Read in : English

இது மூன்று பகுதிகள் கொண்ட தொடரின் முதல் கட்டுரை

“உச்ச அதிகாரத்தின் அடையாளமே அது ஒளிந்திருப்பது தான்; உச்சகட்ட போராட்டமே, அதன் வரலாற்று வேர்களை வெளிப்படையாக அம்பலப்படுத்துவது தான்.”

-மிஷேல் ரோல்ப் டூயோ, வரலாற்றை ஊமையாக்குதல் என்ற நூலில்.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் மருத்துவப் படிப்பில் சேர சமஸ்கிருதம் தேவை என்று இருந்ததா என்பது விவாதத்துக்குரியதாக உள்ளது. கி.ஆ.பெ. விசுவநாதம் “எனது நண்பர்கள் “ என்ற தனது நூலில், ஜஸ்டிஸ் கட்சி அரசாங்கத்தின் சாதனைகளைப் பற்றிக் குறிப்பிடும்போது, “டாக்டர் பட்டத்துக்கு விண்ணப்பம் போடுகிறவர்கள், சமஸ்கிருதம் படித்தவர்களாக இருக்கவேண்டும் என்ற கொடுமையை அழித்து ஒழித்தது” என்று கூறிய ஒருவரி தொடர்ந்து பலசர்ச்சைகளுக்கு காரணமாக இருந்து வருகிறது.

இந்த ஒருவரியை வைத்து இருதரப்புகளும் தொடர்ந்து பந்தாடுகின்றன. சமஸ்கிருதம் படித்தால்தான் மருத்துவப்படிப்பு சேர்க்கைக்கு விண்ணப்பிக்கமுடியும் என்ற நிலை இருந்தது என்று திராவிடக் கொள்கையாளர்கள் மற்றும் தமிழ்தேசியத்தரப்பும், இல்லை, அது ஆதாரமற்ற பொய் என்று சமஸ்கிருத ஆதரவாளர்கள் தரப்பும் தொடர்ந்து பொதுவெளிகளில் கூறி வருகின்றனர். இதில் எவ்வளவு உண்மை உள்ளது?

அலோபதி மருத்துவத்தைப் பொருத்தவரை அதன் வேர்ச்சொற்கள் பல லத்தீன் மொழியில் இருக்கும். அதன் காரணம் அந்த மருத்துவ முறை உருவான வரலாறு. ஆனால் அலோபதிக்கும் சமஸ்கிருதத்திற்கும் என்ன தொடர்பு? இருந்தும் கி.ஆ.பெ. அப்படிச் சொல்வதற்கு ஏதும் முகாந்திரம் இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது.

இதன் பின்னணியைப் பின்தொடர்ந்து போனபோது, பல சுவாரசியமான விஷயங்கள் வெளிவந்தன. அந்த விஷயங்களின் ஆரம்பமுடிச்சு 1835ஆம் ஆண்டில்உள்ளது. அந்த ஆண்டு பிப்ரவரி 2ல்தான் தாமஸ் பாபிங்டன் மெக்காலே இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலான லார்டு வில்லியம் பென்டிங்கின் ஆணைக்கிணங்க தான் மேற்கொண்ட கல்வி சீர்திருத்த ஆய்வறிக்கையை அதற்கான கமிட்டி முன் வெளியிட்டார்.

காலகாலமாக ஆயுர்வேதமும், யுனானியும், சித்த மருத்துவமும் என்று பல வகை மருத்துவ முறைகள் பரவலாக நாட்டில் இருந்து வந்தாலும், முதன்முதலில் மேற்கத்திய மருத்துவத்தை நம் நாட்டிற்கு அறிமுகப்படுத்தியவர்கள் போர்த்துகீசியர்கள்தான்.

1822ஆம் ஆண்டு, கல்கத்தாவில் முதன்முதலாக, ஆங்கிலேய அரசின் நிதி உதவியுடன் மேற்கத்திய மருத்துவத்தை பிராந்திய மொழிகளில் கற்றுக்கொடுக்கும் கல்விநிறுவனம் ஒன்று நிறுவப்பட்டது

அதைத்தொடர்ந்து நாட்டில் வேரூன்றிய ஆங்கிலேய அரசாங்கத்தில், நாடு முழுவதுக்குமான தரமான மருத்துவ சிகிச்சை என்பது ஒரு சவாலாகவே இருந்துவந்தது. ஆங்கிலேய அரசின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகள் முழுவதுக்குமான மைய அரசு எடுத்த நடவடிக்கைபோக, ஒவ்வொரு மாகாணத்திலும் மருத்துவகல்வி மற்றும் சேவைக்கான வெவ்வேறு வகையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. உதாரணமாக 1822ஆம் ஆண்டு, கல்கத்தாவில் முதன்முதலாக, ஆங்கிலேய அரசின் நிதி உதவியுடன் மேற்கத்திய மருத்துவத்தை பிராந்திய மொழிகளில் கற்றுக்கொடுக்கும் கல்விநிறுவனம் ஒன்று நிறுவப்பட்டது.

இதில் நாடு முழுவதும் இருந்து மாணவர்கள் வந்து பிராந்திய மொழிகளில் மேற்கத்திய மருத்துவம் கற்றுக் கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு அளிக்கப்பட நிதி அந்த கல்விச்சாலையை நடத்துவதற்கும் அதற்கான புத்தகங்களை பிராந்திய மொழியில் பதிப்பிப்பதிற்கும் வழங்கப்பட்டது எனஅறியமுடிகிறது.

மேலும் படிக்க: மருத்துவ மாணவர்களுக்கு சரகர் ஷபத் உறுதிமொழி கிளப்பிய சர்ச்சை!

பிராந்திய மொழி என்று குறிப்பிடப்பட்டாலும், அதில் இருந்தது மூன்று மொழிகள்தான். அவை முறையே சமஸ்கிருதம், அரபி மற்றும் பெர்சிய மொழிகள்தான். அதில் பெரும்பாலும் குறிப்பிடப்பட்டது சமஸ்கிருதம்தான் என்று அறியமுடிகிறது.

மேலும் முகலாய அரசின் நீட்சியாக ஆயுர்வேத மற்றும் யுனானி மருத்துவத்திற்கு என்று தனியாக வேறு ஆங்கிலேய அரசின் நிதி ஆதரவு அளிக்கப்பட்டுவந்தது. அதன்மூலம் அதற்கான கல்வி நிறுவனங்கள் வேறு தனியாக ஆரம்பிக்கப்பட்டு நடத்தப்பட்டுவந்தன. இதிலும், நாட்டு வைத்தியம் என்ற பெயரில் சமஸ்கிருதத்தில் கற்றுக்கொடுக்கும் ஆயுர்வேதக் கல்விச்சாலைகள்தான் அதிகம் இருந்தன.

இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம், நாட்டில் பரவலாக புழக்கத்தில் இல்லாதமொழி(களை) பிராந்தியமொழி (Vernacular Language) என்று குறிப்பிடப்பட்டது மட்டுமல்ல, அத்தோடு மரபுசார் மருத்துவம் என்ற பெயரில் ஆயுர்வேதம் தவிர சித்த மருத்துவம் போன்ற எந்த மாற்று சிகிச்சைக்கும் அப்போது அதில் இடமிருக்கவில்லை என்பதுதான்.

இப்படி இருந்தநிலையில் தான் மெக்காலேயின் ஆய்வு ஒரு பெரும் புயலைக் கிளப்பியது. நாட்டில் மருத்துவ கல்விமுறைகளில் ஆய்வு செய்த அவர் அன்று ஒரு அறிக்கையை தாக்கல் செய்தார். தீவிர ஆய்வுக்குப்பின் அவர் அந்த அறிக்கையில் சொன்ன விஷயங்கள் இதுவரை நடைமுறையில் இருந்த பல்வேறு கல்விமுறைகளையும் புரட்டிப்போட்டது. இதில் அவர் முக்கியமாக குறிப்பிட்டது, பிராந்திய மொழிகள் மற்றும் பிராந்திய சிகிச்சை முறைகளுக்கு அதுவரை பல லட்சம் ரூபாய்கள் ஆங்கிலேய அரசால் நிதியாக வழங்கப்பட்டுள்ளது. இப்படி நிதி அளித்து கலந்துகட்டி எந்த தெளிவான வரையறையும் இல்லாமல் வகுத்த மருத்துவ கல்விமுறை எந்தபலனையும் அளிக்கவில்லை, வெகுஜனசமூகத்துக்கு தேவையான முறையான மருத்துவவசதி கிட்டவேயில்லை, எனக்கண்டறிந்து குறிப்பிடுகிறார்.

சமஸ்கிருதம் மற்றும்அரபி / பார்சி மொழிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் லட்சரூபாயும், அவற்றில் படிக்கும் மாணவர்களுக்கான ஊக்கத்தொகையையும் நிறுத்திவிட்டு, அதற்கு பதிலாக ஆங்கிலத்தில் மருத்துவ அறிவியல் கல்வியை வளர்க்க அதை செலவிட வேண்டும் என்றார் அவர்

இதற்காக அமைக்கப்பட்ட கமிட்டியின்முன் அவர் ஆய்வு சமர்ப்பிக்கபட்டபோது, பெரும்விவாதம் எழும்பியது. இப்படி பிராந்திய மொழிகளுக்கு ஆண்டாண்டாக வழங்கப்படும் இலட்ச ரூபாய் அதற்கு வழங்கப்படாமல் வேறு ஏதாவது ஒரு மொழிக்கு வழங்கப்பட வேண்டும் என்று கமிட்டி ஒப்புக்கொண்டாலும், அந்த வேறுமொழி ஆங்கிலமா, சமஸ்கிருதமா என்று பெரும்சர்ச்சை எழுந்து கமிட்டி இரண்டாக பிளவுபட்டு நின்றது.

சமஸ்கிருதத்துக்கு ஆதரவாக கமிட்டியில் உள்ள அதன் ஆதரவாளர்களால் பலவிதமான வாதங்கள்வைக்கப்பட்டன. உதாரணமாக:

● சமஸ்கிருதம் மிகச்சிறப்பான மொழி.

● மக்கள் மிகவும் மதிக்கும் புராதான மொழியில் வழங்கப்பட்டால்தான் அது அவர்களின் நம்பிக்கைக்கு உரியதாய் அவர்களிடம் சென்றுசேரும்.

● வெளிநாட்டு மொழியான ஆங்கிலத்தில் இந்தியர்களுக்கு போதுமான அறிவுகிட்டாது.

இவை அனைத்தையும் தனது உறுதியான வாதங்களை மெக்காலே வைத்தார். பலர் இன்று பொது வெளியில் சொல்வதுபோல் அவர் எங்கும் இந்திய மொழிகளை, அறிவை சிறுமைப்படுத்துவதில்லை. மாறாக அவர் வைக்கும் வாதங்கள் அவர் இந்தியர்களின் அறிவின் மீது வைக்கும் மாளாத நம்பிக்கையே வெளிப்படுத்துகிறது. உதாரணமாக, மேற்கூறிய சமஸ்கிருத ஆதரவாளர்களின் வாதங்களுக்கு அவர் வைக்கும் எதிர்வாதங்கள்:

● “இந்தியர்களால் போதுமான ஆங்கில அறிவை என்றும் பெறமுடியாது என்று கூறுகின்றனர்; அல்ல, அல்ல, குற்றம் சாட்டுகின்றனர். ஆனால் நான் அறிந்த பல இந்தியர்கள் எந்தஐ ரோப்பியரையும்விட சிறப்பாக ஆங்கில அறிவை வெளிப்படுத்தியுள்ளனர். இந்திய அறிவு இவர்கள் நினைப்பதைவிட மிகச்சிறப்பானது என்று கண்டிருக்கிறேன்.”

● “நான் நேரடியாக கிழக்கின் மொழியறிவு( சமஸ்கிருதம் மற்றும் அரபி) பெற்றில்லாவிடினும், அதன் சிறந்த புத்தகங்களின் மொழிபெயர்ப்பை படித்து அதை உள்வாங்கியிருக்கிறேன். அதன் அடிப்படையில் இலக்கிய எழுத்துக்களில் அதன்சிறப்பையும் முதன்மையையும் யாவரும் ஒப்புக்கொண்டாக வேண்டும். ஆனால் நவீன அறிவியல் எழுத்துகளைப் பொறுத்தவரை ஆங்கிலமா சமஸ்கிருதமா என்றால் ஆங்கிலம்தான் என்று கூறவேண்டும்.”

மேலும் படிக்க: வெளிநாட்டில் மருத்துவக் கல்வி: மாணவர்களின் கலைந்து போன கனவு!

இறுதியாக அவர் நடைமுறை உண்மை சார்ந்த சான்றுகள் வழியே மிகவலிமையான வாதங்களை முன்வைத்தார்.

“சமஸ்கிருதக் கல்லூரியின் பல முன்னாள் மாணவர்கள் குழு ஒன்று கடந்த ஆண்டு அரசிடம் ஒரு மனு சமர்ப்பித்தது. அதில், மனுதாரர்கள், தாங்கள் கல்லூரியில் பத்துஅல்லது பன்னிரெண்டு ஆண்டுகள் படித்ததாகவும், ஹிந்து இலக்கியம் மற்றும் அறிவியலில் தாங்கள் போதுமான அளவு கற்றுக்கொண்டு, தகுதிச்சான்றிதழ் பெற்றதாகவும் தெரிவித்தனர். இத்தனைக்கு அப்புறமும், இதுபோன்ற சான்றுகளைக்கொண்டு , தங்கள் நிலைமையை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் அவர்களிடம் இல்லை எனவும், தங்கள் நாட்டவர்களால் தங்கள் மீதுஅ லட்சியமும் , ஊக்கம் கிடைக்காதநிலையும் உள்ளது என்றனர். எனவே, அவர்கள் கௌரவமான ஊதியம் அளிக்கும் அரசாங்க வேலைவாய்ப்புக்காக கவர்னர் ஜெனரலுக்கு பரிந்துரைக்கப்பட வேண்டும் என்று கெஞ்சினார்கள்” என்ற சான்றை முன்வைத்தார்.

இவை அனைத்தையும் நிறுவி, அவர், சமஸ்கிருதம் மற்றும்அரபி / பார்சி மொழிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் லட்சரூபாயும், அவற்றில் படிக்கும் மாணவர்களுக்கான ஊக்கத்தொகையையும் நிறுத்திவிட்டு, அதற்கு பதிலாக ஆங்கிலத்தில் மருத்துவ அறிவியல் கல்வியை வளர்க்க அதை செலவிட வேண்டும் என்றார்.

இப்படியாக சமஸ்கிருதத்துக்கும், (சிறிய அளவில் அரபி / பார்சிக்கும்) வட்டார மொழி அறிவியல் கல்வி வளர்ச்சி என்ற பெயரில் வழங்கிய பெருமளவு நிதியை நிறுத்தி வைக்க வழிவகுத்தார்.

இருந்தபோதிலும், பெனாரஸ்ஸில் இருந்த இந்து கல்வி நிறுவனம், தில்லியில் இருந்த அரபிக் கல்வி நிறுவன ம்ஆகியவற்றை தொடர்ந்து நடத்த அரசு செய்யும் உதவி தொடர வேண்டும் என்றே பரிந்துரைத்தார். இத்துடன் பிராந்திய மொழி என்றபெயரில், சமஸ்கிருதம் மட்டுமே பெற்றுக்கொண்டிருந்த லட்சக்கணக்கான ரூபாய் நிதி இத்தோடுநிறுத்தப்பட்டது.

(தொடரும்)

Share the Article

Read in : English

Why we always find lots of cashews on top of Deepavali mixture why tangedco need to pay us for damaging household appliances why eating on banana leaves is healthier What the Tamil Nadu Organic policy needs what is the real story of onam festival