Read in : English
திரையில் கதாநாயகன் வேடத்தில் அறிமுகமாகும் ஒவ்வொருவருக்கும் ‘மாஸ் ஹீரோ’ அந்தஸ்தை எட்டிப் பிடிக்க வேண்டுமென்ற கனவு இருக்கும். அதனை நோக்கிய பயணத்தில் வெற்றியா, தோல்வியா என்பதைப் பொறுத்தே சம்பந்தப்பட்டவரின் திரையுலக வாழ்க்கை அமையும். ஒரு படம் திரையில் ஓடும்போது ரசிகர்கள் தரும் அளப்பரிய ஆராதனையே ஒரு மாபெரும் ஆக்ஷன் ஹீரோ ஆக விரும்புவதற்கான அடிப்படைக் காரணம். இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்தத் திரையுலகமும் திரண்டு அந்த ‘அந்தஸ்தை’ நோக்கி ஒரு நாயகனை உயர்த்த வேண்டும்.
இல்லாவிட்டால், தானாக முன்வந்து ஒருவரே சொந்தமாகப் பணத்தை வாரியிறைத்து அப்படியொரு பிம்பத்தைத் திரையில் கட்டியெழுப்ப நேரிடும். ஜேடி ஜெர்ரி இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் ‘தி லெஜண்ட்’ படத்தில் நாயகனாக அறிமுகமாகியிருக்கும் அருள் சரவணன் அதைத்தான் செய்திருக்கிறார்.
நாம் இதுவரை பார்த்துவந்த எம்ஜிஆர், ரஜினிகாந்த், விஜய், அஜித் உள்ளிட்டோரின் ‘மாஸ் ஹீரோயிச’ வகையறா படங்களுக்கும் தி லெஜண்டுக்கும் பெரிய வித்தியாசமில்லை. ஆனால், அருள் சரவணன் மீது மட்டும் நாம் வன்மத்தைக் கக்குவது நியாயமா?
நல்லவன் வாழ்வான்!
ஒரு நல்லவன் தான் வாழ்வதோடு, தன்னைச் சுற்றியிருப்பவர்களை வாழவைப்பான். எம்ஜிஆரின் நூற்றிச் சொச்சம் படங்கள் இந்த வரியை அடிப்படையாகக் கொண்டவைதாம். ஏன், எம்ஜிஆரின் நாயக பிம்பத்தை முற்றிலுமாக கலைத்துப்போட்ட ரஜினிகாந்தின் ‘ஆக்ஷன்’ படங்களும் கூட இதே வகையறாதான். என்ன, அடிப்படையில் நல்லவனாக இருந்தாலும் உடலுக்கு ஊறு விளைவிக்கும் சிகரெட், மது போன்றவற்றைப் பயன்படுத்துவதாக ரஜினி ஏற்ற பாத்திரங்கள் வடிவமைக்கப்பட்டிருக்கும். அது மட்டுமே வித்தியாசம். ’தி லெஜண்ட்’ படத்தில் வரும் டாக்டர் சரவணன் பாத்திரம் முற்றிலுமாக எம்ஜிஆர் பார்முலாவில் அமைந்த ரஜினி படமாகத் தோற்றமளிக்கிறது.
படம் முழுக்க ‘என் சேவை இந்த மக்களுக்காக’ என்று திரையைப் பார்த்து முழங்குகிறார் அருள் சரவணன். பெரும் செல்வந்தராக இருந்தாலும், தன்னைச் சுற்றியிருக்கும் ஏழைகளை எந்த வித்தியாசமும் பார்க்காமல் அரவணைத்துக் கொள்கிறார்
வெளிநாடுகளில் ஒரு வெற்றிகரமான நுண்ணுயிரியல் விஞ்ஞானியாக வலம்வரும் சரவணன் (அருள் சரவணன்) தன் சொந்த ஊரான பூஞ்சோலைக்குத் திரும்புகிறார். அப்பா, அம்மா, அண்ணன், அவரது குடும்பத்தினர் என்று அந்த வீடே நிறைந்திருக்கிறது. சரவணனின் குடும்பத்தினர் ஒரு கல்லூரியையும் நடத்தி வருகின்றனர். அங்கு பணியாற்றும் துளசி (கீதிகா திவாரி) மீது சரவணன் காதல்வயப்படுகிறார். அவரைக் கல்யாணமும் செய்துகொள்கிறார்.
அந்தக் காலகட்டத்தில், பால்ய நண்பன் (ரோபோ சங்கர்), அவரது மனைவி, இரண்டு குழந்தைகள் என்று நால்வருமே சர்க்கரை குறைபாட்டால் அவதிப்படுவதைப் பார்க்கிறார் சரவணன். அந்நோய்க்கு நிரந்தரத் தீர்வு காண முயல்கிறார். அம்முயற்சி மருந்து மாபியா கும்பலைச் சேர்ந்த விஜேவுக்கு (சுமன்) கோபம் ஏற்படுத்துகிறது. அவரது சதியால் மனைவி துளசியை இழக்கிறார் சரவணன். சதிகளை மீறி, சர்க்கரை நோய்க்கு அவர் மருந்து கண்டறிந்தாரா இல்லையா என்று சொல்கிறது ‘தி லெஜண்ட்’.
படம் முழுக்க ‘என் சேவை இந்த மக்களுக்காக’ என்று திரையைப் பார்த்து முழங்குகிறார் அருள் சரவணன். பெரும் செல்வந்தராக இருந்தாலும், தன்னைச் சுற்றியிருக்கும் ஏழைகளை எந்த வித்தியாசமும் பார்க்காமல் அரவணைத்துக் கொள்கிறார். தன்னைச் சுற்றி ஒரு கொடுமை நிகழ்ந்தால் பொங்கியெழுகிறார், காற்றில் மிதந்து சண்டையிடுகிறார்.
மனைவியாக நடிப்பவரோடு மட்டுமல்லாமல், இரண்டு பாடல்களுக்கு இரு வேறு நடிகைகளுடன் நடனமாடுகிறார். அதேநேரத்தில், மனைவியை விட்டு வேறொரு பெண்ணுடன் சரவணனைச் சம்பந்தப்படுத்தி மற்ற பாத்திரங்கள் கனவு கண்டால் அதற்குத் தடை போடுகிறார்.
மேலும் படிக்க:
திரைப்பட நட்சத்திரங்கள் பாடல் எழுதுவது ‘வைரல்’ ஹிட் ஆவதற்கு மட்டும்தானா?
கே.பி. சுந்தராம்பாளை பாட்டால் வசியம் செய்த மாயக்காரன் செங்கோட்டை சிங்கம் எஸ்.ஜி. கிட்டப்பா!
அத்தனைக்கும் மேலாக, அவர் வசனம் பேசும் விதமும் திரையில் அவர் காட்டப்படும் விதமும் பல ஆண்டு தவத்திற்குப் பின் ‘மாஸ் ஹீரோ’க்களானவர்களையே தூக்கிச் சாப்பிடும் வகையில் அமைந்திருக்கிறது. இதுவே திரையில் அவர் தோன்றும்போதெல்லாம் அரங்கில் சிரிப்பலைகளைத் ததும்பச் செய்கிறது. இவ்வளவு ஏன், மனைவியை இழந்துவிட்ட துயரத்தில் அவரது பாத்திரம் கதறும்போது கூட ‘ஹோ’வென்று கூச்சலிடுகின்றனர் பார்வையாளர்கள்.
படத்தில் சண்டைக்காட்சிகள் முதற்கொண்டு எதிலும் அதீத வன்முறை இல்லை. இது ஒரு மாபெரும் ஆச்சர்யம். அதையும் மீறி ‘தி லெஜண்டை’ காலுக்கடியில் இட்டு தேய்ப்பது போல விமர்சித்து வெறுப்பைக் கக்குகிறது ரசிகர் உலகம்
இது சரிதானா? ஏனென்றால், ’தி லெஜண்ட்’டில் சரவணனுக்குப் பதிலாக நமக்குப் பிடித்தமான ஒரு ‘மாஸ் ஹீரோ’ இடம்பிடித்திருந்தால் கொண்டாடியிருப்போம். அந்த வகையிலேயே, படத்தின் உள்ளடக்கம் முதல் அனைத்தையும் பார்த்துப் பார்த்துச் செதுக்கியிருக்கின்றனர் இயக்குநர் இணை ஜேடி-ஜெர்ரி. இதுவரை இவர்கள் தந்த பேட்டிகளில் எல்லாம் ‘அருள் சரவணன் கேட்டுக்கொண்டதற்கிணங்க எம்ஜிஆர், ரஜினி படம் போன்றே தி லெஜண்டை உருவாக்குவதாக’ சொல்லி வந்திருக்கின்றனர். அதற்கேற்ப, படத்தில் சண்டைக்காட்சிகள் முதற்கொண்டு எதிலும் அதீத வன்முறை இல்லை. இது ஒரு மாபெரும் ஆச்சர்யம். அதையும் மீறி ‘தி லெஜண்டை’ காலுக்கடியில் இட்டு தேய்ப்பது போல விமர்சித்து வெறுப்பைக் கக்குகிறது ரசிகர் உலகம்.
உடைபடும் ‘மாஸ் ஹீரோக்கள்’!
ஒரே அடியில் நூறு பேரை வீழ்த்துவது சாத்தியமா? வாழ்வில் ஒரே ஒருமுறை அடி வாங்கியோ கொடுத்தோ பழக்கப்பட்டிருந்தால், இதற்கான பதிலை எளிதாகச் சொல்லிவிடலாம். ஆனாலும், அப்படியொரு அசாதாரணமான ஆற்றலைக் கொண்டவர்களாகவே திரையில் நாயகர்கள் சித்தரிக்கப்படுகின்றனர். அதனைப் பார்வையாளர்கள் எப்படி ஏற்றுக்கொள்கின்றனர்? சம்பந்தப்பட்ட நாயகரின் மீதான அபிமானம் கூடும்போது அவரால் எதையும் சாதிக்க முடியுமென்ற எண்ணமும் மனதில் வேர் பிடித்துவிடுகிறது. அதனாலேயே, ஒரு நாயகரின் ரசிகர்களுக்கு இன்னொரு நாயகர் திரையில் மேற்கொள்ளும் சாகசமெல்லாம் கிண்டலாகப் படுகிறது. அதுவே அருள் சரவணனுக்கும் நேர்ந்திருக்கிறது.
சரவணன் செய்யும் சாகசமெல்லாம் அபத்தமாகப் பட்டால், இதுவரை நாம் ரசித்த ‘மாஸ் ஹீரோக்கள்’ திரையில் நிகழ்த்தியதெல்லாம் அபத்தங்களின் உச்சம்தானே. நியூட்டனின் மூன்றாம் விதிக்கு மாறாக, வில்லன் கூட்டத்தை அவர்கள் கால்பந்து போல் கையாள்வதைக் கண்டு நாம் நகைக்கத்தானே வேண்டும்? மாறாக, ஏன் ரசிக்கிறோம்? சிறுத்தைக்குச் சமமாக ஓடுவதும், புவி ஈர்ப்பு விசைக்கும் எடைக்கும் கட்டுப்படாதவாறு அந்தரத்தில் சுழல்வதும் விஎஃப்எக்ஸின் மகிமை என்று தெரிந்தபிறகும் ஏன் கொண்டாடுகிறோம்?
சண்டைக்காட்சிகளில் முக்காலே மூணு வீசம் கதாநாயகனின் ‘டூப்’ தான் கஷ்டப்படுகிறார் என்று தெரிந்தபிறகும் ஏன் திரையை நோக்கிக் கூச்சலிடுகிறோம்? அந்தக் கணத்தில், அந்த கதாநாயகனை நாமாகக் கற்பனை செய்துகொள்கிறோம். நாமே சாகசத்தில் ஈடுபடுவதுபோல் குதூகலிக்கிறோம்.
அந்த வகையில், அருள் சரவணன் நமக்குத் திரையில் இன்னொரு சாதாரண நபராகத் தென்படுகிறார். அவர் செய்யும் அசாதாரணமான விஷயங்களெல்லாம் நமக்குக் கிண்டலாகப் படுகின்றன. அதையும் மீறி, ‘மாஸ் ஹீரோ’க்களைப் பிரதிபலிக்க நினைக்கையில் எதிரியாக மாறிப் போகிறார். அதன்பிறகு ‘இந்தாளுக்கு ஏன் இந்த வேலை’ என்று இதுவரை அருள் சரவணன் மேற்கொண்டுவந்த தொழில் அபிவிருத்தியைச் சம்பந்தப்படுத்தி திரையரங்கிலேயே பேசத் தொடங்கிவிடுகிறோம். இப்படிச் செய்வதன் மூலமாக, இதுவரை நாம் ரசித்த ‘மாஸ் ஹீரோ’ இலக்கணங்களைத் தகர்த்துவிடுகிறோம். இனிமேல் நாம் காணவிருக்கும் அத்தகு படங்களைக் கேள்விக்குட்படுத்த நம்மையும் அறியாமல் தயாராகிறோம். அதுவே உண்மை.
இது போதும்!
‘லெஜண்ட் சரவணா ஸ்டோர்’ அதிபர் அருள் சரவணன் திரையில் ‘தி லெஜண்ட்’ ஆக முயன்றிருக்கிறார். இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் முதல் கலை இயக்குநர், ஆடை வடிவமைப்பாளர்கள் என்று தொழில்நுட்ப வல்லுநர்கள் பல அதற்கு உதவியிருக்கின்றனர். ஆடித்தள்ளுபடி விளம்பரம் போல திரையில் இடம்பெற்ற ஒவ்வொரு பிரேமிலும் தலைகள் நிறைந்திருக்கின்றன; வண்ணங்கள் பளிச்சிடுகின்றன; விஎஃப்எக்ஸ் நிறைந்திருக்கிறது.
அருள் சரவணன் நமக்குத் திரையில் இன்னொரு சாதாரண நபராகத் தென்படுகிறார். அவர் செய்யும் அசாதாரணமான விஷயங்களெல்லாம் நமக்குக் கிண்டலாகப் படுகின்றன
ஒரு திரைப்படமாகப் பார்த்தால், பெரும்பாலான கதாநாயகர்களின் ’கன்னி முயற்சி’ போல இதிலும் அருள் சரவணனின் நடிப்பு சில நேரத்தில் நம் பொறுமையைச் சோதிக்கிறது. என்னைப் பொறுத்தவரை, ‘தி லெஜண்ட்’ திரைப்படம் இதுவரை வெளிவந்த ஜனரஞ்சக பொழுதுபோக்கு திரைப்படங்களின் ஒரு சிறு துளி. அதனை ஏற்பதா வேண்டாமா என்பது அவரவர் ரசனையைப் பொறுத்தது. அதையும் மீறி, ‘மீம்ஸ்’களைப் பகிர்ந்து நாம் மேற்கொள்ளும் கிண்டலெல்லாம் நாம் ஆராதிக்கும் நாயகர்களுக்கும் பொருந்திப்போகும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
இனி வரும் காலங்களிலும், இது போன்றே அருள் சரவணன் திரையில் தோன்றக்கூடும். அவ்வாறு நிகழ்ந்தால், ஒரு தொழிலில் கிடைத்த லாபத்தை இன்னொரு தொழிலில் அவர் பரீட்சித்துப் பார்க்கிறார் என்றே எடுத்துக்கொள்ள வேண்டும். அப்போது, திரையுலக வாழ்க்கையுடன் ஏற்கெனவே அவர் மேற்கொண்டு வரும் வணிகங்களை ஒப்பிட்டு விமர்சனங்கள் பெருகினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. அதற்குள் மாஸ் ஹீரோ இலக்கணத்தை உடைத்த ‘தி லெஜண்ட்’ வழியாகக் கதாநாயகனை யதார்த்தமாகக் காட்ட வேண்டிய கட்டாயம் இந்தியத் திரையுலகில் விஸ்வரூபமெடுக்கலாம். அப்படி நிகழாவிட்டால், அடுத்த படத்திலும் அருள் சரவணன் இதே ‘ஸேம் பிளட்’ அனுபவத்தைத் தருவார் என்பதை நினைவில் கொள்வோம்!
Read in : English