Read in : English
திடக்கழிவு மேலாண்மைக்கான சிறந்த நடைமுறைகளை அறிந்துகொள்ளும் வகையில் சென்னை மேயர் ஆர்.பிரியா ஸ்பெயின், பிரான்ஸ், இத்தாலி ஆகிய நாடுகளுக்கு ஒரு வாரகாலப் பயணம் மேற்கொண்டிருப்பது வரவேற்கத்தக்கது, ஏனெனில், ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடுகள் நகராட்சி திடக்கழிவுகளை மறுபயன்பாடு, மறுசுழற்சி செய்வதற்கான இலக்குகளை எவ்வாறு செயல்படுத்துகின்றன என்பதை சென்னை மேயர் நேரில் அறிந்து கொள்ள வாய்ப்பாக இது அமையும்.
2022 ஆம் ஆண்டிற்கான தரவுகள்படி, பெருநகர சென்னை மாநகராட்சி ஓர் ஆண்டு முழுவதும் மக்கும் கழிவுகளிலிருந்து சுமார் 5,400 டன் உரத்தை மட்டுமே உற்பத்தி செய்கிறது. ஆனால் அத்தகைய கழிவுகளின் மாதாந்திர சேகரிப்பு சுமார் 4,000 டன் என்பதால், வருடாந்திர அடிப்படையில் உரத்தின் உற்பத்தி அளவு தற்போதைய அளவைவிட பல மடங்கு அதிகமாகவே இருக்க வேண்டும்.
சென்னை கழிவு மேலாண்மை ஒப்பந்ததாரர் அர்பேசர் சுமீத்தின் தலைமையகம் அமைந்துள்ள ஸ்பெயின் உட்பட மேயர் பிரியாவால் பார்வையிடத் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று நாடுகளில் இத்தாலியும் ஒன்று. ஐரோப்பிய ஒன்றியத்தில் நிர்ணயிக்கப்பட்ட கழிவு மறுசுழற்சி இலக்குகளை எட்டிக் கொண்டிருக்கிறது இத்தாலி.
அதே நேரத்தில் பிரான்ஸ் இந்த விஷயத்தில் பின்தங்கியுள்ளது. கழிவு மேலாண்மையில் ஜெர்மனி சிறந்து விளங்குகிறது. மேலும் 2025 ஆம் ஆண்டிற்கான ஐரோப்பிய ஒன்றிய விதிமுறைகளைப் பூர்த்தி செய்யும் ஒன்பது நாடுகளில் ஜெர்மனியும் ஒன்றாகும். ஆனால் அந்த நாடு சென்னை மேயர் பிரியாவின் பயணத்திட்டத்தில் இல்லை.
ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடுகள் நகராட்சி திடக்கழிவுகளை மறுபயன்பாடு, மறுசுழற்சி செய்வதற்கான இலக்குகளை எவ்வாறு செயல்படுத்துகின்றன என்பதை சென்னை மேயர் நேரில் அறிந்து கொள்ள வாய்ப்பாக இது அமையும்
2018-இல் ஐரோப்பிய ஒன்றியம் வழங்கிய கழிவு விஷயம் சம்பந்தமான உத்தரவின்படி, பிரான்ஸ், ஸ்பெயின், இத்தாலி போன்ற உறுப்பு நாடுகள் தங்கள் நகராட்சிக் கழிவுகளில் 55 சதவீதத்தை மீண்டும் பயன்படுத்த வேண்டும் அல்லது மறுசுழற்சி செய்ய வேண்டும். மேலும் பேக்கேஜிங் கழிவுகளைப் பொருத்தவரை, இந்த எண்ணிக்கை 65 சதவீதம் ஆகும். இதறகான காலக்கெடு 2025-ஆம் ஆண்டு.
ஐரோப்பிய ஆணையத்தின் கூற்றுப்படி, ஐரோப்பிய ஒன்றியத்தில் உருவாக்கப்படும் கழிவுகளில் பாதி மறுசுழற்சி அல்லது உரமாக்கப்படுகிறது, மேலும் 25 சதவீதம் மண்ணில் புதைக்கப்படுகிறது.
மேலும் படிக்க: மழைநீர் வடிகால் பள்ளங்கள் பலிபீடங்களா?
அதிவேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருட்களுக்குப் பயன்படுத்தப்படும் பேக்கேஜிங் பொருட்கள் மற்றும் பிறவகையான பிளாஸ்டிக் பொருட்கள் அதிக அளவு பயன்பாட்டில் இருக்கும் சென்னை மாநகரம் மாதம் 400 டன் முதல் 780 டன் வரை பிளாஸ்டிக் கழிவுகளை உற்பத்தி செய்கிறது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இந்தக் கட்டுரையாளர் பெற்ற 2022-ஆம் ஆண்டுத் தரவுகளின் அடிப்படையிலான தகவல் இது.
இந்தியாவின் கழிவு மேலாண்மைச் சட்டம் சிமெண்ட் ஆலைகளில் கலோரி மதிப்பு கொண்ட திடக்கழிவுகளைப் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, ஈரமான மற்றும் உலர்ந்த கழிவுகளை மூலத்திலேயே பிரித்துவிட்டு, எரியக்கூடிய பகுதியைச் சிமெண்ட் ஆலைகளுக்கு வழங்கினால் மட்டுமே இது சாத்தியமாகும். சட்டப்படி நகராட்சித் திடக்கழிவை மூலத்திலே பிரித்தெடுக்கும் செயல் பெரும்பாலும் தோல்வியடைந்துள்ளது என்பதை சென்னை மாநகராட்சி அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொள்கிறது. தனிப்பட்ட கழிவுப் பொருட்களை மறுசுழற்சி செய்வது குறித்த தரவுகளை மாநராட்சி வழங்குவதில்லை.
சென்னை மேயர்கள் பல ஆண்டுகளாக வெளிநாடுகளுக்குச் சென்றும், பல மாநாடுகளில் பங்கேற்றும், அங்கிருக்கும் சிறந்த கழிவு மேலாண்மை நடைமுறைகளை அறிந்துகொண்டு வந்திருக்கின்றனர்; மேலும் உள்நாட்டில் நிலையான நகரமயமாக்கலை ஏற்படுத்துவதற்காகப் பல்வேறு கூட்டு ஒப்பந்தங்களையும் அவர்கள் போட்டிருக்கிறார்கள்.
டென்வர், சான் அன்டோனியோ, கோலாலம்பூர், பிராங்பர்ட், சோங்கிங் மற்றும் வோல்கோகிராட் ஆகிய சர்வதேச நகரங்களுடன் சென்னை மாநகரம் பவ்வேறு ஒப்பந்தங்களைப் போட்டிருக்கிறது. 1966-ஆம் ஆண்டில்தான் முதல் ஒப்பந்தம் போடப்பட்டது; அந்த ஒப்பந்தம் போடப்பட்டது வோல்கோகிராட் மாநகரத்துடன். சுனாமி நிபுணத்துவத்தைப் பகிர்ந்து கொள்ள, புக்கெட் நகரத்தை இந்தப் பட்டியலில் சேர்க்குமாறு தாய்லாந்து கோரியதாக 2021ஆம் ஆண்டில் ஓர் ஊடக அறிக்கை கூறியது.
இந்தச் சகோதர-நகர ஒப்பந்தங்களால் அல்லது மேயரின் வெளிநாட்டுப் பயணங்களால் ஏற்பட்ட விளைவுகள் என்ன என்பது பற்றி யாருக்கும் தெரியாது. இந்த நகரங்களின் பலங்கள் நம்மோடு பகிர்ந்து கொள்ளப் பட்டிருந்தால், அது குறித்து மாநகராட்சி கவுன்சில் கூட்டங்களிலோ கொள்கை ஆவணங்களிலோ எதுவும் சொல்லப்பட்டதில்லை. மேயரின் வெளிநாட்டுப் பயணங்களின் விளைவுகள் குறித்து தீவிரமான ஊடக பகுப்பாய்வுகள் எதுவும் இருந்ததில்லை. இந்த முறை துணை மேயர் மகேஷ் குமார் உள்ளிட்ட அதிகாரப்பூர்வமான சென்னை மாநகராட்சிக் குழுவும் உடன் சென்றிருக்கிறது.
முன்பு நதிநீர் சுத்தப்படுத்தல் விஷயத்தில் அமெரிக்காவின் சான் அன்டோனி மாநகரம் அடைந்த வெற்றி சென்னை மாநகரத்தை ஈர்த்ததாகக் கூறப்படுகிறது. இத்தாலியின் வெனிஸ் நகரம் திடக்கழிவுகளை நன்கு கையாளும் நகரங்களில் முன்னணியில் நிற்பதால் குறைகளற்ற அதன் கால்வாய்கள் தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்றன. ஆனால் சென்னையின் கால்வாய்கள் நாறிப்போன நீர்நிலைகள் என்பதும், குப்பைகள் கொட்டும் கழிவுநீர்த் தொட்டிகள் என்பதும் எல்லோரும் அறிந்த விஷயம். அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் அவற்றைத் தூய்மைப்படுத்த முயன்று தோற்றுப்போயின. மக்களை வரிப்பணத்தை விழுங்கிய கால்வாய்கள் அவை.
சென்னையின் கால்வாய்கள் நாறிப்போன நீர்நிலைகள் என்பதும், குப்பைகள் கொட்டும் கழிவுநீர்த் தொட்டிகள் என்பதும் எல்லோரும் அறிந்த விஷயம். அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் அவற்றைத் தூய்மைப்படுத்த முயன்று தோற்றுப்போயின
எனவே, பல்வேறு திடக்கழிவு மேலாண்மைப் பிரச்சினைகள் குறித்த ஐரோப்பிய ஒன்றிய அணுகுமுறைகளை ஆழமாக மேயர் பிரியா ஆய்வு செய்ய வேண்டும். அந்த அணுகுமுறைகள் பரந்த அளவில் சென்னைக்குப் பொருத்தமாக இருக்கும். ”நகராட்சி கழிவுகளில் மூன்றில் ஒரு பங்கான உயிரிக்கழிவுச் சுத்திகரிப்பை உறுதி செய்வதும், மறுசுழற்சிக்குப் பயன்படும் வகையில் கழிவுகளைத் தனியாகச் சேகரிப்பதும், தரவுகளின் தரத்தை மேம்படுத்துவதும் இலக்குகள்.
ஆயினும் பெரும்பாலான ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மறுசுழற்சி விகிதங்களை மேம்படுத்த கழிவுகளைக் கையாளுவதற்கான சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் பணியில் ஈடுபட்டுள்ளன. அவை வரும் ஆண்டுகளில் நல்ல விளைவுகளைத் தர வேண்டும்,” என்று ஐரோப்பிய ஆணையத்தின் உத்தரவு சொல்கிறது.
மேலும் படிக்க: கழிவு மேலாண்மை: தமிழ்நாடு ஏன் விருது பெறவில்லை?
இந்தப் பயணம் குறித்து சென்னை மேயர் பிரியாவிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை கேட்கலாம், இது தமிழ்நாட்டின் மற்ற மாநகராட்சிகளுக்கும் சிறந்த நடைமுறைகளைப் பரவலாக்க வழிவகுக்கும்.
2015ஆம் ஆண்டில், அப்போதைய சென்னை மேயராக இருந்த சைதை துரைசாமி, பிரதமர் நரேந்திர மோடியுடன் சீனாவின் சோங்கிங்கிற்கு விஜயம் செய்தார், இந்தப் பயணம் ”மக்கள்தொகை பெருக்கம் மற்றும் போக்குவரத்து நெரிசல்” தொடர்பான வழிமுறைகளை மதிப்பிட உதவும் என்று சென்னை மாநகராட்சிப் பொறியாளர் ஒருவர் கூறியதாக ஊடகங்கள் அவரை மேற்கோள் காட்டின.
புலம்பெயர்வு மற்றும் வாகனங்களின் அதிக வளர்ச்சி விகிதம் ஆகிய இரண்டு விஷயங்களும் கொள்கை வகுப்பாளர்களுக்குத் தொடர்ந்து சவாலாக உள்ளன, இருப்பினும், தனியார் வாகனங்களுக்கு அதிக இடத்தை ஒதுக்கும் போது, கொள்கை வடிவமைப்பாளர்கள் மக்களுக்கு அதிகமான பொது வெளியையும், பொது போக்குவரத்தையும் வழங்குவதற்கான முயற்சிகளை அதிகரிக்கவில்லை.
உலக மாநகரங்களுக்கும் சென்னைக்கும் இடையிலான ’நிபுணத்துவ பகிர்வுக்கு’ பஞ்சமில்லை. லண்டனின் பொதுப் போக்குவரத்து அமைப்பு எவ்வாறு சிறப்பாகச் செயல்படுகிறது, அனைவருக்குமான பேருந்து வசதி எப்படி விரிவுபடுத்தப்படுகிறது என்பவை பற்றிய ஆலோசனைகளை லண்டன் மாநகரம் வழங்குகிறது.
சென்னை மெட்ரோ ரயிலில் ஜப்பான் முதலீடு செய்துள்ளது, மேலும் உலக வங்கி தனது நிதிக்கு ஈடாக சென்னைக்கான புதிய தனியார்மயமாக்கப்பட்ட பேருந்து விரிவாக்கத் திட்டம் உட்பட பல வாக்குறுதிகளை தமிழக அரசிடமிருந்து பெற்றுள்ளது. மத்திய அரசின் தூய்மை இந்தியா மற்றும் ஸ்மார்ட் சிட்டி திட்டங்களின் கீழ் ஏராளமான நிதி பெறப்பட்டுள்ளது.
சென்னை மேயரின் வெளிநாட்டு பயணங்களிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்களையும், புதிய சர்வதேச உறுதிமொழிகளையும் பெருநகர சென்னை மாநகரக் கவுன்சிலிலும் ஊடகங்களிலும் விவாதிப்பது முக்கியம். இதன் மூலம் அதிக எண்ணிக்கையிலான மக்கள் பயன்பெறும் வகையில் சூழல் சார்ந்த கொள்கைகளை உருவாக்க முடியும்.
Read in : English