Read in : English
திரைத்துறையில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு சண்டைப்பயிற்சியாளர் புகழ் பெறுவார். அவரது பாணி பேசப்படுவதாக அமையும். ரசிகர்கள் மத்தியில் அது பிரமிப்பை இழக்கும்போது, வேறொரு திறமையாளர் அந்த இடத்தை நிரப்புவார்.
அப்படிப்பட்ட நிலைமையில் ஒருவர் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றியிருப்பது நிச்சயம் புருவங்களை உயர்த்தும். அப்படியொரு சாதனையாளர் தான் மறைந்த ஜூடோ கே.கே.ரத்னம்.
முறையான பயிற்சி!
தற்காப்புக் கலைகளைக் கற்பதற்கும், திரைத் துறையில் ஸ்டண்ட் கலைஞராக இருப்பதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு. முன்னது நிஜம்; பின்னது உண்மை போலத் தோற்றமளிக்கும் பொய். ஆனால், முறையாகத் தற்காப்புக் கலைகளைக் கற்றால் மட்டுமே ஒருவரால் திறன்மிக்க ஸ்டண்ட் கலைஞராகவும் பயிற்சியாளராகவும் மிளிர முடியும்.
அதேநேரத்தில், ஒரு திரைப்படம் எப்படி உருவாகிறது என்கிற புரிதலும் அவசியம்.
ஆதலால், பிரபல சண்டைப்பயிற்சியாளர்களிடம் உதவியாளராக, ஸ்டண்ட் கலைஞராகப் பணியாற்றுபவர்களே அப்படியொரு வாய்ப்பைப் பெற முடியும். அதிலிருந்து மாறுபட்டு, கேமிராவின் இயக்கம் குறித்து எதுவுமே தெரியாமல் வெறுமனே தான் கற்ற கலைகளின் வழியே திரையில் அறிமுகமானவர் ஜூடோ கே.கே.ரத்னம்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த ரத்னம், சிறு வயதில் மிகவும் நோஞ்சனாக இருந்தாராம். தாய், தந்தையரின் கண்டிப்புமிக்க வளர்ப்பினாலும் அவர்கள் அளித்த ஊட்டச்சத்துமிக்க உணவினாலும் சோர்வில்லாமல் மேற்கொண்ட பயிற்சிகளாலும் தன்னைப் பலமிக்கவனாக மாற்றிக் கொண்டாராம்.
கேமிராவின் இயக்கம் குறித்து எதுவுமே தெரியாமல் வெறுமனே தான் கற்ற கலைகளின் வழியே திரையில் அறிமுகமானவர் ஜூடோ கே.கே.ரத்னம்
சிலம்பம், குத்துச்சண்டை, தியானம், உடற்பயிற்சி ஆகியவற்றைத் தேர்ந்த நிபுணர்களிடம் கற்றுத் தேர்ந்திருக்கிறார் ரத்னம். வட தமிழ்நாட்டுக் கிராமங்களில் பிரபலமாக இருந்த குத்து வரிசையையும் இவர் கற்றிருக்கிறார். ஆண்டுக்கணக்கில் மாணவராக இருந்து, அவற்றின் நுட்பங்களை அறிந்திருக்கிறார். ஒரு வித்தையைக் கற்றவுடனேயே, அத்துறையின் புகழுச்சியை அடைய விரும்பும் தலைமுறையினருக்கு அவரது செய்கை அலட்சியத்துக்குரியதாகவே கருதப்படும்.
ஆனால், ஆழமாக ஊன்றப்பட்ட விதைதான் பெருவிருட்சமாக மாறும் என்பதற்கு ரத்னத்தின் வாழ்வே சான்று.
மாவட்ட அளவிலான குத்துச்சண்டை மற்றும் சிலம்பப் போட்டிகளில் பரிசு பெற்றிருக்கிறார் ரத்னம். அதனைக் கண்டு வியந்த நண்பர்கள் மூலமாக, திரைப்பட இயக்குனர் முக்தா சீனிவாசனின் அறிமுகம் கிடைத்திருக்கிறது. அப்படித்தான் ரத்னத்தின் திரை வாழ்க்கை ஆரம்பமாகியிருக்கிறது.
மேலும் படிக்க: கட்டா குஸ்தி: ஆணாதிக்க கணவன்மார்களுக்கு..!
1959ஆம் ஆண்டு வெளியான ‘தாமரைக்குளம்’ படத்தில் நடிகராகவும் நடிகர் நடிகைகளுக்கான ’டூப்’ ஆகவும் தன் முதல் பங்களிப்பைத் தந்தார் ரத்னம்.
அந்தரத்தில் சாகசம்!
அறுபதுகளில் தமிழ் திரைப்பட சண்டைக்காட்சிகள் பெரும்பாலும் ஒரேமாதிரியானதாகவே இருக்கும். ராஜ கதைகள் குறைந்தபோது வாள் வீச்சுக்கு வேலையில்லாமல் போனது; குதிரை சாகசங்களும் கூட குறைந்துபோனது. அக்காலகட்டத்தில் சிலம்பம் உள்ளிட்ட கிராமப்புற கலைகளுக்கே மதிப்பிருந்தது. அப்போது, தனது தனித்துவமிக்க சண்டை வடிவமைப்பினால் புகழ் பெற்றார் ரத்னம். அதற்கு அடித்தளம் அமைத்தது மாடர்ன் தியேட்டர்ஸில் கிடைத்த அனுபவங்கள்.
முக்தா சீனிவாசன் மூலமாக மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் சுந்தரத்திடம் அறிமுகமானார் ரத்னம்; அதுவே ‘கொஞ்சும் குமரி’ படத்தில் நடிகர்கள் வரிசையில் அவரது பெயரை இடம்பெறச் செய்தது. அதில் சிவய்யா, பானு என்ற சண்டைப் பயிற்சியாளர்கள் சொன்னபடி செய்தார். தொடர்ந்து அம்மா எங்கே, யாருக்கு சொந்தம், சித்ராங்கி, வல்லவனுக்கு வல்லவன் படங்களிலும் பணியாற்றினார். அந்த அனுபவம், ‘இரு வல்லவர்கள்’ படத்தில் முதன்முதலாகச் சண்டைப்பயிற்சியாளராக ஆக்கியது.
அதுவரையிலான தமிழ் படங்களில் நாயகன் தன் கைகளைக் கொண்டோ அல்லது கால்களைக் கொண்டோ வில்லனின் தலையைப் பின்னித் தரையில் சாய்ப்பதும் கைகளால் குத்துவிடுவதும் பல்டியடிப்பதும் தான் சண்டை என்று காண்பிக்கப்பட்டு வந்தது. அவற்றில் இருந்து மாறுபட்டு கராத்தே, ஜூடோ கலைகளில் இருக்கும் தடுப்பு மற்றும் தாக்குதல் பாணியில் அமைந்தன ரத்னத்தின் சண்டைக்காட்சிகள்.
அந்த புதிய கலைகளைத் தன் படங்களில் இணைத்ததற்கு தனது உதவியாளர்கள் சூப்பர் சுப்பராயன், விக்ரம் தர்மா போன்றவர்களே காரணம் என்று அவர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். தனது உதவியாளர்கள் பக்கபலமாக இருக்க, அந்தரத்தில் பறப்பது போன்ற சாகசங்களை வடிவமைத்தார். இயக்குனர்கள் விட்டலாச்சார்யா, பெக்கட்டி சிவராம் படங்களில் மாயஜால, மந்திர தந்திரக் காட்சிகளாக நாயகன் – வில்லன் மோதல்களை வடிவமைத்துள்ளார்.
எழுபதுகளில் தலையெடுத்த பெப்சி விஜயன், ஆம்பூர் ஆர்.எஸ்.பாபு தொடங்கி ராம்போ ராஜ்குமார், ஜாக்குவார் தங்கம், இந்தியன் பாஸ்கர் உட்படப் பல சண்டைப்பயிற்சியாளர்கள் ரத்னத்திடம் உதவியாளராக இருந்தவர்கள்தான். இவரது மகன் ஜூடோ ராமுவும் கூட ஒரு சண்டைப்பயிற்சியாளர் தான்.
நாயகன் தன் கைகளைக் கொண்டோ அல்லது கால்களைக் கொண்டோ வில்லனின் தலையைப் பின்னித் தரையில் சாய்ப்பதும் கைகளால் குத்துவிடுவதும் பல்டியடிப்பதும் தான் சண்டை என்பதில் இருந்து மாறுபட்டு கராத்தே, ஜூடோ கலைகளில் இருக்கும் தடுப்பு மற்றும் தாக்குதல் பாணியில் அமைந்தன ரத்னத்தின் சண்டைக்காட்சிகள்
ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்கள்!
எழுபதுகளில் ஜெய்சங்கர் தொடங்கி ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், அர்ஜுன் உட்படப் பல நாயகர்களின் படங்களுக்கு சண்டைக்காட்சிகள் அமைத்துள்ளார்.
ரஜினியின் ஆஸ்தான மாஸ்டர் என்று சொல்லும் அளவுக்கு, அவரோடு 46 படங்களில் பணியாற்றியுள்ளார். ரஜினி நடித்த 6 இந்திப்படங்களின் கணக்கு தனி. ‘கிராஃப்தர்’ என்ற படத்தில் அந்தரத்தில் ரஜினி சிகரெட்டை வீசி பற்ற வைக்கும் காட்சி ஒருகாலத்தில் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.
‘முரட்டுக்காளை’யில் ரயில் மோதல், இந்திய அளவில் ரத்னத்தைப் புகழ் பெற வைத்தது. ’ஷோலே’ பாணியில் அமைந்தாலும், குறைந்த நாட்களில் மிகத்தரமான ஷாட்களை எடுத்திருந்தார். அந்தப் படத்தின் அடையாளங்களில் ஒன்றாக அக்காட்சியும் அமைந்தது. காளி, பாயும் புலி உட்பட ரஜினிக்குப் பெயர் வாங்கித் தந்த பல படங்களைத் தந்த இவர் இறுதியாகப் பணியாற்றிய படம் ‘பாண்டியன்’. தமிழில் இயக்குனர் எஸ்.பி.முத்துராமனோடு மட்டும் 54 படங்களில் இணைந்துள்ளார்.எண்பதுகளில் ரஜினி போலவே இன்னொரு ஆக்ஷன் ஹீரோவாக கருதப்பட்ட டி.ராஜேந்தருக்கு திரைப்பட சண்டைக்காட்சிகளில் எப்படி நடிப்பது என்று கற்றுத் தந்தது ரத்னம் தான்.
மேலும் படிக்க: அன்று தோற்ற ஆளவந்தான், இன்று..?
கமல்ஹாசனுக்குப் பெரும் வசூலைத் தந்த ‘சகலகலா வல்லவன்’ படம் இவருடையதே. அதேபோல, ‘தூங்காதே தம்பி தூங்காதே’ படத்தில் டீக்கடையில் இருக்கும் பெஞ்ச்சை ஒரு பிராபர்டியாக பயன்படுத்தி கமலுக்காக வடிவமைத்த சண்டைக்காட்சி அபாரமானதாக இருக்கும்.
இந்தியில் அமிதாப் பச்சன், தர்மேந்திரா, ஜிதேந்திரா, மிதுன் சக்கரவர்த்தி என்று முன்னணி நடிகர்களில் படங்களில் பணியாற்றிய அனுபவம் ரத்னத்திற்கு உண்டு. எழுபதுகளில் ஏவிஎம் தயாரித்த ’ஜெய்சா ஹோ தெய்சா’ படத்தில் ஜிதேந்திராவுக்கு இரட்டை வேடம். ஒரு பாத்திரம் அப்பாவித்தனமானது என்பதால், அதற்கான சண்டைக்காட்சியை , நகைச்சுவையாக வடிவமைத்திருக்கிறார்.
தன் இமேஜுக்கு அது பொருத்தமில்லை என்று ஜிதேந்திரா மறுத்தபோது, இயக்குனர்களான முருகன் குமரன் சகோதரர்கள் ரத்னம் சொல்வதுதான் சரியாக இருக்குமென்று வலியுறுத்தியதோடு, ஒருகட்டத்தில் ‘உங்களுக்கு விருப்பமில்லை என்றால் நீங்கள் படத்தில் இருந்து விலகிக்கொள்ளுங்கள்’ என்றிருக்கின்றனர். அதனைக் கண்டு ஜிதேந்திரா மிரண்டுவிட்டாராம்.
தயாரிப்பாளர்கள் விரும்புகிற சண்டைப்பயிற்சியாளராக இருந்த காரணத்தால்தான், சுமார் 1,200 படங்கள் வரை ரத்னத்தால் பணியாற்ற முடிந்திருக்கிறது. அவரது பெயரை கின்னஸ் புத்தகத்திலும் இடம்பெறச் செய்திருக்கிறது.
நிறைவான வாழ்வு!
தமிழ், தெலுங்கு, இந்திப்படங்களில் அப்போதிருந்த முன்னணி நாயகர்களுக்கு சண்டைக்காட்சிகள் வடிவமைத்த ரத்னம், எண்பதுகளில் அதிகமும் கன்னடம், மலையாளப் படங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.
சண்டைக்கலைஞர்களுக்கு நிறைவான வருமானமும் பாதுகாப்பான தொழில் வாழ்க்கையும் அமைய வேண்டுமென்ற நோக்கோடு, எழுபதுகளிலேயே சண்டைக்கலைஞர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் சங்கத்தை நிறுவத் துணை நின்றார்.
அவர்களுக்கான சம்பளத்தை சங்கமே நிர்ணயிக்கும் என்ற நிலையை உருவாக்கினார். அச்சங்கத்தில் தலைவர் உட்பட சில பொறுப்புகளையும் வகித்துள்ளார்.
தமிழ்நாட்டிலுள்ள சண்டைப்பயிற்சியாளர்கள் இந்தியிலும் தெலுங்கிலும் பிரமாண்டப் படங்களில் பணியாற்ற முடியும் என்ற நிலையை உருவாக்கியவர்களில் ரத்னம் முதன்மையானவர். இன்று சில்வா, அனல் அரசு, அன்பறிவ், ஸ்டன் சிவா, பீட்டர் ஹெய்ன் உட்படப் பலரும் இந்தியா முழுக்கத் தெரிந்தவர்களாக இருப்பதற்கு ஒருவகையில் ரத்னமே காரணம்.
சண்டைக்கலைஞர்களுக்கு நிறைவான வருமானமும் பாதுகாப்பான தொழில் வாழ்க்கையும் அமைய வேண்டுமென்ற நோக்கோடு, எழுபதுகளிலேயே சண்டைக்கலைஞர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் சங்கத்தை நிறுவத் துணை நின்றார்
தொண்ணூறுகளுக்குப் பிறகு தன் சொந்த ஊருக்குத் திரும்பினார்; தன் ஓய்வுக்காலத்தை நிறைவானதாக மாற்றிக்கொண்டார். மகன்கள், மகள்கள், அவர்களது குடும்பத்தினரோடு பொழுதைச் செலவிடுவது என்றிருந்தார். அந்த நேரத்தில், திரையுலகமும் அவரை மறந்துபோனது.
கடந்த ஜனவரி 26ஆம் தேதியன்று தனது 93ஆவது வயதில் அவர் மறைந்தார். வாழும் காலத்தில் அவர் ஆசைப்பட்டபடியே, அவரது உடல் சண்டைக்கலைஞர்கள் சங்கத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டது. ஒருகாலத்தில் அவர் செய்த சாதனைகள் மீண்டும் நினைவுகூரப்பட்டது. ’கரணம் தப்பினால் மரணம்’ என்றிருக்கும் ஒரு தொழில் துறையில் ஒரு மனிதர் நிறைவான வாழ்வு வாழ்ந்து தனது சாதனைகளை விட்டுச் சென்றிருப்பது அரிதான ஒன்று.
சிறு வயதில் வீட்டின் அருகே 9 அடி ஆழத்திற்குப் பள்ளம் தோண்டி ஒரு அறை அமைத்து, அதில் உடற்பயிற்சி செய்வாராம் ஜூடோ ரத்னம். ஒரு பேட்டியில் அது குறித்து ஜூடோ ராமு கேட்க, “அந்த காலத்துல மும்மாரி பெய்ஞ்சது. அதனால, வெளியில குளிர்ச்சியா இருக்கும். வியர்வை வர்றதுக்காக தரைக்கு கீழே அறை அமைத்து உடற்பயிற்சி செய்வோம்” என்று பதிலளித்தார் ரத்னம். இந்த பதிலில் பல தகவல்கள் ஒளிந்திருக்கின்றன.
வளங்கள் கொட்டிய காலத்திலும் தம்மை வருத்திக்கொள்ளத் தயாராக ஒரு தலைமுறை இருந்தது என்பதே அதன் சாராம்சம். தகிப்பதே இயல்பென்று ஆகிவிட்ட இன்றைய சூழலில் நாம் பிரமிக்கிற, பின்பற்ற வேண்டிய பாடம் அது!
Read in : English