Read in : English
2012ஆம் ஆண்டில் முடிச்சூர் சியோன் மெட்ரிகுலேஷன் பள்ளிப்பேருந்து விபத்தில் ஏழு வயது சிறுமி ஸ்ருதி இறந்துபோனாள். அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட எட்டு பேரும் நிரபராதிகள் என்று அவர்களை நீதிமன்றம் விடுவிடுத்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. பேருந்து தளத்தில் ஓட்டை இருந்ததால் இந்த விபத்து ஏற்பட்டது என்பதைக் கூட நிரூபிக்க முடியாத அரசுத்தரப்பு வழக்கறிஞர்களின் நேர்மை கவனத்துக்கு உள்ளாகியிருக்கிறது.
அரசுத்தரப்பு சாட்சிகள் 36 பேர் பிறழ்ந்திருக்கிறார்கள். அரசுத்தரப்பு சாட்சியத்தில் தவறவிட்ட விஷயங்களைக் கண்டுபிடித்திருக்கிறார் சென்னை கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி. சாட்சியச் சட்டத்தின் படி இந்த வழக்கில் மின்னணு சாட்சியங்கள் தரச்சான்று பெறவில்லை என்பது போன்ற நுட்பமான விசயங்களை நீதிபதி சுட்டிக்காட்டியிருக்கிறார்.
மரணம் விளைவிக்கும் குற்றம் செய்தார்கள் என்று குற்றச்சாட்டின் அடிப்படையில் வழக்கு நடைபெற்றது. மாநிலத்தின் மனசாட்சியையும் மக்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய பெண்குழந்தையின் மரணத்தால், பள்ளிப் பேருந்துகளை இயக்குதல் சம்பந்தமான புதிய விதிகளை உருவாக்கும்படியும், பாதுகாப்பைக் கவனிக்கும் பள்ளிக் குழுக்களை உருவாக்கும் படியும், தமிழ்நாடு அரசை சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து கேட்டுக் கொண்டது.
தோற்றுப்போன அரசுத்தரப்பு இப்போது மேல்முறையீடு செய்யலாம். அப்போது விபத்திற்கு யார் பொறுப்பு என்பதை நிர்ணயிக்க வேண்டிய தேவையை மேல் நீதிமன்றம் உணர்ந்து இறந்த குழந்தையின் குடும்பத்திற்கு நீதி வழங்கலாம்.
குழந்தையின் மரணத்திற்குப் பிறகான இந்தப் பத்தாண்டுக் காலத்தில் வழக்கு பல்வேறு திருப்பங்களைச் சந்தித்தது. உதாரணமாக, பள்ளி நிறுவனர் என்.விஜயன் தன்னைச் அச்சுறுத்தியதாகக் குழந்தையின் தாயார் எம்.கே.பிரியா குற்றம்சாட்டினார். அதை மறுத்தார் விஜயன்.
2012ஆம் ஆண்டில் சியோன் மெட்ரிகுலேஷன் பள்ளிப்பேருந்து விபத்தில் ஏழு வயது சிறுமி ஸ்ருதி இறந்துபோனாள்; அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட எட்டுபேரும் நிரபராதிகள் என்று விடுவிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது
இந்தக் குற்றச்சாட்டைக் காவல்துறை புலனாய்வு செய்தது. அந்தப் புலனாய்வு எப்படி முடிந்தது என்று தெளிவாகத் தெரியவில்லை. 2016ல் நுகர்வோர் நீதிமன்றம், குழந்தையின் குடும்பம் கோரியிருந்த ரூ. 25 இலட்ச நட்ட ஈட்டுக்குப் பதிலாக, ரூ.10 இலட்சத்தைக் கொடுக்கும்படி தீர்ப்பளித்தது.
வழக்கின் முக்கிய அம்சம் பேருந்து யாருக்குச் சொந்தம் என்பதுதான். பள்ளிப் பேருந்தின் உரிமையாளார் ஒரு தனிநபர் என்று சொல்லி அதற்கும் தங்களுக்கும் சம்பந்தமில்லை என்று விலகிக்கொண்டனர் பள்ளி நிர்வாகத்தினர். ஆவணங்களில் மோசடி செய்து அந்தத் தனிநபர் பேருந்தைப் பள்ளியின் பேரில் பதிவு செய்திருந்தார் என்று சொல்லப்பட்டது.
மேலும் படிக்க: கள்ளக்குறிச்சி கலவரம்: வன்முறையின் பின்னணியில் இருப்பது யார்?
இந்த வழக்கை எடுத்துக்கொண்ட உயர்நீதிமன்றம் சம்பந்தப்பட்ட பிராந்திய போக்குவரத்து அதிகாரி, மோட்டார் வாகன ஆய்வாளர் ஆகியோர் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்குமாறு ஆணையிட்டது. நடவடிக்கை வெறும் கண்துடைப்பாக இருக்கக் கூடாது என்றும் எச்சரித்தது.
விதிகளின் முக்கியத்துவம்
நீதிமன்ற ஆணையைத் தொடர்ந்து உருவான தமிழ்நாடு மோட்டார் வாகனங்கள் (பள்ளிப் பேருந்துகள் மீதான கட்டுப்பாடுகள்) சிறப்பு விதிகள்-2012 என்ற சட்டமும், ஸ்ருதி மரண வழக்கும், பள்ளிக்குச் சென்று திரும்பும் குழந்தைகளின் சாலைப் பாதுகாப்பின் மீது அதிக கவனத்தைக் குவித்தது.
பள்ளி சென்று திரும்பும் குழந்தைகளின் சாலைப் பாதுகாப்பின் மீது கவனம் செலுத்தும்படி, ’கும்டா’ என்னும் சென்னைப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அமைப்புக் கூட்டத்தில் அறிவுறுத்தியிருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
2012ல் உருவாக்கப்பட்ட சட்ட விதிகளை மீறி பல்வேறு பள்ளிப் போக்குவரத்து வாகனங்கள் செயல்படுகின்றன. இன்னும் பாடம் கற்காமல் ஓடுகின்றன பள்ளி வாகனங்கள்.
குறிப்பாக, தரமற்ற வாகனங்களைப் பள்ளிப் போக்குவரத்திற்குப் பயன்டுத்துவதை விதிமீறல் சொல்லலாம். பள்ளிப் பேருந்து பற்றிய தொழில்நுட்ப விதிமுறைகளை இந்திய மோட்டார் வாகன ஆராய்ச்சி கழகத்தின் அனைத்திந்திய தர அளவுகோல்கள் நிர்ணயித்திருக்கின்றன. குழந்தைகளைப் பள்ளிகளுக்குக் கொண்டு செல்ல பேருந்துகள் மட்டுமல்ல, வேன்களும் உண்டு.
அந்தச் சிறிய வேன்கள் எந்தத் தரவிதிகளையும் பின்பற்றுவதில்லை. குத்தகைக்கு எடுத்த பேருந்துகளையும் விதிமுறைகள் அனுமதிக்கின்றன. ஆனால் அப்படி எடுத்த குத்தகைப் பேருந்துகள் பள்ளி மாணவர்களின் போக்குவரத்திற்குச் சிறப்பு அனுமதி பெற்றாக வேண்டும் என்று விதிகள் சொல்கின்றன.
பல பேருந்துகளில் பாதுகாப்பு அம்சங்கள் இல்லை. பள்ளிப் பேருந்துகள் விதிகளை மீறி வேறு நோக்கங்களுக்காகவும் பயன்படுத்தப்படுகின்றன. வாகனங்களுக்கு முழுவதும் மஞ்சள் வர்ணம் பூசுவதில்லை என்பது மற்றொரு விதிமீறல்.
ஒவ்வொரு பள்ளியிலும் சாலைப் பாதுகாப்புக் குழு அமைக்க வேண்டும் என்று தமிழ்நாடு விதிமுறைகள் சொல்கின்றன. அந்தக் குழுவில் உள்ளூர் காவல் உதவி ஆய்வாளர், கல்வித்துறை அதிகாரி, மோட்டார் வாகன ஆய்வாளர், பெற்றோர்-ஆசிரியர் கழகப் பிரதிநிதி ஆகியோர் இடம்பெற வேண்டும். ஒவ்வொரு மாதமும் குழு கூட்டப்பட வேண்டும் என்றும் அமைப்பியல் ரீதியான விதிமுறைகள் உள்ளன. ஆனால் பல்வேறு விதிமுறைகள் மீறப்படுகின்றன.
பள்ளி சென்று திரும்பும் குழந்தைகளின் சாலைப் பாதுகாப்பின் மீது கவனம் செலுத்தும்படி, ’கும்டா’ என்னும் சென்னைப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அமைப்புக் கூட்டத்தில் அறிவுறுத்தியிருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிப் பகுதிகளில் அதிகமான விபத்துகள் நடக்கின்றன (சாலைப் போக்குவரத்து விபத்து மரணங்களில் 9.4 சதவீதம்) என்று தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவுகள் கூறுகின்றன. இதெல்லாம் குழந்தைகளின் சாலைப் பாதுகாப்புக்கு எவ்வளவு குறைவான முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்பதைத் தெரிவிக்கிறது. இதனால்தான் முதல்வர் ஸ்டாலின் குழந்தைகளின் சாலைப் பாதுகாப்பு பற்றி ஆணையிட்டிருக்கிறார்.
தமிழ்நாட்டு விதிமுறைகள் பள்ளிப் பேருந்துகளைப் பற்றிய விவரங்களை அதிக அளவில் கொண்டிருக்க வேண்டும். ஆனால், பேருந்துகளின் தொழில்நுட்ப தரங்களைப் பற்றிய வரையறைகள் தெளிவில்லாமலே இருக்கின்றன. வாகனங்களின் முன்பக்கப் பாதுகாப்பு அம்சங்கள் குறிப்பிடப்படவே இல்லை.
மேலும் படிக்க: கால்பந்தாட்ட வீராங்கனை மரணம்: உயரும் அச்சம்!
பேருந்துகளின் அல்லது வேன்களின் முன்னால் கவனக்குறைவாக நிற்கும் குழந்தைகள் அல்லது கடந்து போகும் குழந்தைகள் ஓட்டுநர்களின் கண்ணுக்குத் தெரிவதில்லை. அதனாலே விபத்துகள் நிகழ்கின்றன. ஆகவே ஓட்டுநர் அருகில் அண்மைநோக்குக் கண்ணாடிகள் பொருத்தப்பட வேண்டும் என்ற விதி உருவாக்கப்பட வேண்டும்.
சிறப்பு விதிகள்படி, பள்ளிப் பேருந்துகளை அதிகாரிகள் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஆய்வு செய்ய வேண்டும். கடைசி முறை தர ஆய்வு செய்யப்பட்ட தேதியை பேருந்துகளின் பக்கவாட்டிலும் முன்பக்கமும் பின்பக்கமும் எழுதி வைக்க வேண்டும் போன்றவற்றைத் திருத்தப்பட்ட விதிகள் சொல்ல வேண்டும்.
ஸ்ருதியின் துயரச்சாவு சென்னையிலும் தமிழ்நாட்டின் பிற பகுதிகளிலும் கடுமையானதோர் எதிர்வினையை உருவாக்கியிருக்க வேண்டும். ஆனால் அப்படியெல்லாம் ஒன்றும் நிகழவில்லை. அதுதான் இந்த வழக்கில் நீதிமன்றத்தில் தென்பட்ட அரசுதரப்புக் கவனக்குறைவிலும், வழக்கம் போல வேலையைப் பார்க்கலாம் என்ற பொது மனப்பான்மையிலும் வெளிப்பட்டிருக்கிறது.
Read in : English