Read in : English

சமஸ்கிருதத்துக்கு ஆங்கிலேய அரசு அளித்து வந்த நிதியை மெக்காலே நிறுத்தியதும் சமஸ்கிருதம் மட்டுமே இந்திய மொழிகளில் பழமையான செம்மையான மொழி என்ற கதையாடலை சமஸ்கிருத ஆதரவாளர்கள் தொடங்கிவிட்டனர். ஆயுர்வேதத்தை வழக்கமாக கைக்கொண்ட முன்னேறிய வகுப்பினர் அலோபதி மருத்துவத்தை அரவணைக்கத் தொடங்கிவிட்டனர்.

சமஸ்கிருதம் மட்டுமே இந்திய மொழிகளில் மிகப் பழமையான செம்மையான மொழி (Classical Language), மற்ற மொழிகள் எல்லாம் வெறும் பிராந்திய மொழிகள் ( vernacular Language ) என்பது தான் அது. அனைத்து பிராந்திய மொழிகளும் சமஸ்கிருதத்தில் இருந்து தான் தோன்றின. சமஸ்கிருதம் இல்லாமல் அவற்றுக்கெல்லாம் தனியான இருப்பு இல்லை எனவும் கூறத்தொடங்கினர். இந்தக் கதையாடலில் அவர்கள் வெற்றி பெறவும் தொடங்கினார்கள்.

இதற்கிடையே, 1858இல் பிரிட்டிஷ் அரசாங்கம் தனது பார்லிமெண்ட்டில் கொண்டுவந்த “இந்திய அரசு சட்டம்” மூலம் இந்திய நாட்டின் ஆட்சியை நேரடியாக கையில் எடுத்துக்கொண்டது.

அதைத்தொடர்ந்து அரசாங்க நடைமுறை மற்றும் சட்டங்களில் பல்வேறு மாற்றங்களும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டாலும், சமஸ்கிருதம் பற்றிய ஆங்கிலேய அரசின் பார்வையில் இந்தக் கதையாடல் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது என்பது பின்வரும் பல அறிக்கைகள் வழியே தெளிவாகிறது.

1901இல் இந்திய வைஸ்ராயான கர்ஸான் பிரபுவின் ஆணைக்கிணங்க சர். தாமஸ் ராலே தலைமையில் ஒரு இந்திய பல்கலைக்கழக கமிஷன் ஒன்று அமைக்கப்பட்டது. அது 1902இல் தனது ஆய்வு முடிவுகளை பரிந்துரையாக ஆங்கிலேய அரசுக்கு சமர்ப்பித்தது. நாடுமுழுவதும் இருந்த பல்கலைக்கழங்களின் செயல்பாட்டையும், கல்வி வழங்கும் திறனையும் அதிகரிக்கும் வகையில் மேம்பாட்டுக்கான பல நடைமுறைகளை அந்த ஆய்வு பரிந்துரைத்தது.

அனைத்து பிராந்திய மொழிகளும் சமஸ்கிருதத்தில் இருந்து தான் தோன்றின. சமஸ்கிருதம் இல்லாமல் அவற்றுக்கெல்லாம் தனியான இருப்பு இல்லை எனவும் கூறத்தொடங்கினர்

இந்த பரிந்துரைகளை முழுமையாக ஏற்று ஆங்கிலேய அரசு புதிய இந்திய பல்கலைக் கழக சட்டம் என்ற சட்டத்தை 1904இல் இயற்றியது. இதுதான் ஆங்கிலேய ஆட்சிக்குட்பட்ட இந்தியா முழுமைக்குமான பாடத்திட்டம் மற்றும் கல்விக் கட்டமைப்புக்கான அடிப்படையாகும். இதனால் இந்த ஆய்வின் பரிந்துரைகளை சற்று மற்ற இந்திய மொழிகளை விட சமஸ்கிருதம் பெற்றிருக்கும் தனி கவனிப்பும் செல்வாக்கும் விளங்கும்.

“மாற்றாக வட்டார மொழி அனுமதிக்கப்படுமானால், மாணவர்களுக்கு செம்மொழி மூலம் வழங்கும் வளமான இலக்கியம் மற்றும் மனிதகுலத்தின் பெரும் சிந்தனை முதலிய செம்மொழி அறிவிலிருந்து பெறக்கூடிய பலன்களை இழக்க நேரிடும். பிராந்திய மொழிகளின் அறிஞர்கள் கருத்துப்படி, சமஸ்கிருதத்தைப் போல இலக்கியத்தில் வளமான வேறு இந்திய வட்டார மொழி எதுவும் இல்லை.

மேலும் படிக்க: அன்று மருத்துவப் படிப்பில் சேர சமஸ்கிருதம்?

அடுத்ததாக, அந்த செம்மொழியின் வழியாக கல்வி பெறுவதால் அது தரும் மனப் பயிற்சியின் அளவு, ஒரு வட்டார மொழிக் கல்வி அளிப்பதைவிட அதிகமாக உள்ளது. மூன்றாவதாக, வட்டார மொழிகளின் முன்னேற்றம் சமஸ்கிருதம் என்ற செம்மொழி கற்பதன் மூலமே நிகழும். சமஸ்கிருதம், அரபு மற்றும் பாரசீகம் ஆகியவை பல்கலைக்கழகங்களில் கற்றுக்கொடுக்கப்படும் இந்தியாவின் முதன்மையான பாரம்பரிய மொழிகளாகும். (இந்தியாவை விடுத்து) அவெஸ்டா மற்றும் பாலி ஆகியவையும் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.”

இதை அடுத்து 1913இல் ஆங்கிலேய அரசாங்கம் வெளியிட்ட இந்திய மருத்துவ கொள்கை என்ற தீர்மானமும், அடுத்தடுத்த சாட்லர் கமிட்டி அறிக்கைகளும் இதே வழியிலேயே தொடர்ந்து பயணித்தன. ஆரம்பம் முதலே நாடு முழுமைக்குமான மருத்துவ கட்டமைப்பை, குறிப்பாக கிராமப் புறங்களில் அடிப்படை மருத்துவ வசதியை கொண்டு சேர்ப்பது என்பது ஆங்கிலேய அரசுக்கு ஒரு பெரும் சவாலாகவே இருந்து வந்தது. பல காலமாகவே ஆயுர்வேதத்திலும் யுனானியிலும் மருத்துவ கல்வி, தனித்தனி கல்வி நிறுவனங்களால் வழங்கப்பட்டு வந்தன. அது தவிர சமஸ்கிருதம் வழியாகவே அலோபதி மருத்துவ கல்வி வேறு தனியாக வழங்கப்பட்டு வந்தது.

ஆகவே, அந்தக் கால கட்டத்தில், பல்வேறு மாகாண, வட்டார அதிகாரங்களின் கீழ் இருந்த வெவ்வேறு மருத்துவ முறைகளைப் பின்பற்றியபடி இருந்த மருத்துவ அமைப்புகளும், அதற்கான கல்வி முறைகளும், ஒழுங்கு படுத்தப்பட்டு, ஒரே மத்திய சிவில் சர்வீஸின் கீழ் கொண்டு வருவது மற்றும் மருத்துவ வசதிகளை மேம்படுத்துவது ஆகியவைதான் ஆங்கிலேய அரசின் குறிக்கோளாக இருந்தது.

இந்த நோக்கம் சம்பந்தமாக, பாரம்பரிய மருத்துவம் என்ற பெயரில் இருந்த ஆயுர்வேத சிகிச்சை முறை, மற்றும் செம்மொழி என்ற பெயரில் சமஸ்கிருதத்தின் வழியாகவே அலோபதி மருத்துவத்தையும் சேர்த்து பயின்ற மருத்துவர்களின் பங்களிப்பு என்னவென்று பார்த்தால் ஒரு சுவாரசியமான விஷயம் தெரிய வருகிறது.

19ஆம் நூற்றாண்டின் பின் பகுதியில் மருத்துவ மேம்பாட்டுக்கான வழிமுறைகளைப் அலசும் அரசு அறிக்கைகள் குறிப்பிடுவது, அதுவரை எடுத்த கல்வி மேம்பாட்டு நடவடிக்கைகளுக்குப் பின்னும், நாட்டின் பரப்பளவு மற்றும் மக்கட்தொகை பரவல் ஆகியவற்றோடு ஒப்பிடுகையில் பயிற்சி பெற்ற (M.B மற்றும் L.M.S பட்டம் பெற்ற) மருத்துவர்கள் குறைந்த அளவிலேயே இருந்தனர். ஆகவே கிராமப்புறங்களில் (mofussil) அடிப்படை மருத்துவ சேவையை கொண்டு சேர்க்க வழமையான வழிகளில் இல்லாமல் வேறு வழிகளைக் கடைபிடிக்க வேண்டும் என்ற நிலைக்கு ஆங்கிலேய அரசு தள்ளப்பட்டது.

ஆயுர்வேதத்தை வழக்கமாக கைக்கொண்ட சமூகம் பின்னர் அலோபதியின் ஆதரவை நாடியதும், முன்னேறிய வகுப்பினர் அலோபதி மருத்துவத்தை அரவணைத்துக் கொண்டதையும் காணலாம்

அதன்படி பாரம்பரிய மருத்துவர்களை, அடிப்படை அலோபதி சிகிச்சை முறைகளில் பயிற்சி கொடுத்து கிராமப்புறங்களில் ஈடுபடுத்துவது என்ற முயற்சியை கையில் எடுத்தனர். அப்படி முயன்றபோது பரம்பரை கிராம வைத்தியன்களின் ( அறிக்கையில் அந்த வார்த்தை தான் உள்ளது) சேவையை பயன்படுத்திக்கொள்வது என்ற முடிவு எடுக்கப்பட்டது. மேலும் மேட்டுக் குடிகளிடம், குறிப்பாக பிராமணர்களிடம் ( அறிக்கையில் உள்ள வார்த்தைப் பயன்பாடு) அலோபதி மருத்துவத்தின் மீது ஒரு வித ஒவ்வாமை இருந்ததையும் காரணமாக அறிக்கை சுட்டியது. அத்தோடு வருங்காலத்தில் அலோபதி மருத்துவத்தில் பிராமணர்களையும் அதிக அளவில் பங்கு பெற வைக்கும் வழி வகைகள் பற்றிய அக்கறையையும் அது வெளிப்படுத்துகிறது.

கிராம வைத்தியர்கள் என்பவர்கள் முறையான பயிற்சி ஏதும் இல்லாமல் பரம்பரையாக, சேவைத் தொழில் செய்து வரும் ஏகாலி, நாவிதர் போன்றோரின் இடையே இருந்து, வழிவழியாக மருத்துவ செயல்பாடுகளை தொடர்ந்து வரும் ஒரு பிரிவினர் ஆவர். கிராமத்தில் அனைவரும் அவர்கள் சேவையை பயன்படுத்திக்கொள்வர்.

அதற்கு மாறாக ஆயுர்வேத மருத்துவம் என்பது, உயர்குடியினர் மட்டுமே பயிற்சி பெறக்கூடிய வகையில் இருந்தது. மேட்டுக்குடியினரின் தெருவுக்குள் பிற சமூக மக்கள் நுழைவது தடைசெய்யப்பட்ட தீண்டாமை நிலவிய காலத்தில், பொது மருத்துவ சேவை என்பது ஆயுர்வேதம் வழியாக நிகழ முடியாத ஒன்று என்று இதிலிருந்து புரிந்து கொள்ளலாம்.

மேலும் படிக்க: விடுதலைப் போரில் பத்திரிகையாளர்கள் பற்றி புத்தகம்: 92 வயதில் எழுதிய பத்திரிகையாளர்!

பிறகு தொடர்ந்து அரசின் வருடாந்திர மருத்துவ அறிக்கைகளை படிக்கும் போது, 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், முன்பைவிட, சமூகத்தில் முன்னேறிய வகுப்பினர் பாரம்பரிய மருத்துவத்தை விடுத்தது அலோபதி மருத்துவத்தை நாடும் போக்கு அதிகரித்தது தெரிகிறது. அதைத் தொடர்ந்து அலோபதி மருத்துவத்தில் பட்டம் பெற்றவர்களின் எண்ணிக்கையில், ஒப்பீட்டில், பிராமணர் அல்லாதோரை விட பிராமணர்களின் பங்கு வெகுவாக அதிகரித்திருப்பதையும் காணமுடிகிறது. இதிலிருந்து, ஆயுர்வேதத்தை வழக்கமாக கைக்கொண்ட சமூகம் பின்னர் அலோபதியின் ஆதரவை நாடியதும், முன்னேறிய வகுப்பினர் அலோபதி மருத்துவத்தை அரவணைத்துக் கொண்டதையும் காணலாம்.

தொடர்ந்து மருத்துவத்தை மத்திய அரசின் மூலம் நேரடியாக கட்டுப்படுத்தும் சிந்தனையிலும் செயல்பாட்டிலும், 1919இல் மாண்டேகு-செம்ஸ்போர்டு சீர்திருத்தம் ஒரு பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்தது. சீர்திருத்தத்தின் விளைவாக எழுந்த இந்திய அரசாங்க சட்டம் (1919) வழியாக, அதுவரை மத்திய அரசின் கீழ் நேரடியாக இருந்த மருத்துவத் துறை, மாகாணங்களின் நேரடி அதிகார உரிமைக்கு வந்தது.

அதைத்தொடர்ந்து சென்னை மாகாணத்துக்கு நடந்த 1920இல் நடந்த தேர்தலில் வென்ற நீதிக் கட்சி மாகாண அரசை வழிநடத்தியது. நீதிக் கட்சியின் அடிப்படை நோக்கு பிராமணரல்லாதோருக்கு அதிகாரத்தை பகிர்ந்தளிப்பது என்ற போதிலும், சமஸ்கிருதத்தின் ஆதிக்கம் தவிர்ப்பதும், தமிழ் உட்பட மாகாணத்தின் மற்ற மொழிகளுக்கான முன்னுரிமை பெற்றுத் தருவதும், கவனம் பெற்றது.

அதைத் தொடர்ந்து தனித்தமிழ் இயக்கமும் முன்னணிக்கு வந்தது. தனித்தமிழ் இயக்கம் என்பது, மறைமலை அடிகளால் ஆரம்பத்தில் துவக்கப்பட்டு, பின்னர் தேவநேயப் பாவாணர், பாரதிதாசன், பெருஞ்சித்திரனார், பரிதிமாற் கலைஞர், கி.ஆ.பெ. விசுவநாதம் போன்ற பெரியோர் அதை அந்தக் காலகட்டத்தில் முன்னெடுத்தனர்.

அத்தோடு, உ.வே.சாமிநாதையர் போன்ற பிராமணர்களும், நாமக்கல் கவிஞர் போன்ற பிராமணர் அல்லாதோரும் இணைந்து அதற்குச் செய்த தொண்டுகள் குறிப்பிடத்தக்கது. இருந்த போதிலும், நீதிக்கட்சி அரசாங்கத்தில் அது முன்னிலை பெற அரசியல் மற்றும் சமூக காரணங்கள் பல இருந்தன.

வட்டார மொழி என்று குறிக்கப்பட்ட தமிழ் ஆசிரியர்கள் செம்மொழி என்று குறிக்கப்பட்ட சமஸ்கிருத ஆசிரியர்களோடு ஒப்பிடுகையில் எந்த பொருளாதார மேம்பாடும் இல்லாமல் மிகவும் நலிந்த நிலையில் இருந்தனர்

ஏற்கனவே, அனைத்துக் கல்வி திட்டத்திலும் செம்மொழி என்ற பெயரில் சமஸ்கிருதம் ஆதிக்கம் செலுத்தி வந்தது. கல்வியிலும் வட்டார மொழி என்று குறிக்கப்பட்ட தமிழ் ஆசிரியர்கள் செம்மொழி என்று குறிக்கப்பட்ட சமஸ்கிருத ஆசிரியர்களோடு ஒப்பிடுகையில் எந்த பொருளாதார மேம்பாடும் இல்லாமல் மிகவும் நலிந்த நிலையில் இருந்தனர். பள்ளிகளில் மற்ற பாடங்களை கற்பிப்போர் ஆசிரியர் என்று அழைக்க பட்ட போது, தமிழ் கற்றுக்கொடுப்பவர் மட்டும் தமிழ்ப் பண்டிதர் என்றே குறிக்கப்பட்டார்.

அவர்களின் சம்பளம் மற்ற ஆசிரியர்களைக் காட்டிலும், குறிப்பாக சமஸ்கிருத ஆசிரியர்களைக் காட்டிலும் மிக சொற்பம். மேலும் அவர்கள் பள்ளியில் வேறெந்த மேல் மட்ட பதவிக்கும், உதாரணமாக தலைமை ஆசிரியர் ஆவதற்கு, வழிவகை ஏதும் இல்லாமல் இருந்தது. மொத்தத்தில் தமிழ் பண்டிதர்கள், பொருளாதார அளவில் மிகவும் நலிந்த நிலையிலும், சமூக அந்தஸ்தில் மிகவும் தாழ்ந்த நிலையிலும் இருந்தனர். இப்படி வயிற்றுக்கும் வாய்க்கும் என சமாளித்துக்கொண்டிருந்த தமிழ் பண்டிதர்களின் குரல் இந்த அநீதியை எதிர்த்து எப்படி எழும்பும்?

தனித்தமிழ் இயக்கம் முன்னெடுக்கப்பட்ட போது, அதில் பங்கு கொண்ட பெரும்பாலானவர்கள் தமிழ் ஆசிரியர்கள். அதனால் அதன் குரலும் அதிகம் கேட்கப்படாமலே இருந்தது. நலிந்த நிலையில் இருந்த தமிழ் ஆசிரியர்களில் பிராமணர் அல்லாதோர் அதிகம். அத்தோடு சமஸ்கிருதம் தவிர்த்து மற்ற மொழிகளுக்கு முன்னுரிமை பெற்றுத் தருவதில் முனைப்புடன் இருந்த நீதிக் கட்சியின் ஆட்சியில் அவர்களின் குரல் ஓங்கி ஒலிக்கவும், கவனம் பெறவும் ஒரு வாய்ப்புக் கிடைத்தது. தனித்தமிழ் இயக்கம் நீதிக்கட்சியின் ஆட்சியில் முன்னிலை பெற இதுவே முக்கிய காரணமானது.

இப்போது மருத்துவமும் கல்வியும் மாகாண அரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்து, தனித்தமிழ் இயக்கம் வேறு முன்னிலை பெற்றபோது, நீதிக் கட்சி அனைவருக்குமான சமூக முன்னேற்ற திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுக்க ஆரம்பித்தது. அதன் பகுதியாக மருத்துவ சேவை பரவலாக்கம் அவர்களின் கவனத்துக்கு வந்தது. அதில் ஒரு செல்வாக்கான ஒரு சாரார் மருத்துவ சேவை நவீனமயமாக்குவதில் முனைப்புடன் இருந்தனர். மேலும் மருத்துவ கல்வியில் பிராமணர் அல்லாதோரின் பங்கை உறுதி செய்யவும் இட ஒதுக்கீடு போன்ற முன்னெடுப்புகளில் முனைப்பு காட்டினார்.

முன்பு போல் இல்லாமல் சமஸ்கிருதத்துக்கான முன்னுரிமை இப்போது மதராஸ் மாகாணத்தில் இல்லாது போனது. அத்தோடு தனித்தமிழ் இயக்கமும் அத்தோடு சேர்ந்த போது, ஆயுர்வேதம் தவிர்த்து, தமிழ் நூல்களின் அடிப்படையில் அமைந்த சித்த மருத்துவம் மெதுவாக முன்னுரிமை பெற ஆரம்பித்தது.

ஏற்கனவே சமஸ்கிருதத்தின் மேன்மையை உயர்த்திப்பிடித்த செம்மொழி என்ற கதையாடல் கேள்விக்குள்ளானதுடன், இப்போது ஆயுர்வேதத்தின் நிதி ஆதரவும் பலமிழந்தது. ஆகவே, இப்போது புதிய உத்தியுடன் ஆயுர்வேதத்தையும், அதன் அடிப்படையான சமஸ்கிருதத்தையும் மீட்டெடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு அதன் ஆதரவாளர்கள் ஆளாயினர். இதற்கிடையே காங்கிரசும் அதன் சார்ந்த இயக்கங்களும் மரபு சார்ந்த விஷயங்களை சுதேசி அடையாளத்துடன் முன்னெடுக்க ஆரம்பித்தன.

இதுதொடர்பாக காந்தி சொன்னதாக 1920 ஆந்திரபத்ரிகா என்னும் தெலுகு சுதேசி பத்திரிக்கையில் வெளியானது.

“மருத்துவத் தொழில் என்பது ஆங்கிலேயர்களால் நம்மை அடிமைகளாக வைத்திருக்கப் பயன்படுத்தும் முக்கிய வழிகளில் ஒன்றாகும். மருத்துவமனைகள் பாவத்திற்கு உதவும் நிறுவனங்கள்; அவை மனிதர்கள் சுகாதார விதிகளை புறக்கணித்து ஒழுக்கக்கேடான வாழ்க்கையில் தொடர்ந்து ஈடுபட வழிவகுக்கின்றன. ஐரோப்பிய மருத்துவர்களின் செயல்பாடு மிகவும் அநீதியானது. மனித உடல்களின் பாதுகாப்பு என்ற பெயரில், அவர்கள் ஆண்டுதோறும் சில ஆயிரக்கணக்கான விலங்குகளைக் கொல்கிறார்கள்”

காந்தியைப் பொருத்தவரை, அவரது பல பார்வைகளில் பிற்காலத்தில் பிற்பாடு மாற்றத்துக்கு உள்ளானாலும், அலோபதியைப் பொருத்தவரை அவர் பார்வை இறுதி வரை மாறவில்லை.

எப்படி இருந்த போதும், அந்த காலகட்டத்தில், அந்தப் பார்வை சுதேசி இயக்கத்தின் ஒட்டுமொத்த பார்வையாக இருந்தது. அதன் விளைவாக ஆயுர்வேத மற்றும் சமஸ்கிருத ஆதரவாளர்களுக்கு ஒரு புதுக் கதவு திறக்க ஆரம்பித்தது. மேலும், நீதிக் கட்சிக்கும், தங்கள் கட்சியில் இருந்தே ஒரு புதிய சவால் எழும்ப ஆரம்பித்தது.

(இது மூன்று பகுதிகள் கொண்ட தொடரின் இரண்டாவது கட்டுரை)

Share the Article

Read in : English

Why we always find lots of cashews on top of Deepavali mixture why tangedco need to pay us for damaging household appliances why eating on banana leaves is healthier What the Tamil Nadu Organic policy needs what is the real story of onam festival