Read in : English
எய்டு இந்தியா (AID INDIA) என்ற தனியார் தொண்டு நிறுவனம் கிட்டத்தட்ட 400 தன்னார்வலர்களைக் கொண்டு நரிக்குறவர், இருளர், பழங்குடியின மக்களுக்கு அவர்கள் வசிக்கும் இடத்திலேயே இலவசமாக வீடு கட்டித் தரும் பணியைக் கடந்த 10 ஆண்டுகளாகத் தொடர்ந்து வருகிறது.
ஊருக்கு ஒதுக்குபுறமாக குடிசை அல்லது கூடாரங்களில் நரிக்குறவர் மற்றும் பழங்குடியின மக்கள் வசித்து வரும் நிலை இன்றும் தொடர்ந்து வருகிறது. மண் சுவர் கூட இல்லாமல் துணியைக் கொண்டு அமைக்கப்படும் கூடாரத்தில் மழை, வெயிலைத் தாக்குப் பிடித்து வாழ அவர்கள் பழகிக் கொள்கின்றனர். ஒரு சிலர் ஓலையில் குடிசை வேய்ந்து வசித்து வருகின்றனர். இப்படிப்பட்டவர்களின் வாழ்க்கை நிலையை மாற்றும் விதமாகச் செயல்பட்டு வருகிறது எய்டு இந்தியா எனும் தனியார் தொண்டு நிறுவனம்.
நரிக்குறவர்கள், இருளர் மற்றும் பழங்குடியின மக்களை கட்டிட வீட்டில் வசிக்க வைப்பதே இவர்களின் நோக்கமாக உள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தன்னார்வலர்களைக் கொண்டு இந்த சேவையைச் செய்து வருவதாகக் கூறுகிறார் எய்டு இந்தியாவின் நிறுவனர் பாலாஜி சம்பத்.
“ஆரம்பத்தில் திருத்தணியில் உள்ள திருக்கனூர் கிராமத்தில் வசிக்கும் இருளர் சமூகத்தினரைத் தேர்வு செய்து இலவச வீடு கட்டித் தந்தோம். தொடர்ந்து ஒவ்வொரு கிராமமாக வீடுகள் கட்டுவது அதிகரித்தது. இதுவரை 190க்கும் மேற்பட்ட கிராமங்களில் வீடுகள் கட்டித் தந்துள்ளோம்.
ஒரு கிராமத்தில் வசிக்கும் இருளர் சமூகத்தினருக்கு வீடு கட்ட உள்ளூர் மேஸ்திரிகளையும், வீடு பெறும் பயனாளிகளையும் பயன்படுத்திக் கொள்வோம். வீடு கட்டுவதற்குத் தேவையான மணல், ஜல்லி, செங்கல் உள்ளிட்டவற்றுக்குச் செலவிடுவோம். இருக்கும் இடத்திற்கு ஏற்றவாறு சமையலறை, ஒரு அறை இருக்கும் வீடு கட்டப்படும். குறைந்த செலவில் கட்டப்படும் வீடுகளின் மேற்கூரை தகரத்தில் அமைக்கப்படும்.
நரிக்குறவர்கள், இருளர் மற்றும் பழங்குடியின மக்களை கட்டிட வீட்டில் வசிக்க வைக்கும் நோக்கோடு கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்படுகிறது எய்டு இந்தியா
ஆரம்பத்தில் கட்டப்பட்ட வீடுகளின் மேற்கூரை தகரத்தில் அமைக்கப்பட்டதால் வெயில் காலத்தில் அதிக வெப்பமும், மழைக்காலத்தில் மழை விழும் சத்தமும் அதிகமாக இருந்தது. அதற்குத் தீர்வாக இரண்டு அடுக்கு தகர மேற்கூரை அமைத்தோம். அதனால், கீழ் அடுக்கில் உள்ள மேற்கூரை பாதுகாக்கப்படுவதுடன், கோடையில் வெப்பம் உள்வாங்கப்படுவதும் தடுக்கப்பட்டது” என்றார் பாலாஜி சம்பத்.
தொடர்ந்து பேசிய பாலாஜி சம்பத், “ஆரம்பத்தில் இலவசமாக வீடு கட்டித் தருகிறோம் என்று சொன்னபோது யாரும் நம்பவில்லை. அதனால், நான் மட்டுமே சொந்தச் செலவில் வீடு கட்டும் பணியைத் தொடங்கினேன். அப்படிக் கட்டப்பட்ட வீட்டினால் வறுமையில் வாடும் சிலரின் உதடுகளில் புன்னகை மலர்ந்தது. அதைப் பார்த்து எனது நண்பர்களும் உதவி செய்ய முன்வந்தனர்.
மேலும் படிக்க: இன்றைக்கும் மிகவும் பின்தங்கியுள்ள ஆதிவாசி மக்களின் வாழ்வு எப்போது மலரும்?
பெரும்பாலான தன்னார்வலர்களை அந்தந்த கிராமங்களிலேயே தேர்வு செய்து கொள்வோம். அது தான் எங்களுக்கும் அவர்களுக்கும் மிக எளிதாக இருக்கும்” என்றார்.
இந்த இலவச வீடுகளை எப்படிப் பெறுவது? இந்த கேள்விக்கு மூன்று நிபந்தனைகளை முன்வைத்தார் செந்தில் சம்பத். முதலாவதாக, இலவச வீடு கட்டித் தருவதற்குத் தகுதியான பழங்குடியின, இருளர் மற்றும் நரிக்குறவர் இன மக்கள், தாங்கள் இருக்கும் அதே கிராமத்தில் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் வசித்திருக்க வேண்டும். ஏனெனில் திடீரென வந்து தங்கியவர்களுக்கு வீடு கட்டிக் கொடுத்தால் சில நாட்களில் அந்த வீட்டை அவர்கள் வாடகைக்கு விட்டுச் சென்றுவிடுவார்கள். அதைத் தவிர்க்கவே இந்த நிபந்தனை.
இரண்டாவதாக, இலவச வீடு பெறுவோருக்கான வேலை வாய்ப்பு அந்தப் பகுதியிலேயே இருக்க வேண்டும். யாருமில்லாத வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள், கணவர் இல்லாமல் குடும்பத்தை நடத்தும் பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
மூன்றாவதாக, இலவச வீடு கட்டிக் கொடுப்பதற்கு முன்பு அந்த கிராமத்தில் வசித்து வரும் குழந்தைகளுக்கு இலவசக் கல்வி அளிப்பது, தோட்டக்கலைக்கு முக்கியத்துவம் கொடுப்பது உள்ளிட்டவை இருக்க வேண்டும்” என்றார்.
இலவசமாக வீடு கட்டிக் கொடுப்பதை எப்படி சாத்தியப்படுத்துகிறீர்கள் என்ற கேள்விக்கு எய்டு இந்தியாவின் சேவைகளைப் பட்டியலிட்டார் பாலாஜி சம்பத். “வீடு கட்டிக் கொடுப்பதற்கு முன்னதாக, அந்த கிராமத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு இலவசக் கல்வி வழங்க டியூஷன் சென்டர்கள் அமைத்து பயிற்சி அளிப்பது, மருத்துவ முகாம்கள் மூலம் உடல்நலப் பரிசோதனை மேற்கொள்வது, சுயதொழில் செய்ய ஊக்குவிப்பது, விவசாயத்தை ஆதரிப்பது உள்ளிட்டவற்றைக் குறிக்கோளாகக் கொண்டுள்ளது எய்டு இந்தியா.
வீடு கட்டிக் கொடுப்பதற்கு முன்னதாக, அந்த கிராமத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு இலவசக் கல்வி பயிற்சி அளிப்பது, சுயதொழில் செய்ய ஊக்குவிப்பது உள்ளிட்டவற்றைக் குறிக்கோளாகக் கொண்டுள்ளது
குறிப்பிட்ட கிராமத்தில் ஓராண்டுக்கு மேலாக இந்தப் பணியைச் செய்து வரும் பட்சத்தில் அங்கு வறுமையில் வசிப்போரை எளிதில் அடையாளம் காண முடியும். அதன் அடிப்படையில் தேவைப்படுவோருக்கும், தகுதியானோருக்கும் ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் வீடு கட்டித் தரப்படும். அவ்வாறு, கரும்பாக்கத்தில் 17 வீடுகள் கட்டி தரப்பட்டுள்ளன. இன்னும் 9 வீடுகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது” என்று தெரிவித்தார்.
தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களிலும் எய்டு இந்தியாவின் சேவை பரந்து விரிந்துள்ளது. 1997ஆம் ஆண்டு பீகார், ஒடிசா மாநிலங்களில் வறுமையில் உள்ளவர்களுக்கு வீடு கட்டித் தந்ததாகவும், 2014ம் ஆண்டில் இருந்து இதுவரை தமிழகத்தில் உள்ள 190க்கும் மேற்பட்ட கிராமங்களில் 500 இலவச வீடுகள் கட்டப்பட்டுள்ளதாகவும் பாலாஜி சம்பத் குறிப்பிட்டார்.
மேலும் படிக்க: பழங்குடியினர் பட்டியலில் நரிக்குறவர்
ஆந்திராவின் ஸ்ரீகாகுளம், கேரளாவின் வயநாடு அருகே இடுக்கி, தமிழகத்தில் திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், சிவகங்கை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள கிராமங்களிலும் இலவச வீடுகள் எய்டு இந்தியாவினால் கட்டப்பட்டுள்ளன.
மத்திய, மாநில அரசுகள் மானியத்தின் அடிப்படையில் வீடுகள் கட்டித் தருவதால், மேலும் பலருக்கு உதவ எண்ணி அரசை அணுகியதாகவும், இறுதியில் தோல்வியே கிடைத்தது எனவும் கூறினார் பாலாஜி சம்பத். அரசுத் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டித் தருவதில் நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதாகத் தெரிவித்தார்.
“ஒரு கிராமத்தில் இலவசமாக வீடு கட்டித் தருவதற்கு, முதலில் சம்பந்தப்பட்ட நபர்களிடம் அனுமதி பெற வேண்டும். பிறகு பஞ்சாயத்து தலைவர், கான்ட்ராக்டர் உள்ளிட்டோரை அணுக வேண்டும். வீடு கட்டித் தர அனுமதி பெற்றாலும், அரசின் மானியத் தொகை முழுமையாகக் கிடைக்காது. தவணை முறையில் காலம் கடந்து கிடைக்கும்.
வீட்டிற்கு அடித்தளம் இடும் போது ஒரு தவணைத் தொகை, சுவர் எழுப்பும்போது ஒரு தவணைத் தொகை என கிடைக்கும். அந்த தவணைத் தொகைகளும் குறிப்பிட்ட காலத்திற்குள் கிடைக்காது. அரசின் மானியம் கிடைக்க கிட்டத்தட்ட 2-3 மாதங்கள் ஆகும். அதற்குள் வீட்டின் அடித்தளம் மழை மற்றும் வெயிலில் சேதமடையலாம்.
அரசுத் திட்டத்தின்படி, இலவச வீட்டிற்கு மேற்கூரையாகத் தளம் அமைக்க வேண்டும். தளம் அமைக்க மட்டுமே ஒரு லட்சம் ரூபாய் செலவாகும். மொத்தமாக ஒரு வீட்டிற்கு கிட்டத்தட்ட ரூ.3.5 லட்சம் செலவாகும். அரசின் மானியம் ரூ.1.5 லட்சம் வரை கிடைக்கும். அரசை எதிர்பார்த்தால் கால விரயம் ஆகும். அது இல்லாமலே ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் குறிப்பிட்ட காலத்திற்குள் வீடுகளைக் கட்டி முடிக்கிறோம்.
அரசின் ஒத்துழைப்போடு மானியத் தொகையில் வீடுகள் கட்டித் தர முடியவில்லை என்றாலும், மாவட்ட ஆட்சியர்கள் எங்கள் திட்டத்தை வரவேற்பதுடன் அவர்களுக்குத் தெரிந்த சில தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கு வீடுகள் கட்டித் தருமாறு கேட்கின்றனர்” என்றார்.
இலவச வீடுகள் கட்டி தருவது மட்டுமல்லாமல், தன்னார்வலர்கள் மூலம் 2,000 கிராமங்களில் மொபைல் நூலகத்தையும் அமைத்துள்ளது எய்டு இந்தியா. ஐந்து கிராமங்களுக்கு ஒரு தன்னார்வலர் வீதம் மொபைல் நூலகத்தைக் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கிராமத்தில் உள்ளவர்கள் தங்கள் வீடுகளிலேயே காய்கறிகளை விளைவிக்க விதை, உரம் உள்ளிட்டவற்றையும், விவசாயப் பயிற்சியையும் தன்னார்வலர்கள் மூலமாக வழங்கி வருகிறது
மாதத்திற்கு ஒருமுறை புத்தகங்கள் சுழற்சி முறையில் மாற்றப்படுவதுடன், குழந்தைகளின் படிக்கும் ஆர்வத்தை அதிகரிக்க இளம் எழுத்தாளர் விருதும்( little writers festival ) வழங்கி கவுரவிக்கப்படுகிறது. அது மட்டுமின்றி சமையல் தோட்டம் (kitchen garder) அமைக்கவும் எய்டு இந்தியா வழிகாட்டுகிறது. கிராமத்தில் உள்ளவர்கள் தங்கள் வீடுகளிலேயே காய்கறிகளை விளைவிக்க விதை, உரம் உள்ளிட்டவற்றையும், விவசாயப் பயிற்சியையும் தன்னார்வலர்கள் மூலமாக வழங்கி வருகிறது.
மருத்துவ முகாம், மாணவிகளுக்கான கால்பந்தாட்டப் பயிற்சி, சுயதொழிலுக்கு வட்டியில்லாமல் முதலீடு, அரசு உதவித்தொகை, பட்டா, ஆதார் பெயர் மாற்றம், ரேஷன் அட்டை பெறுதல், காப்பீடு அட்டை வாங்கிக் கொடுப்பது உள்ளிட்டவைகளும் பிரதானச் சேவையாக உள்ளன.
இப்படி இருப்பிடம், கல்வி, உணவு, பொருளாதார முன்னேற்றம் உள்ளிட்டவற்றை வழங்கி வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதில் எய்டு இந்தியாவின் ஒவ்வொரு தன்னார்வலரும் முக்கியப் பங்கு வகிக்கின்றனர்.
Read in : English