Read in : English
கோழையான ஒரு மனிதன் மாவீரன் ஆவதுதான் ‘மாவீரன்’ திரைப்படத்தின் ஒரு வரிக் கதை. சாகசங்கள் செய்வதென்பது பெரும்பாலான மனிதர்களின் ஆகச்சிறந்த விருப்பமாக இருக்கும். யதார்த்தத்தில் அதற்கான வாய்ப்பினைப் பெறுபவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். மனதில் துணிவு இருந்தாலும், சாகசம் புரிவதற்கான சூழல் தானாக அமைவதும் அதனை உண்டாக்குவதும் அரிதாகத்தான் வாய்க்கும்.
அந்த சாத்தியக் குறைவே நம்மைக் கற்பனை உலகத்திற்குள் தள்ளும். அந்தப் பயணத்தின் கனம் மிகுந்து படைப்பாகப் பீறிடும்போது, அதன் வீரியம் பெரிதாக இருக்கும். எல்லாப் படைப்பாளிகளுக்கும் இது பொருந்தும் என்றாலும், குழந்தைகளுக்கான கதைகள், சித்திரங்களை வரைபவர்களிடம் இந்த சாகச விருப்பங்கள் மிகுந்திருப்பதைக் காண முடியும்.
அப்படி காமிக்ஸ் படைப்பாளி ஒருவரின் மனதில் பிறக்கும் கற்பனைகளுக்கு யதார்த்த உலகின் அவலங்களே விதைகளாகின்றன என்கிறது சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘மாவீரன்’ திரைப்படம். இதன் இயக்குநர் மடோன் அஷ்வின் ஏற்கனவே ‘மண்டேலா’ என்ற படத்தைத் தந்தவர்.
பாட்டிகள் தங்களது அடுத்த தலைமுறைக்குச் சொன்ன பல்லாயிரம் கதைகளின் சாராம்சம் இது. ஆனால், சுவாரஸ்யமான கதாபாத்திரங்களையும் காட்சிகளையும் வார்த்திருப்பதுதான் திரைக்கதையை வித்தியாசமானதாக உணர வைத்திருக்கிறார் இயக்குநர்
பிறக்கும்போதே எவரும் சாதனையாளராக இருப்பதில்லை. வளர வளர அதற்கான காரணிகள் அணி சேர, அந்த இடத்திற்கு வந்து சேர்கின்றனர். உண்மையைச் சொன்னால், பாட்டிகள் தங்களது அடுத்த தலைமுறைக்குச் சொன்ன பல்லாயிரம் கதைகளின் சாராம்சம் இது. ஆனால், சுவாரஸ்யமான கதாபாத்திரங்களையும் காட்சிகளையும் வார்த்திருப்பதுதான் திரைக்கதையை வித்தியாசமானதாக உணர வைத்திருக்கிறார் இயக்குநர்.
சென்னை மாநகரின் நதிக்கரையோரப் பகுதி. அங்கு தாய், தங்கையோடு வசிக்கிறார் நாயகன். மக்கள் பிரச்சினைகளுக்காகப் போராடி உயிர் விட்டவர் அவரது தந்தை. அதனால், சிறு வயதில் இருந்தே பயந்தாங்கொள்ளியாக இருக்கிறார். பிரச்சினைகளில் இருந்து ஒதுங்கியும் சகித்துக்கொண்டும் வாழ வேண்டுமென்பதே அவரது தாரக மந்திரம். ஆனால், அவர் மனதில் பெருகும் கற்பனைகள் அதற்கு நேர்மாறாக இருக்கின்றன. சாகசங்களின் உச்சத்தைத் தொடுகிறது அவர் உருவாக்கிய வீரன் பாத்திரம்.
ஒருநாள் பிரச்சினைகளின் அழுத்தம் தாங்க முடியாமல், அவர் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுக்கிறார். பாசம் அவரைத் தடுக்கிறது. அதையும் மீறித் தவறிக் கீழே விழும் நாயகன், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்புகிறார். அப்போது முதல் அவரது காதில் ஒரு குரல் அவ்வப்போது ஒலிக்கிறது. அது மனநலப் பிரச்சினையல்ல என்று தெரிந்தபிறகு நிம்மதிப் பெருமூச்சுவிடாமல், மேற்கொண்டு பதற்றமடைகிறார் நாயகன்.
காரணம், மக்கள் பிரச்சினைகளுக்காகப் போராடும் மாவீரனாக அவரை உருவகப்படுத்துகிறது அந்தக் குரல். அதன் தொடர்ச்சியாக நிகழும் சம்பவங்கள், அவரை அப்படியே மக்களிடம் கொண்டு சென்று சேர்க்கின்றன. அதன்பிறகு என்னவானது? எப்படிப்பட்ட எதிர்ப்புகளை நாயகன் எதிர்கொள்ள நேர்ந்தது என்று சொல்கிறது ‘மாவீரன்’.
இந்த சூப்பர் ஹீரோ கதைக்கு எப்படி வேண்டுமானாலும் திரைக்கதை அமைக்க முடியும். ஆனால், தங்களோடு வசிக்கும் மக்களோடு இணைந்து புதிதாகக் கட்டப்பட்ட ஒரு குடியிருப்புக்கு நாயகனின் குடும்பம் இடம்பெயர்வதில் இருந்து அடுத்தகட்டத்திற்கு நகர்கிறது திரைக்கதை. அதன்பிறகு அரசியல்வாதி வெர்சஸ் சாதாரண குடிமகன் என்றே காட்சிகள் நகர்கின்றன.
ஆனால், அதனை பேண்டஸி ட்ரீட்மெண்டில் சொன்ன வகையில் ஒரு சாதாரண மசாலா படம் என்ற நிலையில் இருந்து கிளாசிக் அந்தஸ்தை தொட முனைந்திருக்கிறது ‘மாவீரன்’. கூடவே, ’பயத்தை விட்டொழிப்பவரே மாவீரர்கள் ஆகின்றனர்; அவர்கள் பிறக்கும்போதே அவ்வாறு இருப்பதில்லை’ என்ற தத்துவத்தையும் அடிக்கோடிடுகிறது.
சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர், சரிதா, மிஷ்கின், யோகி பாபு, சுனில் உள்ளிட்ட பலர் இதில் நடித்திருக்கின்றனர். இவர்கள் ஏற்ற பாத்திரங்கள் புதிதல்ல என்றாலும், ஒவ்வொருவரும் முதன்முறையாக அவ்வாறு நடித்துள்ளனர் என்பதே வித்தியாசமான காட்சியனுபவத்தைத் தருகிறது. குறிப்பாக, சீரியசான இயக்குநராகவே ஊடகங்களில் முகம் காட்டிவந்த மிஷ்கின் இதில் வழக்கமான வில்லன் வேடத்தை ஏற்றிருக்கிறார். நெடுங்காலத்திற்குப் பிறகு சரிதாவின் கண்ணீர் அரும்பும் கண்களை குளோஸ்அப்பில் காண முடிகிறது. அனைத்துக்கும் மேலாக, யோகிபாபு பல இடங்களில் நம்மைக் குலுங்கி குலுங்கிச் சிரிக்க வைத்திருக்கிறார்.
விது அய்யண்ணாவின் ஒளிப்பதிவு, பிலோமின் ராஜ் படத்தொகுப்பு மற்றும் குமார் கங்கப்பன், அருண் வெஞ்சாரமூடுவின் கலை வடிவமைப்பு ஒன்றுசேர்ந்து ரொம்பவே சீரிய கதையைத் திரையில் பார்க்கும் உணர்வை உண்டாக்குகின்றன. நாயகத்தனத்தைத் தாங்கிப் பிடிக்கும் காட்சிகளில் தனது திறமையை வெளிப்படுத்தி வித்தியாசமானதொரு பின்னணி இசை அனுபவம் தந்திருக்கிறார் இசையமைப்பாளர் பரத்சங்கர்.
ஒரு கமர்ஷியல் சினிமா என்பதையும் தாண்டி, ‘மாமன்னன்’ போலவே ‘மாவீரன்’ படமும் ஒடுக்கப்பட்ட மக்களின் நேர்கொண்ட பார்வையைப் பேசுகிறது. ஏற்கனவே ஆட்சியில் இருந்த அரசியல்வாதிகளின் பின்னணியை, அவர்களது அரசியல் முன்னெடுப்புகளை, தேர்தல் சார்ந்த அணுகுமுறைகளை விமர்சிக்கிறது
வழக்கமான மசாலா படங்களிலேயே நாயகன் நூறு பேரை அடுத்தடுத்து வெளுத்து வாங்கும் சூழலில், நியூட்டனின் விதிக்குப் பெரிதாகச் சவால்விடும்விதமான சண்டைக்காட்சிகள் ஏதும் இதில் இல்லை. அதற்காகவே ஆக்ஷன் கொரியோகிராபர்கள் யானிக் பென், மகேஷ் மேத்யூவை பாராட்டலாம்.
ஆங்கிலப் பட பாணியில் வில்லன் இறந்தபிறகும் கூட உணர்வுமயமான காட்சி, இரண்டாம் கிளைமேக்ஸ் என்று திரைக்கதை நகர்வது சிலருக்கு எரிச்சலூட்டலாம். எல்லாம் சரி; ஒரு ரசிகனைத் தொடக்கம் முதல் இறுதி வரை இருக்கையில் இருந்து எழவிடாமல் திரைக்கதை கட்டிப் போடுகிறதா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும்.
தனக்குள் ஒலிக்கும் குரல் கேட்டு கோழையான வாழும் நாயகன் வீரன் ஆவது எப்போது என்ற கேள்விக்கான பதிலாகவே முன்பாதி நகர்கிறது. இரண்டாம் பாதியில் அந்தக் குரலால் தன்னைச் சுற்றி வளைக்கும் பிரச்சினைகளால் நாயகன் அவதிப்படுவதோ, அதிலிருந்து விலகியோடத் தன்னை நாடி வந்த வரத்தைத் தூக்கி வீசியெறியத் தயாராவதையோ இன்னும் தெளிவாகச் சொல்லியிருக்கலாம்.
இப்படியொரு கதையில் காவல் துறையினருக்கு மட்டுமல்லாமல் அரசியல் ஆலோசகர்களுக்கும் அரசு உயரதிகாரிகளுக்கும் கூட உரிய இடம் தரப்படவில்லை. காட்சியாக்கத்தில் நிறைந்திருக்கும் வேகம், அதில் இருக்கும் தவறுகளைக் கண்டுபிடித்துவிடக் கூடாதே என்று பதற்றப்படும் தொனியிலேயே அமைந்துள்ளது. அதனைத் தவிர்த்திருக்கலாம்.
ஒருகாலத்தில் நாயகன் குட்டிக்கரணம் அடிப்பதோ, அந்தரத்தில் பறப்பதோ ‘ஸ்லோமோஷனில்’ அல்லது பல கோணங்களில் திரையில் காட்டப்படும். கிட்டத்தட்ட ஒரு காகிதத்தில் எழுதியதை அடிக்கோடிடுவது போன்ற செயல் இது. இன்றிருக்கும் இயக்குநர்கள் அப்படிப்பட்ட வழக்கத்தைப் பின்பற்றுவதில்லை. இதுவும் ஒரு பாணி என்று சொல்லலாம். தன் காதில் ஒலிக்கும் குரலை நாயகன் பின்பற்றாமல் இருப்பது அதற்கான உதாரணம்.
இரு வேறு இடங்களில், இரு வேறு உணர்வுகளை உருவாக்கும் வகையில் இந்த அம்சம் திரைக்கதையில் இடம்பெற்றிருப்பது சிறப்பு. போலவே, திரைக்கதையின் தொடக்கத்தில் வரும் 2டி அனிமேஷன் போலவே முடிவுப் பகுதியும் அமைந்திருப்பது இன்னொரு சிறப்பு.
ஒரு கமர்ஷியல் சினிமா என்பதையும் தாண்டி, ‘மாமன்னன்’ போலவே ‘மாவீரன்’ படமும் ஒடுக்கப்பட்ட மக்களின் நேர்கொண்ட பார்வையைப் பேசுகிறது. ஏற்கனவே ஆட்சியில் இருந்த அரசியல்வாதிகளின் பின்னணியை, அவர்களது அரசியல் முன்னெடுப்புகளை, தேர்தல் சார்ந்த அணுகுமுறைகளை விமர்சிக்கிறது. சில மாதங்களுக்கு முன்னர் வடசென்னையிலுள்ள புதிய அடுக்குமாடிக் குடியிருப்பொன்று உரிய தரத்தில் இல்லாமல் இருந்தது பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது.
போலவே, சில ஆண்டுகளுக்கு முன் முகலிவாக்கத்தில் ஒரு கட்டடமே இடிந்து விழுந்தது. அச்சம்பவங்களை நினைவூட்டும் வகையிலேயே காட்சியமைப்பு உள்ளது.
தமிழில் ஷங்கர் போன்ற முன்னணி இயக்குநர்களின் மசாலா பட திரைக்கதைகளில் நிறைந்திருக்கும் ஜிகினாத்தனம் இதில் குறைவு. அனைத்தையும் தாண்டி பேண்டஸி கதையில் ரியாலிட்டி கலப்பது எனும் ஆகப்பெரிய சாதனையைச் செய்துள்ளது ‘மாவீரன்’.
இவையே வழக்கமான சுற்றுவட்டப் பாதையில் இருந்து விலகி நிற்கும் கமர்ஷியல் திரைப்படங்கள் எதிர்காலத்தில் பெருகலாம் என்ற நம்பிக்கையை விதைக்கின்றன. ஒரு ரசிகனை சுவாரஸ்யப்படுத்த இது போன்ற ஏதாவதொரு விஷயம் இருக்கத்தானே வேண்டும்!
Read in : English