Read in : English
ஒரு சதுர அடி ரூ.15,000 வரை விலை போகும் சென்னை மாநகரத்தில், பொதுவெளிகள் முக்கியமாக நீர்நிலைகளையும் அதைச்சுற்றியுள்ள பகுதிகள் எல்லாம் பணங்காய்ச்சி மரங்கள். இந்த வரைமுறை இல்லாத பேராசை சென்னை மாநகரை இந்த வருடமும் வெள்ளத்தில் தத்தளிக்க வைத்துள்ளது.
மிகையான ஊக வணிகத்தில் இயங்கும் ரியல் எஸ்டேட் தொழில் சென்னையின் மிச்சமிருக்கும் நீர்நிலைகளையும் சதுப்பு நிலங்களையும் கபளீகரம் செய்து முடித்தாயிற்று. ஆனால் இது தொடங்கி பல காலமாகின்றன.
காலனியாதிக்க சக்திகள் செரித்ததின் மிச்சத்தை அரசியல்வாதிகள் அபகரிக்க தொடங்கியபோது ஆரம்பித்த சுரண்டல் இன்னும் முடிந்தபாடில்லை.
சென்னை நகரத்தில் லேக் வியூ சாலைகள் பல உண்டு .ஆனால் லேக் எனப்படும் ஏரி, குளங்கள்தான் கண்ணில் தென்படுவதில்லை. நுங்கம்பாக்கமாகட்டும் மாம்பலமாகட்டும் லேக் வியூ சாலைகள் ஏரியில் சென்று முடிவதில்லை.
சென்னை நகரத்தில் மட்டும் இருந்த இந்த நிலை, கடந்த சில பத்தாண்டுகளில் புறநகர் பகுதிகளுக்கும் பரவிவிட்டது. அம்பத்தூர் ஏரி நான்கில் மூன்று பங்கு சுருங்கிவிட்டது. கொடுங்கையூர் வில்லிவாக்கம் ஏரிகளுக்கும் ஏறக்குறைய இதே நிலைதான்.
பல இடங்களில் பொதுமக்கள் வீதியில் இறங்கி போராடி மிச்ச மீதி இருக்கும் தங்கள் பகுதியின் நீர்நிலைகளை காப்பாற்ற வேண்டியுள்ளது.
கொரோனா இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ள இந்த காலகட்டத்தில், வெள்ளத்தால் விளையும் இந்த பாதிப்பு தாங்க முடியாததாக இருக்கிறது. முன்பு போல சமாளித்து நிற்க யாரிடமும் போதிய பணம் இல்லை.
சென்னைப் பெருமழை ஒன்றும் ஊகிக்க முடியாததல்ல, பருவநிலை மாற்றத்தினால் ஊசலாடிக்கொண்டிருக்கும் மழைபொழிவைப் பார்க்கும்போது, இப்போதைய மழை மிகவும் குறைந்த ஒன்று. 1965 முதல் 2012 வரை மழைப்பொழிவு பற்றி செய்யப்பட்ட ஆய்வு, மழையின் அளவு கூடிக்கொண்டே போவதை காட்டுகிறது.
கடந்த ஆறு ஆண்டுகளில் சராசரி மழையளவு 1600 மில்லிமீட்டரை தாண்டி பெய்ய தொடங்கியுள்ளது. ஒரே நேரத்தில் 200 மில்லி மீட்டருக்கும் அதிகமாக மழை கொட்டித்தீர்க்கும் வாய்ப்புகள் மிக அதிகம்.
சென்னையின் வெள்ளம் யாரையும் விட்டுவைப்பதில்லை. 1980களின் மத்தியில் தன்னுடைய ராமாவரம் வீட்டை விட்டு கன்னிமாரா ஹோட்டலில் தங்கும் நிலைக்கு எம்ஜிஆரை கொண்டுவந்தது சென்னை வெள்ளம்.
இப்படிப்பட்ட வெள்ளத்தைச் சமாளிக்கும் வழிமுறைகளை மாநில அரசு எப்பொழுதோ தொடங்கியிருக்கவேண்டும். ஏரி குளங்களை மீட்டெடுப்பது, வெள்ளத்தை உள்வாங்கிக்கொள்ள செயற்கையான சதுப்பு நிலங்களை உண்டாக்குவது, நகரத்தின் குறுக்கே ஓடும் பக்கிங்காம் கால்வாய் போன்றவற்றை தூர் வாருவது, வடிகால்களை புறநகரத்தில் உள்ள நீர்நிலைகளோடு இணைப்பது போன்றவற்றை முனைப்போடு செய்ய முயன்றிருக்கவேண்டும். ஆனால் ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை வரும் தேர்தல் அரசியலில் எல்லாமே அடிபட்டு போய்விடுகிறது.
கடந்த ஆண்டில் கொரோனா அச்சுறுத்தல் இருந்தபோது, அன்றைய அதிமுக அரசு திருவள்ளூர் மாவட்டத்தின் கண்டிகையில் ஒரு புதிய நீர்நிலையை திறந்தது.
ஆனால் மார்ச் மாத தொடக்கத்திலேயே அது நிறைந்து விட்டது. அது நகரத்துக்கான புதிய நீராதாரமே அன்றி மழை வெள்ளத்தை சேகரித்து வைக்கும் ஓர் அமைப்பு அல்ல.
ஆனால் நகரத்தின் இன்னொரு பாகமான நகரத்தின் மிகப்பெரிய சதுப்புநிலமான பள்ளிக்கரணை ஆக்கிரமிப்பு செய்யப்படுவதை தடுக்க திமுக அரசோ அல்லது அதிமுக அரசோ பெரிதாக ஒன்றும் செய்யவில்லை.
ஆறாயிரம் ஹெக்டேர் இருந்த அந்த சதுப்பு நிலம் இன்று வெறும் 600 ஹெக்டேர் மட்டுமே உள்ளது. பள்ளிக்கரணை சதுப்பு நிலம் ஏறக்குறைய 90 சதவீதம் ஆக்கிரமிப்புகளால் விழுங்கபட்டுள்ளது. சென்னை நகரின் வெள்ள நீரை எங்கு கொண்டு சென்று சேர்ப்பது என இப்பொழுது தீர்மானிக்க வேண்டும்.
சென்னை நகரின் வெள்ள நீரை எங்கு கொண்டு சென்று சேர்ப்பது என இப்பொழுது தீர்மானிக்க வேண்டும்
ஆக்கிரமிக்கப்பட்ட ஒவ்வொரு நீர்நிலைகளையும் இந்த நகரம் மீட்டெடுக்க வேண்டும். கோவில் குளங்கள், சதுப்பு நிலமாக மாற்றக்கூடிய புறம்போக்கு நிலங்கள் போன்றவற்றை கண்டறிய வேண்டும்.
டச்சு மக்கள் வெள்ளத்தை எவ்வாறு சமாளிக்கிறார்கள் என்பது சென்னைக்கு சிறந்த பாடம் . நெதர்லாந்தில் உள்ள ரோட்டேர்டாம் நகரம் மழை வெள்ளத்தை தேக்கி வைக்க தாழ்வான பகுதிகளை அமைத்துள்ளது.
கோடைகாலத்தில் விளையாட்டுத் திடல்களாக உள்ள அவை, மழை காலங்களில் வெள்ள சேகரிப்புப் பகுதிகளாக செயல்படுகின்றன. சென்னைக்கும், சில இந்திய நகரங்களுக்கும் அதுபோன்ற அமைப்புகள் வேண்டும்.
கோடைகாலத்தில் விளையாட்டுத் திடல்களாக உள்ள அவை மழை காலங்களில் வெள்ள சேகரிப்புப் பகுதிகளாக செயல்படுகின்றன. சென்னைக்கும், சில இந்திய நகரங்களுக்கும் இதுபோன்ற அமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும்.
சென்னையில் பயனற்று போன தரிசு நிலங்களை, மழை வெள்ளத்தை உள்வாங்கிக்கொள்ளும் சதுப்பு நிலங்களாக மாற்றலாம்.நகரத்தின் நடுவே தோட்டத்தோடு உள்ள பெரிய வீடுகளை விலைக்கு வாங்கி சிறுகுளங்களாக மாற்றம் செய்யலாம். நகரத்தின் குப்பைக்கிடங்குளான பெருங்குடி மற்றும் கொடுங்கையூர் ஏரிகளை மீட்க முடிந்தால் நகரத்தின் பெருவாரியான மழைவெள்ளத்தை அவை உள்வாங்கிக்கொள்ளும்.
சென்னையில் பயனற்று போன தரிசு நிலங்களை, மழை வெள்ளத்தை உள்வாங்கிக்கொள்ளும் சதுப்பு நிலங்களாக மாற்றலாம்
பக்கிங்காம் கால்வாயை வெள்ளநீரைக் கொண்டு செல்ல பயன்படுத்தலாம் என்று கூறப்பட்ட பரிந்துரைகள் மீது இதுவரை நடவடிக்கை இல்லை. எல்லாவற்றிற்கும் மேலாக இந்த ஊக வணிக வீட்டுமனை வியாபாரமும் வணிகமயமான வளர்ச்சியும் சென்னையின் புறநகரத்தின் வெள்ள வடிகால்களை விழுங்கி விடுவதை உடனே நிறுத்தவேண்டும்.
கவர்ச்சிகரமான விளம்பரங்களின் மூலம் வீட்டுமனைகள் விற்கப்படுகின்றன ஆனால் ஒரு சரியான வெள்ள வடிகால் வரைபடம் எல்லாவற்றையும் தெள்ளத்தெளிவாக காட்டிவிடும். 2021ன் வெள்ள வரைபடத்தை அரசு மக்களுக்கு காட்டுமா?
பருவநிலை மாறுபாடு அச்சுறுத்தும் இந்தக் காலகட்டத்தில், சென்னையின் பொதுவெளிகளை முக்கியமாக வெள்ளத்தை உள்வாங்கிக்கொள்ளும் நீர்நிலைகளை ஊக வணிகத்துக்கு காவு கொடுக்க முடியாது.
நகரத்தின் மிச்சமீதி இருக்கும் நீர்நிலைகளின் தொண்டையை நெறித்தால், தமிழ்நாட்டின் தலைநகரம் ஒவ்வொரு மழைக்காலத்திலும் வெள்ளத்தில் மிதப்பதைத் தவிர்க்க முடியாது.
Read in : English