Read in : English
தோடி -என்றால் திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளைதான் நினைவுக்கு வருவார்; அதுபோல ‘கரகரப்ரியா ‘ராகம் என்றால் விளாத்திகுளம் சாமிகள்தான்!.
விளாத்திகுளம் சாமிகள் 1889-ஆம் ஆண்டு பிறந்தார். இவர் காடல்குடி ஜமீன் வாரிசுதாரர். இவரது இயற்பெயர்
இளமையில் தானே இசையைக் கற்றுக்கொண்டார். அசுர சாதகம் செய்து ராகம் பாடும் திறமையை வளர்த்துக்கொண்டவர்.
சாமிகளின் இளமைக்கால நண்பர் சுப்ரமணிய பாரதியார். பாரதியருடைய பாடல்களை அவர் பாடிய வர்ணமெட்டில் அவரிடமே பாடிக்காண்பிப்பாராம். இவர் பாடியதைக் கேட்ட பாரதியார்,’ பலே பாண்டியா ‘என்று இவரை புகழ்ந்திருக்கிறார்.
பாரதியருடைய பாடலை முதன் முதலில் இசைத்தட்டில் பாடி பதிவு செய்தவர் விளாத்திகுளம் சாமிகள்தான். ப்ராட்காஸ்ட் என்ற இசைத்தட்டு நிறுவனம் 1924இல் ‘இவரை வைத்து ‘பாருக்குள்ளே நல்ல நாடு என்ற பாரதியார் ‘பாட்டை இசைத்தட்டில் பதிவு செய்தனர். அதனால் அந்தப் பாட்டின் பழைய பாடாந்தரம் தெரியவருகிறது.
விளாத்திகுளம் சாமிகள், தனது அசுர சாதகத்திற்கு கரகரப்ரியாவை ஏன் எடுத்துக்கொண்டார் என்று பார்த்தால் ,அதில் ஒரு பெரிய /பழைய உண்மை மறைந்திருப்பதை உணரலாம்.
சங்க காலத்தில் பாணர்கள், மற்றவர்களுக்கு இசையை பயிற்றுவிக்கும் போது-முதலில் பயிற்றுவிக்கும் பண்ணாக இருந்தது, கோடிப்பாலை என்கிற இன்றைய கரகரப்ரியா! அதனால் தான், அதனை எடுத்துக்கொண்டேன் என்று வேலூர் சம்பந்தமூர்த்தி ஆச்சாரியாரிடம் தெரிவித்திருக்கிறார்.
விளாத்திகுளம் சாமிகளின் புகழைப் பார்த்து, சுப்ரமணிய பாரதியார், கோனேரிராஜபுரம் வைத்தியநாத அய்யர், வ.வே.சு. அய்யர், மாரியப்பசாமிகள், மதுரகவி பாஸ்கரதாஸ், ராஜரத்தினம் பிள்ளை, டி .கே. சிதம்பரநாதமுதலியார், கிருபானந்தவாரியார், கே.பி. சுந்தராம்பாள், தியாகராஜ பாகவதர்,எழுத்தாளர்களான கு. அழகிரிசாமி, கி. ராஜநாராயணன், இசை விமர்சகர் ஜி. வெங்கடாச்சலம், வில்லிசை வேந்தர் பிச்சுக்குட்டி முதலியோர் அவரை வியப்புடன் அணுகி இருக்கின்றனர்.
புகழ் பெற்ற இசை விற்பன்னரான திருவனந்தபுரம் லட்சுமணப்பிள்ளை விளாத்திகுளம் சாமிகளை புகழ்ந்து,
”நல்லப்ப சாமி நளினக்குரல் பாண்டியனை
வெல்லப்பன் யாரோ விரித்திடுவார் -சொல்லில்
மயிலுக்கில்லை வடிவழகு; மாநிலத்தில்
குயிலுக்கில்லை குரல்’’ -என்று பாடி இருக்கிறார்.
விளாத்திகுளம் சாமிகள், எப்படிப்பட்ட அபூர்வ ராகத்தையும் மணிக்கணக்கில் யாதொரு சிரமும் இன்றி சுலபமாகக் கையாளக்கூடியவர். ஒரு முறை போடப்பட்ட சங்கதிகள் மறுமுறை ராகத்தில் பேசாது.
அதுமட்டுமல்ல, இவரிடம் ஒரு ராகத்தை ஒரு தடவை கேட்ட மாதிரி பிறகு எந்தக்காலத்திலும் கேட்கமுடியாது .ஒவ்வொரு தடவையும், எண்ணற்ற புதிய சங்கதிகள் பேசும். ராகத்தின் உருவமும், அழகும் புதிய அழகுடன் திகழும்.அவ்வளவு விரிந்த கற்பனையும், மனோ தர்மமும் புதியன படைக்கும் சக்தியும் ஒருங்கே வாய்க்கப்பட்டவர்.
கரகரப்ரியா, தோடி, பைரவி ,சண்முகப்ரியா, இந்தோளம், சங்கராபரணம், சாருகேசி முதலிய ராகங்களுடன் அதிகமாகப் பாடப்படாத ராகங்களுடன் கனகாங்கி, ரத்னாங்கி, வாகதீஸ்வரி, சூலினி, யாகப்பிரிய -முதலிய ராகங்களிலும் கச்சேரிகளில் பாடுவார்
ராகம் பாடும்போது நவரசங்களையும் காட்டுவார்; இது தவிர சுரம் பாடும்போதுகூட நவரசங்களையும் காட்டுவார். சங்கராபரணம், இந்தோளம் முதலிய ராகங்களை ஆங்கில முறைப்படி புதிதாக பாடிக்காட்டுவார். பாடும்போது சுருள் பிருகாக்களை அற்புதமாக சூர்வானம் விடுவார்.
சாமிகளுக்கு எந்த ஒரு ஓசையையும் வைத்து
பாடுவார். சுருதி இன்னதுதான் என்பதிலை. ரயிலோசை, ஆலையின் சங்கோசை, விமானத்தின் இரைச்சல் போன்ற எந்த ஓசையையும் சுருதியாகக்கொண்டு அவரால் பாட முடியும்.
அவருக்கு இந்த உலகம் என்பது நாதமயமானது; அதனால் எல்லாமும் சுருதி! சாப்பிடும் போது பதார்த்தம் சரியில்லை என்றால் ‘பக்கவாத்தியம் ‘சரி இல்லை என்பாராம். குளிக்கும்போது தண்ணீர் நன்றாக இருந்தால் ‘தண்ணீர் சங்கீதமாக ‘இருக்கிறது என்பாராம்.
மதுரகவி பாஸ்கரதாஸ் அவர்களும், விளாத்திகுளம் சாமிகளும் நண்பர்கள் என்று சொல்வதைவிட ‘காதலர்கள்’ என்று சொல்லலாம். அப்படி ஒரு நெருங்கிய நட்பு. இவர்கள் இருவருக்கும் இடையில் நடந்த கடித போக்குவரத்து அப்படிப்பட்டது.
ஒருவரை ஒருவர் பார்க்காமல் இரண்டு நாட்கள்கூட இருக்கமாட்டார்களாம். யாரிடமும் அதிகம் பேசாத சாமிகள்
பாஸ்கரதாசுடன் மணிக்கணக்கில் இசை, நாடகம் பற்றி பேசிக்கொண்டிருப்பாராம். தன் நண்பர் கஷ்டப்படக்கூடாது என்று சாமிக்காக பெசல் நாடகங்கள் நடத்தி வசூல் முழுவதையும் பாஸ்கரதாஸ், விளாத்திகுளம் சாமிக்குக் கொடுத்திருக்கிறார்.
“விளாத்திகுளம் சாமிகள் நன்றாக மிருதங்கம் வாசிப்பார்.அவர் பாட ஆரம்பித்தால் மூன்றுமணிநேரம் விடாமல் கரகரப்ரியாவை வெளுத்து காட்டுவார். ஒரு சமயம் வயலுக்கு போயிருந்தாராம் ,அங்கு பாட ஆரம்பித்துவிட்டார். பார்வையாளர்கள் யார் என்றால் அங்கு புல்லு வெட்ட வந்த பெண்கள்தான்.
அவர்களுக்காகத்தான் மூன்று மணிநேரம் பாடி இருக்கிறார். அவர்களும் கம்மஞ் சோறை பரிசாக கொடுத்திருக்கின்றனர். சாமிகள் இயற்கையோடு இணைந்து வாழ்ந்தவர். இயற்கையோடு இணைந்து வாழ்ந்த ஏழை உழைப்பாளிகளுக்காக பாடினார்.
அவர் பாடியதை நீங்களும் நானும் கேட்பது பெரிதில்லை. சாதாரண ஏழை மக்கள் கேட்டு ரசிப்பதே பெரிது” -என்கிறார் தமிழிசை அறிஞர் வி.ப.கா. சுந்தரம்.
விளாத்திகுளம் சாமிகளின் குரலை பதிவு செய்த ‘ப்ரோட் காஸ்ட் ‘நிறுவனத்தைத்தான் வாழ்த்தவேண்டும். இல்லையென்றால் விளாத்திகுளம் சாமிகளின் பாரதியார் பாட்டையும், அவரது குரலில் கரகரப்ரியாவையும் கேட்டிருக்க முடியுமா?
Read in : English