Read in : English

இந்தியாவின் தலைசிறந்த திரைப்பட இயக்குநர்களில் ஒருவரான கே.விஸ்வநாத் தனது 93ஆவது வயதில் ஹைதராபாத்தில் பிப்ரவரி 2, 2023 அன்று காலமாகி விட்டார். காலத்தை வென்ற படைப்புகளைத் தந்த இந்தக் கலாதபஸ்வியின் அறுபதாண்டு கால படைப்புலகம் வித்தியாசமானது. திரைப்படக் கலையை மிக உயர்வான நிலைக்குக் கொண்டு சென்றதில் அவருடைய பங்கு அபரிமிதமானது; அபாரமானது.

அதனால்தான் நாடு முழுவதும் உள்ள அரசியல்வாதிகளும் திரைப்படக் கலைஞர்களும் தொடந்து அவருக்குக் கண்ணீர் அஞ்சலி செலுத்திக் கொண்டிருக்கின்றனர்.

2017ல் தாதாசாகிப் பால்கே விருதும், அதற்கு முன்பு பத்மஸ்ரீ விருதும் பெற்றார் விஸ்வநாத். பிலிம்ஃபேர், நந்தி விருதுகளும், 1981ல் பிரான்ஸ் பெசன்கான் உலகத் திரைப்பட விழாவில் ‘பிரைஸ் ஆஃப் த பப்ளிக்’ விருதும் பெற்ற விஸ்வநாத்தின் சில படங்கள் ரஷ்ய மொழியாக்கத்தில் வெளிவந்துள்ளன. மாஸ்கோ உலகத் திரைப்பட விழாவில் சிறப்பாகப் பேசப்பட்டன அவரது படைப்புகள்.

தெலுங்கு, தமிழ், இந்தி திரைப்பட உலகில் புகழ்பெற்று விளங்கிய விஸ்வநாத் மொத்தம் 53 படங்கள் இயக்கியுள்ளார். சமூகப் பிரச்சினைகள், சாதீய அமைப்பின் கொடூரம், வறுமை, அடித்தட்டு மக்களின் பிரச்சினைகள், ஆண்-பெண் பாகுபாடுகள் போன்றவற்றைத் தன் படங்களில் பிரச்சாரத் தொனி இல்லாமல் கலைப்படைப்புகளாகத் தந்துள்ளார்.

1930ஆம் ஆண்டு பிப்ரவரி 19 அன்று ஆந்திரப் பிரதேசத்தில் குண்டூர் மாவட்டத்தில் ரெப்பள்ளி கிராமத்தில் பிறந்த விஸ்வநாத் ஆந்திர கிறித்துவக் கல்லூரியில் பிஎஸ்சி பட்டம் பெற்றார். அவரது திரைப்பட வாழ்க்கையை ஆரம்பித்து வைத்தது தமிழ்நாட்டின் சென்னைதான்.

தனுஷ் படமான யாரடி நீ மோகினியிலும், கமல் படமான உத்தம வில்லனிலும், பார்த்திபன் நடித்த காக்கைச் சிறகினிலே படத்திலும் நடித்த கே.விஸ்வநாத் மொத்தம் 30 படங்களில் நடித்திருக்கிறார்

வாகினி ஸ்டூடியோவில் ஒலிப்பதிவுத் துறையில் நுழைந்த அவர் 1951ல் பாதாள பைரவி என்னும் தெலுங்கு, தமிழ் படத்தில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்து இயக்குநர் தொழிலுக்குப் பிள்ளையார் சுழி போட்டார். பதினான்கு ஆண்டுகள் கழித்து, அதாவது 1965ல் ஆத்ம கெளரவம் என்னும் தெலுங்குப் படத்தை இயக்கி இயக்குநராகத் தன் வாழ்க்கையைத் தொடங்கினார். 2010ல் சுபபிரதம் என்ற படத்தை இறுதியாக இயக்கினார்.

விஸ்வநாத்துக்கு முதன்முதலில் பேர் வாங்கித் தந்தது சிரி சிரி முவா என்ற படம்தான் (1976). ஒரு நடிகராக அவர் அறிமுகம் ஆனது 1995ல் வெளிவந்த சுப சங்கல்பம் படத்தில்தான். தனுஷ் படமான யாரடி நீ மோகினியிலும், கமல் படமான உத்தம வில்லனிலும், பார்த்திபன் நடித்த காக்கைச் சிறகினிலே படத்திலும் நடித்த அவர் மொத்தம் 30 படங்களில் நடித்திருக்கிறார். சில டிவி தொடர்களிலும் நடித்திருக்கிறார்.

மேலும் படிக்க: ருத்ரய்யாவின் படத்தில் நடிக்க மறுத்தாரா ரஜினிகாந்த்?

பெரும்பாலும் அவர் இயக்கியவை தெலுங்குப் படங்கள் என்றாலும், அவற்றில் சில மொழி கடந்து புகழ் பெற்று அவரை இந்தியாவின் தலைசிறந்த இயக்குநர்களில் ஒருவராக உயர்த்தின.

திரைப்படம் என்பது வணிகம்தான். அதற்கு நேர்மாறாக, இத்தாலிய புதிய யதார்த்தக் கலையின் (நியோ ரியியலிசம்) தாக்கத்தால், ‘பாரலெல் சினிமா’ என்பதைக் கொண்டுவந்த வங்காள இயக்குநர்களான சத்யஜித் ரே, ரித்விக் கடாக், மிருணாள் சென் ஆகியோரின் உந்துதலில் விஸ்வநாத் திரைப்பட வணிகத்தை அமரத்துவக் கலையாக்கினார்.

விரசமிக்க காதல் காட்சிகள், வண்ணமயமான டூயட்டுகள், மிரட்டும் இசை, அதிரடிச் சண்டைக் காட்சிகள் போன்ற வணிக அம்சங்கள் திரைப்படங்களை ஆக்கிரமித்த காலத்தில் ‘பாரலெல் சினிமா’வின் கலை அம்சங்களைப் புகுத்தி மனித உணர்வுகளை நுட்பமாகப் படம்பிடித்து, சமூகத்தின் ஆஷாடபூதித்தனங்களை மென்மையாகத் தோலுரித்துக் காட்டியவர் விஸ்வநாத்.

அதனால்தான் வணிகத் திரைப்படங்களில் கோலோச்சிய பல கதாநாயகர்கள் ஆத்ம திருப்திக்காக அவரோடு இணைந்து பணியாற்றினார்கள். என்.டி.ஆர்., நாகேஸ்வரராவ், கிருஷ்ணா, கிருஷ்ணம் ராஜு, சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா, கமல், மற்றும் மம்மூட்டி ஆகியோர் அவர்களில் அடக்கம்.

மக்கள் நேசிக்கும் வணிக நாயகர்களை ஆகச்சிறந்த கலை நடிகர்களாக மாற்றியவர் விஸ்வநாத். சாதாரண நடிகர்களைப் பேர் பெற்றவர்களாக மாற்றியவரும் அவர்தான்.

விஸ்வநாத்தின் கதாநாயகர்கள் ஒன்று சாதாரணமானவர்களாக இருப்பார்கள் அல்லது சமூகத்தின் புறக்கணிப்புக்குள்ளான கலைமேதைகளாக இருப்பார்கள்

சகலகலா வல்லவன், கடல்மீன்கள், மூன்றாம் பிறை என்று தனக்கென்று ஒரு பிம்பத்தை உருவாக்கி வைத்திருந்த கமல்ஹாசன் சலங்கை ஒலியில் (சாகர சங்கமம் – 1983) குடிகார நடனக் கலைஞர் பாத்திரத்தை ஏற்றிருப்பார்; காதலி கிடைத்தும் அவளோடு விரசமாக டூயட் பாடாமல், வில்லன்களோடு மோதி முஷ்டிப் பலம் காட்டாமல், அமைதியாகத் தோல்விகளை எதிர்கொண்டு இறுதியில் கலை அங்கீகாரம் கிடைத்த கணத்தில் உயிர்விடுவதாக நடித்திருப்பார்.

அதுவரை திரைப்படம் வார்த்திருந்த நாயகனின் இலக்கணத்தை உடைத்தெறிந்து சாஸ்திரிய நடனத்தைத் தூக்கிப் பிடிக்கும் ஓர் உன்னதப் படைப்பை உருவாக்கி பெரும் மதிப்பைச் சம்பாதித்தார் விஸ்வநாத்.

மேலும் படிக்க: கமல்ஹாசன் நடிப்பைக் கைவிட மாட்டார்?

சோகங்களையும் மதுவையும் சுமந்து கொண்டிருக்கும் கதாநாயகன் இறுதியில் மரணமடைந்து வீல்சேரில் கொட்டும் மழையிருட்டில் நண்பன் உதவியால் போவது போலவும், சற்று வயதான அவனுடய பழைய காதலி குடையை அவர் தலைக்கு மேல் காட்டுவது போலவும் வருகின்ற காட்சி விஸ்வநாத்தின் அமரத்துவமான குறியீட்டியியல் கலைக்கு ஓர் அற்புதமான உதாரணம்.

நவீன காலத்தில் நசிந்து கொண்டிருக்கும் பாரம்பரிய நடனக்கலை சாகாவரம் பெற்றது என்பதைப் பிரசாரத் தொனியில்லாமல் சொன்னது சலங்கை ஒலி. பரதநாட்டியம், கதக், கதகளி, குச்சிப்புடி என்று நடனக்கலையின் வெவ்வேறான சம்பிரதாயங்களை ஆடிக்காட்டும் போது இடையில் வரும் பியூனின் கையிலிருந்த காபி தபரா செட்டுக்களை எதேச்சையாக காலால் எட்டி உதைப்பார் கமல்.

அந்தக் காட்சி இந்திய கலாச்சார ஞாபக அடுக்கில் உறைந்துவிட்ட ஓர் உன்னத சின்னம். பாரம்பரியக் கலை எந்த இடைஞ்சல்களையும் சோதனைகளையும் காலால் எட்டி உதைத்து விடும் என்ற செய்தியை அதன்மூலம் பூடகமாகச் சொன்னவர் விஸ்வநாத்.

கமலின் வரலாற்றை இந்தப் படத்தைத் தவிர்த்து விட்டு எழுதவே முடியாது.

விஸ்வநாத்தின் கதாநாயகர்கள் ஒன்று சாதாரணமானவர்களாக இருப்பார்கள் அல்லது சமூகத்தின் புறக்கணிப்புக்குள்ளான கலைமேதைகளாக இருப்பார்கள்.

மூளை வளர்ச்சி குன்றியும் மனிதாபிமானத்தில் உயர்ந்தும் காட்சியளிக்கும் கமல் பரிகாசத்துக்குரிய ஆடைகளோடும் தோற்றத்தோடும் வருகிறார் சிப்பிக்குள் முத்து (சுவாதி முத்யம் – 1986) திரைப்படத்தில். “துன்பம் என்றும் ஆணுக்கல்ல; அது அன்றும் இன்றும் பெண்களுக்கே” என்று அவர் பாடுகிறார் (குரல் உபயம் எஸ்.பி.பாலசுப்ரமணியம்). பல நூற்றாண்டுகளாக அடிமைத்தனத்தில் சிக்கி அவதிப்பட்ட பெண்ணினத்தின் யுகசோகத்தை ஒரு மூளைவளர்ச்சி குன்றிய கதாநாயகன் சொல்வதாகக் காட்டியது யாராலும் நினைத்துப் பார்க்க முடியாதது; அதைச் சாதித்தவர் விஸ்வநாத்.

விஸ்வநாத் ஓர் அமரத்துவம் மிக்க கலைஞர் என்பதை உலகிற்கு எடுத்துச் சொன்ன திரைப்படம் சங்கராபரணம் (1980). இசையும் மனித உணர்வுகளும் கலையும் மொழி பேதங்களுக்கு அப்பாற்பட்டது என்பதை அப்படத்தின் மூலம் நிரூபித்தவர். ஆனால் அந்தப் படத்தை உருவாக்குவதற்கு முன்பு அவர் சந்தித்த சோதனைகளும் கேலிகளும் கிண்டல்களும் ஏராளம்.

சற்று வயதான தோற்றம் கொண்ட ஒரு கர்நாடக சங்கீத மேதையின் கலைக்குத் தன்னை அடிமையாக்கிக் கொள்ளும் அன்பும் பண்பும் கொண்ட பரதநாட்டியக் கலைஞரான ஒரு தேவதாசிப் பெண் அவரோடு சேர்ந்து இறுதியில் மரணமடைகிறார் என்ற கதையைக் கேட்ட தயாரிப்பாளர்களும் சில கதாநாயகர்களும் அரண்டுபோய் நிராகரித்தனர்.

இசையும் மனித உணர்வுகளும் கலையும் மொழி பேதங்களுக்கு அப்பாற்பட்டது என்பதை சங்கரா பரணம் படம் மூலம் நிரூபித்தவர் விஸ்வநாத் ; ஆனால் அந்தப் படத்தை உருவாக்குவதற்கு முன்பு அவர் சந்தித்த சோதனைகளும் கேலிகளும் கிண்டல்களும் ஏராளம்

கலாச்சார அதிர்ச்சியைத் தரும் கதை என்று எள்ளி நகையாடியவர்கள் பலர். முன்னணி நடிகர்கள் மறுத்துவிட்ட சூழலில் ஜே.வி.சோமயாஜுலு என்னும் நாடக நடிகர் தலை மீது கனமான அந்தப் பாத்திரத்தை இறக்கி வைத்து அவரை நடிக்க வைத்தார் விஸ்வநாத்.

படம் திரையிடப்பட்ட பின்பு ஆரம்ப நாட்களில் அரங்குகள் வெறுமையாகத்தான் கிடந்தன. பரிகசித்தவர்களும், தோற்றுப் போகும் என்று ஆரூடம் சொன்னவர்களும் சரியாகத்தான் நினைத்தனர் என்பதைப் போல இருந்தது தொடக்கச் சூழல்.

சுபலேகா (இடது) மற்றும் ஜனனி ஜென்மபூமி (வலது) படங்களின் போஸ்டர்

ஆனால் கே.வி.மகாதேவனின் சாஸ்திரிய சங்கீதமும், எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி, வாணி ஜெயராம் பாடிய பாடல்களும் மக்களை வெகுவிரைவிலே அரங்குகளுக்குள் ஈர்த்தன. கூட்டம் அலைமோதியது. படம் இமாலய வெற்றி பெற்றது. ’சங்கரா நாதசரீரபரா’, ’தொரகுணா இதுவந்தி சேவா’ போன்ற தூய கர்நாடக சங்கீதப் பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் எதிரொலித்தன. பின்பு நாடு முழுவதும் பரவின.

2013ல் சிஎன்என்-ஐபிஎன் நடத்திய இணைய வாக்கெடுப்பில் ஆகச்சிறந்த இந்தியப் படங்களின் பட்டியலில் சங்கராபரணம் 11ஆவது இடத்தைப் பிடித்தது. நான்கு தேசிய விருதுகள் பெற்ற இந்தப் படம் 1981ல் நடந்த பாரிஸ் உலகத் திரைப்பட விழாவில் பரிசு பெற்றது.

தெலுங்கில் உருவான சங்கராபரணம் தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் பெரும் வெற்றி பெற்றது. சர் சங்கம் என்ற பெயரில் 1985ல் இந்தியில் வெளியாகி சக்கைப் போடு போட்டது.

சாகுந்தறுவாயில் இருந்த ஒரு முதிய பெண்மணி கண்ணை மூடும் முன்பு சங்கராபரணத்தின் பாடல்களைக் கேட்க வேண்டும் என்றும் ஆசைப்பட்டதாகவும். அதன்படியே அந்த சங்கீதத்தைக் கேட்டுவிட்டுத்தான் காலமானார் என்றும் அந்தக் காலத்து ஊடகச் செய்திகள் கூறின.

கர்நாடக சங்கீதத்திற்குப் புத்துயிர் ஊட்டிய இந்த ஒரு படமே போதும் விஸ்வநாத் என்ற கலைஞர் சாகாவரம் பெற்றவர் என்பதை நிரூபிக்க.

போய் வாருங்கள், சாகாவரம் பெற்ற சங்கராபரணக் கலைஞரே!

Share the Article

Read in : English

Why we always find lots of cashews on top of Deepavali mixture why tangedco need to pay us for damaging household appliances why eating on banana leaves is healthier What the Tamil Nadu Organic policy needs what is the real story of onam festival