Read in : English

தமிழ்நாட்டில் 1920இல் ஆட்சிக்கு வந்த நீதிக்கட்சி முன்னெடுத்த பல நடவடிக்கைகளின் தாக்கம் இன்றும் தொடர்ந்து ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்துக்கு வழிவகுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மருத்துவ துறையைப் பொறுத்தவரை மாண்டேகு – செம்ஸ்போர்டு சீர்திருத்தங்கள், பொது மருத்துவ சேவையை மாகாண அரசின் நேரடிப் பொறுப்புக்கு கொண்டுவந்தது. மருத்துவ கல்வியும், மருத்துவ வசதியும், மாகாண அரசின் அதிகாரத்துக்குள் கொண்டுவந்ததுடன், மருத்துவ கல்லூரிகளும், புதிய பாடத்திட்டங்களும், பல புதிய மருத்துவமனைகளும் மலர அது வழிவகுத்தது.

அதே சமயம், ஒத்துழையாமை இயக்கமும், சுதேசி இயக்கமும் நாடு முழுவதும் பேரலையை ஏற்படுத்திவந்தன.அதற்கு, மதராஸ் மாகாணமும் விதிவிலக்கல்ல. காந்தியின் தலைமையில் காங்கிரஸ் எடுத்த நடவடிக்கைகளுக்கு நாடு முழுவதும் இருந்தது போலவே இங்கும் மக்களின் பரவலான ஆதரவு இருந்தது. அதனால் அதன் தாக்கம் மதராஸ் மாகாண சபையிலும் எதிரொலித்தது.

அந்த நேரத்திய காந்திக்கு அலோபதி மருத்துவத்தின் மீது இருந்த கடுமையான பார்வையும், சுதேசி இயக்கத்தின் அந்நிய பொருட்களின் பகிஷ்கரிப்பு என்ற நோக்கமும் அலோபதி மருத்துவத்தை அந்நிய மருத்துவம் என்றே பரவலாக அடையாள படுத்தியது. அது ஆயுர்வேத மருத்துவத்தின் ஆதரவாளர்களுக்கு ஒரு புதிய உத்வேகத்தை அளித்தது. அதைத்தொடர்ந்து ஆயுர்வேத மருத்துவத்தை அந்நிய அலோபதிக்கு மாற்றான சுதேசி முறையாக நிலைநிறுத்த முயன்று அதில் அவர்கள் வெற்றியும் பெறத்துவங்கினர்.

மருத்துவ துறையைப் பொறுத்தவரை மாண்டேகு – செம்ஸ்போர்டு சீர்திருத்தங்கள், பொது மருத்துவ சேவையை மாகாண அரசின் நேரடிப் பொறுப்புக்கு கொண்டுவந்தது

ஏற்கனவே ஜூலை 12ம் தேதி, 1918ல் நாடு முழுவதுமான பாரம்பரிய மருத்துவ முறைகளை ஆராய்ந்து அதன் பயன்களையும், சாதக பாதகங்களையும் ஆய்ந்துஅரசுக்குபரிந்துரைக்க, ராவ் பகதூர் சர் எம்.சி. .கோமன் என்ற சிவில் சர்ஜன் தலைமையில் ஆங்கிலேய அரசு ஒரு கமிஷனை நியமித்திருந்தது. அதைத் தலைமையேற்ற கோமன், கேரளாவில் ஒரு எளிய மீனவ குடும்பத்தில் பிறந்து அலோபதி மருத்துவ பயிற்சி பெற்று, படிப்படியாக முன்னேறி பின்னாளில் ராவ் பகதூர் பட்டம் பெற்றவர். கமிசனுக்கு தலைமையேற்ற போது அவர் மதராஸ் மாகாண மருத்துவ கவுன்சிலின் தலைவராக இருந்தார்.

அதைத் தொடர்ந்து அவர், மலையாளம், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இருந்த ஆயுர்வேதம் பற்றிய அனைத்து நூல்களையும் படித்துப்பார்த்தார். மேலும் பல ஆயுர்வேத மருத்துவர்களை சந்தித்து அவர்களின் மருந்து உற்பத்தி நடைமுறைகளைப் புரிந்து கொண்டார். தொடர்ந்து அவர் இந்த மருந்துகளில் பலவற்றை மெட்ராஸ் பொது மருத்துவமனையில் தன்னை நாடி வந்த தனது நோயாளிகளுக்குக்கொடுத்து ஆய்வு செய்தும் பார்த்தார்.

அந்த ஆய்வுகளின் விளைவாக 1919ல் வெளியான கோமன் கமிஷனின் அறிக்கை, சுமார் 40 பாரம்பரிய மருந்துப் பொருட்களை மதராஸ் மருத்துவ கல்லூரியின் மருத்துவ பொருட்களின் பட்டியலில் ( PharmaCopeia )இணைக்க பரிந்துரை செய்தாலும் , இறுதியாக, பாரம்பரிய மருத்துவத்தின் பின் உள்ள விஞ்ஞானம் தெளிவில்லாதது என்ற முடிவை அரசுக்கு கொடுத்தது.

மேலும் படிக்க: கல்வியில் தமிழைவிட சமஸ்கிருதம் மேலாதிக்கம்!

“உள்ளூரில் இருந்தஆயுர்வேத மருந்தகங்களுக்கு என்னால் முடிந்தவரை அடிக்கடி சென்று அந்த நிறுவனங்களில் என்ன நடக்கிறது என்பதை கவனிப்பதை நான் வழக்கமாக்கினேன். இவ்வாறு சென்றுவந்ததில், அந்த மருந்துகளை தயாரிப்பதில் பின்பற்றப்பட்ட வழி முறைகள் மற்றும் அவற்றின் கலவைகள், நோய்களைக் கண்டறியும் முறைகள் மற்றும் பல்வேறு சிகிச்சை முறைகள் பற்றிய தகவல்களை சேகரிக்க முடிந்தது.  ஆயுர்வேத மருந்தகங்களில் பயன்படுத்தப்படும் கருவிகள் அனைத்தும் பழமையானவை எனக் கண்டேன்.அதனடிப்படையில், நவீன அறிவியலுக்கு ஏற்ப அவற்றில் கணிசமான மாற்றங்கள் தேவைப்படுகின்றன என்ற முடிவுக்கு வருகிறேன்.”

“தொடர்ந்து, நான் என் கவனத்தை பொதுவான பயன்பாட்டில் இருந்த சிகிச்சைகள் மற்றும் முக்கிய மருந்துக் கலவை தயாரிப்பு முறைகளைப் பற்றி அறிந்துகொள்ள முயன்றேன். அவற்றைஎன்னால் முடிந்த அளவு சேகரிக்க முடிந்தது. அவற்றின் மீது முழுமையான ஒரு மருந்தியல் ஆய்வை மேற்கொள்வதற்கு, பயிற்சி பெற்ற, தகுதியும் திறமையும் உள்ள உடலியல் வல்லுநர்கள் மற்றும் வேதியியலாளர்களைக் கொண்ட குழுவும், ஒரு நல்ல ஆய்வகமும்தேவைப்படும்.”

இதனால் கோமன் கமிஷன் ஆயுர்வேத மருத்துவத்தின் ஆதரவாளர்களின் வெறுப்புக்கும் கோபத்துக்கும் ஆளானது. அதைத்தொடர்ந்து அவர்கள் இந்தக் கமிஷனின் முடிவை புறக்கணித்தனர். அவர்கள்மறுபடியும் இந்த விஷயத்தை மறுஆய்வு செய்ய ஒரு மரபான மருத்துவ முறையில்நிபுணர்கள் கொண்ட புதிய கமிட்டி ஒன்றை உருவாக்க வேண்டும் என அரசுக்குஅழுத்தம் கொடுக்கத்துவங்கினர்.

புதிதாக பதவியேற்ற நீதிக்கட்சியின் அரசுக்கு அனைவருக்குமான பொது மருத்துவம் என்பது முக்கிய நோக்கமாக இருந்தது. அத்தோடு, மாகாண அரசுக்குள் அலோபதி மருத்துவத்தை பரவலாக்குவது தான்நடைமுறைக்கு ஏற்றது என்ற பொதுவான கருத்தும் நிலவியது. இருந்தபோதும் அவர்களுக்குள்ளேயே ஒரு தரப்பு மரபான மருத்துவ முறைக்கு ஆதரவாகவே இருந்தது. அன்று மதராஸ் மாகாணத்தின் முக்கிய மரபுசார் மருத்துவ சங்கங்களில் ஒன்று பிராமணரல்லாதோர் ஆதரவு பெற்றது. அது சித்த மருத்துவத்தை முன்வைத்தது.

கோமன் கமிஷன் ஆயுர்வேத மருத்துவத்தின் ஆதரவாளர்களின் வெறுப்புக்கும் கோபத்துக்கும் ஆளானது. அதைத்தொடர்ந்து அவர்கள் இந்தக் கமிஷனின் முடிவை புறக்கணித்தனர்

இந்த முரண்களின் விளைவாக புதிதாக அதிகாரத்துக்கு வந்த மதராஸ் மாகாண அரசின் மீதும், அதன் பொதுநல நோக்கங்களுக்கும் பெரும் நெருக்கடி உருவாகியது. தொடர்ந்து கொடுக்கப்பட்ட அழுத்தத்தின் விளைவாக ஆங்கிலேய அரசு திரும்பவும் ஒரு புதிய கமிட்டி அமைத்து மறுஆய்வு செய்ய ஒப்புக்கொண்டது.

அதன் படி கான் சாஹிப் சர் முஹம்மது உஸ்மான் தலைமையில் ஒரு புதிய கமிட்டி அமைக்கப்பட்டது. உஸ்மான் சாஹிப், நீதிக்கட்சியின் தலைவர்களில் ஒருவர். தஞ்சையில் பெரும் செல்வாக்கான பணக்கார குடும்பத்தில் பிறந்த அவர், 1920இல் மதராஸ் மாகாண மேல்சபை உறுப்பினராக நீதிக்கட்சியின் சார்பாக இடம்பெற்றிருந்தார்.

பின்னாளில் பொப்பிலி அரசரின் நீதிக்கட்சி அரசில் உள்துறை மந்திரியாக இருந்து, பிறகுதான்பதவி விலகிய போது தனக்கு பதிலாக ஏ.டி.பன்னீர் செல்வத்தை அந்தப் பதவிக்கு வழிமொழிந்தவர்.மதராஸ் கார்ப்பரேஷன் தலைவராகவும், பின்னாளில் மதராஸ் மாகாண கவர்னரின் நிர்வாக சபை உறுப்பினராகவும் இருந்தவர். அவர் பெயரில் அமைந்துள்ளது தான் இன்று சென்னையில் இருக்கும் உஸ்மான் சாலை.

உஸ்மான் சாஹிப், அரசியல் நிலைப்பாடுகளைத் தாண்டி ஹக்கீம் எனப்படும் ஒரு யுனானி மருத்துவர். புதிய கமிட்டியின் தலைவர் உஸ்மான் சாஹிப்பாக இருந்தாலும், அதன் நிழல் தலைவராக இருந்தவர் செயலாளரான. ஜி. ஸ்ரீநிவாசமூர்த்தி என்னும் ஆயுர்வேத அறிஞர். ஏற்கனவே அரசு நிறுவிய கோமன் கமிஷனுக்கு, எம்.சி. கோமனுக்கு பதில் ஸ்ரீநிவாசமூர்த்தியே தலைவராக இடம்பெற இருந்தார். ஆனால் தவிர்க்க முடியாத காரணங்களால் அது போன முறை கோமனுக்கு போனது.

அத்தோடு ஸ்ரீநிவாசமூர்த்தியும் அதில் இடம் பெறவில்லை. அதனால் இந்த முறை புதிய உத்வேகத்தோடு அவர் இந்தக் கமிட்டிக்குள் வந்து சேர்ந்தார். அரசியலில் நீதிக் கட்சிக்கு நேர் மாறான நிலைப்பாடு கொண்டவர், ஸ்ரீநிவாசமூர்த்தி. செயலாளராக இருந்த அவருடைய முக்கியத்துவத்தையும் அதை வழிநடத்துவதில் அவருடைய பங்கையும், கமிட்டியின் அறிக்கையில் ஆரம்பத்திலேயே அதன் தலைவரின்வார்த்தைகளிலேயே விளங்கிக்கொள்ள முடிகிறது.

மேலும் படிக்க: அன்று மருத்துவப் படிப்பில் சேர சமஸ்கிருதம் ?

“கமிட்டியின்செயலாளர் ஜி. ஸ்ரீநிவாசமூர்த்தி இந்தக் குழுவிற்கு வழங்கியசிறந்தசேவைகளை நாம் பாராட்டாமல், இந்த அறிக்கை முழுமையடையாது. திரு.ஜி. ஸ்ரீநிவாசமூர்த்தி அவர்கள், தான்கையில் எடுத்த கடினமான வேலையைச் செய்வதில் முழுத்திறனை செலுத்தி, சிறந்த சான்றுகளை வழங்கியுள்ளார். அதன் மூலம்மிக நுட்பமான பிரச்சினையை முழுமையாகப் புரிந்து கொண்டு சரியான தீர்வு வழங்க வழி வகை செய்துள்ளார். ஒரு நேர்மையான விஞ்ஞான மாணவராக பக்கசார்பற்ற முடிவுகளை எடுப்பதற்கு பெரும் பங்களித்துள்ளார்.எனவே இந்த வாய்ப்பைப் பயன்படுத்ததிக்கொண்டு அவருக்கு எங்களின் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.”

அடிப்படையில் பிரம்ம ஞான சபையைச் சேர்ந்தவர் ஸ்ரீநிவாசமூர்த்தி. இந்திய தன்னாட்சி இயக்கத்தை (Indian Home rule movement) அப்போது வழிநடத்திய அன்னி பெசன்ட் அம்மையாருக்கு மிக நெருக்கமானவர். இதன்பின் உள்ள முரணை புரிந்து கொள்ள சில காலம் பின்னோக்கிச் செல்ல வேண்டும்.

1916இல்இந்திய தன்னாட்சி இயக்கம் இந்திய விடுதலை இயக்கத் தலைவர்களானபால கங்காதர திலகர்,எஸ். சுப்பிரமணிய அய்யர்,சத்தியேந்திர நாத் போசு, அன்னி பெசன்ட், முகமது அலி ஜின்னா ஆகியோரால் நிறுவப்பட்டது. இதன் முதல் லீக்கை திலகர் பெல்காமில் நிறுவிய பின் அதன் இரண்டாம் லீக்கை சென்னையில் அன்னி பெசன்ட் அம்மையார் நிறுவினார். ஆரம்பத்தில் காங்கிரஸ் மற்றும் முஸ்லீம் லீக் என்று இரண்டு தரப்பிலும் இருந்து போராட்டக்காரர்களை இது கவர்ந்தாலும், பின்னாளில் இந்திய சுதந்திர போராட்ட களத்தினுள் காந்தி வந்த பின் அது, தன் முக்கியத்துவத்தை மெல்ல இழந்தது.

அதன் பின் பிரம்ம ஞான சபையின் தலைவராக அன்னி பெசன்ட் அம்மையார் தொடர்ந்தார். திலகரின் இந்தியா முழுமைக்குமான இந்துக் கலாச்சாரம், அடையாளம் ஆகியவற்றை ஆதரிப்பதோடு சாதி அடிப்படையிலான பிராமணிய சமூக அமைப்பையும் அன்னிபெசன்ட்அம்மையாரின் தலைமையில் உள்ள அந்த இயக்கம் ஆதரித்தது. இந்த நிலையில், மதராஸ் மாகணத்தில் முன்னிலை பெற்ற பிராமணரல்லாதோர் இயக்கம், இதனோடு நேரடியாக கருத்து முரண் பட்டது இயல்பே. அதன் தொடர்ச்சியாக நீதிக்கட்சி ஆட்சிக்கு வந்ததும் அந்த கொள்கை முரண் கூர்மை அடைந்தது.

இந்நிலையில், இப்படி முரண்பட்ட இரண்டு இயக்கங்களில் இருந்து வந்த உஸ்மான் சாகிப்பும் ஸ்ரீநிவாசமூர்த்தியும் இந்தக் கமிட்டியில் இருந்தது நீதிக்கட்சி ஆட்சிக்கு பின்னாளில் ஏற்பட்ட நெருக்கடிக்கு வழிவகுத்தது. மேலும் அந்த அரசியலுக்குள் செல்லும் முன்பு உஸ்மான் கமிட்டியின் செயல்பாடுகளிலும் அதன் அறிக்கையிலும் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகிறது. அறிக்கையின் துவக்கத்திலேயே இடம்பெறும் வரிகள் அதன் நோக்கத்தையும், அந்த நோக்கத்தை அடையும் வழிமுறையும், அந்த நோக்கத்தை வழி நடத்துவது யார் என்பதையும் மிக தெளிவாக உரைக்கின்றன.

துவக்கத்தில், ஆயுர்வேதம், யுனானி, மற்றும் சித்த மருத்துவ முறைகளைப் பற்றி ஆய்வு செய்ய என்று சொல்லப்பட்டாலும், ஆயுர்வேதமே இந்தக் கமிட்டியில் முன்னிலை பெற்றது

‘தற்போதைய ஆய்வை முன்னெடுக்க வகை செய்யும் அரசாங்க ஆணையின் அதிகாரப்பூர்வமான நோக்கம் “ஆயுர்வேத மற்றும் யுனானி அமைப்புகளின் அறிஞர்களுக்குதங்கள் வாதத்தை முழுமையாகவும் எழுத்துப்பூர்வமாகவும் எடுத்துரைப்பதற்கும், அந்த வாதங்களை அறிவியல் விமர்சனத்திற்கு உள்ளாக்கவும் , இறுதியாக இந்த அமைப்புகளுக்கு அரசு வழங்கும்ஊக்கத்தை நியாயப்படுத்துவதற்கும்” என்பதேயாகும்.’

“பாரம்பரிய மருத்துவ முறைகள் அறிவியல் பூர்வமானதா இல்லையா என்பதைத் தீர்மானிப்பதே நமதுமுதல் நோக்கம். இந்த கேள்வியை அதன் அனைத்து நிலைகளிலும் ஆய்வுசெய்து, அதன்முடிவுக் குறிப்பைசெயலாளர் எங்களிடம் வழங்கியுள்ளார். அவருடைய இரண்டு பொதுவான முடிவுகளுடன் நாங்கள் ( கமிட்டியார்) முக்கியமாக உடன்படுகிறோம்.

1) அறிவியல் முறை என்ற நிலைப்பாட்டில், இந்திய மருத்துவ அமைப்புகள் உறுதியாக தர்க்க மற்றும் அறிவியல் பூர்வமானவை என்று பரிந்துரைக்கிறோம்.

2) தொழில்முறை என்ற நிலையில், குறிப்பாக அறுவை சிகிச்சை பிரிவில், அவை தற்போது தன்னிறைவு பெறவில்லை. பொது மருத்துவம்என்ற வகையில்அவை மிகவும் திறமையானவையாகவும் சிக்கனமானவையாகவும் விளங்குகின்றன என்பதை ஒப்புக்கொள்கிறோம்.”

ஆரம்பத்தில் இருந்தேஇந்தக் கமிட்டியின்நோக்கம் பாரம்பரிய மருத்துவத்திற்கு ஆதரவாகவே இருந்தது. துவக்கத்தில், ஆயுர்வேதம், யுனானி, மற்றும் சித்த மருத்துவ முறைகளைப் பற்றி ஆய்வு செய்ய என்று சொல்லப்பட்டாலும், ஆயுர்வேதமே இந்தக் கமிட்டியில் முன்னிலை பெற்றது.

சித்த மருத்துவம் போன்ற மற்ற முறைகள், வாதங்களுக்கு வலுசேர்க்க மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளன என்பதை அறிக்கை வாசிக்கையில் நாம் அறிந்துகொள்ள முடிகிறது. இரண்டு பகுதிகளாக இருக்கும் அறிக்கையின் அமைப்பை கூர்ந்து கவனித்தால் இந்தக் கருத்து மேலும் கூர்மையடைகிறது. இந்த அறிக்கையின் முதல் பகுதி இது, முன்வைக்கும் முடிவுகளையும், அந்த முடிவுகளுக்கு ஆதரவாக இது எடுத்து வைக்கும் வாதங்களையும் எடுத்து உரைக்கின்றது. அதன் இரண்டாவது பகுதி, முதல் பகுதியில் உள்ள முடிவுக்கு சான்றுகள் மற்றும் தரவுகள் என்று,பல்வேறு பாரம்பரிய மருத்துவர்கள் மற்றும் ஆதரவாளர்களின் சாட்சியங்களைப் பதிவு செய்கிறது.

உதாரணமாக அதில் உள்ள சாட்சியங்களின் எண்ணிக்கையில், சமஸ்கிருதத்தைவிட தமிழிலேயே அதிகம்இருந்தாலும், சற்று கவனமான ஆய்வில்தமிழில் இருக்கும் சாட்சியங்கள், சம்ஸ்கிருத நேரடி மொழிபெயர்ப்பாகவோ, ஆயுர்வேத முறையை குறித்த சமஸ்கிருத நூல் மேற்கோள்களாகவோ இருக்கின்றன. இவை தமிழில் இருந்தாலும் தமிழ் முறை என்று அறியப்பட்ட சித்த மருத்துவ முறை பற்றியதாக இல்லாமல்இருப்பது, சமஸ்கிருதத்தில் உள்ள சாட்சியங்களுக்கு வலுசேர்க்கத்தான் இடம்பெறுள்ளன என்ற அதன் நோக்கத்தை தெளிவாகக்காட்டுகின்றன. மேலும் யுனானி மருத்துவத்தை பற்றிய சாட்சியங்கள் வெகுசொற்பமே இடம்பெற்றுள்ளன.

இதன் பின்னும் ஆயுர்வேதத்தோடு மற்ற முறைகளுக்கும்சரிசமமான முக்கியத்துவம் கொடுத்திருக்கக்கூடும் என்ற கொஞ்ச நஞ்ச சந்தேகத்தையும், அறிக்கையின் முதல் பாகத்தின் துவக்கத்தில்உள்ள பின்வரும் வரிகள் தகர்த்து விடுகின்றன.

“டெல்லியின் ஜனாப் ஹக்கீம் அஜ்மல் கான் குறிப்பிட்டுள்ளதன் அடிப்படையில், அரேபிய மருத்துவம், ஆயுர்வேதத்தின் அடிப்படையில் உருவானது என்று நாம் அறிகிறோம். மேலும் சித்த மருத்துவத்துக்கும்ஆயுர்வேத மருத்துவத்துக்கும்திரிதாட்டு உடலியல் மற்றும் திரிதோஷ நோயியல் உள்ளிட்ட பல விஷயங்களில் பொதுவான அடிப்படைகள் உள்ளன என்பது அனைவரும் அறிந்ததே.”

ராவ் பகதூர் சர் எம்.சி. .கோமன்

இதேகருத்தை தனது, “இந்திய மருத்துவத்தின் அறிவியல் மற்றும் கலை பற்றிய குறிப்பு” ( Memorandum on the Science and the Art of Indian Medicine”) என்ற நூலில், சித்த மருத்துவத்துக்கும் ஆயுவேதத்துக்கும் இருக்கும் தொடர்பு பற்றி ஸ்ரீநிவாசமூர்த்தி குறிப்பிடுவது முக்கியத்துவம் வாய்ந்தது. இப்படிசமஸ்கிருதத்துக்கான முக்கியத்துவத்தை ஆயுர்வேத முறை மூலம் நிறுவும் அறிக்கை எந்தவகையில் இவை அனைத்துக்குமான அறிவியல் அடிப்படையை நிறுவுகிறது என்ற கேள்வியும் முக்கியத்துவம் பெறுகிறது. அத்தோடு தரவுகளின் அடிப்படையிலான அறிவியல் எப்படி அலோபதியிலும், மரபு மருத்துவத்திலும் எடுத்தாளப்படுகிறது என்றஒப்புமை இதைப் பற்றிய தெளிவைஅளிக்கலாம்.

அலோபதி மருத்துவத்தை தனது மருத்துவக் கொள்கையில் முதன்மையான அமைப்பாககொண்ட ஆங்கிலேய அரசு, 1825 ஆண்டு முதலே தனது மருத்துவ சேவை பற்றிய முறையான ஆவணங்களை பதிப்பித்துவந்துள்ளது. அதில்பொது மக்களுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைமுறைகள், சிகிச்சைஅளிக்கப்பட்டநோய்கள், அதற்கான மருந்துகள் மற்றும் அதன் சிகிச்சையை பெற்றவர்கள் என்று விரிவான தரவுகள் தரப்பட்டுள்ளன. இது தவிர மாகாணவாரியாக, மற்றும் பகுதிவாரியாக பல்வேறு மருத்துவ போர்டுகளின் அறிக்கை ஆண்டுக்கு ஆண்டு தொகுக்கப்பட்டு தொடர்ந்து வெளியிடப்பட்டுள்ளது.மேலும்தனதுஆசியஜர்னல் (“Asiatic journals”) என்று 6 மாதங்களுக்கு ஒரு முறை அவர்களின் ஆட்சிப் பகுதியில் நிகழும் முக்கியமான சமூக செயல்பாடுகள் மற்றும், குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் ஆகியவற்றை துறைவாரியாக தொகுத்தது வெளியிட்டுவந்தனர்.

இவற்றிலும்மருத்துவத்துறைபற்றிபகுதிகளில்பலமுக்கியதகல்வல்கள்காணக்கிடைக்கின்றன. உஸ்மான் கமிட்டிக்கு முந்திய .கோமன் அவர்களின் அறிக்கையில் கூட எந்த வகை நோய்க்கு என்னென்ன வகையான சிகிச்சை மற்றும் மருந்து அளிக்கப்பட்டன, அவற்றின் விளைவுகள் என்ன என்பது போன்ற விரிவான தரவுகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றோடு ஒப்பிடுகையில், உஸ்மான் கமிட்டியின் அறிக்கையில் உள்ளதரவுகள், தெளிவில்லாமல் இருப்பதைக் காணலாம். உதாரணமாக, முக்கிய நகரங்களில் மட்டுமே அமைந்திருந்த ஆயுர்வேத சிகிச்சை மையங்களில் வந்து போன நோயாளிகளின் எண்ணிக்கையை மட்டும் தான் காண முடிகிறது. அவற்றில் நலம் பெற்று திரும்பியவர்கள் எண்ணிக்கை மிகக் குறைந்த அளவுதான் என்பதை அவர்கள் கொடுத்திருக்கும் சொற்பதரவுகளின் வழியாகவே நாம் அறிந்து கொள்ளலாம்.

அது தவிர செவிவழிச் செய்திகளையும், வாய்வழி சாட்சியங்களையுமே சான்றாக அளிக்கிறது. அவ்வாறு கொடுக்கப்பட்ட அனைத்து சான்றுகளும் சமஸ்கிருத வழி ஆயுர்வேத முறையைத் தான்முன்னிலைப் படுத்துகின்றன என்பதையும்காண முடிகிறது. அதைத் தொடர்ந்து, அந்த அறிக்கையின் நோக்கமும் அது முன்வைக்கும் தீர்வுகளும் கவனம் பெறுகின்றது.

“மேற்கத்திய பயிற்சி பெற்ற பல மருத்துவர்களின் உதவி எங்களுக்குத் தேவைப்படுகிறது. அவர்கள் இந்த உண்மையிலேயே ஊக்கமளிக்கும் பணிக்கு தங்களைத் தயார்படுத்திக் கொள்ளத் தயாராக வேண்டும்.ஐந்து அல்லது ஆறு தொகுப்புமாணவர்களை திறமையாகப் பயிற்றுவிப்பதில் நாம் வெற்றி பெற்றால், அவர்கள் மரபான மருத்துவ முறையை முன்னெடுத்துச் செல்வதற்கும், அதை மேம்படுத்துவதற்கும் வாய்ப்பு ஏற்படும்.”

“மேற்கூறிய நோக்கத்தை அடைய, அரசு உடனடியாக இந்திய மரபான மருத்துவ முறைக்கான கல்லூரிகள், பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்களை நிறுவுவது அவசியம் என்று நாங்கள் நினைக்கிறோம். தற்போதைய சூழ்நிலையில் அவ்வாறு செய்ய இயலாது என அரசாங்கம் கருதினால், அதற்கு மாற்றாக, தற்போதுள்ள ஐரோப்பிய மருத்துவக் கல்வி மற்றும் மருத்துவ சிகிச்சை மையங்களில் இந்திய மருத்துவ முறைகளின் நுட்பங்களையும் பயிற்றுவிக்க பரிந்துரைக்கிறோம்.”

“மேற்கத்திய மருத்துவத்தின் தற்போதைய பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இந்திய மருத்துவத்தின் அடிப்படை பற்றிய படிப்புகள், துறைகள் நிறுவப்படவேண்டும் . அப்படி செய்தால், மேற்கத்திய பயிற்சி பெற்ற மருத்துவர்களுக்கு இந்தியமருத்துவத்தின் அறிவு பெற அது உதவும்.  ஆனால் இந்திய மருத்துவத்தின் முன்னேற்றத்தை உறுதிப்படுத்த இது போதாது. செம்மொழிநூல்கள் மற்றும் வடமொழியை மேம்படுத்துவதற்கு குறைந்தபட்சம் நமது கலைக் கல்லூரிகளில் இருப்பது போல் பண்டிதர்கள் மற்றும் முன்ஷிகளின் மூலம் தீவிர முயற்சி எடுக்கப்படவேண்டும்.”

மரபான மருத்துவத்துக்கென்று “இந்திய மருத்துவ கல்லூரிகள் “ அமைக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டாலும்அத்தோடு அலோபதி மருத்துவ பாடதிட்டத்துக்குள் சமஸ்கிருதத்தை கொண்டு வரும் வழிவகை இந்த அறிக்கையில் முதன்மை பெறுகிறது

மரபான மருத்துவத்துக்கென்று “இந்திய மருத்துவ கல்லூரிகள் “ அமைக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டாலும், அத்தோடு அலோபதி மருத்துவ பாடதிட்டத்துக்குள் சமஸ்கிருதத்தை கொண்டு வரும் வழிவகை இந்த அறிக்கையில் முதன்மை பெறுகிறது.

அலோபதியைப் பொறுத்தவரை, துவக்கத்தில் இருந்தே அதன் கலை மற்றும் பெயர் சொற்கள் பல லத்தீன் மொழியில் அமைந்து இருக்கின்றன. அதனால் ஒரு காலத்தில் லத்தீன் மொழி அதன் பாட திட்டத்தில் இடம்பெற்ற கால கட்டமும் இருந்தது. அந்தப் பின்னணியில் அவர்கள் எழுப்பும் சமஸ்கிருதத்துக்கான கோரிக்கையின் முக்கியத்துவம் புரிந்துகொள்ளப்பட வேண்டும்.

இறுதியில், அது அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு அதை செயல்படுத்தும் அதிகாரம் பனகல் அரசரின் மாகாண அரசின் கைகளில் வந்தது. அதைத் தொடர்ந்து, 1924ஆம் ஆண்டு நவம்பர் 3இல் துவங்கப்பட்டு 1925ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் தேதி, ஸ்ரீநிவாசமூர்த்தி அவர்களின் தலைமையில் “இந்திய மருத்துவ கல்வி நிலையம்” (“School of Indian Medicine”) திறக்கப்பட்டு, அதில் LIM சான்றிதழ் வழங்கும்வகையில் நான்காண்டு மரபு வழி மருத்துவப்பாடம் ஆரம்பிக்கப்பட்டது.

ஆனால், சமஸ்கிருதத்தை அலோபதியின் கீழ் ஒரு பாடமாக வைக்க வேண்டும் என்ற அறிக்கையின் பரிந்துரைசெயல்படுத்தப்படவில்லை. நீதிக்கட்சியின் உள் முரண்களையும், மாகாண அரசு செய்துகொண்ட சமரசங்களையும் தாண்டி, சமஸ்கிருதத்தை அலோபதியின் கீழ் பாடமாக கொண்டுவருவதை அது தவிர்த்தது தெளிவாகிறது.

கி. ஆ. பெ. விசுவநாதம், “டாக்டர் பட்டத்துக்கு விண்ணப்பம் போடுகிறவர்கள், சமஸ்கிருதம் படித்தவர்களாக இருக்க வேண்டும் என்ற கொடுமையை அழித்து ஒழித்தது” என்று கூறிய வரி, மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வைப்பற்றியதா என்றால், அப்படி ஒரு நுழைவுத்தேர்வு இருந்ததுக்கான சான்று ஏதும் இது வரை கிடைக்கவில்லை.

ஆனால், சமஸ்கிருதம் அலோபதியின் பாட திட்டத்தில் வந்து, அதன்படி, இறுதியாக டாக்டர் பட்டம் பெற விண்ணப்பிப்பவர்கள் சமஸ்கிருதத்தில் தேர்ந்து இருக்க வேண்டிய சாத்தியம் இருந்ததா என்றால், உஸ்மான் கமிட்டியின் பரிந்துரை முழுமையாக ஏற்கப்பட்டிருந்தால் அது நடந்திருக்க சாத்தியம் இருந்திருக்கும் என்றே சொல்லமுடியும்.

ஆனால், அந்த காலகட்டத்தில் இருந்த மாகாண அரசு, அந்தக் கமிட்டியின் பரிந்துரைகளை செயல்படுத்தும் போது, சமஸ்கிருதத்தை அலோபதி பாடதிட்டத்துக்குள் கொண்டு வரும் இந்தப் பரிந்துரையை மட்டும் செயல்படுத்தாமல் விட்டது என்பதையும் நாம் அறிந்து கொள்ளமுடிகிறது.

Share the Article

Read in : English

Why we always find lots of cashews on top of Deepavali mixture why tangedco need to pay us for damaging household appliances why eating on banana leaves is healthier What the Tamil Nadu Organic policy needs what is the real story of onam festival