Read in : English
இன்றைய பார்வையாளர்கள் முழுக்க முழுக்கக் காதலில் திளைக்கச் செய்யும் திரைப்படங்களை ரசிக்கத் தயாராக இல்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக முன்வைக்கப்படுகிறது. அவ்வளவு ஏன், ஒரு திரையரங்கில் ஆங்காங்கே காதல் ஜோடிகளின் தலைகள் தென்பட்டால் அது ஒரு காதல் திரைப்படம் என்று நம்புவதும் கூட அபத்தத்தின் உச்சமாக மாறியிருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் ‘டைட்டானிக்’ போன்று நெஞ்சைத் தைக்கும் ஒரு காதல் கதையைச் சொல்வது சாத்தியமா? ‘அப்படிப்பட்ட காதலைத்தான் திரையில் மழையாகப் பொழிவேன்’ என்று கங்கணம் கட்டிக்கொண்டு ‘சீதா ராமம்’ படத்தைத் தந்திருக்கிறது ஹனு ராகவபுடிவின் குழு.
சீதா, ராம் என்ற இரு பாத்திரங்களுக்கு இடையிலான காதலுக்கு நடுவே பாகிஸ்தானிய ராணுவம் மற்றும் சில பயங்கரவாத அமைப்புகளின் நடவடிக்கைகள் காட்டப்படுகின்றன. ஏன்? உண்மையிலேயே, ‘சீதா ராமம்’ எனும் காதல் திரைப்படம் நம்மை ஈர்க்கிறதா என்பதற்கான பதில்கள் திரையில் கிடைக்கின்றன.
காதல் மழை!
இந்திய ராணுவத்தின் மெட்ராஸ் படைப்பிரிவில் லெப்டினண்ட் ஆகப் பணியாற்றும் ராம் (துல்கர் சல்மான்), பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பு காஷ்மீரில் நிகழ்த்தவிருந்த ஒரு கலவரத்தைத் தடுக்கிறார். வானொலியில் அவர் குறித்த தகவல்களும் வெளியாகின்றன. அப்போது, ராம் உறவுகளை இழந்தவர் என்று தெரியவருகிறது. இதன் தொடர்ச்சியாக, இந்தியா முழுவதிலுமிருந்து அண்ணன், தம்பி, மகன் என்று அழைத்துப் பலரும் கடிதம் எழுதி அனுப்புகின்றனர். அதில், ‘உங்கள் மனைவி’ என்ற சொற்களைத் தாங்கி சீதா என்பவர் எழுதிய கடிதமும் இருக்கிறது.
நாட்டின் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் சீதா என்ற பெண், எல்லையில் இருக்கும் ஒரு ராணுவ வீரருக்கு ஏன் இப்படியொரு கடிதம் எழுத வேண்டும்? அதனால், அவரை நேரில் சந்திக்க வேண்டுமென்ற வேட்கை ராம் மனதில் எழுகிறது. அதற்கான சந்தர்ப்பச் சூழல்கள் வாய்க்க, ஒரு நன்னாளில் சீதாவைச் (மிருணாள் தாகூர்) சந்திக்கிறார் ராம். சீதாவின் பின்னணி என்னவென்று அறியாமலேயே, அவர் காதலில் விழுகிறார். இவர்களது காதல் கதை என்னவானது என்பது ஒரு தடத்தில் நகர்கிறது.
ராம் ஆக வரும் துல்கர் சல்மான், தன் அபிமானிகளால் காலம்காலமாகக் கொண்டாடப்படும் அளவுக்கு இதில் காதலைப் பொழிந்திருக்கிறார். நாயகியாக வரும் மிருணாள் தாகூரும் அப்படியே
இதற்கு நடுவே, பாகிஸ்தானைச் சேர்ந்த இளம்பெண் அப்ரின் (ராஷ்மிக மந்தனா) தன் தாத்தா அபு தாரிக்கின் (சச்சின் கடேகர்) விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக, ராம் சீதாவுக்கு எழுதிய கடிதத்தை எடுத்துக்கொண்டு இந்தியாவுக்கு வருகிறார். இந்தச் சம்பவம் 1985இல் நடைபெறுகிறது. அப்ரின் தாத்தா தாரிக், 1960களில் பாகிஸ்தான் ராணுவத்தில் பணியாற்றியவர். அவரது கையில் ராம் எழுதிய கடிதம் எப்படிக் கிடைத்தது என்பது இன்னொரு புறம் சொல்லப்படுகிறது.
இவ்விரண்டு கதைகளுக்கும் இடையிலான முடிச்சை மிக அழகாகச் சொன்னதில் கவனம் ஈர்த்திருக்கிறார் இயக்குநர் ஹனு ராகவபுடி. ராஜ்குமார் கண்டமுடியுடன் இணைந்து, எளிதில் ஊகித்துவிடுகிற ‘க்ளிஷேக்கள்’ நிறைந்த அதேநேரத்தில் பார்க்கத் தூண்டுகிற ஒரு திரைக்கதையைத் தந்திருக்கிறார்.
ஒளிப்பதிவாளர்கள் பி.எஸ்.வினோத், ஸ்ரேயாஸ் கிருஷ்ணா கைவண்ணத்தில் படத்தின் ஒவ்வொரு பிரேமும் கண்ணில் ஒற்றிக்கொள்ளும்படியாக அமைந்திருக்கிறது. சிறிதும் குழப்பமின்றிக் காட்சிகளை அடுக்கியிருக்கிறது கோட்டகிரி வெங்கடேஸ்வர ராவின் படத்தொகுப்பு.
மேலும் படிக்க:
பொன்னியின் செல்வன்: மணிரத்னம் இயக்கத்தில் தமிழர் வரலாற்றைத் தெரிந்து கொள்ள முடியுமா?
பழைய விக்ரம் புதுமையானது; நவீன விக்ரம் புளித்திருக்குமோ?
இவையனைத்துக்கும் மேலாக, ஒரு ‘கிளாசிக்’ காதல் படம் பார்க்கும் உணர்வைத் தருகிறது பின்னணி இசை. விஷால் சந்திரசேகரின் இசையில் இடம்பெற்ற நான்கு பாடல்களும் அற்புதமான மெலடி மெட்டுகளாக அமைந்திருக்கின்றன.
ராம் ஆக வரும் துல்கர் சல்மான், தன் அபிமானிகளால் காலம்காலமாகக் கொண்டாடப்படும் அளவுக்கு இதில் காதலைப் பொழிந்திருக்கிறார். நாயகியாக வரும் மிருணாள் தாகூரும் அப்படியே. இவர்கள் தவிர்த்து, திரையில் அதிக நேரம் இடம்பெற்ற வெண்ணிலா கிஷோர் தன் நகைச்சுவை வசனங்களால் கிச்சுகிச்சு மூட்டுகிறார்.
துல்கருடன் ராணுவத்தில் பணியாற்றுபவராக வரும் சுமந்த், விறைப்பாக படம் முழுக்க வந்து போகிறார். இவர்கள் தவிர்த்து பிரகாஷ்ராஜ், ‘பொம்மலாட்டம்’ ருக்மிணி உட்பட சில மூத்த நடிகர் நடிகைகளும் கூட இதில் இடம்பெற்றிருக்கின்றனர்.
அவர்களையெல்லாம் மீறி பாலாஜி எனும் பாத்திரத்தில் நடித்த தெலுங்கு இயக்குநர் தருண் பாஸ்கரும் அப்ரினாக வரும் ராஷ்மிகா மந்தனாவும் கவனம் ஈர்த்திருக்கின்றனர். குறிப்பாக, ராஷ்மிகாவின் நடிப்பு அவர் இதுவரை நடித்த வணிக வெற்றிப் படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக அமைந்திருக்கிறது. காஷ்மீரில் நிகழும் கலவரத்தின் பின்னணியில் துல்கரும் மிருணாள் தாகூரும் முதன்முறையாகச் சந்திக்கும் காட்சிதான் இப்படத்தின் ஆதாரம். ஆனால், அதில் லாஜிக் சார்ந்து ஏகப்பட்ட கேள்விகள் தொக்கி நிற்கின்றன.
மிக முக்கியமாக, இந்து – முஸ்லிம் மத நல்லிணக்கத்தைப் போற்றுவதற்காகவே இப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அதையும் மீறி இந்துத்துவம் அதிகமாகத் திணிக்கப்பட்டிருக்கிறதோ என்ற சந்தேகத்தையும் எழுப்பியிருக்கிறது திரைக்கதை.
வன்முறையற்ற படைப்பு!
பாகிஸ்தானைச் சேர்ந்த ராஷ்மிகாவின் பாத்திரம், இந்தியா என்றாலே அருவருப்பு கொள்கிறது. இந்தியக் கொடி பொருத்தப்பட்ட ஒரு காருக்கு தீ வைக்கும் அளவுக்குக் கோபம் மிக்கதாகக் காட்டப்படுகிறது. அப்படியொரு நபர் இந்தியாவுக்குள் நுழைந்து, இங்கிருக்கும் ஒரு நண்பருடன் சேர்ந்து சீதா மகாலட்சுமி எனும் பெண்ணைத் தேடுகிறது. அது, கடிதத்தில் குறிப்பிடப்பட்ட பெயர். உண்மையில் அந்த பெண்ணின் பெயர் என்னவென்பதில்தான் திரைக்கதையின் ஒரு முடிச்சு அடங்கியிருக்கிறது.
பொதுவாகவே தெலுங்குப் படங்களில் இந்து புராண, இதிகாசக் கதைகள், சம்ஸ்கிருத ஸ்லோகங்கள், பகவத் கீதையில் குறிப்பிடப்பட்ட தத்துவங்கள் அதிகளவில் இடம்பெறும். அதற்கு எவ்விதத் தொடர்பும் இல்லாமல் நாயகிகளின் கவர்ச்சியும் நகைச்சுவையில் ஆபாசமும் நாயகனின் வெறியாட்டத்தில் வன்முறையும் மேலெழுந்து நிற்கும். ‘சீதா ராமம்’ படத்தில் இவற்றுக்கு வேலையே இல்லை. ராமாயணம் சார்ந்த பாத்திரங்களாக சீதாவும் ராமனும் கருதப்பட்டாலும், திரைக்கதையில் அது சார்ந்த எவ்வித விளக்கமும் இல்லாதது ஆறுதல்.
இந்து – முஸ்லிம் மத நல்லிணக்கத்தைப் போற்றுவதற்காகவே இப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அதையும் மீறி இந்துத்துவம் அதிகமாகத் திணிக்கப்பட்டிருக்கிறதோ என்ற சந்தேகத்தையும் எழுப்பியிருக்கிறது திரைக்கதை
படத்தில் ஒரு இந்து இளைஞன் முஸ்லிம் பெண்ணைக் காதலிப்பதாகக் காட்டப்படுகிறது. அது பற்றி விளக்கினால் ‘ஸ்பாய்லர்’ ஆகிவிடலாம். இந்து மதம் சார்ந்த பெண் என்றால் நெற்றியில் பொட்டு வைத்திருக்க வேண்டும். சேலை கட்டியிருக்க வேண்டும். தலை நிறையப் பூவுடன் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு கொண்டவராகத் தன்னை வெளிப்படுத்த வேண்டும். இவை அத்தனையும் இப்படத்தில் இடம்பெற்றிருக்கின்றன. அதற்கும் மேலாக, அப்பெண்ணின் மத அடையாளங்கள் தெரிந்தபிறகும் அவரை ஒரு இந்துவாக கருதுவதாகவே படம் முடிவடைகிறது.
அந்த இடம் இந்துமயமாக்கத்தின் ஒரு துளியாகவே படுகிறது. அவரவர் மதங்களை அப்படி அப்படியே ஏற்றுக்கொள்ளும்போக்கு ஒரு காதல் ஜோடியிடம் இருக்காதா என்ற எதிர்பார்ப்பு சீந்தப்படாமல் போயிருக்கிறது. சர்ச்சை எதற்கு என்று இயக்குநர் அதனைத் தவிர்த்திருக்கவும் வாய்ப்பிருக்கிறது.
முழுக்கத் தெலுங்கில் தயாரான படமாக இருந்தாலும், அழகுத் தமிழ் பேசியிருக்கிறது ‘சீதா ராமம்’. அதற்கான கிரெடிட் மதன் கார்க்கிக்கு அளித்தாக வேண்டும். 2000களுக்குப் பிறகு வெளியான ஆட்டோகிராப், காதல், 96 போன்ற படங்கள் எப்படிக் காதலைப் போற்றும் படைப்புகளாகக் கொண்டாடப்படுகின்றனவோ அவற்றுக்கு இணையான இடம் இதற்கும் கிடைக்க வேண்டும்.
கொஞ்சம் கூட ஆபாசமோ வன்முறையோ இல்லாமல் மிக நேர்த்தியாக, ரசனையுடன் இழைத்து இழைத்து உருவாக்கப்பட்ட ‘சீதா ராமம்’ அதற்கு எல்லாவகையிலும் தகுதியானது!
Read in : English