Read in : English
விநோதமான பழக்கங்களையும், கட்டுப்பாடுகளையும் கொண்ட நரிக்குறவர் இனத்தை சேர்ந்த மூன்று பள்ளி மாணவிகள் கடந்த வாரம் முதலமைச்சரை சந்தித்தனர். ஆவடி பேருந்து நிலையம் அருகே நரிக்குறவர் குடியிருப்பில் வசிக்கும் தங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தருமாறு திவ்யா, ப்ரியா, தர்ஷினி கோரிக்கை விடுத்தனர். மாணவிகளின் கோரிக்கைகளை கனிவுடன் கேட்ட முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். முதலமைச்சரை சந்தித்த பிறகு, மாணவிகளின் குடியிருப்பு பகுதிக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டதா என்பது குறித்து இன்மதி அங்கு ஆய்வு மேற்கொண்டது.
தமிழக முதல்வரை அந்த மாணவிகளைச் சந்தித்த அடுத்த 2 நாட்களில் அப்பகுதிக்கு அரசு அதிகாரிகள் விரைந்துள்ளனர். கிட்டத்தட்ட 50 குடும்பங்கள் வசிக்கும் அப்பகுதியில் பெரும்பாலானோர் கட்டட வீடுகளில் வசித்து வருகின்றனர். நாடோடி வாழ்க்கையாக வாழ்ந்து வந்த அவர்களும் நிரந்தரமாக ஒரே இடத்தில் வசிக்க உதவியது 1981ஆம் ஆண்டு நடைபெற்ற குடியிருப்பு நிலத்துக்கான போராட்டம் தான். அதன்பின்னர் அப்பகுதியில் நரிக்குறவர் இனத்தவருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. அவர்களும் வசதிக்கு ஏற்றார் போல் வீடுகள் கட்டி வாழ்ந்து வருகின்றனர். துப்பாக்கி ஏந்தி வேட்டைக்கும், கைகளில் பாசிமணியை அடுக்கி கொண்டு விற்பனைக்கு சென்ற தலைமுறை கடந்து போக, இந்தத் தலைமுறையினர் படிப்பதற்காகப் பள்ளிக்கூடம் செல்லத் தொடங்கியுள்ளனர்.
இந்த நிலையில் தமிழக முதல்வரைச் சந்தித்து கோரிக்கை விடுத்த மூன்று மாணவிகளில் ஒருவரான 10ஆம் வகுப்பு படிக்கும் திவ்யாவை சந்தித்துப் பேசினோம்.
முதல்வரைச் சந்தித்த 3வது நாளில் எங்கள் பகுதிக்கு சிமெண்ட் ரோடு போடப்பட்டது. கால்வாய் கட்டப்பட்டு முறையாக மூடப்பட்டது. தெரு விளக்கும், மின் கம்பங்களும் அமைக்கப்பட்டன
”நாங்கள் இருக்கும் பகுதி தூய்மையாக இல்லை. சாலை வசதி இல்லாமல் இருந்தது. குடிக்ககூட தண்ணீர் இல்லை. லாரியில் வரும் தண்ணீரை காசு கொடுத்து தான் வாங்குவோம். இத்தனை ஆண்டுகள் கடந்தும் எங்களுக்கு எந்தவித அடிப்படை வசதிகளும் கிடைக்கவில்லை. நாங்கள் இருக்கும் இடத்தில் பாலம் கட்ட போவதாகவும், அந்த இடம் அகற்றப்படும் என்று அதிகாரத்தில் உள்ள சிலர் கூறி வருகின்றனர். இதனால் முதல்வரைச் சந்தித்து முறையிட நினைத்தோம். அந்த முயற்சியில் முதல்வரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. எங்களது குடியிருப்பில் உள்ள பிரச்சினைகள் குறித்தும் விளக்கிக் கூறி, அதற்குக் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வரிடம் வேண்டுகோள் விடுத்தோம் என்கிறார் திவ்யா.
முதல்வரைச் சந்தித்த 3வது நாளில் எங்கள் பகுதிக்கு சிமெண்ட் ரோடு போடப்பட்டது. கால்வாய் கட்டப்பட்டு முறையாக மூடப்பட்டது. தெரு விளக்கும், மின் கம்பங்களும் அமைக்கப்பட்டன. குடிநீர் குழாய்கள் கட்டப்பட்டுள்ளன. இன்னும் இணைப்புகள் தரவில்லை. முதலமைச்சர் கையால் குடிநீர் குழாய்கள் திறந்து வைக்க வைக்கப்படும் என்று கூறியுள்ளனர். எங்கள் அம்மா டிப்ளமோ படித்துள்ளார். அவருக்கு வேலை கிடைக்கவில்லை. அம்மா ஊசி, பாசி மணிகளை விற்பனை செய்தும், அப்பா வேட்டைக்கு சென்றும் என்னையும், எனது தங்கையும் வளர்த்து வருகின்றனர். அதனால் மேற்படிப்பு படிக்கவும், இதர சலுகைகளுக்காகவும் எங்களை எம்.பி.சி. பிரிவில் இருந்து எஸ்டி பிரிவுக்கு மாற்ற வேண்டுமென நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகிறோம். அதற்கு அரசு நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும்” என்கிறார் திவ்யா.
எருமைக்கடாவை வழிபடும் நாங்கள் குலதெய்வத்தின் துணியை வீட்டிற்கு முன்பு வைத்து வழிபடுவோம். வீட்டிற்கு முன்பு கழிப்பறை கட்டினால் நாங்கள் எப்படி வழிப்படுவது என கேள்வி எழுப்பினார் வீரக்குமார்.
அந்த பகுதியில் 3 தலைமுறைகளாக வசித்து வருவதாக திவ்யாவின் தந்தை குமார் தெரிவித்தார். அங்கு வசிக்கும் பவானி என்ற பெண் கூறுகையில், “அரசு அதிகாரிகள் வந்தார்கள். ரோடு போட்டார்கள், தெருவிளக்கு, குழாய் எல்லாம் வைத்தார்கள். காலங்காலமாக வசித்து வரும் எங்களுக்கு கழிப்பறை வசதி இல்லை. நாங்கள் அருகில் உள்ள ஆவடி பேருந்து நிலையத்தில் இருக்கும் பொது கழிப்பறையை தான் பயன்படுத்தி வருகிறோம். தற்பொழுது எங்கள் பிள்ளைகள் முதலமைச்சரை சந்தித்து முறையிட்டதும் நரிக்குறவர் குடியிருப்புக்கு வந்த அரசு அதிகாரிகள் கழிப்பறைகள் கட்டித்தரப்படும் என்றனர். அதையும் அவர்கள் தேர்வு செய்யும் இடத்தில் தான் கட்டித்தருவதாகக் கூறிவிட்டனர். எங்களது வீட்டு வாசல் பகுதியில் கழிப்பறையைக் கட்டினால் நாங்கள் எப்படி வாழ முடியும். வீட்டிற்கு பின்புறமான ஒதுக்குப்புறத்தில் கழிப்பறை கட்டுங்கள் என முறையிட்டோம். அதை காதில் வாங்கி கொள்ளாத அதிகாரிகள் சாலையில் இரு புறத்திலும் வீட்டிற்கு முன்பகுதியில் கழிப்பறை கட்ட அளவெடுத்து சென்றுள்ளனர்” என்றார்.
வீட்டின் முன்புறம் கழிப்பறையை கட்டினால் எங்களால் குல தெய்வத்தை வழிப்பட முடியாது என வீரக்குமார் வருத்தம் தெரிவித்தார். எருமைக்கடாவை வழிபடும் நாங்கள் குலதெய்வத்தின் துணியை வீட்டிற்கு முன்பு வைத்து வழிபடுவோம். வீட்டிற்கு முன்பு கழிப்பறை கட்டினால் நாங்கள் எப்படி வழிப்படுவது என கேள்வி எழுப்பினார் வீரக்குமார்.
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருக்கும் எங்களை பழங்குடியினர் பட்டியலுக்கு மாற்றினால் பிள்ளைகளின் படிப்பிற்கும், அரசு வேலைக்கு முயற்சிக்கவும் உதவியாக இருக்கும்.
காலங்காலமாக இருக்கும் எங்களுக்கு எந்த ஒரு அடிப்படை வசதியும் கிடைத்ததில்லை. எம்ஜிஆர். முதலமைச்சராக இருந்த போது இந்தப் பகுதிக்கு பட்டா கேட்டு முறையிட்டோம். பின்னர் ஜெயலலிதா முதலமைச்சரானதும் நரிக்குறவர்களுக்கு ஒன்றரை ஏக்கர் நிலம் பட்டா வழங்கப்பட்டது. எங்களது பிள்ளைகள் அருகில் இருக்கும் அரசுப் பள்ளியில் படித்து வருகின்றனர். எனது தங்கை பொறியியல் படித்து மின்வாரியத்து ஜூனியர் என்ஜினியராக உள்ளார். அரசு வேலை கிடைத்து அதிகாரியாக இருந்தாலும் அவர் எங்களுடன் இங்கே தான் தங்கி இருக்கிறார். எங்களது குலத்தில் தற்பொழுது இருக்கும் தலைமுறையினர் படிக்கத் தொடங்கியுள்ளனர்.
ஒரு சிலர், பி.காம், பி.ஏ. என பட்டப்படிப்புகளையும் படித்துள்ளனர். ஆனால், நரிக்குறவர் என்பதால் வேலை கிடைப்பது தான் கொஞ்சம் கஷ்டமாக உள்ளது. மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருக்கும் எங்களை பழங்குடியினர் பட்டியலுக்கு மாற்றினால் பிள்ளைகளின் படிப்பிற்கும், அரசு வேலைக்கு முயற்சிக்கவும் உதவியாக இருக்கும். இதற்காக பல காலமாக போராடி வருகிறோம். தற்போது முதல்வர் ஸ்டாலினிடம் முறையிட்டுள்ளோம்.
அவரும் மத்திய அரசுக்கு கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார். விரைவில் தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம் என்று கூறும் அந்தப் பகுதி நரிக்குறவர் குடியிருப்பின் தலைவர் ராஜு, அரசு எங்களுக்கு உதவி செய்வது மகிழ்ச்சி அளித்தாலும், கழிப்பறைகளை வீட்டிற்கு முன்பு கட்டுவதை எங்கள் மக்கள் விரும்ப மாட்டார்கள். ஒதுக்குப்புறமாகக் கட்டி கொடுத்தால் நன்றாக இருக்கும் என்பது எங்களின் கோரிக்கை” என்கிறார்
Read in : English