Read in : English
உள்ளாட்சித் தேர்தலில் கணிசமாக வெற்றியடைந்த திமுக அரசு இப்போது தமிழ்நாட்டில் சொத்து வரியையும் சில குடிமை வரிகளையும் உயர்த்தியுள்ளது. முக்கியமான குடியிருப்புப் பகுதிகளில் 600 சதுர அடி வீடுகளுக்கு 50 சதவீத சொத்து வரி உயர்வும், 1,801 சதுர அடிக்கு மேலான பெரிய கட்டடங்களுக்கு 150 சதவீத உயர்வும் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. 50-லிருந்து 100 சதவீதம் வரையிலான வரி உயர்வு சென்னையில் சேர்க்கப்பட்ட பகுதிகளிலும் மாநகராட்சிகளிலும் வந்திருக்கிறது. அளவில் சிறியன வீடுகளை விட்டுவிட்டார்கள். குடியிருக்காத சொத்துகளுக்கு அதிகமான வரிகள் விதிக்கப்பட்டிருக்கின்றன.
எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் சொத்து வரியை உயர்த்துவது ஒரு பிரச்சினைதான். முதல்வர் மு.க.ஸ்டாலின், அஇஅதிமுக அரசு அதைச் செய்தபோது எதிர்த்தார். சொத்துவரி உயர்வு நடவடிக்கையை நியாயப்படுத்திய திமுக அரசு, 15-வது நிதிக்குழு பரிந்துரைகளின் அடிப்படையில் ஒன்றிய அரசு உருவாக்கிய கொள்கைகள் இந்த வரி உயர்வைக் கட்டாயமாக்கி விட்டது என்று சொல்கிறது. வரியை உயர்த்தினால்தான் மாநில அரசு, ஒன்றிய அரசின் திட்ட மானியங்களுக்கும் ஸ்வச் பாரத் திட்டத்தின் கீழும், அம்ருத் திட்டங்களின் கீழும் வழங்கப்படும் நிதிகளுக்கும் தகுதி பெற முடியும் என்று கட்டாயப்படுத்தப்பட்டதாக மாநில அரசு சொல்கிறது. உயர் பணவீக்கம், ஊழியர்களுக்கான அதிக சம்பளம், உட்கட்டமைப்புத் தேவை ஆகியவையும் இந்த வரி உயர்வின் காரணிகள்.
சென்னையில் 1998ஆம் ஆண்டிலிருந்தும், தமிழ்நாட்டின் பிறபகுதிகளில் 2007-லிருந்தும் சொத்துவரி மாற்றியமைக்கப்படவே இல்லை என்று சொல்கிறது தற்போதைய திமுக அரசு.
அஇஅதிமுக அரசு 2019இல் அதற்கு ஓராண்டுக்கு முன்பு அறிவித்த சொத்துவரி உயர்வால் வாக்காளர்களை எதிர்கொள்ள அஞ்சியது. அதனால் குடியிருப்புக் கட்டடங்களுக்கு 50 சதவீத வரி உயர்வும், குடியேற்றமில்லாத சொத்துக்களுக்கு 100 சதவீத வரிஉயர்வும் விதிக்க எண்ணியிருந்த திட்டத்தைக் கிடப்பில் போட்டது அப்போதைய அஇஅதிமுக அரசு. அந்தப் பிரச்சினையை ஆராய நான்கு உறுப்பினர்களைக் கொண்ட குழுவை அமைத்தது. சென்னையில் 1998ஆம் ஆண்டிலிருந்தும், தமிழ்நாட்டின் பிறபகுதிகளில் 2007-லிருந்தும் சொத்துவரி மாற்றியமைக்கப்படவே இல்லை என்று சொல்கிறது தற்போதைய திமுக அரசு.
எந்தவித நன்மைகளையும் ஏற்படுத்தாத வரிஉயர்வும், ஊழலும் அலட்சியமும் கொண்ட அதிகாரிகளும் வாக்காளர்களுக்குக் கோபத்தை ஏற்படுத்தும். வெளிப்படையான ஆட்சி, குறிப்பாக சேவைகளைக் கேட்கும் உரிமை பற்றிய சட்டம், கட்டட அனுமதிகளைப் பெறுவதற்கான தவறுகள் இல்லாத பலமான கட்டமைப்பு, குடிமைக் குறைகளைக் களையும் அமைப்புகள் ஆகியவற்றை பற்றி திமுக கொடுத்திருந்த முக்கியமான வாக்குறுதிகள் எல்லாம் இன்னும் முடியாத வேலைகளாகவே இருக்கின்றன.
மக்களிடமிருந்து கட்டண வசூல் செய்யும் விஷயத்தில் செய்ய வேண்டிய சீர்திருத்தங்களுக்கு மட்டுமே அரசுகள் முன்னுரிமை கொடுக்கின்றன. ஆனால் சேவைகள் வழங்கும் விஷயத்தில் எடுக்க வேண்டிய பலமான நடவடிக்கைகள் மட்டும் இல்லாமலே போய்விடுகின்றன.
அரசியல் கட்சிகளுக்கிடையே ஒத்த கருத்தும், சிறந்த சேவைகளுக்கான திட்டமும் இல்லாத பட்சத்தில் வரி உயர்வு என்பது அரசாங்கத்தை நடத்துவதில் ஆளுங்கட்சி எதிர்கொள்ளும் பெரும்சவால்தான்.
தண்ணீர் மற்றும் கழிவுநீர் வரியில் பெருந்தாக்கத்தை உண்டாக்கக்கூடிய சொத்துவரி உயர்வு அறிவிக்கப்பட்டவுடன், திமுகவின் கூட்டணிக் கட்சிகள் தர்மசங்கடத்தில் ஆழ்ந்தன. காங்கிரஸ் தலைவர் கே. எஸ். அழகிரி முதல்வர் இதற்கு ஒப்புதல் அளித்திருக்க மாட்டார் என்று சொன்னார். மார்க்சிஸ்ட் கட்சி இதைத் திரும்பப்பெறும்படி அரசை வலியுறுத்தியது. இந்த வரி உயர்வு பின்னால் வரவிருக்கும் ஆகப்பெரிய வரிகளுக்கான வெள்ளோட்டம் என்று அஇஅதிமுக சொன்னது.
வரி உயர்வுக்குப் பின்பு, சென்னையில் ஒரு 600 சதுர அடி சொத்தின் குறைந்தபட்ச சொத்து வரி ரூபாய் 1,215; அதுவே மும்பையில் ரூபாய் 2,157; பெங்களூரில் ரூபாய் 3,464; கொல்கத்தாவில் ரூபாய் 3,510. புனேயில் ரூபாய் 3,924.
உலகப் பொருளாதார உறவுகளின் இந்திய ஆராய்ச்சிக் கவுன்சில் 15-வது நிதிக்குழுவிற்காக “இந்தியாவின் மெட்ரோபாலிட்டன் மாநகரங்களில் முனிசிபல் கார்ப்பரேஷன்களின் நிதிகள்” என்ற தலைப்பில் ஓர் ஆய்வு நடத்தியது. ‘ஆக்ட்ரோய்’ ஒழிக்கப்பட்டபின் (ஜிஎஸ்டி கீழ் எல்லா வரிகளும் இணைக்கப்பட்டபின்பு), 2017-18-இல் நாட்டிலுள்ள ஆறு பெரிய மாநகராட்சிகள் ஒவ்வொன்றிற்கும் சொத்துவரியே ஆகப்பெரிய ‘சொந்த வருமான’ வழியாக இருந்தது என்று அந்த ஆய்வு சொன்னது.
தனிநபர் சொத்துவரி மும்பையில்தான் மிகஅதிகம்; அந்த வரிசையில் பின்வருபவை புனே, ஹைதராபாத், கொல்கத்தா, பெங்களூரு, அகமதாபாத் மற்றும் சென்னை. இந்தச் சொத்துவரி உயர்வு தவிர்க்க முடியாதது என்று நியாயப்படுத்திய தமிழக அரசு, முதன்முதலாக பெரிய சொத்துக்களிலிருந்து சிறிய, நடுத்தர குடியிருப்புகள் விஞ்ஞானரீதியாகத் தனியே பிரித்தெடுக்கப்பட்டிருக்கின்றன என்றும், அதனால் பெரும்பாலான வீட்டு உரிமையாளர்களுக்கு மிகப்பெரிய வரி உயர்வு தவிர்க்கப்பட்டிருக்கிறது என்றும் விவாதம் செய்தது. நியாயமான ஒப்பீட்டின்படிப் பார்த்தால், வரி உயர்வுக்குப் பின்பு, சென்னையில் ஒரு 600 சதுர அடி சொத்தின் குறைந்தபட்ச சொத்து வரி ரூபாய் 1,215; அதுவே மும்பையில் ரூபாய் 2,157; பெங்களூரில் ரூபாய் 3,464; கொல்கத்தாவில் ரூபாய் 3,510. புனேயில் ரூபாய் 3,924.
ஆனால் சென்னையிலும், விரிவாக்கப்பட்ட பகுதிகளிலும், புதிய புறநகர் மாநகராட்சிகளான தாம்பரம், மற்றும் ஆவடியிலும், மாநகராட்சிகளாக மாற்றப்பட்ட பல ஊராட்சிகளிலும் சேவைகளை முற்றிலும் சீரமைக்க காலக்கெடுவுடன் கூடிய திட்டம் எதையும் அரசு முன்வைக்கவில்லை. இந்த உள்ளாட்சி அமைப்பின் தரந்தாழ்ந்த நிலையை மேலும் மோசமாக்குவது, புதிய பெண் கவுன்சிலர்கள் பலர் பின்னுக்குத் தள்ளப்பட்டு அவர்களின் கணவன்மார்கள் கவுன்சிலர்களாகச் செயல்பட ஆரம்பித்துவிட்டார்கள் என்பதுதான்.
பெரிய சொத்துக்கள் கொண்ட பணக்காரர்களுக்கு வரிவிதிப்பது ஆக்கப்பூர்வமான நடவடிக்கைதான்; ஆனால் முக்கியமான பிரச்சினை என்னெவென்றால், வருடாந்திர வாடகை மதிப்பின் அடிப்படையில் இல்லாமல், நிஜமான செல்வத்தைக் காட்டும் சொத்தின் சந்தை மதிப்பை அடிப்படையாகக் கொண்டு மாநகரத்தை மண்டலங்களாகப் பிரிக்க வேண்டிய தேவை இருக்கிறது என்பதுதான். சில மாநிலங்கள் மூலதன மதிப்பின் அடிப்படையில் மதிப்பீடு செய்வதையும், அதற்கு நிகராக மதிப்பீடு செய்யக்கூடிய சேவைளையும் ஆதரிக்கின்றன; லஞ்சம் கொடுப்பதற்குப் பதில்.சிறந்த சேவைகளுக்குப் பயனாளிகள் கட்டணம் செலுத்தத் தயாராகவே இருப்பார்கள்.
உலகப் பொருளாதார உறவுகளின் இந்திய ஆராய்ச்சிக் கவுன்சில், வருவாயை மேலும் திரட்டும் வாய்ப்புகளை இழந்ததைச் சுட்டிக்காட்டுகிறது. “வரியல்லாத குறியீடுகளின் வீழ்ச்சிக்குக் காரணம் வழங்கப்பட்ட சேவைகளின் செலவைக் குறைவாக மீட்டெடுத்ததும், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தியதால் ஏறிய நிலமதிப்பை இம்பாக்ட் ஃபீஸ், அபிவிருத்திக் கட்டணம், பெட்டர்மெண்ட் கட்டணம் ஆகியவற்றின் மூலம் நிதியாக மாற்றத் தவறியதும்தான்,” என்று அந்தக் கவுன்சில் அறிக்கை சொல்கிறது.
பேருந்து சேவை மற்றும் மெட்ரோ ரயில் சேவை விரிவாக்கத்தால் சொத்துமதிப்பு ஏறியிருந்தாலும், உள்ளாட்சி அமைப்புகளுக்கு வீட்டுவரியைத் தவிர வேறெந்த வருமான உயர்வும் இல்லை. அந்தக் கவுன்சில் ஆய்வு செய்த 37 மாநகராட்சிகளில் எதிர்மறையான போக்குத்தான் நிலவுகிறது. கவுன்சில் அறிக்கை சொல்வது இது: “நகராட்சி வருமானத்தில் ’பலன் கட்டணங்களின்’ (பெட்டர்மண்ட், இம்பாக்ட் கட்டணங்கள், நிலமதிப்பைக் காட்டும் மற்ற கட்டணங்கள்) பங்கு 2012-13-ல் 11.7 சதவீதம் இருந்தது; அது 2017-18-ல் 10.3 சதவீதமாகக் குறைந்துபோனது.”
சென்னையில் மாநகராட்சி வருமானத்தில் ‘சொந்த வருமானப் பங்கு 2012-13-இல் 36.6 சதவீதத்திலிருந்து 2017-18-ல் 38.9 சதவீதமாக சிறிதளவு உயர்ந்தது. இது மும்பை, பெங்களூரு, ஹைதராபாத், கொல்கத்தா ஆகிய மாநகரங்களில் வீழ்ச்சி அடைந்திருக்கிறது. ஆனால் இது கோயம்புத்தூரில் 49 சதவீதத்திலிருந்து 43.3 சதவீதமாக சரிந்துவிட்டது. சென்னையின் சிறந்த செயல்பாட்டிற்க்கு அதன் செயல்திறன் காரணமாகக் காட்டப்படுகிறது; எனினும் அதன் முழுமையான வருவாய் இன்னும் அதிகமாக்கப்பட்டிருக்கலாம்.
2021-இல் சென்னையை முடக்கிய பெருவெள்ளம், பருவநிலை மாற்றத்தாலும், தாறுமாறான மழையாலும் திணறும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு இருக்கும் சவால்களைச் சுட்டிக்காட்டுகிறது. சென்னையிலும் கோயம்புத்தூரிலும் பருவமழை வெள்ளம் மற்றும் வறட்சி மேலாண்மைக்காக எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது?
நகர்ப்புற வாழ்க்கையின் தரத்திற்கேற்ப நியாயமான சொத்து வரிக்கு எதிர்ப்பு ஏதும் வரப்போவதில்லை. ஆனால், எதையும் சர்வசாதாரணமாக எடுத்துக்கொள்ளும் அரசியல் மற்றும் அதிகாரவர்க்கத்தின் மனப்பான்மையை முதலில் விட்டொழிக்க வேண்டும்.
2020-ஆம் ஆண்டு நிலவரப்படி, சென்னையில் 47 லட்சம் இருசக்கர வாகனங்களும், 9.6 லட்சம் கார்களும் பதியப்பட்டிருக்கின்றன. அவற்றிற்குப் போதுமான பார்க்கிங் வசதிகள் இல்லை. சாலையை விட்டு சற்று ஒதுங்கி பார்க்கிங் பண்ணுவதற்கென்று ஒருவெளியை உருவாக்கி அதன் மூலம் வருவாயைப் பெறலாம்; ஆனால் பெருநகர சென்னை மாநகராட்சியும் நெடுஞ்சாலைத் துறையும் அப்படிச் செய்வதில்லை. ஸ்மார்ட் சிட்டி கடைவளாகங்கள் மாவட்டமான தி. நகரில் மோட்டார் வாகனங்கள் நிறுத்துவதற்காகத் தனியாக ஒதுக்கப்பட்ட இடங்களில் பார்க்கிங் பண்ணப்படாமல் பாதசாரிகளுக்கான இடங்களில் நிறுத்தப்பட்டு நெருக்கடியை உண்டுபண்ணுகின்றன.
இப்படியாக சென்னை இரட்டைப் பிரச்சினைகளை எதிர்கொண்டிருக்கிறது: பார்க்கிங் செய்யப்பட்ட வண்டிகள் பாதசாரிகளுக்கான இடத்தை ஆக்ரமிக்கின்றன; உள்ளாட்சி அமைப்பு வருமானம் வரும் பல்வேறு வழிகளை ஆராயாமல் வருவாயை இழக்கிறது.
நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சென்னையின் அதிமுக்கிய பகுதிகளில் பார்க்கிங் செய்யும் வசதிகொண்ட அரசு நிலங்களையும், உள்ளாட்சி அமைப்பு நிலங்களையும் தணிக்கை செய்ய ஏற்பாடு செய்தால், வருவாய் ஈட்டும் வழிகளைக் கண்டுபிடிக்கலாம். தற்போது சென்னை மெட்ரோ நிலையங்களில் ஒதுக்கப்பட்டிருக்கும் வெளிகள், ரயிலில் பயணம் செய்யும் நோக்கமில்லாதவர்கள் தங்கள் கார்களை பார்க்கிங் செய்வதற்காகக் குறைந்தகட்டண வசதியைத் தருகின்றன.
தி நகரில் இருக்கும் சர் பிட்டி தியாகராய அரங்கு போன்ற மாநகராட்சிக்குச் சொந்தமான கட்டடங்களும், இன்னும் நிறைய சமூகக் கூடங்களும் வருமானம் ஈட்டித்தரும் வாய்ப்புகள் கொண்டவை; ஆனால் குடிமை நிர்வாகத்தின் திறனின்மையால் அவை சரியாகப் பயன்படுத்தப்படுவதில்லை.
நகர்ப்புற வாழ்க்கையின் தரத்திற்கேற்ப நியாயமான சொத்து வரிக்கு எதிர்ப்பு ஏதும் வரப்போவதில்லை. ஆனால், எதையும் சர்வசாதாரணமாக எடுத்துக்கொள்ளும் அரசியல் மற்றும் அதிகாரவர்க்கத்தின் மனப்பான்மையை முதலில் விட்டொழிக்க வேண்டும்.
Read in : English