Read in : English
திரையிலும் திரைக்குப் பின்னாலும் ‘ஜென்டில்மேன்’ ஆகவே கொண்டாடப்படும் ஒரு கலைஞர் சரத்பாபு (1951- 2023). திரைப்படங்களில் காவல் துறையைச் சேர்ந்தவராகவோ, மருத்துவராகவோ, நீதியரசராகவோ அல்லது ஏதேனுமொரு குறிப்பிட்ட பணியைச் செய்பவராகவோ நடிப்பது கயிற்றின் மீது நடப்பதற்குச் சமம். அப்படி ஒரே வகையான பாத்திரங்களில் தோன்றி தங்களது நடிப்புத் திறமையை முழுமையாகக் காட்டாமலேயே மங்கிப்போனவர்கள் பலர்.
அதேநேரத்தில், அனைத்து படங்களிலும் ஒரேமாதிரியான தோற்றத்தில் வந்துபோனாலும் விதவிதமான மனிதர்களை நம் கண் முன்னே நிறுத்தியவர்கள் வெகு சிலர். அப்படியொரு பெருமைக்கு உரியவர் சமீபத்தில் மறைந்த சரத்பாபு.
தமிழ், தெலுங்கு திரையுலகில் தவிர்க்க முடியாத கலைஞராக விளங்கிய இவர் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மலையாளம், கன்னடம், இந்திப் படங்களிலும் நடித்தவர். அதனாலேயே, அந்தந்த மொழியைச் சேர்ந்த பல ஜாம்பவான்கள் சரத்பாபு உடனான தங்களது அனுபவங்களைப் பகிர முடிகிறது.
அவரைக் குறித்த புகழாரங்களைப் போல, அவர் ஏற்று நடித்த பாத்திரங்கள் ஒருமாதிரியானதாக இருந்ததில்லை; நிஜத்தில், அதற்கு நேர்மாறானதொரு எண்ணமே ரசிகர்கள் மத்தியில் நிலவுகிறது.
தனது தோற்றத்தை மீறித் தமிழில் பல படங்களில் மிக வித்தியாசமான பாத்திரங்களில் நடித்திருக்கிறார்; அவற்றில் பல இன்றைய நாயக நடிகர்களும் ஏற்றுக்கொள்ளத் தயங்குபவை
திரையுலகில் சக பணியாளர்கள் ஒருவரைப் புகழப் பல காரணங்கள் இருக்கும். படப்பிடிப்புத்தளத்தில் மற்றவர்களோடு ஒருங்கிணைந்து பணியாற்றும் விதம், தன்னை முன்னிறுத்தாத எளிமை, திடீரென்று நிகழும் மாற்றங்களையும் தாமதங்களையும் ஏற்றுக்கொள்ளுதல், தயாரிப்பு தரப்போடும் இயக்குனரோடும் ஒருங்கிணைந்து பணியாற்றுதல் என்று அந்த பட்டியல் நீளும். அத்தனையையும் தாண்டி புன்னகை நிரம்பிய முகத்துடன் தனக்கான அழைப்பு வரும் வரை காத்திருப்பது, கேரவன்கள் இல்லா காலத்தில் மாபெரும் சாதனையே.
அது போன்ற எத்தனையோ நேர்மறை அம்சங்கள் சரத்பாபுவிடம் இருந்தன என்பதை அவரோடு பணியாற்றிய பலரும் பகிர்ந்திருக்கின்றனர். அதுபோலவே, சக மனிதர்களைப் புரிந்து வைத்திருந்த விதமும், அவர்களோடு பழகிய பாங்கும் அவரை ‘ஜென்டில்மேன்’ என்றே கொண்டாட வைத்தது.
மேலும் படிக்க: பிரபல நடிகர் பிரதாப் போத்தன்: இனிய பொன்நிலா இனியில்லை…
சிவந்த நிறம், ஆஜானுபாகுவான உடலமைப்பு, மிக மென்மையான உடல்மொழி, சன்னமான குரல் இவற்றோடு ஆடை அணிகலன்கள், ஒப்பனை ஒன்றுசேரும்போது சமூகத்தின் மதிப்புமிக்க மனிதரைப் பார்க்கும் உணர்வு உண்டாகும். சரியோ தவறோ, சில பேரைப் பார்த்த மாத்திரத்தில், நமக்குள் ஒரு அபிப்ராயம் சுரக்கும். அந்த வகையில், சரத்பாபுவின் தோற்றம் அவரை ஒரு செல்வந்தராகவே நினைக்கத் தூண்டும். திரையில் பல்வேறு பாத்திரங்களில் தோன்றியபோதும் தன்னை ஒரு ‘ஜென்டில்மேன்’ ஆகவே வெளிப்படுத்திக்கொண்டது அவரது தனிப்பட்ட விருப்பம் என்றே எண்ணத் தோன்றுகிறது.
இன்றுவரை சரத்பாபு என்றால் நாயகனுக்கு நண்பன் என்ற பிம்பமே பொதுவாகத் தோன்றும். ஆனால், தனது தோற்றத்தை மீறித் தமிழில் பல படங்களில் மிக வித்தியாசமான பாத்திரங்களில் நடித்திருக்கிறார். அவற்றில் பல இன்றைய நாயக நடிகர்களும் ஏற்றுக்கொள்ளத் தயங்குபவை. உருவ அமைப்புக்கும் பாத்திர வார்ப்புக்குமான வித்தியாசத்தை எவ்வளவு அனாயாசமாக வெளிப்படுத்தினார் என்பதுதான் சரத்பாபுவின் சிறப்பம்சம்.
சத்யம்பாபு தீட்சிதலு என்ற இயற்பெயர் கொண்ட சரத்பாபு, அப்போதைய மெட்ராஸ் மாகாணத்தில் அமதலவலசா எனும் ஊரில் பிறந்தவர். தெலுங்கு மொழியிலேயே பள்ளி, கல்லூரிப் படிப்பை முடித்தவர். தனது குடும்பத்திற்குச் சொந்தமான வணிகத்தைக் கவனிக்காமல் சென்னைக்குக் கிளம்பி வந்த சரத்பாபு, ஆரம்பத்தில் தெலுங்குப் படங்களில் நடித்தார். 1977இல் கே.பாலச்சந்தரின் ‘பட்டினப்பிரவேசம்’ வழியே தமிழில் அறிமுகமானார். அதன்பிறகு பத்தாண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ச்சியாகத் தமிழிலும் தெலுங்கிலும் ஓடியாடி நடிக்கும் அளவுக்கு அவர் புகழ் ஓங்கியிருந்தது. அப்போது, அவர் ஏற்ற ஒவ்வொரு பாத்திரமும் ஒவ்வொரு வகையில் நம்மைப் பிரமிப்பில் ஆழ்த்தும்.
சரத்பாபு நினைத்திருந்தால், தளும்ப தளும்ப காதலில் திளைக்கும் பாத்திரங்களை ஏற்றிருக்க முடியும்; தனது தோற்றத்திற்கேற்ப ஒரு ஆக்ஷன் ஹீரோவாக நடித்திருக்க முடியும். ஆனால், அவரோ இயக்குநர்களின் நடிகராகவே இருந்தார். அதனாலேயே கே.பாலச்சந்தர், மகேந்திரன், பாரதிராஜா, எஸ்.பி.முத்துராமன், கே.விஸ்வநாத், வம்சி உட்பட வெவ்வேறு வகையான படைப்புகளைத் தந்த இயக்குநர்களின் படங்களில் அவர் இடம்பிடித்தார். நிச்சயமாக அதுவொரு சாதனை.
மகேந்திரன் இயக்கிய முதல் படமான ‘முள்ளும் மலரும்’, இன்றும் பலரால் நினைவுகூரப்படும் ஒரு படைப்பு. அப்படம் எந்த அளவுக்கு ரஜினிக்கும், ஷோபாவுக்கும், படாபட் ஜெயலட்சுமிக்கும் புகழைத் தந்ததோ, அதைவிட ஒருபடி மேலான பாராட்டுகளை சரத்பாபுவுக்குக் கொடுத்தது
எண்பதுகளில் சரத்பாபுவோடு ஒப்பிடத்தக்க வகையில் பிரதாப் போத்தன், ராஜேஷ், வாகை சந்திரசேகர் உட்படப் பல கலைஞர்கள் சக போட்டியாளர்களாகத் திகழ்ந்தார்கள். அவர்கள் தங்களது பாத்திரம் சிறியதா, பெரியதா என்று பார்க்காமல் திரையில் தோன்றினார்கள். தங்களுக்கான முக்கியத்துவத்தை ரசிகர்களிடம் உணர்த்தினார்கள்.
மகேந்திரன் இயக்கிய முதல் படமான ‘முள்ளும் மலரும்’, இன்றும் பலரால் நினைவுகூரப்படும் ஒரு படைப்பு. அப்படம் எந்த அளவுக்கு ரஜினிக்கும், ஷோபாவுக்கும், படாபட் ஜெயலட்சுமிக்கும் புகழைத் தந்ததோ, அதைவிட ஒருபடி மேலான பாராட்டுகளை சரத்பாபுவுக்குக் கொடுத்தது. அந்தக் கதையில் நாயகனைப் பொருத்தவரை அவர் ஒரு வில்லன்; ஆனால், ரசிகர்களின் பார்வையில் அவரொரு நாயகன். அந்த வித்தியாசத்தைச் சரியாக வெளிப்படுத்தும் திறமை அவரிடம் கொட்டிக் கிடந்தது.
அடுத்தடுத்து மகேந்திரன் இயக்கிய நெஞ்சத்தைக் கிள்ளாதே, மெட்டி, அழகிய கண்ணே படங்களில் நடித்த பெருமையும் சரத்பாபுவுக்கு உண்டு. உதிரிப்பூக்கள் படத்தில் சரத்பாபு நடித்த பாத்திரம், இன்றும் பிரபல நடிகர்கள் ஏற்கத் தயங்கும் ஒன்று. தான் விரும்பிய பெண்ணின் கணவனிடம் சென்று, அப்பெண்ணைக் கொடுமைப்படுத்தாதீர்கள் என்று சொல்லி அடி வாங்குவார். ’முள்ளும் மலரும்’ தந்த புகழுடன் ஒப்பிடும்போது அப்பாத்திரம் மிகச்சிறியது. ஆனாலும் அதனை ஏற்றுத் திறம்படத் திரையில் தோன்றியிருப்பார். தனது மனைவி குழந்தை பாக்கியம் இல்லாமல் ஏங்குவதைத் தயக்கத்துடன் நாயகியிடம் சொல்லும் பாத்திரமாக அது அமைக்கப்பட்டிருக்கும். திரைக்குப் பின்னாலும் தன்னை ஒரு நாயகனாக நினைத்துக்கொள்பவர்கள், ஒருகாலத்திலும் அப்படிப்பட்ட பாத்திரங்களில் நடிக்க மாட்டார்கள்.
மேலும் படிக்க: சாகாவரம் பெற்ற சங்கராபரணம் கே.விஸ்வநாத்!
கே.விஸ்வநாத்தின் ‘சலங்கை ஒலி’, ‘சிப்பிக்குள் முத்து’ படங்களில் நாயகனின் நண்பன் பாத்திரங்களை ஏற்றிருப்பார் சரத்பாபு. அதற்கு முன்னரே ‘சட்டம்’ போன்ற வெகுசில படங்களில் கமல்ஹாசனின் நண்பராக நடித்துள்ளார். அதேபோல, ரஜினியுடன் சரத்பாபு நடித்த ‘வேலைக்காரன்’, ‘அண்ணாமலை’, ‘முத்து’ ஆகிய படங்களும் கூட அந்த வரிசையில் சேரும். குறிப்பாக, ‘அண்ணாமலை’யில் வரும் அசோக் பாத்திரம் ரஜினி ரசிகர்களால் மறக்க முடியாதது.
மனோரமா, ராதாரவி, ரஜினியின் அபார நடிப்புக்கு நடுவே அவரது பாத்திரமும் ஜொலிப்பது நிச்சயம் சாதனையே. இந்த படங்களில் எல்லாம் ரஜினியை சரத்பாபு அடிக்கும் காட்சிகள் உண்டு. அவற்றைக் கண்டு ரஜினி ரசிகர்கள் கொதிக்காமல் இருந்ததற்கு, தலைவனின் தோழனாக அல்லாமல் தங்களின் தோழனாக அவரைக் கருதியதே காரணம்.
’இப்படித்தான் நடிப்பார்’ என்று ரசிகர்கள் கணிக்க முடியாதபடி பல்வேறு பாத்திரங்களில் தோன்றியவர் சரத்பாபு. ஒளிப்பதிவாளர் அசோக் குமார் இயக்கிய ‘அன்று பெய்த மழையில்’ திரைப்படம் அந்த வகையிலானது. அதில் மனைவி, குழந்தைகள் என்றிருக்கும் ஒரு நடுத்தரக் குடும்பத்து மனிதன் திடீரென்று ஒரு பெண்ணின் கவர்ச்சியால் சுண்டியிழுக்கப்பட்டு வாழ்வுக்கும் சாவுக்குமான போராட்டத்தில் அல்லாடுவதை வெளிப்படுத்தியிருப்பார். அவரை வாட்டி வதைக்கும் பெண்ணாக சில்க் ஸ்மிதா நடித்திருப்பார். நெற்றிக்கண், கீழ்வானம் சிவக்கும் படங்களில் பெண்களைக் கண்டால் வழியும் காமுகனாக வந்திருப்பார்.
இப்படி ஒன்றுக்கொன்று நேரெதிராக அமைந்த குணாதிசயங்களை வெளிப்படுத்தும் பாத்திரங்களில் அடுத்தடுத்து நடித்தார். அப்படிப்பட்ட வாய்ப்புகளைத் தந்த இயக்குநர்களும், தன் மீது சரத்பாபு வைத்திருந்த நம்பிக்கையுமே அதற்குக் காரணம்.
தொண்ணூறுகளின் பின்பாதி வரை திரையில் நாயகனுக்கு இணையான முக்கியத்துவத்தைப் பெற்ற சரத்பாபு, ஒரு கட்டத்தில் நாயகன், நாயகியின் தந்தை என்று முதிர்ந்த பாத்திரங்களை ஏற்கத் தொடங்கினார். தமிழில் விஜய், விக்ரம் உள்ளிட்ட முன்னணி நாயகர்களுடன் சேர்ந்து தோன்றினார். உடல்நலத்தில் தீவிரக் கவனம் காட்டும் இயல்புள்ள சரத்பாபு, தன் முதுமையை உணர்ந்தபோது நடிப்புத்தொழிலில் இருந்து ஓய்வு பெற்றார்.
சரத்பாபுவின் படங்களைப் பார்க்கும்போதெல்லாம், ஒரு கேள்வி தவறாமல் தோன்றும். ஒருவேளை இன்றைய காலகட்டத்தில் சரத்பாபு நடிக்க வந்திருந்தால் என்னவாகியிருக்கும்? ‘அமெரிக்க மாப்பிள்ளை’ வேடங்களைத் தந்து, அவருக்கு முத்திரை குத்தியிருக்கும். நல்லவேளை, அன்றைய இயக்குநர்கள் யாருக்கும் அப்படியொரு கண்ணோட்டம் இல்லை.
கிட்டத்தட்ட நாற்பதாண்டுகளுக்கும் மேலாக, திரையில் தோன்றுவதன் மூலம் மக்கள் மனதில் மாறாத ஒரு பிம்பத்தை உருவாக்கியவர் சரத்பாபு. ’மெதேட் ஆக்டிங்’கில் நம்பிக்கையற்ற முந்தைய தலைமுறையைச் சேர்ந்தவர். அதனால் ஹீரோவாக நடித்தாலும், வில்லனாக நடித்தாலும் அவரது தோற்றம் மட்டும் மாறாது.
ஒரு வெற்றிகரமான நடிகராகக் கொண்டாடப்படும் சரத்பாபு, தனது தனிப்பட்ட குடும்ப விவகாரங்களுக்காகப் பொதுவெளியில் விமர்சனங்களைச் சந்தித்தார். ஆனால், ஒருபோதும் தன் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு அவர் பதிலளித்ததே இல்லை. சில ஆண்டுகளுக்கு முன் ஒரு தெலுங்கு ஊடகத்தில் தனது திருமண வாழ்வு குறித்த அபிப்ராயங்களை மிகவெளிப்படையாகப் பகிர்ந்திருந்தார் சரத்பாபு. ஒரு கண்ணாடி மாளிகைக்குள் சுகபோகத்தில் திளைப்பவராக, ரசிகர்கள் கண்ட கற்பனைக்கு நேரெதிராக அவ்வார்த்தைகள் இருந்தன. அம்முறை மட்டுமே, அவரது நிலைப்பாட்டை நம்மால் அறிய முடிந்தது. ஆனால், அந்தப் பதில் வெளியானபின்பு எவ்விதச் சர்ச்சைகளும் அவரைக் குறித்து வெளியாகவில்லை.
சரத்பாபுவின் திரைப் பாத்திரங்களும் சரி, சாதாரணமான தருணங்களில் அவர் இடம்பெற்ற புகைப்படங்களும் சரி, அவரது புன்னகை நிறைந்த தோற்றத்தையே வெளிக்காட்டும். அதில் அமைதியை வேண்டும் பாங்கு தென்படும். வயதையும் முதுமையையும் மீறி அப்படியொரு பிம்பத்தை உருவாக்கவும் கட்டிக் காக்கவும் உள்ளுணர்வோடு போராட வேண்டியிருக்கும். இப்போது, அந்த போராட்டத்தைக் கலைத்து, காற்றோடு கலந்திருக்கிறது சரத்பாபுவின் ஆன்மா!
Read in : English