Read in : English
பாண்டிச்சேரி எனப்படும் புதுச்சேரியில் பிறந்து பாரிஸில் வசிக்கும் வரலாற்றாசிரியரான டாக்டர் ஜே.பி.பிரசாந்த் மோரே தென்னிந்தியாவில் முஸ்லிம்களின் எழுச்சி, சுதந்திரப் போராட்டத் தலைவர் சுபாஷ் சந்திரபோஸின் மறைவு, தமிழ்க் கவிஞர் பாரதியின் வாழ்க்கை உள்ளிட்ட பல்வேறு விஷயங்களைப் பற்றி நேர்காணல்கள் தந்து inmathi.com வாசகர்களுக்கு ஏற்கனவே பரிச்சயமானவர்.
inmathi.com சார்பில் ஜேபிபி மோரேயுடன் உரையாடிய டாக்டர் பத்ரி சேஷாத்ரி, cricinfo.com இணை நிறுவனர் மற்றும் நியூ ஹொரைசன் மீடியாவின் நிர்வாக இயக்குநர் ஆவார். 1991ஆம் ஆண்டில் சென்னை ஐ.ஐ.டியில் இயந்திரப் பொறியியலில் B.Tech பட்டமும், 1996ல் அமெரிக்காவின் கார்னெல் பல்கலைக்கழகத்தில் இயந்திரப் பொறியியலில் முனைவர் பட்டமும் பெற்றார்.
தமிழ், ஆங்கில நாளிதழ்கள் மற்றும் பருவ இதழ்களில் தொழில்நுட்பம், அறிவியல், கல்வி, அரசியல் மற்றும் நடப்பு நிகழ்வுகள் குறித்து பத்ரி சேஷாத்ரி எழுதி வருகிறார். விஜய் டிவி, புதிய தலைமுறை போன்ற சேனல்களில் டிவி நிகழ்ச்சிகளில் தவறாமல் தோன்றுகிறார். தந்தி டிவியில் 17 வாரங்கள் ‘வாக்-தி-டாக்’ நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியுள்ளார்.
அப்போதைய பிரெஞ்சுக் காலனியான பாண்டிச்சேரியில் பாரதி தங்கியிருந்தது பற்றி மோரே முன்பொரு நேர்காணலில் சுருக்கமாகப் பேசினார். 1908 முதல் 1918 வரை பாண்டிச்சேரியில் பாரதி கொண்ட அஞ்ஞாத வாசத்தைப் பற்றி தற்போதைய நேர்காணலில் விலாவாரியாகப் பேசியுள்ளார்.
“ஆங்கிலேய அடக்குமுறையில் இருந்து தப்பிக்கவே, மண்டயம் சீனிவாசாச்சாரியுடன் பாண்டிச்சேரிக்கு வந்தார் பாரதி. அங்கிருந்தபடியே ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராகத் தனது தீப்பொறி இதழியலைத் தொடர்ந்தார் பாரதி. இந்தியா மற்றும் விஜயா ஆகிய பத்திரிகைகளை நடத்தினார்.
பாண்டிச்சேரி அஞ்ஞாத வாசத்தின்போதுதான் படைப்பாற்றலிலும் தேசபக்தி உணர்விலும் உச்சம் தொட்டார் பாரதி. அவரது புகழ்பெற்ற இலக்கியப் படைப்புகளான பாஞ்சாலி சபதம், குயில் பாட்டு போன்றவை இக்காலகட்டத்தில்தான் எழுதப்பட்டன. இந்திய இதிகாசமான மகாபாரதத்தின் ஓரங்கமான பாஞ்சாலி சபதத்தை மீட்டெடுத்து அதன் அர்த்தத்தை ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான நவீன இந்தியப் போர் என்று மடைமாற்றம் செய்தவர் பாரதி.
கோஷிடமிருந்து வெளிப்பட்டது தேசியவாதப் போர்வீரர் அல்ல; மாறாக தத்துவக் கதையாடல்களைக் கொண்ட ஓர் அமைதியான யோகிதான்
அடிமைத்தனத்தில் வாடும் பாரதத் தாயின் உருவகமாகப் பாரதி பாஞ்சாலியை மீளுருவாக்கம் செய்தார்; பாஞ்சாலியின் சபதத்தை இந்தியாவின் சுதந்திரத்திற்கான உறுதிமொழியாகவும் பாரதி நிறம் மாற்றினார்.
ஆனால் உயர்ந்த இலக்கிய மதிப்பும், தேசிய உணர்வும் கொண்ட இந்தப் படைப்பு பாரதியின் காலத்தில் வெளியிடப்படவில்லை. அன்னி பெசன்ட் மற்றும் தத்துவஞானி ஜே.கிருஷ்ணமூர்த்தியை விமர்சித்து அவர் எழுதிய ‘தி ஃபாக்ஸ் வித் கோல்டன் டெயில்’ என்ற ஆங்கில உருவக எழுத்து பதிப்பக உலகில் பெரும் வெற்றி பெற்றது; முதல் பதிப்பிலேயே 500 பிரதிகள் விற்றுத் தீர்ந்தன. ஆனால் பாரதி அதில் மகிழ்ச்சியடையவில்லை; தனது குறுங்காவியமமான பாஞ்சாலி சபதம் மக்களைச் சென்றடையவில்லை என்று வருத்தமடைந்தார்” என்றார் மோரே.
மேலும் படிக்க: பாரதி புதுச்சேரியில் ஏன் பத்தாண்டு அஞ்ஞாதவாசம் செய்தார்?
அரவிந்தர்-பாரதி தொடர்பைப் பற்றி பேசும்போது, “அரவிந்த கோஷின் பாண்டிச்சேரி வருகையால் ஆரம்பத்தில் பாரதி உற்சாகமடைந்தாலும், பின்னர் கோஷுடனான அவரது நெருக்கம் குறைந்தது. முசாபர்பூர் மாவட்ட நீதிபதியை கொலை செய்ய முயன்ற அலிப்பூர் குண்டுவெடிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த கோஷ் பாண்டிச்சேரிக்கு வந்தார். குண்டு இலக்கைத் தவறவிட்டதால், அது இரண்டு ஆங்கிலப் பெண்களின் உயிரைப் பறித்தது.
குண்டுவெடிப்பு பற்றி கேள்விப்பட்ட பாரதி, இரண்டு ஆங்கிலப் பெண்கள் இறந்ததற்கு வருத்தம் தெரிவித்தார். திலகர், லாலா லஜபதிராய் போன்ற முக்கிய சுதந்திரப் போராட்ட தலைவர்கள் மீதான பிரிட்டிஷ் ஒடுக்குமுறையைத் தொடர்ந்து, கோஷ் கொல்கத்தா அருகில் ஹூக்ளி ஆற்றங்கரையில் இருந்த பிரெஞ்சு காலனியான சந்தர்நாகூருக்கு (சந்தன்நகர்) தப்பிச் சென்றார். அங்கிருந்து பாண்டிச்சேரி வந்தார்.
தென்னிந்தியாவில் சுதந்திரப் போராட்ட உத்வேகத்தைத் தூண்டும் விதமாக கோஷ் தலைமையேற்பார் என்று எதிர்பார்த்திருந்த பாரதிக்கு ஏமாற்றம் ஏற்பட்டது. காரணம், கோஷிடமிருந்து வெளிப்பட்டது தேசியவாதப் போர்வீரர் அல்ல; மாறாக தத்துவக் கதையாடல்களைக் கொண்ட ஓர் அமைதியான யோகிதான். ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்து நாட்டை விடுவிப்பதற்கான ஆயுதங்களாகக் கவிதையையும் தத்துவத்தையும் கொண்ட பாரதி, கோஷ் துறவறம் பூண்டபோது, அவரது கால்களைத் தொடுவதற்காகப் போட்டி போடும் மக்கள் கூட்டத்தைப் பார்த்து சினமடைந்தார். பாரதியின் சீடர் பாரதிதாசன் பாரதியின் கோபத்திற்குச் சாட்சியாக நின்றார்” என்றார் மோரே.
“பாண்டிச்சேரி வழியாகத்தான் பாரதியின் சிந்தனைகள் வால்டேர், ரூசோ போன்ற பிரெஞ்சு சிந்தனையாளர்களின் செல்வாக்கிற்கு ஆளாகின. ‘சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம்’ என்ற புகழ்பெற்ற பிரெஞ்சு புரட்சி முழக்கம் அவரது அரசியல் கண்ணோட்டத்தை வடிவமைப்பதில் பெரும் பங்கு வகித்தது. ஜனநாயகவாதியாக, சமதர்மவாதியாக, சமத்துவவாதியாக, சீர்திருத்தவாதியாக மிளிர்ந்த பாரதி அனைவரும் சமம் என்ற சாதியற்ற சமுதாயத்தைக் கனவு கண்டார்.
ஆதலால் பிரிட்டிஷ் இந்தியா அடிமைப்பட்டுக் கிடந்தபோது பிரெஞ்சு இந்தியா தனது குடிமக்களை பிரான்ஸ் நாடாளுமன்றப் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதில் வாக்குரிமையைப் பயன்படுத்த அனுமதித்தது பாரதிக்கு ஆச்சரியமாக இருந்தது. பாண்டிச்சேரித் தேர்தலில் பால் ரிச்சர்டுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். பால் ரிச்சர்ட் மீரா அல்பாசாவின் கணவர் ஆவார். மீரா அல்பாசாதான் பின்னர் ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமத்து தாய் என்று புகழப்பட்டார்.
பாரதியும் அவரது குடும்பத்தினரும் வறுமையில் வாழ்ந்தாலும், அவரது இலக்கியப் படைப்புகள் செழுமையானவை. அவரது புகழ்பெற்ற நீண்ட கவிதையான ‘குயில் பாட்டு’ அப்போது ‘குயில் தோப்பு’ என்று அழைக்கப்பட்ட அமைதியான சூழலில் இயற்றப்பட்டது. காலப்போக்கில் குயில் தோப்பு மறைந்துவிட்டது; அதற்குப் பதிலாக நவீன குடியிருப்புகள் உருவாகின.
பாண்டிச்சேரி அஞ்ஞான வாசத்தின்போதுதான், புகழ்பெற்ற இலக்கியப் படைப்புகளான பஞ்சாலி சபதம், குயில் பாட்டு போன்றவை பாரதியால் எழுதப்பட்டன
பாரதியின் பாண்டிச்சேரி அஞ்ஞாத வாசத்தின் மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், சித்தானந்தா ஆசிரமத்தைச் சேர்ந்த குள்ளசாமி, கோவிந்தசாமி போன்ற சில சித்தர்களுடன் நட்புறவு கொண்டிருந்தார். அந்தச் சித்தர்கள்தான் பாரதியின் ஆன்மீகத்தையும் மீமெய்யியல் சிந்தனையையும் உருவாக்கினர். தன்னையும் சித்தன் என்று அழைத்துக் கொண்டார் பாரதி.
தமிழக அரசியல் வரலாற்றின் முக்கியமான ஒரு நிகழ்வு குறித்து பேசிய மோரே, தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்ற நீதிக்கட்சி 1916ஆம் ஆண்டில் டாக்டர் சி.நடேசன், டி.எம்.நாயர் மற்றும் பிட்டி தியாகராய செட்டி ஆகியோரால் நிறுவப்பட்டதைக் குறிப்பிட்டார். அப்போதைய சென்னை மாகாணத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் நிலவிய பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடுவதற்காகத் தொடங்கப்பட்ட பிராமணரல்லாதார் அமைப்பு அது. தொடர்ந்து பல தசாப்தங்களாகத் தமிழ் அடையாள அரசியலில் ஆழங்காற்பட்ட திராவிட இயக்கத்தின் தாயாக நீதிக்கட்சி விளங்கியது.
மேலும் படிக்க: பாவேந்தர் பாரதிதாசன் சினிமாவில் பெரிதாகச் சாதிக்க முடியாமல் போனது ஏன்?
ஆனால், அப்போது பாண்டிச்சேரியில் தங்கியிருந்த பாரதியால் ஆரிய- திராவிட வேறுபாட்டை முன்னிறுத்தும் திராவிட இயக்கத்தைப புரிந்து கொள்ள முடியவில்லை. ஆரியப் படையெடுப்புக் கொள்கையும், மண்ணின் ஆதிக்குடி திராவிடர்கள் என்ற கொள்கையும் 19ஆம் நூற்றாண்டிலிருந்தே தமிழ்நாட்டு அரசியல் கதையாடலின் ஒரு பகுதியாக இருந்து, இன்றும் அரசியல் விவாதங்களில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. ஆனால் அதனுடன் முரண்பட்ட பாரதி திராவிடச் சித்தாந்தத்தை இகழ்ந்தார். ஆரிய-திராவிட பிளவு என்பது கிறித்தவ மிஷனரிகளால் உருவாக்கப்பட்ட கட்டுக்கதை, மாயை என்று கூறினார். ராபர்ட் கால்டுவெல்தான் திராவிட மொழிக் குடும்பத்தைக் கண்டுபிடித்தார்; அதில் தமிழ் முதன்மையானது என்றார். ஆரியர்கள் வடஇந்தியாவின் மீது படையெடுத்து சிந்து சமவெளி நாகரிகத்தில் வாழ்ந்த திராவிடர்கள் மீது தங்கள் பண்பாட்டைத் திணித்தனர் என்று ஜெர்மானிய இந்தியவியலாளர் மாக்ஸ் முல்லர் கருதுகிறார்.
திராவிட இயக்கச் சித்தாந்தம் முக்கியமாக ஆரிய-திராவிட பிளவைச் சுற்றியே கட்டமைக்கப்பட்டிருந்தது. பிராமணர்கள் ஆரியர்கள் என்றும், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் துளு பேசுபவர்கள் திராவிடர்கள் என்றும் சித்தாந்தக் கட்டுமானம் உருவானது.
ஆனால் தலித் கனகலிங்கத்திற்கு பூணூல் அணிவித்து அவரை உயர்சாதிப் பிராமணர் என்று அறிவித்த பாரதி ஓர் இலட்சியவாதி. கீதையும் உபநிடதங்களும் கூறுவது போல, சாதித் தடைகள் இல்லாத மனிதர்கள் கடவுளின் பிள்ளைகளாக வாழும் ஒரு சமத்துவ சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்ற பாரதியின் உளக்கிடக்கையை இந்தச் சம்பவம் பேசுகிறது.
எனவே, சமூகத்தை வகுப்புவாத அடிப்படையில் பிளவுப்படுத்தும் பார்ப்பனரல்லாதோர்களின் முயற்சியை வெறுத்த பாரதியைத் திராவிட இயக்கம் ஈர்க்கவில்லை என்பதில் ஆச்சரியமில்லை” என்று கூறிய மோரே, ‘ஆதி திராவிடர் நலனுக்காகப் போராடிய தென்னிந்தியாவின் முதல் சாதி எதிர்ப்புப் போராளியான அயோத்திதாச பண்டிதரின் எழுத்துக்களைப் பற்றி பாரதி அறிந்திருக்கவில்லை’ என்றும் கூறினார்.
Read in : English