Read in : English

பள்ளிப்படிப்பைக் கூட முடிக்காத கேரளாவைச் சார்ந்த என்.ஸ்ரீதரன் தமிழ், மலையாளம், தெலுங்கு, மற்றும் கன்னடம் ஆகிய நான்கு திராவிட மொழிகளுக்கான ஓர் ஒருங்கிணைந்த பன்மொழி அகராதியை 2018-ல் தயாரித்தார். அதன் பின்னால் அவரின் 25 ஆண்டு கால அயராத உழைப்பு மறைந்திருக்கிறது.

‘சதுர்திராவிட பாஷா நிகண்டு’ என்ற பெயர் கொண்ட இந்த அகராதி நான்கு திராவிட மொழிகளின் ஒப்பீட்டாய்வு. ஒரு திராவிட மொழியிலிருக்கும் வார்த்தை மற்ற மூன்று திராவிட மொழிகளில் எப்படியிருக்கும் என்பதை ஸ்ரீதரனின் பன்மொழி அகராதி காட்டுகிறது. ஆரம்பத்தில் யாரும் இதைப் பிரசுரிக்க முன்வரவில்லை.

இந்நிலையில் நந்தன் என்னும் ஓர் இளைய பொறியியலாளர் தலசேரியில் வசிக்கும் ஸ்ரீதரனைச் சந்தித்தார்.’வார்த்தைகளைக் கனவு காணுதல்’ என்னும் தலைப்பில் அவரைப் பற்றி ஓர் ஆவணப்படம் எடுத்தார். ஸ்ரீதரனின் வாழ்க்கை, பணி, மொழிகள் மீது கொண்ட காதல், பன்மொழி அகராதியை வெளியிடுவதற்காகச் சந்தித்த போராட்டம் ஆகியவற்றை விவரிக்கிறது அந்த ஆவணப்படம். படத்தைப் பார்த்துவிட்டு 2021-ல் பன்மொழி அகராதியின் 500 பிரதிகளை முதல் பதிப்பாக வெளியிட்டது ஒரு முதியோர் அமைப்பு. தற்போது கேரளா பாஷா கழகத்தில் இரண்டாவது பதிப்பிற்காக ஆய்வு செய்யப்படுகிறது இப்புத்தகம்.

இந்தப் பன்மொழி அகராதி ஸ்ரீதரனின் 25 ஆண்டு கால உழைப்பின் பலன். பள்ளிப் படிப்பை முடிக்காதிருந்த அவர் தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகம் ஆகிய நான்கு மாநிலங்களுக்குப் பயணங்கள் செய்து நான்கு திராவிட மொழிகளைக் கற்றுக் கொண்டார். வார்த்தைகள் மீதான காதல் இந்த பன்மொழி அகராதியைத் தயாரிப்பதற்கான உத்வேகத்தை அவருக்கு அளித்தது.

 ”பாலக்காட்டில் தமிழ்மலையாள நாளேடுகள் கிடைத்தன. தமிழ் கற்றுக்கொள்ள எனக்கு ஒரு நாவிதர் உதவி செய்தார். நேரம் கிடைக்கும்போதெல்லாம் அவருடைய சலூனுக்குச் செல்வேன். அவர் எனக்குத் தமிழ் கற்பித்தார்

என்.ஸ்ரீதரன்

1938-ல் கேரளாவில் உள்ள தலசேரியில் பிறந்தார் ஸ்ரீதரன். கொடியேரி ஜூனியர் பேசிக் பள்ளியில் நான்காம் வகுப்பு பயிலும்போது பள்ளிப்படிப்புக்கு முழுக்குப் போட்டார். அந்த காலகட்டத்தில் பள்ளியை விட்டு விலகியவர்கள் வழக்கமாகச் செல்லும் பீடித் தொழிற்சாலையில் அவரும் வேலைக்குச் சேர்ந்தார். வேலை செய்யும்போது சக பணியாளர்கள் விவாதிக்கும் நிறைய விசயங்களைத் தெரிந்துகொண்டார். பின்பு தனியாக எட்டாம் வகுப்புத் தேர்வெழுதி, அதில் வெற்றி பெற்றார். தனது 22-ஆவது வயதில் கேரள பொதுப்பணித்துறையில் வேலைக்குச் சேர்ந்தார் ஸ்ரீதரன்.

பாலக்காட்டில் பணி செய்தபோது, தமிழ் கற்றுக்கொள்ள அவருக்கு வாய்ப்பு கிட்டியது. “பாலக்காட்டில் தமிழ், மலையாள நாளேடுகள் கிடைத்தன. தமிழ் கற்றுக்கொள்ள எனக்கு ஒரு நாவிதர் உதவி செய்தார். நேரம் கிடைக்கும்போதெல்லாம் அவருடைய சலூனுக்குச் செல்வேன். அவர் எனக்குத் தமிழ் கற்பித்தார்” என்றார் ஸ்ரீதரன்.

மேலும் படிக்க: தமிழ் உச்சரிப்பால் தனித்துவமாக வாழும் சாதாரண மனிதர்

அதே போல காசர்கோட்டிலிருந்து கண்ணூருக்கு ரயில் பயணம் செய்த காலத்தில் கன்னடம் கற்றுக் கொண்டிருக்கிறார். “வெறும் ப்ளூபிரிண்டுகள் எடுப்பதுதான் என்னுடைய பணி. அதை நான் இரவில் செய்தேன். ஆதலால் பகலில் நான் அலுவலகத்தில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை” என்றார்.

தமிழ், கன்னடம் கற்றபின்பு ஸ்ரீதரன் தெலுங்கு கற்றுக் கொள்ள ஆரம்பித்தார். “கேரளாவில் தெலுங்கு நாளேடுகள் கிடைப்பதில்லை. அதனால் பாண்டிச்சேரி சென்றேன். அங்கே ஏனாம் பகுதியிலிருந்து வந்த ஒரு பெண்மணி தெலுங்கு கற்றுக்கொடுத்தார்” என்றார் ஸ்ரீதரன்.

நான்கு திராவிட மொழி வார்த்தைகளைத் தேடி அவர் மேற்கொண்ட 25 ஆண்டு கால பயணத்தில் எதிர்கொண்ட அனைத்து அனுபவங்களையும் 60 நிமிட ஆவணப்படத்தில் வெளிக்காட்டுவது கடினம். ”ஒரு கட்டிடத்தைப் பற்றியோ அல்லது விளையாட்டைப் பற்றியோ படம் எடுத்தால் காட்டுவதற்கு நிறைய காட்சிகள் கிடைக்கும். ஆனால் பயணம் செய்த நாட்களைத் தவிர, ஸ்ரீதரன் தனது பெரும்பாலான நேரத்தை தன் அறையிலே கழித்திருக்கிறார். வேலைப்பளு காரணமாக நண்பர்களை விட்டும், உறவுக்காரர்களை விட்டும் விலகியே வாழ்ந்திருக்கிறார்.

ஆதலால் அவரது பயணத்தை நாங்கள் மீளுருவாக்கம் செய்ய வேண்டியிருந்தது. அவர் வாழ்ந்த மூன்று மாநிலங்களுக்கு நாங்கள் மறுவிஜயம் செய்தோம்” என்றார் நந்தன்.

வார்த்தைகளைக் கனவு காணுதல் (Dreaming of Words) என்ற நந்தனின் ஆவணப்படம் 2021-ல் நடந்த உலகத் தாய்மொழி தின விழாவில் திரையிடப்பட்டது. கலைகளுக்கான இந்திரா காந்தி தேசிய மையமும், கல்வி அமைச்சகமும் யுனெஸ்கோவுடன் இணைந்து அந்நிகழ்வை ஏற்பாடு செய்தன. டிசி தெற்காசிய திரைப்பட விழாவிலும், ராபிட்லயன் திரைப்பட விழாவிலும், மிச்சோஸ் திரைப்பட விழாவிலும் அந்த ஆவணப்படம் திரையிடப்பட்டது. 2020-ல் சிறந்த கல்விப் படங்களுக்கான தேசிய விருதைப் பெற்றது.

கேரளாவில் தெலுங்கு நாளேடுகள் கிடைப்பதில்லை. அதனால் பாண்டிச்சேரி சென்றேன். அங்கே ஏனாம் பகுதியிலிருந்து வந்த ஒரு பெண்மணி தெலுங்கு கற்றுக்கொடுத்தார்

தன்னைப் பற்றி, தனது அகராதி முயற்சி பற்றி ஆவணப்படம் எடுத்ததற்காக நந்தனுக்கு நன்றிக்கடன் பட்டிருப்பதாகக் கூறினார் ஸ்ரீதரன். “நந்தன் என்னோடு நிறைய நேரத்தைச் செலவழித்திருக்கிறார். நான் தயாரித்த அகராதியை நன்றாகப் புரிந்துகொண்ட பின்புதான் படப்பிடிப்பை ஆரம்பித்தார்” என்றார் ஸ்ரீதரன்.

ஆனாலும் இந்தப் பன்மொழி அகராதிப் பணி ஸ்ரீதரனைப் பொருளாதாரரீதியாகப் பாதித்து விட்டது. வறுமையும் முதுமையும் இந்த 84 வயது வாலிபரை வதைத்துக் கொண்டிருப்பது வேதனைக்குரிய விசயம்.

மேலும் படிக்க: மருத்துவ மாணவர்களுக்கு சரகர் ஷபத் உறுதிமொழி கிளப்பிய சர்ச்சை!

“இதைக் கட்டமைக்க நிறைய பணம் செலவழித்து விட்டேன். நிறைய பேரிடம் கடன் வாங்கிவிட்டேன். ஆனால் கேரளா அரசிடமிருந்து எனக்கு எந்த உதவியும் வரவில்லை. பென்சன் தவிர எனக்கென்று வேறெந்த வருமானமும் இல்லை. எப்படி பிழைக்கப் போகிறேன் என்று தெரியவில்லை.” இந்த வார்த்தைகளைச் சொல்லும் போது ஸ்ரீதரனின் கண்களும் முகமும் சோக ரேகைகளில் சோர்ந்திருந்தன.

ஆனால் தான் பெற்ற குழந்தையான பன்மொழி அகராதியைக் கெட்டியாக அவர் அணைத்துக் கொண்டிருந்தார். அப்போது அவரது மார்பு விம்மியிருந்தது, பெருஞ்சாதனை புரிந்த பெருமிதத்தோடு.

Share the Article

Read in : English

Why we always find lots of cashews on top of Deepavali mixture why tangedco need to pay us for damaging household appliances why eating on banana leaves is healthier What the Tamil Nadu Organic policy needs what is the real story of onam festival