம்பிடிப்பது மக்கள் இதற்குத் தரும் வரவேற்பைப் பொறுத்து அமையும்!
Read in : English