Read in : English
இயக்குநர் சிவ பிரசாத் யனலாவின் விமானம் திரைப்படம் வித்தியாசமானது. வேற்று மொழிகளில் சில திரைப்படங்களைப் பார்த்ததும், இங்கும் அது போன்ற படைப்புகளைப் பார்த்திட மாட்டோமா என்ற ஏக்கம் பிறக்கும். அதனை அரைகுறையாகப் புரிந்துகொண்டு, அதே படத்தை உரிமை வாங்கியோ அல்லது வாங்காமலோ அப்படியே சுட்டு நம்மைப் பிரட்டலுக்கு ஆளாக்குவார்கள் சில இயக்குநர்கள்.
விதிவிலக்காக, தாங்கள் விரும்பும் படத்திற்கு அர்ப்பணிக்கும் வகையில் தங்களது உழைப்பை முழுமையாக வாரியிறைப்பவர்களும் உண்டு. சிவ பிரசாத் யனலாவின் ‘விமானம்’ பார்த்தபோது அப்படியொரு படைப்பாகவே தோன்றியது.
வில் ஸ்மித், அவரது மகன் ஜேடன் நடித்த ‘பர்ஸ்யூட் ஆஃப் ஹேப்பினெஸ்’ படத்தைப் பார்த்திருக்கிறீர்களா? அந்த படம் உங்களுடைய விருப்பப் பட்டியலில் இருக்கிறது எனில், இந்த விமானம் திரைப்படமும் உங்களுக்குப் பிடிக்கும்.
வீரய்யா (சமுத்திரக்கனி) என்றொரு மாற்றுத்திறனாளி. நாற்பதுகளில் இருக்கும் அம்மனிதருக்கு ராஜு (மாஸ்டர் துருவ்) என்றொரு மகன். மனைவி இறந்தபிறகு, மகனை ஆளாக்குவதே தன் பணி என்று வாழ்கிறார். கட்டணக் கழிப்பறை ஒன்றை நடத்தி வருகிறார். மகனை நன்றாகப் படிக்க வைத்து நல்லதொரு பணியில் அமர்த்த வேண்டுமென்பது அவரது கனவு. துப்புரவு செய்யும் பணி தன்னோடு போகட்டும் என்பதே அவரது எண்ணம். அதற்கேற்ப, ராஜுவும் நல்லதொரு மாணவனாக இருக்கிறார். சைனிக் பள்ளியொன்றில் சேரும் தேர்வில் வெற்றி பெறுகிறார்.
‘பர்ஸ்யூட் ஆஃப் ஹேப்பினெஸ்’ படத்தைப் பார்த்திருக்கிறீர்களா? அந்த படம் உங்களுடைய விருப்பப் பட்டியலில் இருக்கிறது எனில், இந்த விமானம் திரைப்படமும் உங்களுக்குப் பிடிக்கும்
பல கஷ்டங்களுக்கு மத்தியில் ஒரு ஆறுதல் என்று வீரய்யா நினைத்துக்கொள்ளும் நிலையில், அடுத்தடுத்து இடி போல பல தகவல்கள் வந்து சேர்கின்றன. ரத்தப் புற்றுநோயின் இறுதிக்கட்டத்தில் ராஜு இருப்பது தெரிய வருகிறது. மாநகராட்சி அதிகாரிகள் விதிமுறை மீறிக் கட்டப்பட்டதாகக் கூறி, வீரய்யாவின் கழிப்பறையை இடிக்கின்றனர். பிழைப்புக்கே திண்டாட்டம் என்ற நிலையிலும், மகனின் விமானம் ஏறும் ஆசையை மட்டும் நிறைவேற்றினால் போதும் என்று உழைக்கத் தொடங்குகிறார் வீரய்யா.
ஒவ்வொரு முயற்சியும் ஏதேனும் ஒரு வகையில் தடங்கலைச் சந்திக்கிறது. அவற்றையெல்லாம் மீறி, மரணத்துடன் போராடும் மகனை அழைத்துக்கொண்டு வீரய்யா விமானம் ஏறினாரா இல்லையா என்று சொல்கிறது இப்படத்தின் மீதி.
மேலும் படிக்க: யாத்திசை திரைப்படம்: புதியபாதை அமைக்கும் சரித்திரப் புனைவு
இதிலுள்ள பாத்திரங்களும் கதை நகர்வும் நமக்குப் புதிதல்ல. ஆனால், அவற்றைக் காட்சியாக்கம் செய்திருக்கும் விதம் மட்டுமே முழுப்படத்தையும் காணச் செய்கிறது. கதையின் நோக்கத்தைத் தவிர வேறு எந்த திசையிலும் காட்சிகள் நகராதது பாராட்டுக்குரிய அம்சம். விமானம் அன்றி வேறில்லை என்று சொல்லும் வகையில், படத்தின் பெரும்பாலான காட்சிகளில் அப்பெயர் இடம்பெறுகிறது.
கிறிஸ் கார்டனர் எனும் அமெரிக்க வணிகர் ஒருவரின் வாழ்வில் நடந்த நிகழ்வுகளே ‘பர்ஸ்யூட் ஆஃப் ஹேப்பினெஸ்’ நாவலாகவும், பின்னர் படமாகவும் உருப்பெற்றது. அதில், மனைவி பிரிந்து சென்ற பின்னர் தனது மகனை ஒரு ஆண் வளர்க்கக் கஷ்டப்படுவதாகக் கதை நீளும். உணவு, தங்குமிடம், நல்ல வேலை இல்லாமல் இருக்கும் அந்த மனிதர் எப்படி தனக்கான எதிர்காலத்தை வடிவமைத்துக் கொள்கிறார் என்பதோடு படம் முடிவடையும்.
அந்த படத்தில் உள்ள தந்தை – மகன் உறவை மட்டும் வைத்துக்கொண்டு, முழுக்கச் சோகமயமான படமாக ‘விமானத்தை’ தந்திருக்கிறார் இயக்குநர் சிவ பிரசாத் யனலா. நிச்சயமாக, இவ்வளவு சோகம் தேவையில்லை. இந்த படத்தின் முதல் பாதியைப் பார்த்தபோது உண்டாகும் உணர்வெழுச்சியைப் பின்பாதி தக்க வைத்துக் கொள்ளவில்லை.
கழிவறையைக் கவனித்துக் கொள்பவர், செருப்பு தைக்கும் தொழிலாளி போன்ற பாத்திரப் படைப்புகளே இக்கதை நிகழும் இடம் எப்படிப்பட்டது என்பதைச் சொல்லிவிடுகிறது. அவற்றை விளக்கும்போது செயற்கையாகத் தெரிவதில்லை. அடுத்தடுத்து பல சோகங்கள் வரிசை கட்டும்போது எரிச்சல் எழுகிறதே தவிர, திரையை விட்டு பார்வையை விலக்கும் எண்ணம் உருவாவதில்லை. இது எல்லாமே இயக்குனர் பல காட்சிகளைத் திறம்பட வடிவமைத்திருப்பதற்கான பாராட்டுகளாகும்.
படத்தின் பிரதான பாத்திரங்களை ஏற்ற சமுத்திரக்கனி, மாஸ்டர் துருவா இருவருமே அளவாக நடித்துள்ளனர். காட்சிகளின் அடிப்படைத் தன்மையை நமக்குக் கடத்தியிருக்கின்றனர். குறிப்பாக, சமுத்திரக்கனி சிரிப்பூட்டும்போது புன்னகைக்கிறோம்; அவர் வருத்தத்தில் தேம்பும்போது நம் கண்களில் நீர் கொட்டுகிறது. இப்படிப்பட்ட உணர்வெழுச்சிக்கு ஆளாக்குவது சாதாரண விஷயமில்லை.
தன்ராஜ், ராகுல் ராமகிருஷ்ணா, அனசுயா உட்படப் பெரும்பாலானோர் தெலுங்கு முகங்களே. தமிழ் பதிப்பிற்காக மொட்டை ராஜேந்திரனும் மீரா ஜாஸ்மினும் இணைக்கப்பட்டுள்ளனர்.
இதிலுள்ள பாத்திரங்களும் கதை நகர்வும் நமக்குப் புதிதல்ல. ஆனால், அவற்றைக் காட்சியாக்கம் செய்திருக்கும் விதம் மட்டுமே முழுப்படத்தையும் காணச் செய்கிறது. கதையின் நோக்கத்தைத் தவிர வேறு எந்த திசையிலும் காட்சிகள் நகராதது பாராட்டுக்குரிய அம்சம்
விவேக் களிபுவின் ஒளிப்பதிவும் மார்த்தாண்ட் வெங்கடேஷின் படத்தொகுப்பும் ஜேகே மூர்த்தியின் படத்தொகுப்பும் சேர்ந்து இறுக்கமானதொரு ‘பீரியட் பிலிம்’ பார்த்த உணர்வை உண்டாக்குகின்றன. அந்த அனுபவத்தை மேலும் சீரிய முறையில் மடை மாற்றம் செய்கிறது சரண் அர்ஜுனின் பின்னணி இசை. வசனகர்த்தா பிரபாகரன் தந்திருக்கும் வசனங்கள் முன்பாதியில் புன்னகைக்க வைக்கின்றன; பின்பாதியில் கண்ணீரில் நனைய வைக்கின்றன.
ஒரு இயக்குனராக, இந்த படத்தில் அபாரமானதொரு பணியை மேற்கொண்டிருக்கிறார் சிவ பிரசாத் யனலா. நம் கண்களில் படும் குறைகளை மீறி, காட்சியமைப்போடு ஒன்ற வைத்திருப்பது அவரது தனிப்பட்ட வெற்றி. முழுப்படமும் தந்தை மகனுக்காற்றும் கடமையாகவே அமைந்துள்ளது.
மேலும் படிக்க: அன்று தோற்ற ஆளவந்தான், இன்று..?
விலை மாதுவாக வரும் அனசுயாவைக் கவர்ச்சியாகக் காட்டுமிடங்கள் முகம் சுளிக்க வைக்கும். அது மட்டுமல்லாமல், ராகுலின் விருப்பத்திற்கு இணங்க அவரை மொட்டை ராஜேந்திரன் புகைப்படம் எடுப்பதாகக் காட்சியொன்று உண்டு. அதில் வரும் வசனங்கள் ஒவ்வொன்றும் கத்தி மேல் நடக்கும் அனுபவத்தைத் தரும். கொஞ்சம் பிசகியிருந்தாலும் அது ஆபாசக் குப்பையாக மாறியிருக்கும்.
விமானம் ஏறும் ஆசையை மகன் கைவிடமாட்டான் என்பதைத் தந்தை உணரும் காட்சியும், அது தேவையில்லை என்று மகன் பதில் சொல்லும் காட்சியும் ரொம்பவே ‘எமோஷனலாக’ திரையில் ஆக்கப்பட்டிருக்கின்றன. காரில் செல்லும் ஒரு சிறுமி ’சன்ரூஃப்’ விளக்கி காற்றில் கையசைக்க, ஆட்டோவில் செல்லும் சிறுவன் அதனைக் கண்டு மனம் வருந்துவதாக ஒரு காட்சி உண்டு.
அப்போது, ‘அந்த பிளேடை எடுத்து மேலே ஒரு கோடு போடு’ என்று சொல்வார் ஆட்டோ ஓட்டுநர். அதன்பிறகு, அந்தச் சிறுவன் அந்த ஓட்டை வெளியே வானம் நோக்கித் தலையை நீட்டுவார். கேட்க காமெடியாக இருந்தாலும் தியேட்டரில் பார்க்கும்போது அந்த காட்சி நம்மை நெகிழ்வுக்கு ஆளாக்கும். அது போன்று ரசிக்கத்தக்க பல இடங்கள் இத்திரைக்கதையில் உள்ளன.
’விமானம்’ படத்தின் இறுக்கமான, நேர்த்தியான திரைக்கதையை மீறி, அப்படம் பார்க்கும் அனுபவத்தைச் சொதப்பலாக மாற்றுவது அதன் கிளைமேக்ஸ் தான். ‘கிளாசிக் அனுபவம் தருகிறேன் பேர்வழி’ என்று அந்த இடத்தில் மட்டும் இயக்குநர் நிலை தடுமாறியிருக்கிறார். அதனைத் தவிர்த்துப் பார்த்தால், மொத்தப் படத்தையும் சுகானுபவமாக மாற்றுகிறது அவரது உழைப்பு.
முழுக்க தெலுங்கு நடிகர்கள் இருப்பதும், காட்சிகளிலுள்ள பொருந்தா உதட்டசைவும் இப்படம் தமிழ் படமல்ல என்று எண்ண வைக்கிறது. அதையும் தாண்டி சமுத்திரக்கனியின் குரல் படம் முழுக்க எதிரொலிக்கிறது.
ஒரு நல்ல படம் அதற்கான பார்வையாளர்களைத் தானாகக் கண்டெடுக்கும். அது உண்மை தான்; சில நேரங்களில் அதற்கான கால அவகாசம் ரொம்பவும் நீண்டுவிடுவதுதான் பெருஞ்சோகம். ’விமானம்’ படமும் ஆளரவமற்று திரையரங்குகளில் ஓடுவதைக் காணும்போது அதுவே தோன்றுகிறது.
Read in : English