Read in : English
காட்சி மயக்கத்தை ஏற்படுத்தும் கற்பனையாவும் காணா இன்பத்தைத் தரும் வல்லமை கொண்டவை. அந்த வகையில், ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் பால்யத்தை உயிர்ப்பிப்பவை அனிமேஷன், விஷுவல் எபெக்ட்ஸ், கேமிங் மற்றும் காமிக்ஸ் துறைகள். இந்நான்கையும் ஒன்று சேர்த்தால் கிடைக்கும் ஏவிஜிசியின் வளர்ச்சி, கடந்த 20 ஆண்டுகளில் கற்பனைக்கும் எட்டாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இதன் அசுர வளர்ச்சிக்கேற்ப உட்கட்டமைப்பை வளர்த்தெடுக்கும் நோக்கில், ஏவிஜிசியை மேம்படுத்துவதற்கான ஒரு பணிக்குழு (TASK FORCE) அமைக்கப்படுமென்று 2022-23 பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். இத்துறையின் வளர்ச்சியையொட்டி அவர் வெளியிட்டுள்ள அறிவிப்புகள், இன்னும் சில ஆண்டுகளில் இந்தியாவில் ஏவிஜிசியின் வளர்ச்சி விஸ்வரூபமெடுக்குமென்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அது நிகழுமா?
கடந்த ஆண்டைப் பொறுத்தவரை, உலகளவில் இத்துறை சார்ந்து நடைபெற்றுவரும் பணிகளில் இந்தியாவின் பங்களிப்பு சுமார் 10 சதவீதம் இருந்து வருவதாக இந்தியத் தொழில் கூட்டமைப்பும், பாஸ்டன் ஆலோசனைக் குழுவும் தெரிவித்துள்ளன.
குழந்தைமையை உயிர்ப்பிக்கும் அனிமேஷன் படைப்புகளும், புனைவை உண்மையாக்கும் விஷுவல் எபெக்ட்ஸ் நுட்பங்களும், பொழுதுபோக்கு மகுடத்தின் இன்னொரு சிறகாக மாறியிருக்கும் கேமிங்கின் அசுரத்தனமும் விதவிதமான கற்பனைகளுக்கு இடம்தரும் காமிஸ்களும் காட்சி சார்ந்த கற்பனையாக்கத்தை எட்டாத உயரத்திற்கு எடுத்துச் சென்று வருகின்றன. இத்துறை சார்ந்து பணியாற்றுபவர்களும், நிறுவனங்களும் கடந்த பத்தாண்டுகளில் எண்ணிக்கையில் பல மடங்காக உயர்ந்திருக்கின்றன. கடந்த ஆண்டைப் பொறுத்தவரை, உலகளவில் இத்துறை சார்ந்து நடைபெற்றுவரும் பணிகளில் இந்தியாவின் பங்களிப்பு சுமார் 10 சதவீதம் இருந்து வருவதாக இந்தியத் தொழில் கூட்டமைப்பும் (CII), பாஸ்டன் ஆலோசனைக் குழுவும் (BCG). தெரிவித்துள்ளன.
கடந்த ஆண்டில் மட்டும் இந்தியாவில் கேமிங் துறையானது அமெரிக்க டாலர் மதிப்பில் 1.5 பில்லியன் டாலர் வருமானத்தை ஈட்டியுள்ளதாக பிசிஜி-செகோயா இந்தியாவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2025இல் இது 5 பில்லியன் டாலராக அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல, இந்தியாவிலுள்ள ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு பிரிவின் வளர்ச்சியானது 2030இல் 55-70 பில்லியன் டாலர் என்றளவில் இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது ஏவிஜிசி சார்ந்து சுமார் 1.7 முதல் 1.8 லட்சம் பேர் வரை பணியாற்றி வருவதாகச் சொல்லப்படுகிறது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிலுள்ள பல திரைப்பட மற்றும் காட்சி நிறுவனங்களின் பார்வை இந்தியா நோக்கித் திரும்பியுள்ளதால், கடந்த பத்தாண்டுகளில் இந்திய ஏவிஜிசி நிறுவனங்களின் வளர்ச்சி அபாரமாக இருந்து வருகிறது. வெறுமனே திரைப்படங்கள் மற்றும் இதர பொழுதுபோக்கு துறைகள் மட்டுமல்லாமல் கட்டுமானக்கலை, வாழ்வறிவியல், சட்டம், கல்வி, தொழில்துறை, நகர்ப்புறத் திட்டமிடல், விளையாட்டு, டிஜிட்டல் உலகம் என்று பலவற்றில் ஏவிஜிசியின் பங்கு இருந்து வருகிறது.
இந்த நிலையில்தான், 2022-23ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் உரையில் ஏவிஜிசி வளர்ச்சிக்கென்று ஒரு பணிக்குழு அமைக்கப்படுமென்றும், இது சார்ந்த கல்வி மற்றும் ஆரோக்கியமான விவாதங்களை முன்னெடுக்க ஒரு டிஜிட்டல் பல்கலைக்கழகம் உருவாக்கப்படுமென்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருப்பது பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.
மத்திய அமைச்சரின் அறிவிப்புக்குப் பெரும்பாலான ஊடக நிறுவனங்களும், பல மொழிகள் சார்ந்த திரைப்படத் துறையினரும் ஏவிஜிசி சார்ந்தியங்கும் நிபுணர்களும் பாராட்டு தெரிவித்துள்ளனர். தமிழ் திரைப்பட வரலாற்றில் ஆர்வம் கொண்டவரும், குறிப்பிடத்தக்க தயாரிப்பாளர்களில் ஒருவருமான தனஞ்ஜெயன் பேசுகையில், மத்திய அரசின் அறிவிப்பு உண்மையில் வரவேற்கத்தக்கது என்று தெரிவித்தார். ”2000களில் இந்தியாவின் பல நகரங்களில் தகவல் தொழில்நுட்பத்துறை பெருவளர்ச்சி பெற்றதற்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் வழங்கிய சலுகைகளே காரணம். அதன் காரணமாக, இன்று ஐ.டி. துறை பெற்றிருக்கும் வளர்ச்சியை எவரும் உணர முடியும். அதேபோன்றதொரு வளர்ச்சியை ஏவிஜிசியும் பெற, அந்நிறுவனங்களுக்கு வரி விதிப்பில் சலுகைகள், மானியங்கள் வழங்கப்பட வேண்டும்” என்றார்.
அதேபோல மின்சாரம் வழங்குவதிலும், ஸ்டூடியோவை நிர்வகிப்பதிலும் உள்ள நடைமுறைகளில் சலுகைகள் வழங்கினால் மட்டுமே நிறைய அந்நிய முதலீடுகள் இத்துறையில் கிடைக்குமென்று கூறப்படுகிறது. இத்துறைக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி விதிப்பதிலும் சலுகை காட்டினால் நன்றாக இருக்குமென்பது இத்துறையினரின் எதிர்பார்ப்பாக உள்ளது. வெளிநாட்டு நிறுவனங்கள் மட்டுமல்லாமல் இந்தியத் திரைப்படத் துறை சார்ந்தியங்கும் நிறுவனங்களுக்கும் இது நலம் பயக்கும்.
விஷுவல் எபெக்ட்ஸ் துறையில் நீண்டகால அனுபவமிக்க நிபுணர் ஒருவர் பெயர் குறிப்பிட விரும்பாமல் நம்மிடம் பேசினார். இந்தி மற்றும் தெலுங்கு திரைப்படங்களை ஒப்பிடுகையில், தமிழ் திரையுலகத்தில் விஎஃப்எக்ஸ் பயன்பாடு மிகவும் குறைவு என்பது அவரது கருத்து. ”சுமார் 11 ஆண்டுகளுக்கு முன் லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்த பல திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்கள் லண்டனுக்கு இடம்பெயர்ந்தன. அங்கு, அந்நிறுவனங்களுக்கான வரியில் சுமார் 30 சதவீதம் வரை திருப்பித் தரப்பட்டது. இது, திரைப்படத் தயாரிப்பாளர்களுக்குப் பல வகையில் லாபம் தந்தது. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில் ஏவிஜிசி வளர்ச்சி பெற்றதற்கும் இதுவே காரணம்.
கொரோனா காலத்தில் சுத்தமாக திரைப்படத் தயாரிப்பு முடங்கிய நிலையில், கடந்த ஆண்டு ஏவிஜிசி சார்ந்தியங்கும் பணியாளர்கள் வேலையிழந்தபோது பிரிட்டன் அரசு அவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கியது. மீண்டும் அத்துறை உயிர்ப்புற்றபிறகு, அவர்கள் அனைவரும் மீண்டும் தத்தமது வேலைகளுக்குத் திரும்பியிருக்கின்றனர். ஆனால், இந்தியாவில் இப்போதும் ஏவிசிஜி ஒழுங்கமைப்புக்கு உட்படாத ஒன்றாக கருதப்படுகிறது” என்று வருத்தம் தெரிவித்தார்.
சில ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனங்கள் இந்தியாவில் விஎஃப் எக்ஸ் மேற்கொள்ள ஆர்வம் காட்டுவதில் குறைவான தொகையில் பணியாளர்கள் கிடைப்பதும் ஒரு காரணம். இதனால், அதிக திறனுக்கு குறைவான ஊதியம் பெறும் நிலைமையும் இந்தியாவில் உள்ளது என்கிறார் இவர்.
பணிகள் அடிப்படையில் பார்த்தால் பெங்களூரு, ஹைதராபாத், மும்பைக்கு அடுத்த இடத்தை சென்னை பிடித்துள்ளது.
இந்தியாவில் கர்நாடகாவில்தான் ஏவிஜிசி நிறுவனங்களின் வளர்ச்சி அதிகளவில் உள்ளது. 2020ஆம் ஆண்டு பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டபடி, பெங்களூருவில் கடந்த மாதம் ஏவிஜிசி வளர்ச்சிக்கான மையமும் அமைக்கப்பட்டுள்ளது. பெங்களூருவுக்கு அடுத்தபடியாக ஹைதராபாத், மும்பை, அகமதாபாத், திருவனந்தபுரம், சென்னை என்று இத்துறையின் நிதி வளர்ச்சி இருந்து வருவதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், பணிகள் அடிப்படையில் பார்த்தால் பெங்களூரு, ஹைதராபாத், மும்பைக்கு அடுத்த இடத்தை சென்னை பிடித்துள்ளது என்று தெரிவித்தார் நம்மிடம் பேசிய இத்துறையைச் சேர்ந்த நிபுணர்.
ஏவிஜிசியில் வெறுமனே படைப்பாக்கம் சார்ந்த கலைகளோடு க்ளவுட் என்ஜினியரிங், டேட்டாபேஸ் என்ஜினியரிங், இமேஜ் ப்ராசஸிங் என்று பல தொழில்நுட்ப பணிகளும் உள்ளன. அதற்கேற்ப மத்திய அரசு பாடப்பிரிவுகளில் கல்வி அளிக்க வேண்டுமென்பதே ஏவிஜிசியில் இயங்கி வருபவர்களின் எதிர்பார்ப்பு. அப்படியொரு நிலை வாய்த்தால், இதனால் வேலைவாய்ப்புகள் பெருகுவதோடு இத்துறையின் வருமானமும் எதிர்பாராத அளவில் உயரும்.
கொரோனாவுக்குப் பிறகு உலகமே புதிய இயல்புக்கு மாறிவரும் நிலையில், மத்திய அரசின் அறிவிப்பு வெறுமனே வார்த்தைகளாக இருந்துவிடாமல் ஏவிஜிசியின் பாய்ச்சலுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதே இத்துறையைச் சேர்ந்தவர்களின் எதிர்பார்ப்பு.
Read in : English











