Read in : English
சென்னையில் ஆட்டோக்கள் நியாயமான கட்டணத்தில் வருவதற்குத் தவறினால், சென்னை ஆட்டோக்கள் தங்களது வருவாயை இழக்க நேரிடும்.
இது பல்வேறு நிகழ்வுகளில் பிரதிபலிக்கிறது. உதாரணமாக, சமீபத்தில் கோயம்பேட்டில் பைக் டாக்ஸி ஆபரேட்டர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது, இதில் சில பைக் ஆபரேட்டர்கள் காயமடைந்தனர், அதேநேரத்தில் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் பெண்கள் இயக்கும் பைக் டாக்ஸிகளை குறைவான அளவில் கடைசி மைல் பயணமுறையாக அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறது.
சீமானின் ஆதரவாளர்களான ஆட்டோ ஓட்டுநர்கள் சமீபத்தில் வள்ளுவர் கோட்டத்தில் ஒரு கிலோ மீட்டருக்கு 18 ரூபாயும், 1.5 கிமீ தூரத்திற்கு குறைந்தபட்சம் 40 ரூபாயும் கட்டணம் நிர்ணயம் செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். உண்மையில், சென்னையில் தற்போதைய கட்டணம் குறைந்தபட்சம் 50 ரூபாயும், ஒரு கிலோ மீட்டருக்கு 25 முதல் 50 ரூபாய் வரையிலும் வசூலிக்கப்படுகிறது. போராட்டத்தில் கலந்து கொண்ட ஓர் ஆட்டோ ஓட்டுநரிடம் சென்னையில் ஆட்டோ ரிக்க்ஷா இயக்குவதற்கான லாபகரமான கட்டண விகிதம் என்ன என்று கேட்டபோது, ஒரு கி.மீ.க்கு 18 ரூபாயும், குறைந்தபட்சம், 40 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட வேண்டும் என்றார் அவர்.
இத்தகைய தெளிவான சிந்தனை இருந்தும் கூட, இந்த பிரபலமான மூன்று சக்கர ஆட்டோ போக்குவரத்துத்துறை அதன் பாரம்பரிய பொருளாதாரமான தேவை தடைகளை நம்புவது, தேய்மானம் மற்றும் பராமரிப்பு செலவுகளைக் குறைக்க தொடர்ச்சியான செயல்பாட்டின் மீதான வெறுப்பு மற்றும் வருவாயை உயர்த்தக்கூடிய புதிய தொழில்நுட்பங்களின் சக்தியைக் காணத் தவறுவது ஆகியவற்றில் வேரூன்றியுள்ளது.
கலாசார மாற்றத்தைக் கடந்து சம்பாதிப்பதற்கு ஆட்டோ தொழிற்சங்கங்கள் ஓட்டுநர்களுக்கு உதவவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.
கொரோனா பரவல் கட்டுக்குள் வந்த பின்னர், சென்னை மெட்ரோவும் பிரபலமடைந்த பிறகு, ஆட்டோக்கள் கட்டணத்தை நிர்ணயிக்கும் தொழில்நுட்பத்தைப் பின்பற்றி மீண்டும் செயல்படுவதற்கான வாய்ப்புகளையும் பலன்களையும் பெற்றிருக்க வேண்டும்
கொரோனா தாக்குவதற்கு முன்பு, செயலி அடிப்படையிலான டாக்ஸிகளின் வருகை, ’கேப்’கள் உள்ளிட்ட பகிரப்பட்ட போக்குவரத்து நடவடிக்கைகள், இப்போது 60,000 க்கும் மேற்பட்ட எண்ணிக்கையிலான ஏழு இருக்கைகள் கொண்ட ஷேர் ஆட்டோ வேன்களின் வளர்ச்சி, இளம் குடியிருப்பாளர்கள் பலர் இரு சக்கர வாகனங்களுக்கு மாறியது ஆகியவை ஆட்டோக்களுக்கான பயனர் தளத்தை குறைத்துள்ளன என்பது அனைவரும் அறிந்ததே.
கொரோனா பரவல் கட்டுக்குள் வந்த பின்னர், சென்னை மெட்ரோவும் பிரபலமடைந்த பிறகு, ஆட்டோக்கள் கட்டணத்தை நிர்ணயிக்கும் தொழில்நுட்பத்தைப் பின்பற்றி மீண்டும் செயல்படுவதற்கான வாய்ப்புகளையும் பலன்களையும் பெற்றிருக்க வேண்டும். சாதாரண ஆட்டோமோட்டிவ் பெட்ரோலைப் போலல்லாமல், ஆட்டோக்கள் மிகவும் மலிவான ஆட்டோ எல்பிஜி மற்றும் சிஎன்ஜியைப் பெறுகின்றன என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.
மேலும் படிக்க: ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் பயணிகளுக்கும் ஒன்றுபோல நன்மைதரும் ஓர் அமைப்பு உருவாகுமா?
இன்றைய ஆட்டோ எல்பிஜியின் விலை ஒரு கிலோ சுமார் ரூ.67. சிஎன்ஜி ஒரு கிலோ விலை ரூ.85 ஆகும். ஆனால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை சுமார் ரூ.103. ஆதலால் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு லாபம் என்பது ஒரு கடினமான விசயமே அல்ல. தொழில்நுட்ப அடிப்படையிலான கட்டண கணக்கீட்டில் ஒரு புதிய அணுகுமுறை எளிமையாக இருக்கும். சம்பந்தப்பட்ட ஆட்டோ, கிமீ-க்கு கட்டணத்தைக் குறிப்பிட்டு, பயணித்த உண்மையான தூரத்தை கணக்கிட்டு, அதை விகிதத்தால் பெருக்கி, பயணியிடம் கட்டணம் வசூலிக்க வேண்டும்.
க்யூஆர் கோட் அடிப்படையிலான கட்டணம் செலுத்தும் முறை பிரபலமாக இருப்பதாலும், ஆட்டோ ஓட்டுநர்கள் அதைப் பயன்படுத்தத் தயாராக இருப்பதாலும், அவர்களின் தொழில் பயன்பாடு எளிதானது.
இந்த ஆண்டு ஜனவரியில் புதிய மெட்ரோ பாதைகள் செயல்பாட்டுக்கு வந்தபோது நடுத்தரவர்க்க பயணத்தின் மீதான தங்கள் ஏகபோக உரிமையை இழந்த மும்பை கேப்கள் மற்றும் ஆட்டோக்களின் அனுபவம் சென்னை ஆட்டோ ஒட்டுநர்களுக்கு ஒரு படிப்பினையாக இருக்க வேண்டும்.
மக்கள் நீண்ட தூரம் பயணிக்க ஆட்டோக்களைப் பயன்படுத்தும் சகாப்தம் அதன் சூரிய அஸ்தமன கட்டத்தில் உள்ளது என்பது தெளிவாகிறது. 2026-27 ஆம் ஆண்டிற்குள், சென்னை மாநகரத்தில் 119 கிமீ தூரத்திற்கு இரண்டாம் கட்ட மெட்ரோ பாதைகளின் பெரும்பாலானவை செயல்பாட்டுக்கு வந்துவிடும். அதனால் உள்ளூர் கடைசி மைல் சவாரிகள் ஆட்டோக்களுக்குக் கிடைக்காமல் போய்விடும்.
மேலும் சிஎம்டிஏ கடைசி மைல் இணைப்பு திட்டத்தை முறைப்படுத்தி, ஒழுங்கான போக்குவரத்து செயல்பாடுகளையும் மற்றும் நிலையான கட்டணங்களையும் கட்டாயப்படுத்தப் போவதாகச் சொல்கிறது. அப்படி நடந்தால் அது ஆட்டோ ஓட்டுநர் வருமானத்திற்கு மேலும் பலத்த அடியைக் கொடுக்கும். ஏற்கனவே சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூரில் இப்படி நடந்துள்ளது, அங்கு பயணிகளுக்கு வசதியாகப் புறநகர் ரயில் மற்றும் மெட்ரோ ரயில் பயணங்களும் அவற்றைப் பயன்படுத்தும் வசதிகளும் இருக்கின்றன.
குறிப்பிட்ட வழித்தடத்தில் வரும் அடுத்த பஸ்கள் குறித்த தகவல்களை எதிர்பார்க்கும் நேரத்தில் வழங்கும் சென்னை பேருந்து செயலியை மாநகர போக்குவரத்துக் கழகம் அறிமுகப்படுத்தியதால் தகவல் இல்லாத நிலை சரிசெய்யப்படுகிறது. இதனால் பாதிக்கப்படுவது ஆட்டோ ஓட்டுநர்கள்தான்.
இந்த ஆண்டு ஜனவரியில் புதிய மெட்ரோ பாதைகள் செயல்பாட்டுக்கு வந்தபோது நடுத்தரவர்க்க பயணத்தின் மீதான தங்கள் ஏகபோக உரிமையை இழந்த மும்பை கேப்கள் மற்றும் ஆட்டோக்களின் அனுபவம் சென்னை ஆட்டோ ஒட்டுநர்களுக்கு ஒரு படிப்பினையாக இருக்க வேண்டும்
இந்த தகவல் கட்டமைப்பைச் சரியாகப் பயன்படுத்தி மக்கள் தங்கள் பயணத்தைத் திட்டமிடுகிறார்கள். ஆட்டோ சவாரிகளைத் தவிர்க்கிறார்கள். பேருந்துகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டால், ஆட்டோக்களுக்கான வாடிக்கை மேலும் குறைந்து விடும்.
இறுதியாக, போக்குவரத்தை இயக்குவதற்கான பொருளாதாரத்திற்கு வணிக சொத்தின் நிலையான செயல்பாடு தேவைப்படுகிறது, இது பொதுவாக கடனில் வாங்கப்படும் ஆட்டோ ஆகும். டிவிஎஸ் கிரெடிட்டின் இஎம்ஐ கால்குலேட்டரின் கூற்றுப்படி, 9% வட்டியில் 24 மாதங்களில் திருப்பிச் செலுத்தக்கூடிய ஒரு லட்சம் ரூபாய் விலையிலான ஆட்டோவின் கடனுக்கு, மாதாந்திர தவணை ரூ 5,000 க்கும் குறைவாக உள்ளது.
லாபகரமாக ஆட்டோ ஓட்டும் வணிகத்தை நடத்துவது குறித்து, டிவிஎஸ் கிரெடிட் நிறுவனம் கடன் வாங்குபவருக்கு பின்வருமாறு அறிவுறுத்துகிறது: ”ஒரு சிறிய பயணமாக இருந்தாலும், எந்தவொரு பயணியையும் வேண்டாம் என்று ஒருபோதும் சொல்ல வேண்டாம். இது உங்கள் வருமான வாய்ப்பை மறுப்பது போன்றது. எது வந்தாலும் அதை ஏற்றுக்கொண்டு தொடர்ந்து பணியாற்றுங்கள்.
மேலும் படிக்க: எரிபொருள் சிக்கனத்துக்கா, சென்னை ஆட்டோக்களில் இவ்வளவு சத்தம்?
சில ஆட்டோ ஓட்டுநர்கள் இப்போது பயணங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ஓலா மற்றும் பிற நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்கிறார்கள். தொடர்ந்து வேலை செய்யுங்கள். பல வருமான ஆதாரங்களைக் கொண்டிருங்கள்.” கூடுதலாக, பயணியுடன் பேச்சுவார்த்தை மூலம் உச்ச நேரம், மழை நாட்கள் மற்றும் அதுபோன்ற விசேஷ நேரங்களில் தனது வருவாயை அதிகரிக்க ஆட்டோ ஓட்டுநருக்கு எளிதான உதவிக்குறிப்பை வழங்குகிறது டிவிஎஸ் கிரெடிட். (இது சட்டவிரோதமாகவும் இருக்கலாம்).
சமீபத்தில் சென்னையில் நடந்த ஒரு திருமண முகூர்த்தத்தின் போது, ஆட்டோ ஓட்டுநர்கள் திருமண வைபவ இடங்களுக்குச் செல்ல தங்கள் குறைந்தபட்ச கட்டணத்தை ரூ.100 ஆக உயர்த்தினர்.
எரிபொருள் விலை மற்றும் உள்ளீட்டுச் செலவுகளின் அடிப்படையில் ஒரு ஆக்கப்பூர்வமான கட்டணமுறையை ஆட்டோ ஓட்டுநர்கள் கூட்டாக நிர்ணயிக்க வேண்டும். இந்த கட்டணம் கிமீ-க்கு ரூ.18 ரூபாய் அல்லது 20 ரூபாய் கூட இருக்கலாம். ஜிபிஎஸ் உள்ள ஸ்மார்ட்போன்களில் ஓட்டுநர் மற்றும் பயணி இருவரும் சரிபார்க்கக்கூடிய வண்ணம், பயணித்த தூரத்தின் அடிப்படையில் இறுதி கட்டணம் கணக்கிடப்பட வேண்டும்.
செலவுகள் அதிகரிக்கும்போது, இந்த விகிதம் மாறுபடும். மேலும் தேவை / செலவுகள் குறையும்போது குறையும். இத்தகைய நேர்த்தியான மற்றும் வேகமான அணுகுமுறையை ஆட்டோக்கள் கடைப்பிடித்தால், வணிக செயலிகள், இருசக்கர டாக்ஸிகள் மற்றும் பிற டாக்ஸிகள் போன்ற சேவைகள் தரும் போட்டியைச் சமாளித்து ஆட்டோக்களால் முன்னணியில் இருக்க முடியும்.
மேலும் அலைபேசிச் செயலி அடிப்படையிலான நிறுவனங்களுக்கு கமிஷன் கொடுக்க வேண்டிய அவசியமும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இருக்காது.
மின்சார ஆட்டோக்கள் குறைவான பராமரிப்பைக் கொண்டிருப்பதால், வரும் ஆண்டுகளில் மின்சார மூன்று சக்கர வாகனங்களுக்கு மாறுவது கட்டணத்தை இன்னும் கவர்ச்சிகரமானதாக மாற்றும். முக்கியமாக, நீண்டகாலமாக இருபுறமும் சமச்சீரற்ற தன்மை இல்லாமல் பகையுணர்வு மட்டுமே ஓங்கியிருந்த ஆட்டோ ஓட்டுநர்-பயணி உறவை பரஸ்பரம் லாபகரமான உறவாக மாற்ற பயணிகள் விரும்புகிறார்கள் என்பதை ஆட்டோ ஓட்டுநர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
உண்மையில், ஒரு இனிமையான சவாரியின் முடிவில் பயணிகள் பலர் மீட்டருக்கு மேலான கட்டணத்தை இலவசமாகவே கொடுக்கிறார்கள்.
Read in : English