Read in : English
காந்தாரா திரைப்படத்துக்கும் நாட்டார் வழிபாட்டுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. இன்றுவரை தமிழ்நாட்டின் ஒவ்வொரு மண்டலத்திலும் நாட்டார் தெய்வ வழிபாடு இருந்துவருகிறது. இந்தப் பூமியில் வாழ்ந்து மறைந்த சாதனையாளர்களை, அதிகாரத்திற்கு எதிராக வெகுண்டெழுந்து சூழ்ச்சியால் கொலையுண்டவர்களை, ஆணவப் படுகொலை செய்யப்பட்டவர்களை, இன்ன பிற வகையில் பிற்பாடு சந்ததியினருக்கு முன்னத்தி ஏராக மாறியவர்களை வணங்குவதே இதன் அடிப்படை. சாதி மட்டுமல்லாமல் மத வித்தியாசங்களும் இல்லாமல் இவ்வழிபாடு தொடர்வதை அவை சார்ந்த கதைகளில் இருந்து அறிய முடியும்.
நாட்டார் வழிபாட்டைப் பொறுத்தவரை ஒவ்வோர் இடத்திற்கும் பல வேறுபாடுகள் உண்டு. படையல் தொட்டு அனைத்திலும் இது தொடரும். அதையும் மீறி, நாட்டார் தெய்வ வழிபாட்டை முன்னிறுத்துவதில் ஒரு அடிப்படை அம்சம் உண்டு. அதுதான் இயற்கை மீதான மனிதர்களின் பற்று.
இப்புவியில் உள்ள அனைத்து உயிரினங்களையும் தம்முயிர் போல எண்ணிப் பாவித்தல் பொதுவானதாக இருக்கும். இதனால், அவ்வழிபாட்டில் நம்பிக்கை கொண்டிருந்தால் எவ்விடத்திலுள்ள நாட்டார் தெய்வமாக இருந்தாலும் உங்கள் கைகள் தாமாகக் குவியும். அந்த வகையில்தான் பஞ்சுருளி, குளிகை, பூத கோலம் உள்ளிட்ட பலவற்றை முன்னிறுத்தும் ‘காந்தாரா’ எனும் கன்னடத் திரைப்படம் ரசிகர்களால் வெகுவாக ஆராதிக்கப்படுகிறது.
சமூகத்தில் தனக்குக் கீழான நிலையில் இருப்பவர்கள் வணங்கும் தெய்வத்தைக் கீழானதாகக் கருதும் மனப்போக்கை வார்த்தெடுக்கிறது. அதனைக் காணும் எவருக்கும் ‘தெய்வத்தில் தாழ்வுண்டோ’ என்ற கேள்வி தானாக எழும். அதற்கான பதிலாக ‘காந்தாரா’ திரைக்கதை விரிகிறது
தெய்வத்தில் தாழ்வுண்டோ?
கர்நாடகத்தின் கடலோரத்தை ஒட்டி தெற்குப் பகுதி, உடுப்பி, கேரளத்தின் காசர்கோடு பகுதிகளை உள்ளடக்கியது துளுவ நாடாகக் கருதப்பட்டது. அதனைச் சார்ந்த அரசர் ஒருவர், நிம்மதி வேண்டி பல்வேறு கோயில்களுக்கும் குருபீடங்களுக்கும் செல்கிறார். ஒருநாள் பெருவனமொன்றில் பயணிக்கும்போது, பஞ்சுருளி தெய்வ வழிபாடு நடக்குமிடத்தில் தான் தொலைத்த நிம்மதியைக் கண்டெடுக்கிறார். அந்தத் தெய்வத்தை அரண்மனைக்குக் கொண்டுசென்று பூஜிக்க விரும்புகிறார். ஆனால், பஞ்சுருளியைத் தெய்வமாகப் போற்றும் பழங்குடி மக்கள் அதனை ஏற்கத் தயங்குகிறார்கள்.
அப்போது சன்னதம் கொள்ளும் சாமியாடி ஒருவர் உடல் அதிர்கிறது. ‘என்னையே தெய்வமாகப் போற்றும் இம்மக்களுக்குக் கைம்மாறாக என்ன செய்வாய்’ என்று கேட்க, ‘எதையும் தரத் தயார்’ என்கிறார் மன்னர். முடிவில், அம்மலைப்பரப்பில் இருக்கும் அரசருக்குச் சொந்தமான நிலம் அம்மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.
250 ஆண்டுகளுக்குப் பிறகு, அரச பரம்பரையின் வாரிசுகளுக்குப் பஞ்சுருளி வழிபாடு உவப்பானதாக இல்லை. இன்னொரு புறம், தங்களது முன்னோர் அளித்த பல ஏக்கர் நிலத்தைப் பிடுங்கி பெரும்பணம் சம்பாதிக்கும் ஆசையில் இறங்குகின்றனர். ஏற்கெனவே தந்த வாக்கை மீறி தற்போதைய வாரிசுகள் செயல்படத் தொடங்கும்போது என்ன நிகழ்கிறது என்பதே ‘காந்தாரா’ திரைப்படம்.
மேலும் படிக்க: கேஜிஎஃப்: தமிழர்களின் வியத்தகு வியர்வைச் சாட்சி
பஞ்சுருளி வழிபாட்டின்மீது அரச பரம்பரை வாரிசுகளுக்கு ஏற்படும் அலட்சியமும் அவமரியாதையுமே இத்திரைக்கதையில் பல முடிச்சுகளுக்கு காரணமாக இருக்கிறது. அதன் பின்னிருப்பது சாதீய வேறுபாடு. அதுவே, சமூகத்தில் தனக்குக் கீழான நிலையில் இருப்பவர்கள் வணங்கும் தெய்வத்தைக் கீழானதாகக் கருதும் மனப்போக்கை வார்த்தெடுக்கிறது. அதனைக் காணும் எவருக்கும் ‘தெய்வத்தில் தாழ்வுண்டோ’ என்ற கேள்வி தானாக எழும். அதற்கான பதிலாக ‘காந்தாரா’ திரைக்கதை விரிகிறது.
கதையோ காட்சிகளோ புதியவைல்ல என்றாலும், படமாக்கப்பட்ட விதத்தில் பரபரப்பூட்டியிருக்கிறார் ரிஷப் ஷெட்டி. அவரே இப்படத்தை எழுதி இயக்கியிருப்பதோடு நாயகனாகவும் நடித்திருக்கிறார். நாயகி சப்தமி, பிரகாஷ் துமிநாடு, பிரமோத் ஷெட்டி, மானசி சுதீர் உள்ளிட்ட கலைஞர்கள் பலர் நடித்திருந்தாலும் தமிழ் ரசிகர்களுக்குத் தெரிந்த கிஷோர், அச்யுத் குமார் இருவரும் இதில் இருக்கின்றனர் என்பது சிறப்பு. வனப்பகுதியில் புகுந்து விளையாடியிருக்கும் அரவிந்த் காஷ்யப்பின் ஒளிப்பதிவும் திரைக்கதையில் தெய்வாம்சத்தைத் தாங்கிப் பிடிக்கும் அஜனீஷ் லோக்நாத்தின் இசையும் ‘காந்தாரா’வின் பெரும்பலம்.
நடிப்பு மட்டுமல்லாமல் தொழில்நுட்பம் சார்ந்தும் இப்படம் சிறப்பாக அமைந்திருப்பது பேருழைப்பு இதில் கொட்டப்பட்டிருப்பதைக் காட்டுகிறது. அதுவே, மீண்டும் மீண்டும் திரையரங்குக்குச் செல்லும் எண்ணத்தை ரசிகர்கள் மனத்தில் உருவாக்குகிறது.
முன்னிறுத்தப்படும் வெறியாடல்!
தமிழ் நிலத்தின் ஐந்திணைகள் குறித்து அறிகையில் ‘வெறியாடல்’ எனும் சொல்லைக் கேள்விப்படலாம். கோயில் கொடை அல்லது திருவிழாவின்போது சிலர் சாமியாடுவதைக் காண முடியும். சன்னதம் கொள்ளுதல் என்றும் இது அழைக்கப்படுகிறது. தொடர்புடைய தெய்வமே ஆடிக்கொண்டிருக்கும் மனிதருக்குள் அக்கணத்தில் புகுந்திருப்பதாகக் கருதப்படுகிறது. மனோதத்துவ முறையில் இதற்கு எதிராகப் பல விளக்கங்கள் முன்வைக்கப்படலாம். ஆனால், இன்றும் நாட்டார் தெய்வ வழிபாட்டில் சன்னதம் கொள்ளுதல் முக்கியமான அம்சம்.
தோல் கருவிகளின் ஓங்கி ஒலிக்கும் அதிர்வோடு, காற்றுக் கருவிகளின் சத்தமும் இணைந்து பேரிசையாக மாறும்போது, கேட்பவர்களின் உடலிலும் மனத்திலும் மாற்றம் பெருகும். சாமியாடிகளைப் பொறுத்தவரை அதன் அளவு மிக அதிகம். அந்தக் கணத்தில், நம் முன் ஆடியவாறே பேசுவது சாமியாடியா தெய்வமா என்ற சந்தேகம் எழும். ‘காந்தாரா’ படத்தைப் பொறுத்தவரை அதுதான் முதல் முடிச்சு.
1970களில் நிகழ்வதாகச் சொல்லப்படும் கதையில், அரச பரம்பரையின் வாரிசு ஒருவர் ‘பூத கோலம்’ ஆடும் கலைஞரைப் பார்த்துப் ‘பேசுவது வேடமிட்ட கலைஞரா அல்லது பஞ்சுருளி தெய்வமா’ என்று ஏளனம் செய்கிறார். ‘தெய்வம் எனில் மாயமாக மறைவேன், பேசுவது வேடதாரி என்றால் மீண்டும் உன் முன்னே நிற்பேன்’ என்று சொல்லிவிட்டு ஓடும் அந்தக் கலைஞர் வனத்தில் சென்று மாயமாக மறைகிறார்.
இதே காட்சி இன்னொரு முறையும் இப்படத்தில் இடம்பெறுகிறது. முன்னதைச் சாதாரணமாகக் கடந்துபோன பார்வையாளர்களுக்குப் பின்னது புல்லரிக்க வைக்கும் அனுபவத்தை அளிக்கும். இந்த இரண்டு புள்ளிகளுக்கும் நடுவே நாயகன் நாயகி மட்டுமல்லாமல் அவர்களைச் சுற்றியிருப்பவர்களின் வாழ்க்கையும் திரைக்கதையில் முன்வைக்கப்படுகிறது. முரண்களை மீறி ஒன்றாக வாழும் அம்மக்களின் வாழ்வாதாரம் பறிபோகும் நிலை உருவாக்கப்படும்போது, பார்வையாளர்களும் அவர்களில் ஒருவராக மாறுவதே இப்படத்தின் வெற்றி.
பெண் தெய்வ வழிபாடு நடக்குமிடங்களிலும் முன்னோர் மற்றும் இயற்கை வழிபாட்டுத் தலங்களிலும் வெறியாடலுக்கு முக்கிய இடம் உண்டு. சிவனின் தாண்டவத்தையும் விஷ்ணுவின் உக்கிரம் நிறைந்த அவதாரங்களையும் முன்வைக்கும் சைவ, வைணவ வழிபாடுகளில் அதற்கு இடம் தரப்படுவதில்லை
பொதுவாகவே பெண் தெய்வ வழிபாடு நடக்குமிடங்களிலும் முன்னோர் மற்றும் இயற்கை வழிபாட்டுத் தலங்களிலும் வெறியாடலுக்கு முக்கிய இடம் உண்டு. சிவனின் தாண்டவத்தையும் விஷ்ணுவின் உக்கிரம் நிறைந்த அவதாரங்களையும் முன்வைக்கும் சைவ, வைணவ வழிபாடுகளில் அதற்கு இடம் தரப்படுவதில்லை; மெத்தப் படித்த பண்டிதர்களே இதற்கு விளக்கம் தர வேண்டும்.
ஆனால், காந்தாராவின் வெற்றி வெறியாடலுக்கு மக்கள் இன்றும் மதிப்பளிக்கின்றனர் என்பதை அப்பட்டமாகக் காட்டுகிறது.
காந்தாராவின் பெருவெற்றி!
கடந்த செப்டம்பர் 30ஆம் தேதியன்று கர்நாடகாவில் சுமார் 150 திரையங்குகளில் வெளியானது ‘காந்தாரா’. அன்றைய தினம் அம்மாநிலத்தில் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் கன்னட, தமிழ் பதிப்புகளும் வெளியாயின. இரு படங்களுமே ரசிகர்களால் ஆராதிக்கப்பட்டன. ஆனால், கிட்டத்தட்ட பத்து நாள்களுக்குப் பிறகும் திரையிட்ட இடமெங்கும் ‘ஹவுஸ்ஃபுல்’ ஆக தொடர்கிறது காந்தாரா. பல திரையரங்குகளில் காட்சிகள் அதிகப்படுத்தப்பட்டிருக்கின்றன.
காந்தாரவைத் தயாரித்திருப்பது ‘ஹொம்பாலே பிலிம்ஸ்’. இந்நிறுவனம் தான் ‘கேஜிஎஃப்’ படங்களை உருவாக்கியது. ஆனால், பான் இந்தியா படமாகப் பல மொழிகளில் ‘டப்பிங்’ செய்து ’காந்தாரா’ வெளியிடப்படவில்லை. கேஜிஎஃப்பை ஒப்பிடும்போது குறைந்த முதலீட்டில் உருவாக்கப்பட்ட ‘காந்தாரா’ கர்நாடத்திற்கானது என்றே அப்படக்குழு முதலில் கருதியிருக்கிறது.
அம்மாநிலத்தின் ஒரு பகுதியிலிருக்கும் கலாச்சாரத்தை, வாழ்க்கை முறையை, நாட்டார் தெய்வ வழிபாட்டையே திரைக்கதை முன்வைத்தது இதற்கான காரணம். ஆனால், இத்திரைப்படம் பார்வையாளர்களுக்குத் தந்த காட்சியனுபவம் இன்று தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தியில் இதனை மொழியாக்கம் செய்ய வைத்திருக்கிறது. இது, நிலமும் கலாச்சாரமும் வெவ்வேறாயினும் நாட்டார் தெய்வங்கள் குறித்த மக்களின் அபிப்ராயத்தில் இருவேறு கருத்துகள் இருக்க முடியாது என்பதையே காட்டுகிறது.
மேலும் படிக்க: கோப்ரா: நீளம் அதிகம், ஆழம் குறைவு
காந்தாரம் எனும் சொல்!
காந்தாரா என்றால் மாயவன் என்று அர்த்தம். கந்தர்வத் திருமணம், கந்தர்வர்கள் ஊர்கோலம் என்று தொன்மங்களின் வழியே நாமும் அதனையொட்டிய சொற்களை அறிந்திருப்போம். தமிழ்நாட்டிலும் ‘காந்தாரி’ என்ற பெயரில் தென்மாவட்டங்களில் பெண் தெய்வ வழிபாடு நடத்தப்படுகிறது. ‘காந்தாரம்’ என்ற சொல் இதிகாசங்களிலும் சரித்திரப் புனைவுகளிலும் கூட உண்டு.
போலவே, ‘பூத கோலம்’ எனும் வெறியாடலை மேற்கொள்பவர் எவ்வகையில் ஆடை அலங்காரம் செய்து கொள்கிறாரோ, கிட்டத்தட்ட அதே பாணியிலேயே கேரளாவின் வடக்குப் பகுதியில் ‘தெய்யம்’ என்ற கலை கையாளப்பட்டு வருகிறது. கமல்ஹாசன் நடித்த ‘உத்தம வில்லன்’ படத்தில் இந்த தெய்யம் சிறிய அளவில் இடம்பெற்றிருக்கும். ‘காந்தாரா’வில் பூதகோலம் ஆடும் நாயகனுக்கும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நாட்டார் தெய்வ வழிபாட்டுத் தலங்களில் சாமியாடுபவர்களுக்கும் பெரிய வித்தியாசத்தைக் காண முடியாது. இவை போன்ற அம்சங்களே இப்படம் இதர மாநிலங்களிலும் மக்களால் ஆராதிக்கப்படுமென்ற எண்ணத்தைப் பலப்படுத்துகிறது.
இவற்றையெல்லாம்விட மிக முக்கியமான விஷயம், மண் பறிபோகையில் மனதுக்குள் எழும் பதைபதைப்பை இப்படம் கடத்துவது. கிளைமேக்ஸ் காட்சியில் மண்ணை எடுத்து நெற்றியில் பூசிக்கொள்ளும் நாயகன், வில்லனைப் பார்த்து ‘இந்த மண்ணும் மக்களும் என்னுடையவர்கள்’ என்பதைப் பாவனையிலேயே வெளிப்படுத்துவதாக ஒரு ஷாட் உண்டு. திரைப்படங்களைப் பொறுத்தவரை இது எம்ஜிஆர் காலத்து பார்முலாவாக இருந்தாலும், நாட்டார் தெய்வ வழிபாட்டில் இதுவே ஆதார வேர். ‘காந்தாரா’வைப் பிடித்துப் போக வேறு ஏதும் காரணம் தேவையில்லை!
Read in : English