Read in : English

குழந்தைகள் மீதான பாலியல் அத்துமீறல்கள் குறித்த கதைதான் பிரம்மா, அனுசரண் ஆகியோர் இயங்கியுள்ள சுழல் வெப் சீரிஸ். நமக்குத் தெரிந்த மனிதர்கள் ஒவ்வொருவரைப் பற்றியும் முழுமையாகத் தெரிந்து கொண்டிருக்கிறோம் என்பது முட்டாள்தனம். அப்படிப்பட்ட புரிதல் முகம் சார்ந்ததாகத்தான் இருக்க முடியும்.

அதாகப்பட்டது, அந்த மனிதர் வெளியுலகத்தில் எவ்வாறு தன்னை வெளிப்படுத்துகிறாரோ அதைக் கொண்டே அந்த மதிப்பீடுகள் இருக்கும். அப்படிப்பட்ட மதிப்பீடுகள் சுழன்று மேலெழும்போது, அவற்றின் பின்னிருக்கும் உண்மைகள் தெரிய வருவதைச் சொல்கிறது ‘சுழல்’.

புஷ்கர் – காயத்ரி எழுத்து மற்றும் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த வெப் சீரிஸை பிரம்மா மற்றும் அனுசரண் இயக்கியிருக்கின்றனர். மொத்தம் 8 அத்தியாயங்கள் கொண்ட இப்படைப்பு அமேசான் பிரைம் சீரிஸில் காணக் கிடைக்கிறது.

சாம்பலூர் எனும் சிற்றூர். தொண்ணூறுகளில் அங்கொரு சிமெண்ட் தொழிற்சாலை தொடங்கப்படுகிறது. அந்த ஆலை கட்டப்பட்டபோது, அம்மணி என்ற பதின்பருவச் சிறுமி காணாமல் போகிறார். அந்நேரத்தில், அவ்வூரில் உள்ள அங்காளம்மன் கோயிலில் மயானக் கொள்ளை திருவிழாவின் முதல் நாள் பூசை கொண்டாடப்படுகிறது ஒரு மர்மக் கதையாக மக்களிடையே பகிரப்படுகிறது.

25 ஆண்டுகள் கழித்து, அதேபோல மயானக் கொள்ளை திருவிழா தொடங்கும் நாளில் 15 வயதுச் சிறுமி காணாமல் போகிறார். அவரது பெயர் நிலா (கோபிகா ரமேஷ்); சிமெண்ட் தொழிற்சாலையில் தொழிலாளர் சங்கத் தலைவராக இருக்கும் சண்முகத்தின் (பார்த்திபன்) மகள்.

அன்றைய தினம் காலையில் தொழிற்சாலையில் நடந்த தொழிலாளர்கள் போராட்டத்தில் போலீஸ் தடியடி நடத்த, இரவில் அத்தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்படுகிறது. தீ விபத்துக்கு காரணம் மின் கசிவா அல்லது ஏதேனும் ஒரு நபரின் சதியா என்று போலீஸ் விசாரணையைத் தொடங்குகிறது. ஆலையின் நிர்வாக இயக்குநர் திரிலோக் வாடி (ஹரிஷ் உத்தமன்), சண்முகம் தான் தீ விபத்தை ஏற்படுத்தியதாக குற்றம்சாட்டுகிறார்.

அதே நேரத்தில், நிலா காணாமல் போனதற்கு காரணம் யார் என்ற கேள்வியைத் தேடிப் பயணத்தைத் தொடங்குகிறார் எஸ்ஐ சக்கரை என்ற சக்ரவர்த்தி (கதிர்). நிலாவின் பின்னால் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரெஜினாவின் (ஸ்ரேயா ரெட்டி) மகன் அதிசயம் சுற்றியதாகத் தெரிய வருகிறது. ஆனால், அதிசயமும் அவரது நண்பர்களும் மூணாறுக்கு சுற்றுலா சென்றிருக்கின்றனர். இந்நிலையில், அதிசயம் தான் நிலாவைக் கடத்தியிருப்பாரோ என்ற சந்தேகம் வலுப்பெறும்போது, அவரது மொபைல் ‘ஸ்விட்ச் ஆஃப்’ ஆகிறது.

மேலும் படிக்க:

தமிழ் வெப் சீரிஸ்கள்: ஓடிடி தளங்களுக்கும் தமிழ் திரையுலகுக்கும் இடைவெளி ஏன்?

நம்பிக்கைக்குரியவர்களா தமிழின் அடுத்த தலைமுறை இயக்குநர்கள்?

உண்மையில் நிலாவுக்கு என்னவானது? அதிசயமும் அவரது நண்பர்களும் எங்கிருக்கின்றனர்? ஆலையில் நடந்த தீ விபத்துக்கு காரணம் மனிதர்களின் சதியா? அங்காளம்மன் கோயிலில் திருவிழா தொடர்ந்து நடந்ததா? இக்கேள்விகளுக்குப் பல்வேறு திருப்பங்களுடன் விடைகளைத் தருகிறது ‘சுழல்’ திரைக்கதை.

காட்சியமைப்புகளும் பின்னணி இசையும் தேர்ந்த நடிகர்களின் பாவனைகளும் திரைக்கதையில் ஆங்காங்கே அமைக்கப்பட்டிருக்கும் முடிச்சுகளுடன் இணையும்போது ‘த்ரில்’ கூட்டுகிறது ‘சுழல்’

ஒரு சிற்றூரில் நடக்கும் கதை என்பதால், சில நூறு, ஆயிரம் மனிதர்களும் அவர்களின் வாழ்க்கையும் களமாக அமைக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும், ஒரு டஜன் மனிதர்களே இதில் முதன்மைப்படுத்தப்பட்டிருக்கின்றனர். அதுபோலவே, ஒரு திறம் வாய்ந்த ‘த்ரில்லர்’ சினிமா ரசிகர் எளிதாக இக்கதையில் உண்மையான குற்றவாளி யார் என்பதைக் கண்டுபிடித்துவிடுவார். இதையெல்லாம் மீறி, காட்சியமைப்புகளும் பின்னணி இசையும் தேர்ந்த நடிகர்களின் பாவனைகளும் திரைக்கதையில் ஆங்காங்கே அமைக்கப்பட்டிருக்கும் முடிச்சுகளுடன் இணையும்போது ‘த்ரில்’ கூட்டுகிறது ‘சுழல்’.

இந்த வெப்சீரிஸில் பிரதானமாக இருக்கிறது எஸ்ஐ சக்ரவர்த்தியாக வரும் கதிர். நகைச்சுவை, ஆத்திரம், சோகம், ஆர்ப்பாட்டம் என்று பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தினாலும், தன் மனதிலுள்ள காதலையும் பரிவையும் பார்வைகளால் வெளிப்படுத்துமிடங்கள் அருமை.

கதிரின் ஜோடியாக வரும் நிவேதிதா சதிஷுக்கு பெரிதாக வேலையில்லை. ஆனாலும், தனக்கு வரப்போகும் கணவர் முகத்தில் வேறொரு பெண்ணைப் பார்த்ததும் காதல் வருவதை உணரும் காட்சியில் பிரமாதப்படுத்தியிருக்கிறார்.

தொழிற்சங்கத் தலைவராக வரும் பார்த்திபன், அக்கதாபாத்திரத்தின் முதுமைக்குத் தக்கவாறு அசத்தலாக வந்து போகிறார். அவரது மனைவியாக வரும் இந்துமதியின் பாத்திரப் படைப்பு, தற்காலத்தில் ‘உடனடி’ தீர்வுகளை வழங்கும் ஆன்மிக ஆசிரமங்களின் பக்தைகளை அப்படியே பிரதிபலிக்கிறது.

பார்த்திபனின் சகோதரராக வரும் குமரவேல் மற்றும் லதா ராவ் ஜோடி, இப்படைப்பில் ஆச்சர்யம் தருகிறது. இன்ஸ்பெக்டர் ரெஜினா – வடிவேலுவாக வரும் ஸ்ரேயா மற்றும் பிரேம்குமாரின் பாத்திரப் படைப்பும் கூட கச்சிதமாக அமைக்கப்பட்டிருக்கிறது.

ஆலை முதலாளியாக வரும் ஹரீஷ் உத்தமன், கான்ஸ்டபிளாக வரும் பிரசன்னா பாலசந்திரன், இன்சூரன்ஸ் நிறுவன கண்காணிப்பாளராக வரும் சந்தானபாரதி, நிலாவாக வரும் கோபிகா, அதிசயமாக வரும் பெடரிக் ஜான், மலராக வரும் சவுந்தர்யா, தேனப்பன், ’பரியேறும்பெருமாள்’ வெங்கடேசன் உட்பட பலரும் இப்படைப்பில் நிறைந்திருக்கின்றனர்.

இப்படைப்பில் ‘பிரமாண்ட’ பில்டப்புடன் அறிமுகமாகும் ஐஸ்வர்யா ராஜேஷின் நந்தினி பாத்திரம் முழுமையற்றதாக இருப்பது இதன் பெரிய பலவீனம்.

ஒரு கிராமத்தில் நிகழும் பெண் தெய்வ கொண்டாட்டத்திற்கும் நிகழ்காலத்தில் பெண்கள் கொடுமைக்குள்ளாவதற்குமான முரண், இக்கதையில் சரிவரப் பொருந்தவில்லை

நடிப்புக் கலைஞர்கள் அனைவரையும் பிரேமுக்குள் அடக்கியிருக்கும் ஒளிப்பதிவாளர் முகேஷ்குமார் ஒரு ஆச்சர்ய வரவு. முக்கியமாக, அங்காளம்மான் கோயில் திருவிழாவை அவர் காட்சிப்படுத்தியிருக்கும் விதம் ‘வாவ்’ சொல்ல வைக்கிறது. அதுபோலவே, காட்சிகளின் தன்மையை ‘சுளீர்’ என்று நம் மூளைக்குள் பதிய வைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது சாம் சிஎஸ்ஸின் இசை. ‘சுழலி’ன் தூண் என்றே இவரைச் சொல்லலாம்.

இப்படைப்பைத் தொகுத்திருக்கும் ரிச்சர்ட் கெவின் ஆங்காங்கே தடுமாறியிருப்பதைக் காண முடிகிறது. கதாபாத்திரங்களின் உணர்வுகளுக்கு இடம் தந்து மௌனத்திற்கோ, பின்னணி இசைக்கோ இன்னும் கொஞ்சம் வழி விட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

முதல் 5 அத்தியாயங்களை இயக்கியிருக்கும் பிரம்மா, திருவிழா காட்சிகளோடு கதையில் நிரம்பியிருக்கும் மர்மத்தை கோர்த்த வகையில் பிரமாதப்படுத்தியிருக்கிறார். பின்பாதியை இயக்கியிருக்கும் அனுசரணுக்கு நுணுக்கமான உணர்வுகளை முக்கியத்துவப்படுத்தும் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது.

இத்தொடரை எழுதி தயாரித்திருக்கிறது புஷ்கர் – காயத்ரி இணை. மொத்தக் கதையின் பலமும் பலவீனமும் இவர்களைச் சார்ந்தே அமைகிறது. இளைய தலைமுறையின் ஆர்ப்பாட்டத்தை குற்றங்களுக்கான ஊற்றாகத் தென்படச் செய்த வகையில், அவர்கள் முதலிரண்டு அத்தியாயங்களுக்கு ‘விறுவிறுப்பு’ கூட்டியிருக்கின்றனர்.

அங்காளம்மன் கோயில் திருவிழாவின் சடங்கு சம்பிரதாயங்கள் விவரணைகளுடன் காட்டப்பட்டிருப்பது பிரமிப்பைத் தருகிறது. ஆனாலும், பிரதானக் கதையின் வீரியத்தை திசை திருப்பும்விதமாக இக்காட்சிகள் இருப்பது சோகம். வாழ்ந்து மடிந்தவர்கள்தான் மக்களின் தெய்வங்களாக கொண்டாடப்படுவார்கள் என்ற கருத்தைக் கொஞ்சம் விலாவாரியாக பேசியிருந்தால், கதையின் மையத்துடன் அதனைத் தொடர்புபடுத்தியிருக்கலாம்.

மாறாக, பார்வையாளர்கள் தாங்களாகவே எதையாவது தேடிக் கண்டுபிடிக்கட்டும் என்று கதாசிரியர்கள் நினைத்திருந்தால் அது வருத்தம் தரும் விஷயம். இந்த காரணத்தினால், இறுதியாக வரும் இரண்டு அத்தியாயங்களை பலவீனமாகத் தென்படுகின்றன.

நான்காவது அத்தியாயத்தில் வரும் அதிசயம் – நிலா காதல் காட்சிகள் மிக மெதுவாக நகர, அதனைத் தொடர்ந்து ஸ்ரேயாவின் வீட்டில் பார்த்திபன் குடும்பத்தினர் பஞ்சாயத்து பேசுமிடம் ’குழப்பக் கூத்தாக’ இருக்கிறது. இவற்றைவிட, மிக முக்கியமான கேள்விகளுக்கு பதிலளிக்காமல் தவிர்த்திருப்பது ‘சுழலை’த் தடுமாறச் செய்திருக்கிறது.

குழந்தைகள் மீதான பாலியல் அத்துமீறல்கள்தான் இக்கதையின் மையம். ‘ஸ்பாய்லர்’ என்றபோதும், இதனைச் சொல்வதைத் தவிர்க்க முடியவில்லை. காரணம், இதனை பிரதானப்படுத்தாமல் தவிர்த்திருப்பது மொத்தக் கதையையும் அடியோடு குலைக்கிறது.

பாலியல் அத்துமீறல்களில் ஈடுபடுபவர்களை, இயல்பான ஆண் – பெண் பாலுறவைத் தவிர்ப்பவர்களாக காட்டியிருப்பது மனநலம் சார்ந்த அடையாளங்களில் ஒன்றாக ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், குழந்தைப்பேறு இல்லாதவர்களை அப்படியொரு வட்டத்திற்குள் அடைக்கும் வாய்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது ‘சுழல்’. திருமணமாகாத, குழந்தைப்பேறு இல்லாத பலரை விநோதமாக நம் சமூகம் உற்றுநோக்கும்நிலையில், அதனைப் பூதாகரப்படுத்தும் வாய்ப்பையே இது தந்திருக்கிறது.

எல்லோருடனும் கலகலப்பாக பழகுவது குழந்தைகளின் இயல்பு என்றபோதும், எப்போதும் தனிமையை விரும்புபவர்கள் இதுபோன்ற அத்துமீறல்களுக்கு ஆளானவர்களாக இருக்கக்கூடும்; பதின் பருவத்தில் காதலில் விழுவது இது போன்ற அத்துமீறல்களில் இருந்து தப்பித்தலாகவே இருக்கும் என்ற எண்ணத்தை தூவிச் செல்கிறது இப்படைப்பு. கிட்டத்தட்ட அவ்வகை காதல்கள் பாலியல் அத்துமீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வடிகாலாக இருக்கும் என்று நியாயப்படுத்தும் வகையில் இருக்கிறது ‘சுழல்’ கதைப்போக்கு.

அதேநேரத்தில், பாலியல் அத்துமீறல்களுக்கு ஆளான குழந்தைகள் அதனைக் குடும்பத்தினரிடம் பகிராமல் தவிர்ப்பதற்கான காரணங்கள் தெளிவாக விளக்கப்படவில்லை.முத்தாய்ப்பாக, அம்மணி எனும் பெண் கொல்லப்பட்ட தகவல் இக்கதையில் முற்றுப்பெறாமல் அப்படியே தொக்கி நிற்கிறது.

ஒரு கிராமத்தில் நிகழும் பெண் தெய்வ கொண்டாட்டத்திற்கும் நிகழ்காலத்தில் பெண்கள் கொடுமைக்குள்ளாவதற்குமான முரண், இக்கதையில் சரிவரப் பொருந்தவில்லை. சில ஆண்டுகளுக்கு முன் இந்தியில் வெளியான ‘ஸ்திரீ’ திரைப்படத்தைப் பார்த்தால் இந்த வித்தியாசம் பிடிபடும்.

இதையும் மீறி, அங்காளம்மன் கோயில் திருவிழாவை அரக்க, தேவ குணங்களின் போராட்டமாகவும் வெற்றியாகவும் நோக்குபவர்களுக்கு ‘சுழல்’திருப்தியைத் தரலாம். அது மட்டும்போதுமா என்பவர்களுக்கு ‘சுழல்’திருப்தி தருமா என்று தெரியவில்லை.

Share the Article

Read in : English

Why we always find lots of cashews on top of Deepavali mixture why tangedco need to pay us for damaging household appliances why eating on banana leaves is healthier What the Tamil Nadu Organic policy needs what is the real story of onam festival