Read in : English
சென்னையில் ஆழ்வார்திருநகரில் மார்ச் 28-ஆம் தேதியன்று ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளிப் பேருந்து ஏறி ஏழு வயது சிறுவன் வி.ஜே. தீக்ஷெத் இறந்து விட்டான். இந்த அதிர்ச்சியான செய்தியின் பின்னணியில், அன்றாடப் போக்குவரத்தைப் பாதுகாப்பானதாக ஆக்குவதற்காக ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறதா என்ற கேள்வி மீண்டும் எழுகிறது.
பள்ளிப் பேருந்துகளில் அடிபட்டு குழந்தைகள் இறப்பது உலகம் முழுவதும் போக்குவரத்துப் பாதுகாப்பு நிபுணர்களின் கவனத்தைத் தொடர்ந்து ஈர்த்துக் கொண்டிருக்கிறது. ஏனென்றால் ஓர் உயிரின் இழப்பு என்பது பல உயிர்களின் இழப்புதான். எத்தனை பேர் இறந்தாலும் – ஒன்றோ அல்லது பலவோ – குழந்தைகளின் இறப்பு என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.
பள்ளிப் பேருந்துகள் சம்பந்தப்பட்ட குழந்தை மரணங்கள், இந்தியா இன்னும் அவற்றைத் தடுக்கக்கூடிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில்லை என்பதைத்தான் காட்டுகின்றன. ஆழ்வார்திருநகர் வழக்கில் நிகழ்ந்தது போல, சம்பந்தப்பட்டவர்களைக் கைதுசெய்து, கடுமையான அறிக்கைகள் வெளியிட்டு பொதுமக்கள் கோபத்தைத் தணிப்பதுதான் மாநிலஅரசுகள் பொதுவாக ஆற்றுகின்ற உடனடி எதிர்வினை. பள்ளிப் போக்குவரத்தைப் பாதுகாப்பாக்கும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் விஷயம், விதிமீறல்களைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டிய அவசியம் மறக்கப்படுகிறது.
பள்ளிப் பேருந்துகள் சம்பந்தப்பட்ட குழந்தை மரணங்கள், இந்தியா இன்னும் அவற்றைத் தடுக்கக்கூடிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில்லை என்பதைத்தான் காட்டுகின்றன.
பேருந்துகளுக்கு, குறிப்பாக பள்ளிப்பேருந்துகளுக்கு, பாதுகாப்புத் தரங்களை மறுவரையறை செய்வதன் மூலம் இந்தச் சூழ்நிலையை மாற்றலாம். அதை மாற்றுவதற்கு அரசுகளுக்கு அரசியல் ரீதியான மனஉறுதி இருக்க வேண்டும். அத்துடன், கடுமையாக விதிகளை அமல்படுத்துவதும், பெற்றோர்களின் கவனமும், மக்களின் கண்காணிப்பும் சேரவேண்டும்.
எந்தக் கனரக வண்டிக்கும் இருப்பதுபோலவே பள்ளிப் பேருந்துகளுக்கும் கண்மறைக்கும் இடங்களும் (பிளைண்ட் ஸ்பாட்ஸ்), செயலற்ற பகுதிகளும் (டெட் ஜோன்ஸ்) உண்டு. வண்டியின் முன்பு நிற்கும் குழந்தைகளைப் பார்க்க விடாமல் ஓட்டுநர்களைத் தடுப்பது அவைதான். இது இந்தியாவுக்கே உரித்தான ஒரு நிகழ்வு அல்ல.
பேருந்துக்கு முன்னால் இருக்கும் இந்தச் ‘செயலற்ற பகுதிகளை’க் கண்டுபிடிக்க எளிதாக உதவுவது குறுக்குப்பார்வைக் கண்ணாடிகள்தான். இந்திய மோட்டார் வாகன ஆராய்ச்சி நிறுவனம் என்னும் தரக்கட்டுப்பாடு அமைப்பு வெளியிட்ட தொழில்நுட்ப தரஅளவுகோல்கள்படி, பேருந்தின் முன்பு இரண்டு குறிப்பிட்ட கண்ணாடிகள் பொருத்த வேண்டும். ஆனால் பள்ளிப் பேருந்துகளுக்கு மட்டும் அப்படியொரு பரிந்துரையேதும் இல்லை. மாறாக குறுக்குப் பார்வைக் கண்ணாடிகள் பல நாடுகளில் பயன்படுத்தப்படுகின்றன. ஏனென்றால் நுட்பமாகப் பார்த்தால் பேருந்தின் முன்பாக இருப்பவற்றை ஓட்டுநர் காண்பதற்கு அவைதான் உதவிசெய்கின்றன. இலங்கையில் 1980-களில் சிறு பயணி வேன்கள்கூட அவற்றை உபயோகப்படுத்திக் கொண்டிருந்தன.
கேமராக்களை, அருகாமை உணரிகளை (பிராக்ஸிமிட்டி சென்சர்ஸ்) வாகனங்களில் பொருத்த வேண்டிய தேவையை ஐக்கிய நாடுகளின் சபை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்திருக்கிறது.
தற்போது தொழில்நுட்பம் வளர்ந்திருக்கிறது. மோட்டார் வாகன தரங்களின் ஒருபகுதியாக, கேமராக்களை, அருகாமை உணரிகளை (பிராக்ஸிமிட்டி சென்சர்ஸ்) வாகனங்களில் பொருத்த வேண்டிய தேவையை ஐக்கிய நாடுகளின் சபை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்திருக்கிறது. ஐ.நா. ஐரோப்பிய பொருளாதார ஆணையத்தின் விதி எண் 46, ஓட்டுநர்களுக்கான ‘மறைமுகமான பார்வைகள்’ தரும் கருவிகள் மீதான தொழில்நுட்ப தர அளவுகளைப் பற்றி விரிவாகப் பேசுகிறது. இந்த ஆணைகளோடு, வாகனங்களில் பொருத்தவேண்டிய கண்ணாடிகளின் தரங்களைப் பற்றிய இந்திய வாகன ஆராய்ச்சி நிறுவனத்தின் கட்டளைகள் மிகவும் பொருந்தியே இருக்கின்றன.
குறுக்குப் பார்வைக் கண்ணாடிகள்கூட எப்போதும் சரியாக வேலை செய்யும் என்று சொல்லமுடியாது. இது ஆச்சரியமாக இருக்கலாம். ஏரிக்கரை (லேக் ஷோர்) பள்ளி மாவட்டம் நியூயார்க்கில் ஒரு பரிசோதனை நடத்தியது. எஞ்சினுக்குப் பின்னால் கேபின் கொண்ட டிரக் வண்டிகளில் பம்பருக்குக் கீழே, டயர்களுக்கு நெருக்கமாக உள்ள முன்பகுதி ’பிளைண்ட் ஸ்பாட்’ எனப்படுகிறது. பரிசோதனைக்காக அப்பகுதியில் அமர்த்தப்பட்டிருந்த ஆடையணிந்த குழந்தை பொம்மைகளைத் தங்களால் கண்ணாடிகளில் பார்க்கமுடியவில்லை என்று பள்ளிப் பேருந்து ஓட்டுநர்கள் சொன்னது அதிர்ச்சியைத் தந்தது. இவ்வளவுக்கும் அந்தப் பேருந்துகள் அமெரிக்க அரசின் மோட்டார் வாகனப் பாதுகாப்பு விதிகள்படியே ஓடுபவை. ஓட்டுநர்கள் வாகனக் கண்ணாடிப் பயிற்சியை இந்த லேக் ஷோர் பகுதியில்தான் எடுத்துக்கொள்கிறார்கள். அந்தப் பரிசோதனையைப் பற்றி லிங்கிடுஇன் சமூக வலைத்தளத்தில் நியூயார்க் மாநிலத்தின் வாகனப் ப்பாதுகாப்பு நிபுணர் விக்டோரியா டிகார்லோ இப்படி எழுதுகிறார்: “நிஜத்தில் உங்களுக்கு என்ன பட்டம் இருக்கிறது என்பதோ, பள்ளிப்பேருந்து ஓட்டுவதில் எவ்வளவு ஆண்டுகள் அனுபவம் உள்ளது என்பதோ முக்கியமில்லை. வண்டி ஓட்டும்போது உங்களால் கண்டுபிடிக்க முடியாத கண்மறைவுப் பகுதிகள் நிறையவே சாலைகளில் உண்டு,. நம் பள்ளிப்பேருந்துகளுக்கு அவசரமாகச் சிறந்த உபகரணங்கள் தேவைப்படுகின்றன என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.”
பேருந்துப் பாதுகாப்பில் கவனம் செலுத்தும் நிறுவனங்கள் 360 பாகை கேமராக்களை உருவாக்குவதில் இறங்கியுள்ளன. ஓட்டுநரின் கேபினில் பேருந்தைச் சுற்றியிருக்கும் காட்சியை அந்தக் கேமராக்கள் படம்பிடிக்கும். மேலும் அருகாமை உணரிகள் (பிராக்ஸிமிட்டி சென்சர்கள்) வெளியே சுற்றியிருக்கும் குழந்தைகள் மற்றும் பொருட்களைக் குறித்து எச்சரிக்கை செய்யும். பேருந்தின் முன்பக்கம், பின்பக்கம், பக்கவாட்டுப் பகுதிகள் என்று அனைத்தையும் படம்பிடித்து பேருந்தைச் சுற்றியிருக்கும் ஏரியாவின் முழுமையான தோற்றத்தை ஓட்டுநர்க்குக் காட்டும் நான்கு கேமராக்கள் ஒரு நல்ல வணிகப்பொருளுக்கான உதாரணங்கள். பேருந்தில் பயணிக்கும் குழந்தைகளின் பாதுகாப்பைக் கண்காணிப்பது போலவே இதுவும் முக்கியமானதுதான்.
ஒரு பள்ளிப்பேருந்து என்பது ஓட்டுநர் தவிர்த்து 13 பேர் பயணம் செய்யும் நோக்கத்திற்காகவே தயாரிக்கப்பட்டிருக்கும் வாகனம். ஒவ்வொரு பேருந்திலும் குறுக்குப்பார்வைக் கண்ணாடிகள் பொருத்த வேண்டும் என்று அரசுகள் ஆணையிட வேண்டும்.
இந்தியாவின் மோட்டார் வாகனத் தொழில் அளவுகோல்கள்படி, ஒரு பள்ளிப்பேருந்து என்பது ஓட்டுநர் தவிர்த்து 13 பேர் பயணம் செய்யும் நோக்கத்திற்காகவே தயாரிக்கப்பட்டிருக்கும் வாகனம். ஒவ்வொரு பேருந்திலும் குறுக்குப்பார்வைக் கண்ணாடிகள் பொருத்த வேண்டும் என்று அரசுகள் ஆணையிட வேண்டும். அதுதான் ஆக எளிமையான, அதிகம் செலவு வைக்காத ஒரு நடவடிக்கை. இத்தோடு பேருந்தில் ஒரு வேலையாளின் இருப்பும் அவசியம்; குழந்தைகள் பாதுகாப்பாக சாலையைக் கடப்பதற்கு அவர் உதவ வேண்டும்.
ஆனால் இந்த எச்சரிக்கை ஏற்பாடெல்லாம் பள்ளிக்குக் குழந்தைகளைச் சுமந்து செல்லும் பலதரப்பட்ட வாகனங்களில் எடுபடுவதில்லை. தேசம் முழுக்க இருக்கும் ஒரு போக்குதான் இது. அந்த மாதிரியான வாகனங்கள்மீது பெற்றோர்களுக்கு எந்தக்கட்டுப்பாடும் கிடையாது. ஏனென்றால் அந்த வாகனங்களுக்குச் சட்டரீதியான விதிமுறைகள் என்று ஏதுமில்லை. பெரிய பள்ளிப்பேருந்துகளில் மட்டுமல்ல, சிறிய வேன்களிலும், கூட்டம்நிறைந்த ஆட்டோக்களிலும் பயணித்து காயம்பட்ட, மரணித்த குழந்தைகள் உண்டு என்பதை இங்கே சுட்டிக்காட்டித்தான் ஆகவேண்டும். ஆனாலும் இந்த வாகனங்கள் தொடர்ந்து கட்டுப்படுத்தப்படாமல் இயங்கிக் கொண்டிருக்கின்றன.
இங்கே முன்வைக்கப்படும் கேள்விகள் இவைதான்: பாதுகாப்பான பள்ளிப் போக்குவரத்து சம்பந்தமாக மாநில அரசுகள் எந்த அளவுக்குக் கடமைப்பட்டிருக்கின்றன? பள்ளிப்பேருந்துகளுக்கான விதிமுறைகளை மீண்டும் பரிசீலித்து திருத்திய, மேம்படுத்தப்பட்ட விதிகளை வழங்குமாறு மாநிலங்கள் ஒன்றிய அரசையும், இந்திய மோட்டார்வாகன ஆராய்ச்சிக் கழகத்திடம் வற்புறுத்தி உள்ளனவா?
இந்தியாவில் சாலைப்பாதுகாப்பு விஷயத்தில் அரசுகளுக்கு இருக்கும் மெத்தனத்தைப் பார்க்கும்போது, மேலே சொன்னவை எல்லாம் கொஞ்சம் அதிகமானதாகவே தோன்றலாம். ஒவ்வொரு ஆண்டும் 1.5 லட்சம் உயிர்களைக் காவுவாங்கும், அதைவிட அதிக மடங்கில் ஏராளமானவர்களைக் காயப்படுத்தும் சாலை விபத்துகள் அநேகமாக இந்தியாவில்தான் மிகஅதிகமாக இருக்கும். பள்ளிக்குச் செல்லும் பயணங்களின்போது நிகழும் மிகக்கொடூரமான விபத்துகள்கூட அரசுகளைச் செயல்பட வைக்கவில்லை என்பதுதான் ஆகப்பெரிய வேதனைக்குரிய அவலம்.
Read in : English