Read in : English
நவீன தமிழ் இலக்கியத்தில் உச்சம் தொட்ட 20-ஆம் நூற்றாண்டுப் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் (ஏப்ரல் 29,1891 – ஏப்ரல் 21,1964) என்ற பெயரைக் கேட்டதுமே சட்டென்று ஞாபகத்திற்கு வருவது “எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு” என்ற அவரது கம்பீரமான சந்தம்கொஞ்சம் தீப்பிழம்பு கவிவரிகள்தான்.
தற்காலச் சமூக வலைத்தளவாசிகளுக்கு ஏ. ஆர். ரஹ்மான் டிவிட்டரில் எடுத்துரைத்த பாரதிதாசனின் மேள்கோளான “இன்பத்தமிழ் எங்கள் உரிமைச் செம்பயிருக்கு வேர்” என்ற வரிவேண்டுமானால் நினைவுக்கு வரலாம்.
கனகசுப்புரத்தினம் என்ற பாரதிதாசன் ஒரு திராவிடர்க்கழகக் கவிஞர்; நாத்திகவாதி; பெரியாரின் அணுக்கத்தொண்டர்; பத்திரிகையாளர்; திரைப்பட எழுத்தாளர்; பாடலாசிரியர்; சமூகச் சிந்தனையால் சனாதனவாதிகளுக்கு சண்டமாருதமாய்ச் சுழன்றவர்; தொழில்ரீதியாக அவர் ஒரு தமிழாசிரியர் (அகவை 18-ல் பாண்டிச்சேரியில் நிரவி கிராமத்தில் பிரான்ஸ் அரசுப்பள்ளியில் தமிழாசிரியராக தன்பணியைத் தொடங்கியவர்). இப்படி பலமுகங்கள் உண்டு அவருக்கு. ஆயினும் இவை எல்லாவற்றையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு ஆண்டுகள் பலவாயினும் அணையாத விளக்காக இன்னும் எரிந்துகொண்டிருப்பது புரட்சிக்கவிஞர் என்னும் புகழ்கமழும் அவரது படிமம்தான். அவரை வாசித்தறியாதவர்களுக்குக் கூட தெரியும் ‘தமிழுக்கும் அமுதென்று பேர்’ என்ற முத்தமிழ் கவிமுழக்கம் அவருடையது என்று.
இந்திய ஒன்றிய அரசு இந்தியைத் திணிக்க முயலும்போதெல்லாம் அதை எதிர்த்துப் போராடும் தமிழ்போராளிகளுக்கு ஆயுதமானது அவரது கவிதைகள்தான். “இன்னலை ஏற்றிட மாட்டோம் – கொல்லும் இந்தியப் பொதுமொழி இந்தி என்றாலோ கன்னங் கிழிந்திட நேரும் – வந்த கட்டாய இந்தியை வெட்டிப் புதைப்போம்,” என்ற அவரது வரிகள் 1937 மற்றும் 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் ஒலித்தவைதான். ”சங்கே முழங்கு” பாடலில் ஒலிக்கும் “வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோள்கள் எங்கள் வெற்றித்தோள்கள்” என்ற வரிகள் (எம்ஜியாரின் ‘கலங்கரை விளக்கம்’ திரைப்படத்தில் அந்தக் கவிதை சரோஜாதேவியின் நளின அபிநய நடனத்தில் அற்புதமாகப் படமாக்கப்பட்டிருக்கும்) திராவிட இயக்கம் தூக்கிப்பிடித்த தீப்ந்தம்.
அவரை வாசித்தறியாதவர்களுக்குக் கூட தெரியும் ‘தமிழுக்கும் அமுதென்று பேர்’ என்ற முத்தமிழ் கவிமுழக்கம் அவருடையது என்று.
சாதி, மதம், மூடநம்பிக்கைகளை அவர் சாடியவிதம் சனாதனவாதிகளுக்குச் சவுக்கடியாக இருந்தது. ஒருசமயம் பெங்களூரு திருக்குறள் மாநாட்டில் அவர் பேசிக்கொண்டிருக்கும் போது உடல்முழுக்கத் திருநீறு பூசிய ஒரு சைவர் அவரைப் பார்த்து, “ஏன் நீங்களும், உங்கள் கட்சியும், உங்கள் கட்சிஆள் எம்.ஆர். ராதாவும் ஜனங்கள் கடவுளாகக் கும்பிடும் ராமனை இப்படி இழிவுபடுத்துகிறீர்கள்? ராதா கீமாயாணம் என்று நாடகம் நடத்தி ராமாயணத்தைக் கேவலப்படுத்துகிறார். ஏன் இப்படிச் செய்கிறீர்கள்?” என்று கேள்வி கேட்டார்.
அதற்குப் பாவேந்தர் பதில் சொன்னார் இப்படி: “உங்களது சைவத்திலே சிவஞானச் சித்தியார் என்ற புலவர் ராமனைக் கடவுளாக ஏற்கவில்லை, தெரியுமா? கடவுள் மாயைகளுக்கு அப்பாற்பட்டவர். ஒரு பொய்மானை உண்மை மானென்று நம்பி ஓடிய ராமன் எப்படிக் கடவுள் ஆவார் என்று அந்தச் சைவப்புலவரே கேட்டிருக்கிறார்: இதோ அந்தப் பாடல்: ’மாயமான் தன்னைப் பொய்மான் என அறியாது அரக்கன் மாயையில் அகப்பட்டுத்தன் மனைவியை இழந்தான் தன்னை மாயைக்குக் கர்த்தா என்பை.’ சைவ இலக்கியம் தெரியாமல் இப்படி பட்டைப் பட்டையாகத் திருநீற்றைப் பூசிக்கொண்டு வந்தால் போதுமா?”
பாவேந்தர் வாழ்க்கையே நகைமுரண்கள் கொண்டதுதான். பிராமண எதிர்ப்பு கொண்ட ஓர் இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்ட அவர், ‘ஐயர்’ என்று அன்போடு அழைக்கும் தனது குருவான மகாகவி பாரதியை ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டார். திராவிடர்க்கழகத்தினர் பாரதியைச் சனாதன தர்மத்தைத் தூக்கிப்பிடிப்பவர் என்று சொல்லி அவரைப் பாராட்டமாட்டார்கள். ஆனால் ‘நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா; காடுகமழும் சொற்கோ” என்று பாவேந்தர் பாரதியை வாழ்நாள் முழுவதும் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடினார். ஆரியத்தை எதிர்த்தார்; ஆண்டவனையும் எதிர்த்தார் பாரதிதாசன். ஆனாலும், “ஆதிசிவன் பெற்றுவிட்டான் – என்னை ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர் வேதியன் கண்டுபிடித்தே நிறைமேவும் இலக்கணம் செய்துகொடுத்தான்,” என்று பாடிய பாரதியின் ஆழ்ந்த நம்பிக்கை தனது திராவிட நாத்திக நம்பிக்கைக்கு எதிரானது என்றபோதிலும், அவரைக் குருவாகக் கொண்ட பாரதிதாசன் அவரைப் புறக்கணிக்கவில்லை; தன்புனைபெயரில் இருக்கும் தன் குருவின் பெயரையும், பலர் வேண்டிக்கேட்டும், புறந்தள்ளவுமில்லை.
பகுத்தறிவுக் கவிஞன், நாத்திகத் திராவிடக் கவிஞன் என்ற பொதுவெளி படிமத்திற்குள் அடக்கப்பட்ட பாரதிதாசன் “எங்கெங்குக் காணினும் சக்தியடா – ஏழுகடல் அவள் வண்ணமடா” என்று பாட்டுப்பாடித்தான் பாரதியின் நட்பை முதன்முதலாகச் சம்பாதித்தார்; “சுப்ரமணிய பாரதி கவிதா மண்டலத்தைச்’ சார்ந்த கவிஞனின் படைப்பு என்று அதைப் பத்திரிகைக்குப் பாரதி அனுப்பி வெளியிட்டார். இந்தத் தகவல்கள் எல்லாம் வியப்பூட்டுகின்றன. அதுவோர் நகைமுரண். மேலும் பாரதியைச் சந்திக்கும்வரை மயிலம் சுப்ரமணிய துதி போன்ற மரபுப்புலவர் பாணியிலான கவிதைகள்தான் எழுதிக் கொண்டிருந்தார் அவர். காலம் ஒருவரை எப்படி நிறம்மாற்றும்; மடைமாற்றும் என்பதற்குப் பாரதிதாசன் ஆகச்சிறந்தவோர் உதாரணம்.
“ஆதிசிவன் பெற்றுவிட்டான் – என்னை ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர் வேதியன் கண்டுபிடித்தே நிறைமேவும் இலக்கணம் செய்துகொடுத்தான்,” என்று பாடிய பாரதியின் ஆழ்ந்த நம்பிக்கை தனது திராவிட நாத்திக நம்பிக்கைக்கு எதிரானது என்றபோதிலும், அவரைக் குருவாகக் கொண்ட பாரதிதாசன் அவரைப் புறக்கணிக்கவில்லை; தன்புனைபெயரில் இருக்கும் தன் குருவின் பெயரையும், பலர் வேண்டிக்கேட்டும், புறந்தள்ளவுமில்லை.
தமிழ்க்கவிதை உலகத்தில் புகழுச்சியில் இருந்த அவர் தனது 46-ஆவது வயதில் திரைப்பட உலகில் அடியெடுத்து வைத்து பாட்டுக்கும் வசனத்திற்கும் அடிகள் எடுத்துக் கொடுத்தார். 1937-ல் ‘பாலாமணி அல்லது பக்காத்திருடன்’ படத்திற்கு முதன்முதலாகப் பாடல் எழுதிய அவர் தொடர்ந்து ராமானுஜர் (1938), காளமேகம் (1940), சுபத்ரா (1946), சுலோச்சனா (1947), ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி (1947 – இதில் கதாநாயகியாய் நடித்தவர் பின்னர் எம்ஜியாரின் துணைவியாரான வி.என். ஜானகி) ஆகிய திரைப்படங்களுக்குப் பாடல்களும் வசனமும் எழுதினார். அவரது எதிர்பாராத முத்தம் என்னும் கவிப்படைப்பு பொன்முடி என்ற படமாக (1950) உருமாறியது. வளையாபதி (1952) திரைப்படம்தான் அவரது திரைப்பட உலகப் பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது.
சுவையான சம்பவங்கள் பல நிகழ்ந்திருக்கின்றன அவரது திரைப்பட வாழ்க்கையில். வளையாத குணமும், நிலத்தில் யாருக்கும் அஞ்சாத சுயமரியாதை உணர்வும், அநீதி கண்டவிடத்து அறச்சீற்றத்துடன் அனல்போல் வெடிக்கும் அவரது வீரமும், இந்த அற்புதக்குணங்கள் எல்லாம் அந்நியமாகிவிட்ட திரைப்பட உலகில் அவரைத் தொடந்து பயணிக்க விடாமல் தடுத்தன.
1950-க்கு முன்பான காலகட்டத்தில் நடிகராகப் போராடிக்கொண்டிருந்த எம்ஜியாரும், கதைவசனகர்த்தாவாக கலைஞர் மு. கருணாநிதியும், பாடலாசிரியராகவும் கதாசிரியராகவும் கண்ணதாசன் என்ற ஏ.எல்.எஸ். முத்தையாவும் தத்தளித்துக்கொண்டிருந்த போது அவர்களை அரவணைத்துக்கொண்டது சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் உரிமையாளர் டி.ஆர். சுந்தரம்தான். அந்த ஜாம்பவான் முன்பு பயம்கலந்த மரியாதையுடன் மற்றவர்கள் நின்ற காலத்தில், அவருக்கு எதிரான இருக்கையில் விரலிடுக்கில் எரியும் சிகரெட்டுடன் அவரை ஒருமையில் அழைத்துப் பேசிக் கொண்டிருந்தவர் பாவேந்தர் என்னும் பாட்டு இமயம். சுந்தரமும் பாரதிதாசனை ’அண்ணா’ என்றுதான் அழைப்பார்.
பாவேந்தருக்காகத் தன் கலைக்கூடத்தில் தனியறை கொடுத்து வசனமும் பாட்டும் எழுத வைத்தார் சுந்தரம்.
தன்மானமும், சுயமரியாதையும் தரைமட்டமாவதை ஒருபோதும் அனுமதிக்காத பாரதிதாசன், தன்பாடல் வரியான “கமழ்ந்திடும் பூக்கள்’ ‘குலுங்கிடும் பூக்கள்” என்று மாற்றப்பட்டதை எதிர்த்து வெகுண்டார்; வெந்தணலை அள்ளிக் கொட்டினார். அதுவோர் அறச்சீற்றம்; திரைப்படத்துறைக்கு அறச்சீற்றமும் மறச்சீற்றமும் எட்டிக்காய் அல்லவா?
மற்றுமொரு சம்பவம் சினிமாமீது காறித்துப்பி அவரை வெளியேற வைத்தது. டி.ஆர். சுந்தரம் ‘வளையாபதி’ படத்தை ரகுநாத் என்பவரை வைத்து இயக்கித் தயாரித்துக் கொண்டிருந்தார். அப்போது சுந்தரம் ஓய்வுக்காக ஃபிஜித்தீவுகளுக்குச் சென்றுவிட்டார். இயக்குநர் ரகுநாத் வளையாபதிக்கு பாரதிதாசன் எழுதிய கதைவசனத்தில் பெரும்பாலானவற்றை திருத்தியும் வெட்டியும் எறிந்துவிட்டார். தலைக்கேறியது கோபம் கவித்தலைவனுக்கு.
சுவையான சம்பவங்கள் பல நிகழ்ந்திருக்கின்றன அவரது திரைப்பட வாழ்க்கையில். வளையாத குணமும், நிலத்தில் யாருக்கும் அஞ்சாத சுயமரியாதை உணர்வும், அநீதி கண்டவிடத்து அறச்சீற்றத்துடன் அனல்போல் வெடிக்கும் அவரது வீரமும், இந்த அற்புதக்குணங்கள் எல்லாம் அந்நியமாகிவிட்ட திரைப்பட உலகில் அவரைத் தொடந்து பயணிக்க விடாமல் தடுத்தன.
மாடர்ன் தியேட்டர்ஸுடன் மேலும் நான்கு படங்களுக்குப் போட்டிருந்த ஒப்பந்தத்தைத் தூக்கியெறிந்தார் பாரதிதாசன். ரூபாய் 40,000 மதிப்புகொண்ட ஒப்பந்தங்கள் அவை (இன்றைக்கு அவற்றின் மதிப்பு நாற்பது இலட்சம் இருக்கும்தானே?)
கதைவசனக் கைப்பிரதிகளைக் கொடுக்கும்படி ஆள்விட்டு கேட்ட சுந்தரத்திடம் அதுவரை எழுதியதற்கு ரூபாய் 3,000 தரும்படி அதே ஆளைத் திருப்பி அனுப்பினார் பாரதிதாசன். காசோலை வந்ததும் தன் ஊரான பாண்டிச்சேரிக்குத் திரும்பும் நோக்கத்துடன் சென்ற அவர் வழியில் ஒரு வங்கியில் காசோலையை ரொக்கமாக்கினார்.அதன்பின்னர் அவர் செய்த காரியம் திரைப்பட உலகில் எவரும் செய்யத் துணியாத ஒன்று. கூடவந்த ஆளிடம் வசனக் கைப்பிரதிக் காகிதங்களை கையில் கொடுக்காமல், வங்கியின் தரையில் சிதறவிட்டுப் போய்விட்டார் அவர். தன்மானத்தைச் சீண்டிப்பார்த்தால் சீறும் சிங்கமாவார் அவர் என்பதை எடுத்துக்காட்டியது இந்தச் சம்பவம்.
பாரதிதாசன் பரம்பரையில் வந்தவரான பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமும் பிற்காலத்தில் இதைப்போன்ற ஓர் அறச்சீற்றத்தைத்தான் வெளிப்படுத்தினார். எழுதிய பாட்டுக்குப் பணம் தராமல் இழுத்தடித்த தயாரிப்பாளர் ஒருவருக்கு அவர் எழுதிய கவிவரிகள் இவை: “தாயால் பிறந்தேன்; தமிழால் வளர்ந்தேன்; நாயே உன்னை நம்பியா வந்தேன்.”
இதெல்லாம் இன்றைய திரைப்பட உலகினருக்கு ஏதோ புராணக்கதைகள் போலிருக்கும்.

பாரதிதாசன் எழுதிய பாண்டியன் பரிசு என்ற குறுங்காப்பியத்தைப் படமாக்க வேண்டும் என்ற முயற்சி வெற்றி பெறவில்லை
பிறரைக் கலவரப்படுத்தும் பாரதிதாசனின் இந்த மூர்க்கமும் சுயமரியாதை மார்க்கமும்தான் அவர் மீண்டும் வந்து திரைப்படம் தயாரிக்க முயன்றபோது தடைக்கற்கள் ஆயின.இறப்பதற்குச் சிலவருடங்களுக்கு முன்பு தனது குறுங்காப்பியமான பாண்டியன் பரிசைப் படமாக்கும் முயற்சியில் அவர் சென்னைவந்து குடியேறினார்.
தி.நகர் ராமன் தெருவில் இலக்கம் 10-ல் இருந்த பங்களாவை வாடகைக்கு எடுத்து திரைப்பட முயற்சிகளில் இறங்கினார். நடிகர்திலகம் சிவாஜிகணேசனைக் கதாநாயகனாகப் போட்டு மேலும் சரோஜாதேவி, எம்.ஆர். ராதா ஆகிய கலைஞர்களையும் நடிக்க வைத்து ’பாண்டியன் பரிசு’ திரைப்படத்தைத் தனது ‘பாவேந்தர் பிக்ஸர்ஸ்’ தயாரிப்பாக உருவாக்கிட கடும்பிரயத்தனம் செய்தார் அவர்.
ஆனால் தமிழ்த்திரைப்பட உலகம் அவருக்குக் கைகொடுக்கவில்லை. தனது குருவான பாரதியின் வாழ்க்கையையாவதுத் திரைப்படமாக்கலாம் என்று அவர் எடுத்த முயற்சியும் தோல்வியில்தான் முடிந்தது.
இலக்கிய உலகில் கொடிக்கட்டிப் பறந்த ஒருகவிஞன் திரைப்பட உலகில் கோலோச்ச முடியவில்லை என்பது ஓர் அவலம்.
பாரதிதாசனின் முழுக்கவனமும் திரைப்படத்துறையில் இருந்ததால் தனது இலக்கிய இதழான குயிலை அவரால் தொடர்ந்து கொண்டுவர முடியவில்லை.
அவரது இலக்கியப்பணியும் சுணங்கியது. அப்போதுதான் பெரியார், “பாரதிதாசன் அற்புதமாக எழுதினார்; தேவையில்லாமல் அவருக்குப் பணமுடிப்பு கொடுத்து அவரைக் கெடுத்துவிட்டார்கள்,” என்று விமர்சனம் செய்தார். 1946-ல் அண்ணா தலைமையில் பாரதிதாசனுக்கு ரூபாய் 25,000 நிதிதிரட்டிக் கொடுக்கப்பட்டிருந்தது. திரைப்படமுயற்சிகளுக்கு இடையில் இரவுநேரங்களில் அருகிலிருந்த ராஜகுமாரி திரையரங்கில் நண்பர்களுடன் சேர்ந்து வெளிநாட்டுப் படங்களைப் பார்ப்பதில் நேரத்தைச் செலவழித்தார் பாரதிதாசன்.
சென்னைவாசமும் திரைப்பட ஆசையும் அகவை 70-யைக் கடந்த பாரதிதாசனின் ஆரோக்கியத்தைக் கெடுத்தன. அவர் நீரிழிவு நோயால் அவதிப்பட்டார். தமிழாசிரியாகப் பல்வேறு பாண்டிச்சேரி ஒன்றியத்துப் பள்ளிகளில் பணிபுரிந்து ஓய்வுபெற்று புரட்சிக்கவி என்று அண்ணாவாலும், பெரியாராலும் கெளரவப்படுத்தப்பட்ட பாரதிதாசனின் இறுதிக்கட்ட நாட்கள் திரைப்பட உலகம் எவ்வளவு பெரிய கொம்பனையும் சீரழிக்கும் என்பதை நிரூபித்தன.
இலக்கிய உலகில் கொடிக்கட்டிப் பறந்த ஒருகவிஞன் திரைப்பட உலகில் கோலோச்ச முடியவில்லை என்பது ஓர் அவலம்.
பாரதிதாசனின் முழுக்கவனமும் திரைப்படத்துறையில் இருந்ததால் தனது இலக்கிய இதழான குயிலை அவரால் தொடர்ந்து கொண்டுவர முடியவில்லை.
தானிருந்த திராவிட இயக்கத்தைச் சார்ந்தவர்கள் திரைப்படத் துறையில் பெரும் வெற்றியைப் பெற்றபோது, பாரதிதாசனால் வெற்றிபெற முடியவில்லை. கதைவசனகர்த்தாவாக ஜொலித்த அண்ணாத்துரையும், கலைஞர் கருணாநிதியும், கதாநாயகர்களாக மின்னிய சிவாஜியும், எம்ஜியாரும், குணச்சித்திர நடிகராகவும், தயாரிப்பாளராகவும் அதகளம் பண்ணிய எம்.ஆர். ராதாவும், பாடலாசிரியராகக் கண்ணதாசனும் இன்னும் பலரும் திராவிட இயக்கத்தைச் சார்ந்தவர்கள்தான். அவர்களில் ஒருவர்கூட பாரதிதாசனின் திரைப்படக் கனவை நிறைவேற்ற ஏன் முன்வரவில்லை என்பது சரித்திர மர்மங்களில் ஒன்று. திராவிடச் சிந்தனைக்கு முற்றிலும் மாறுபட்ட கல்கி எழுதிய பொன்னியின் செல்வனைத் திரைப்படமாக்க முனைந்த அன்றைய சூப்பர் ஸ்டார் எம்ஜியார், தன்னை வளர்த்த திராவிட இயக்கத்தைச் சார்ந்த கவிஞனின் காவியத்தைப் படமாக்கியிருக்கலாம். ஏன் ஆக்கவில்லை என்பது எழுதிச்செல்லும் விதியின் கைகளுக்குள் மறைந்திருக்கும் ஒருரகசியம்.
பாரதிதாசன் திரைப்பட உலகின் உச்சம் தொட்டு ஏன் ஜெயிக்க முடியவில்லை? திமுகவுக்கும், திகவுக்கும் இருந்த ஆரம்பகாலப் பகை அண்ணாவுக்கும், பாரதிதாசனுக்கும் இடையே எதிரொலித்தது ஒரு காரணமாக இருக்கலாம். பராசக்தியில் (1952) பாரதிதாசனின் ‘திராவிட பொன்னாடே’ பாடல் இடம்பெற்றது உண்மைதான்.
ஆனால் 1960-களில் திமுகவின் அரசியல் செல்வாக்கும் திரைப்படச் செல்வாக்கும் ஓங்கி வளர்ந்திருந்த நேரத்தில், பாரதிதாசனோடு ஒப்பிடுகையில் மிகமிகச் சாதாரணமான கவிகளாக இருந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமும் கண்ணதாசனும் பாடலாசிரியர்களாகச் செல்வாக்குப் பெறத் தொடங்கிய காலத்தில், பாரதிதாசனின் இறுதிக்காலம் நெருங்கிக் கொண்டிருந்த வேளையில், அவரது திரைப்பட முயற்சிகள் எல்லாம் வெற்றிபெறாமல் போனது ஆச்சரியமில்லை.
‘கமழ்ந்திடும் பூக்கள்’ என்னும் தனது வரியை ’குலுங்கிடும் பூக்கள்’ என்று மாற்றியதற்கு ’தாம்தூம்’ என குதித்த பாரதிதாசனோடு, எம்ஜியார் கேட்டார் என்பதற்காகத் தான் எழுதிய பல வரிகளை மாற்றிக்கொடுத்த கண்ணதாசனோடு ஒப்பிட்டுப் பார்த்தால் ஓர் உண்மை புரியும். வளையாத மூங்கில் பாரதிதாசன் திரைப்பட உலகில் தோற்றார்; வளைந்த கண்ணதாசன் ஜெயித்தார். முன்னவர் முதலில் ஆத்திகராய் இருந்து பின்பு நாத்திகராகி திராவிட இயக்கத்தில் இறுதிவரை இருந்தார். பின்னவர் நாத்திகராக இருந்து பின்பு திராவிட இயக்கத்தை விட்டுவிலகி இறுதிவரை ஆத்திகராய் வாழ்ந்தார்.
1964-ல் சென்னைப் பொதுமருத்துவ மனையில் வயோதிக ஆரோக்கியக் குறைவால் பாரதிதாசன் உயிர்நீத்த போது, “ஐயோ! அடப்பாவிகளா அவரை ஏமாற்றி கொன்றுவிட்டீர்களே” என்று யாரோ அரற்றிப்புலம்பியதாக ஒரு தகவல் உண்டு.
மரணத்திற்கு அப்பாலும் வாழும் கவிஞர்தான் பாரதிதாசன். 1970-ல் அவரது பிசிராந்தையார் நாடகத்திற்காக (அவருக்குப் புகழ்தந்த அவரது கவிதைத் தொகுப்புகளுக்காக அல்ல) சாகித்ய அகாதெமி விருது கிட்டியது.
பாரதிதாசன் திரைப்பட உலகின் உச்சம் தொட்டு ஏன் ஜெயிக்க முடியவில்லை? திமுகவுக்கும், திகவுக்கும் இருந்த ஆரம்பகாலப் பகை அண்ணாவுக்கும், பாரதிதாசனுக்கும் இடையே எதிரொலித்தது ஒரு காரணமாக இருக்கலாம். பராசக்தியில் (1952) பாரதிதாசனின் ‘திராவிட பொன்னாடே’ பாடல் இடம்பெற்றது உண்மைதான்.
அவரது பெருமையைப் பறைசாற்றிய விசயங்களில் இதுவும் ஒன்று. (கண்ணதாசனும் அவரது கவிதைக்காக அல்லாமல் ‘சேரமான் காதலி’ என்னும் அவரது புதினத்துக்குத்தான் சாகித்ய அகாதெமி விருது பெற்றார்).
பாரதிதாசன் திரைப்பட உலகில் உச்சம் தொடமுடியாமல் போனது என்னவோ உண்மைதான். என்றாலும் ‘சங்கே முழங்கு,’ ‘புதியதோர் உலகம் செய்வோம்,’ ‘சித்திரச் சோலைகளே,’ ’தமிழுக்கும் அமுதென்றுபேர்’ போன்ற திரைப்பாடல்களாக நிறம்மாறிய கனல்கக்கும் கவிதைகள் பாரதிதாசன் என்னும் வணக்கத்துக்குரிய வணங்காமுடிப் பாவேந்தனின் பெருமையைக் காலகாலத்திற்கும் எதிரொலித்துக் கொண்டுதான் இருக்கும்.
Read in : English