Read in : English
பள்ளிப் படிப்பை இடையிலேயே விட்டுவிட்டு கட்டடம் கட்டும் பணிகளில் குழந்தைத் தொழிலாளியாக வேலை பார்த்த கிராமத்து விளிம்பு நிலை குடும்பத்தைச் சேர்ந்த சி. செல்வம் (33), மீண்டும் அரசுப் பள்ளியில் சேர்ந்து தன்னம்பிக்கையுடன் படித்து, பிளஸ் டூ தேர்ச்சி பெற்று, அண்ணா பல்கலைக்கழகத்தின் குரோம்பேட்டை எம்ஐடியில் பிஇ படித்து என்ஜினியராகி, சொந்தமாகக் கட்டுமான நிறுவனத்தை உருவாக்கி, அதன் மேனேஜிங் டைரக்டராக உயர்ந்துள்ளார். அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் படித்த அவர், அந்தக் குடும்பத்தின் முதல் தலைமுறை பட்டதாரி.
தர்மபுரியிலிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சிறிய கிராமம் அடிலம். மிகவும் பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்த அவரது அப்பா சின்னசாமி விவசாயக் கூலி. அம்மா மகாலட்சுமி கடந்த ஆண்டு இறந்துவிட்டார். அப்பாவும், அம்மாவும் பள்ளிக்கூடம் போனதில்லை. இரண்டு அண்ணன்களும் தொடக்கப் பள்ளியை முடிக்கவில்லை. அவரது அக்கா மட்டும் 8வது வரை படித்தார். இவர்களுக்குத் திருமணமாகிவிட்டது.
அடிலம் அரசு தொடக்கப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரை படித்தார் செல்வம். கூரை வீட்டில்தான் அவர்களது குடும்பம் வசித்தது. மழை வந்தால் வீட்டில் மழைத் தண்ணீர் ஒழுகும். அந்த அளவுக்கு வீடு மோசமான நிலையில் இருந்தது. வீட்டில் கரண்ட் வசதி கிடையாது. வீட்டில் இரவில் படிக்க வேண்டும் என்றால் மண்ணெணெய் விளக்குதான்.
மழை வந்தால் வீட்டில் மழைத் தண்ணீர் ஒழுகும். அந்த அளவுக்கு வீடு மோசமான நிலையில் இருந்தது. வீட்டில் கரண்ட் வசதி கிடையாது. வீட்டில் இரவில் படிக்க வேண்டும் என்றால் மண்ணெணெய் விளக்குதான்.
இந்த சூழ்நிலையில் படித்த செல்வம், பெரியம்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 6ஆம் வகுப்பில் படிக்கச் சேர்ந்தார். அடிலத்திலிருந்து பெரியம்பட்டியில் உள்ள பள்ளிக்கூடத்துக்கு 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து போய் படிக்க வேண்டும். இந்தச் சூழ்நிலையிலும், செல்வம் நன்றாகப் படித்து வந்தார். 2006ஆம் ஆண்டில் பத்தாம் வகுப்புத் தேர்வில் 500க்கு 430 மதிப்பெண்கள் பெற்றார்.
அதையடுத்து, ஊரிலிருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காரிமங்கலத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் ஒன் வகுப்பில் தமிழ் வழியில் கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடப்பிரிவுகளை எடுத்துப் படித்தார்.
குடும்ப சூழ்நிலை காரணமாக படிப்பை இடையிலேயே விட்டுவிட்டு வேலைக்குச் செல்ல வேண்டிய நிலைமை குறித்தும், பின்னர் படித்து முன்னேறியது குறித்தும் நம்மிடம் பகிர்ந்து கொண்டார் செல்வம்:
“அப்போது, வீட்டில் பொருளாதார ரீதியாக கஷ்டம். அதனால் பள்ளிப் படிப்பைத் தொடர முடியவில்லை. ஏதாவது, வேலைக்குப் போய் சம்பாதிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. எங்களது ஊரிலிருந்து பலர் பெங்களூர் போய் வேலை பார்த்தனர். அதனால், நானும் பெங்களூருக்குப் போய் கட்டட வேலை பார்த்தேன். சிமெண்ட், மணலைக் கலக்குதல் போன்ற கட்டட வேலைகளைச் செய்வேன். அவர்கள் கொடுக்கும் இடத்திலேயே தங்கி இருப்பேன். ஒரு நாளைக்கு ரூ.150லிருந்து ரூ.190 வரை சம்பளம் கொடுப்பார்கள். அப்புறம், குடகு மலையில் மிளகு பறிக்கும் வேலைக்குச் சென்றுவிட்டேன். மரத்தில் ஏணியை வைத்து ஏறி மிளகைப் பறிப்பது கஷ்டமான வேலை. அத்துடன், அவர்கள் கொடுக்கும் வசதிகளற்ற சிறிய இடத்தில்தான் தங்கியிருக்க வேண்டும். அங்குள்ள எஸ்டேட்டுகளில் காபிக்கொட்டையைப் பறிக்கும் வேலையையும் செய்தேன். இப்படி, படிப்பை விட்டு விட்டு வேலை பார்ப்பதிலேயே இரண்டு ஆண்டுகள் கழிந்துவிட்டது. கஷ்டப்பட்டு வேலை பார்த்தாலும்கூட, நல்ல வாழ்க்கை வாழ முடியாது என்று எனக்குப் புரிந்தது. எப்படியும் படிப்புதான் வாழ்க்கையில் நிரந்தரம் என்று தோன்ற ஆரம்பித்துவிட்டது. எனவே, ஊருக்கு வந்து படிக்கலாம் என்று நினைத்தேன்.
நானும் பெங்களூருக்குப் போய் கட்டட வேலை பார்த்தேன். சிமெண்ட், மணலைக் கலக்குதல் போன்ற கட்டட வேலைகளைச் செய்வேன். அப்புறம், குடகு மலையில் மிளகு பறிக்கும் வேலைக்குச் சென்றுவிட்டேன்.
நான் வேலைபார்த்து சேர்த்து வைத்த காசுடன் சேர்த்து, கடனும் வாங்கி எங்களது வீட்டின் கூரையை மாற்றி சரிசெய்தோம். அப்புறம், பெரியாம்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியிலேயே பிளஸ் டூ வகுப்பில் சேர்ந்து படிக்க ஆரம்பித்தேன். இரண்டு ஆண்டுகள் படிப்பை விட்டுவிட்டதால், பள்ளியில் பாடங்களைப் படிக்கக் கஷ்டமாக இருந்தது. அப்புறம் இரண்டு மூன்று மாதங்களில் ஆர்வத்துடன் படிக்க ஆரம்பித்துவிட்டேன். ஆனால் டியூஷன் எதுவும் போனது இல்லை. வீட்டிலேயே நானே படிப்பேன். 2010ஆம் ஆண்டில் நடைபெற்ற பிளஸ் டூ தேர்வில் 1200க்கு 1029 மதிப்பெண்கள் பெற்றேன். கணிதத்தில் 200க்கு 200 மதிப்பெண்கள் எடுத்தேன். வேதியியலில் 199 மதிப்பெண்கள். இயற்பியலில் 191 மதிப்பெண்கள். பொறியியல் படிப்பில் சேர எனது கட் ஆஃப் மதிப்பெண்கள் 197.5. எனக்கு, சென்னை குரோம்பேட்டையில் உள்ள எம்ஐடியில் எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிக்கேஷன் என்ஜினியரிங் பாடப்பிரிவில் இடம் கிடைத்தது. அகரம் பவுண்டேஷன் உதவி கிடைத்ததால் விடுதியில் தங்கிப் படிக்கச் செலவுகளை அவர்கள் பார்த்துக் கொண்டார்கள்.
தமிழ் வழியில் படித்து விட்டு, பொறியியல் கல்லூரியில் ஆங்கில வழியில் படிக்க தடுமாறினேன். அதனால், ஆங்கில வழியில் நடத்திய பாடங்கள் புரியாததால், அரியர்ஸ் வைக்க வேண்டியது வந்தது. ஆனால், இறுதியாண்டில் படித்து முடிக்கும் முன்பே அரியர்ஸ் பாடங்களில் தேர்ச்சி பெற்றதுடன், அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்றேன். கேம்பஸ் இன்டர்வியூ மூலம் தனியார் நிறுவனங்களில் வேலை கிடைத்தது. அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் அரசுப் பணியில் சேர வேண்டும் என்பது எனது விருப்பம். அதனால், அந்த நிறுவனங்களில் வேலைக்குச் சேரவில்லை.
இதற்கிடையே, புதுச்சேரி ஆரோவில்லில் உள்ள தபஸ்யா டிசைன் ஸ்டுடியோ மூலம் அந்த வேலை நடந்தது. அந்த நிறுவனத்துக்காக ஹைதராபாத், தில்லி, பெங்களூர் போன்ற இடங்களில் வேலை செய்தேன். அங்கு எலெக்ட்ரிக் பணிகள், பிளம்பிங் பணிகளை செய்வதற்கு சைட் என்ஜினியராக இரண்டரை ஆண்டுகள் பணிபுரிந்தேன்.
எனது தொழில்நுட்பத் திறமையை வளர்த்துக் கொள்ளும் நோக்கத்துடன் மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் பிளம்பிங் குறித்த முதுநிலை டிப்ளமோ படிப்பை பாரதிதாசன் பல்கலைக்கழக அங்கீகாரம் பெற்ற தனியார் நிறுவனத்தில் படித்தேன். அதையடுத்து அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெற்ற சேலத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஃபயர் சேப்டி குறித்த முதுநிலை டிப்ளமோவையும் படித்தேன்.
புனேயில் உள்ள மெத்தடேக்ஸ் சிஸ்டம்ஸ் (Methodex Systems) என்ற ஆர்க்கிடெக்ட் நிறுவன்ததில் வேலை கிடைத்தது அங்கு ஓராண்டு வேலைபார்த்தேன். பிறகு ஊருக்கு வந்து, நானே சொந்தமாக ஸ்ரீ கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் என்ற நிறுவனத்தைத் தொடங்கினேன். தர்மபுரி, வந்தவாசி, திருவண்ணாமலை ஆகிய இடங்களில் எனது நிறுவனத்தின் சார்பில் வீடு கட்டும் பணிகளைச் செய்து வருகிறேன். தற்போது கனடாவில் உள்ள நிறுவனம் ஒன்றுக்கு மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் பிளம்பிங் கன்ஸல்டன்ட்டாக இருக்கிறேன். என்னாலும் சொந்தக் காலில் சுயமாக நிற்க முடியும் என்ற தன்னம்பிக்கையுடன் செயல்படும் அளவுக்கு வந்துள்ளேன். நான் படித்த பெரியம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் நூலகத்தை பராமரிப்பதற்கு நண்பர்களுடன் சேர்ந்து உதவி இருக்கிறேன். எனது பள்ளிக்கு நான் செய்ய முடிந்த சிறிய உதவி” என்கிறார் செல்வம்.
Read in : English