Read in : English
சில படங்கள் திரையரங்கில் வெளியானபிறகு சர்ச்சையாகும்; சில திரைக்கு வரும் முன்பே சர்ச்சைகளை உருவாக்கும். ‘பேஷ்ரங்’ பாடலில் காவி நிற பிகினி அணிந்து தீபிகா படுகோனே ஷாரூக் கானுடன் ஆடியது, அப்படித்தான் ‘பதான்’ வெளியீட்டுக்கு எதிர்ப்பை உண்டாக்கியது.
அதேநேரத்தில், தேவையற்ற விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டாம் என்று பாஜக தலைமை தன் கட்சியினருக்கு அறிவுறுத்தும் நிலையும் ஏற்பட்டது. ’ஹேஷ்டேக் புறக்கணிப்பு’ ட்ரெண்டுக்கு மத்தியில், ஜனவரி 25 அன்று உலகெங்கும் வெளியாகியிருக்கும் ‘பதான்’ உண்மையிலேயே சர்ச்சைக்குரியது தானா? எப்படியிருக்கிறது படம்?
உளவாளியின் சாகசம்!
‘ஒரு ஊர்ல ஒரு உளவாளி இருந்தாராம். ஒரு பிரச்சனை வந்தப்போ, அவரு இன்னொரு நாட்டுக்கு உளவு பார்க்கப் போனாராம். அப்போ, இன்னொரு பெரிய பிரச்சனைய கண்டுபிடிச்சாராம். ஒருவழியா ஏழு கடல் ஏழு மலை தாவிப்போய் அதைத் தீர்க்கலாம்னு பார்த்தா, கூட இருந்த பயபுள்ள துரோகம் பண்ணிடுச்சாம்.
ஏணியா பார்த்து பார்த்து ஏறின உளவாளி, சட்டுன்னு பாம்புல விழுந்து கீழே சரிஞ்சுட்டாராம். விழுந்த வேகத்துல எந்திரிச்சு கைய முறுக்குனாராம் பாரு. அந்த முறுக்குல பாம்பெல்லாம் கூட ஏணியா மாறிடுச்சாம். அப்புறமென்ன? அந்த உளவாளியும் சரசரன்னு ஏறி, பிரச்சனைக்கு ’கதம் கதம்’ சொல்லிட்டாராம். அதோட அந்த விளையாட்டு முடிஞ்சதாம்’.
என்ன, ஏதாவது புரிகிறதா? ஜேம்ஸ்பாண்ட் சாகசங்கள், எம்.ஐ. சீரிஸ்கள் உள்ளிட்ட அத்தனை உளவாளிப் படங்களிலும் இதுவரை நாம் பார்த்த அதே கதைதான் ‘பதான்’ படத்திலும் உள்ளது. நாட்டுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வில்லனின் முயற்சிகளைத் தன் உயிரைப் பணயம் வைத்து நாயகன் தடுக்கிறார். அவ்வளவுதான்.
’ஹேஷ்டேக் புறக்கணிப்பு’ ட்ரெண்டுக்கு மத்தியில், ஜனவரி 25 அன்று உலகெங்கும் வெளியாகியிருக்கும் ‘பதான்’ உண்மையிலேயே சர்ச்சைக்குரியது தானா?
இந்தியாவுக்கு வெளியில் இருந்து ஒரு சதி பாயும்போது, உளவாளி நாயகனும் நாடு நாடாகப் பறந்து சாகசங்கள் செய்யத்தானே வேண்டும். இதிலும் அதுவே நடக்கிறது. நடுநடுவே பாகிஸ்தானைச் சேர்ந்தவராக வரும் நாயகியோடு நெருங்கிப் பழக வேண்டிய கட்டாயமும் வருகிறது. ‘பாகிஸ்தான்காரியோட அந்தாளுக்கு என்னங்க பேச்சு வேண்டிக் கிடக்கு’ என்று வடிவேலு குரலில் கேள்வி கேட்டால், ரஷ்யாவைச் சேர்ந்த நாயகியோடு பிரிட்டனின் ஜேம்ஸ்பாண்ட் காதல் விளையாட்டுகளில் ஈடுபட்டதையெல்லாம் நீங்கள் அறியவில்லை என்றே அர்த்தம். அதாகப்பட்டது, அந்த பார்முலாவைதான் ‘பதான்’ படத்திலும் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
இந்த கதையில் ஷாரூக்கான் தான் நாயகன் என்பதையோ, தீபிகா தான் பாகிஸ்தானியப் பெண் என்பதையோ தனியாகச் சொல்ல வேண்டியதில்லை. வில்லனாக வரும் ஜான் ஆபிரகாம் பாத்திரம் கூட ’ரா’ உளவுப்பிரிவின் முன்னாள் அதிகாரியாகவே காட்டப்பட்டிருப்பதால், ‘பதான்’ கதையில் புதிதாக ஒன்றுமே இல்லை.
மேலும் படிக்க: வெற்றிக்கொடி நாட்டிய நாட்டு நாட்டு!
கண்ணுக்கு விருந்து!
திரைக்கதையில் இளமையானவராகச் சித்தரிக்கப்படாத காரணத்தால், ஷாரூக்கின் தோற்றமும் முகம் சுளிக்கும் அளவுக்கு இல்லை.
கமர்ஷியல் படம் செய்கிறேன் பேர்வழி என்று சில ஆண்டுகளாகவே தமிழ், தெலுங்கு மசாலா படங்களை கிண்டலடித்து வந்த ஷாரூக்கான், வேறு வழியில்லாமல் இதில் அந்த வழியிலேயே இறங்கியிருக்கிறார். ’ஜீரோ’வுக்குப் பிறகு நான்காண்டு கால இடைவெளியில் ஏற்பட்ட எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்திருக்கிறார்.
நாயகனுக்கு இணையான வில்லன் எனும் நோக்கோடு இதில் ஜான் ஆபிரகாம் இடம்பெற்றிருக்கிறார். ஆக்ஷன் படத்தில் வில்லனுக்கு என்ன வேலை, அடிப்பதும் அடிவாங்குவதும் தானே! அதனைச் செவ்வனே செய்திருக்கிறார்.
என்ன, ஷாரூக்கும் ஜானும் அடிக்கடி சட்டையைக் களைந்துவிட்டு கட்டுடலோடு திரிவதுதான் பேஷன் டிவிக்குள் நுழைந்துவிட்டோமோ என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது.
அதென்ன, ஆண்கள் மட்டும்தான் அப்படியிருப்பார்களா என்று தீபிகா படுகோனே நினைத்தாரோ என்னவோ? படம் முழுக்க கவர்ச்சிகரமாகத்தான் வருகிறார். குழந்தைகளோடு ‘பதான்’ பார்க்கச் செல்வதற்குத் தடையாக இருப்பது இந்த அதிபயங்கரக் காட்சிகள் தான்.
பின்னாளைய ஜேம்ஸ்பாண்ட் படங்களில் ‘எம்’ ஆக ஜூடி டெஞ்ச் வந்ததுபோல, இதில் டிம்பிள் கபாடியா தலைகாட்டியிருக்கிறார். அபாரமான நடிகரான அசுதோஷ் ராணா, தன் பங்குக்கு இரண்டொரு காட்சிகளில் வந்து ஷாரூக்கானிடம் ‘உள்ளேன் அய்யா’ என்றிருக்கிறார். இவர்களைத் தவிர்த்து சிறியதும் பெரியதுமாய் நூற்றுக்கணக்கானவர்கள் இப்படத்தில் நடித்திருக்கின்றனர்.
கமர்ஷியல் படம் செய்கிறேன் பேர்வழி என்று சில ஆண்டுகளாகவே தமிழ், தெலுங்கு மசாலா படங்களை கிண்டலடித்து வந்த ஷாரூக்கான், இதில் வேறு வழியில்லாமல் அந்த வழியிலேயே இறங்கியிருக்கிறார்
எப்போதுமே அசைந்து கொண்டிருக்கும் வகையிலான சட்சித் பவுலோஸின் ஒளிப்பதிவு, நாயகனின் அட்ரினலின் எழுச்சியை நமக்கும் கடத்துகிறது. அதனைத் தக்கவைக்க உதவியிருக்கிறது சஞ்சித்- அங்கித்தின் பின்னணி இசை. இரண்டாம் முறையாகப் படம் பார்க்க காரணமாக விளங்கும்.
படத்தொகுப்பு உட்படப் பல்வேறு தொழில்நுட்பப் பணிகள் கனகச்சிதமாகவே அமைந்துள்ளன. ஆனால், விஎஃப்எக்ஸ் நேர்த்தி குறைவு என்பதால் ‘க்ரீன்மேட்’ காட்சிகள் அதிகமிருப்பது தெளிவாகத் தெரிகிறது. மிகமுக்கியமாக, நம்மூர் அனல் அரசுவின் சண்டைக்காட்சி வடிவமைப்புதான் ’கண்ணுக்கு விருந்து’ என்று சொல்லும் அளவுக்கு பொழுதுபோக்குமயமான ஒரு படத்தைத் தந்திருக்கிறார் இயக்குனர் சித்தார்த் ஆனந்த். ஸ்ரீதர் ராகவனின் திரைக்கதை நேர்த்தி, கதையில் இருக்கும் லாஜிக் மீறல்கள் பற்றிய கேள்விகளை அமுக்கிவிடுகிறது.
இந்தியில் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கிலும் ‘டப்’ செய்து வெளியிடப்பட்டுள்ளது ‘பதான்’. அதற்கேற்றவாறு தமிழ் பதிப்பின் வசனங்களும் பாடல் வரிகளும் கவனமாகக் கையாளப்பட்டிருப்பது நல்ல விஷயம்.
மேலும் படிக்க: நாட்டார் வழிபாடு போற்றும் ‘காந்தாரா’!
சர்ச்சைகளுக்குப் பதில்!
ஒரு இந்திப்படம் என்ற அடையாளத்தை மட்டுமே கொண்டிருந்த ‘பதான்’ மீது தேசத்தின் கவனமே குவியக் காரணம் ‘பேஷ்ரம்’ பாடல். காவி நிற பிகினி அணிந்து தீபிகா ஆடும்போது, அவருடன் ஆடும் ஷாரூக்கான் பச்சை வண்ண ஆடையை உடுத்தியவாறு வருகிறார் என்றுதான் அப்பாடலுக்கு எதிர்ப்பு வலுத்தது. ஆனால், படத்தில் மிகச்சில நொடிகளில் அந்த ஷாட்கள் கடந்து போகின்றன.
அதில், ஷாரூக்கான் அணியும் ஆடை வண்ணம் மாறியிருக்கிறது. அது மட்டுமல்ல, அதனைத் தொடர்ந்துவரும் காட்சியில் காவி வண்ண பிகினி மீது அதேபோன்ற வெள்ளை வண்ண உடையை அணிந்திருக்கிறார் தீபிகா.
அந்த காட்சி முதலிலேயே எடுக்கப்பட்டிருந்தால், இந்த சர்ச்சை வருமென்று தெரிந்தே விளம்பரத்திற்காக அப்பாடல் யூடியூபில் வெளியிடப்பட்டதாகக் கருத வேண்டும். அப்படியில்லை என்றால், அவசர கோலத்தில் அந்த காட்சி ‘ரீஷூட்’ செய்யப்பட்டிருக்க வேண்டும். படம் வெளியானபின்னும், அந்த காவி நிற பிகினிக்கான எதிர்ப்பு நீறு பூத்த நெருப்பாகத்தான் உள்ளது.
ஷாரூக்கான் தந்தை பாகிஸ்தானைச் சேர்ந்தவர், ஆப்கானிஸ்தானின் பஷ்டூன் பகுதியிலுள்ள ‘பதான்’ குழுவைச் சேர்ந்தவர் என்ற தகவல் நீண்ட நாட்களாக உலா வருகிறது. ஆனால், பாகிஸ்தானில் வசிக்கும் ஷாரூக்கின் உறவினர்களோ தங்களைக் காஷ்மிரீல் இருந்து இடம்பெயர்ந்தவர்களாகவே சொல்லி வருகின்றனர். ’ஹேராம்’ படத்தில் கூட, ஷாரூக்கின் பாத்திரம் பதான் சமூகத்தைச் சேர்ந்தவராகவே வடிவமைக்கப்பட்டிருக்கும் என்பது கூடுதல் தகவல். எது எப்படியானாலும், ‘பதான்’ என்பது ஷாரூக்கான் எனும் நடிகரின் தனிப்பட்ட அடையாளங்களில் ஒன்றாகக் கருதப்படுவது தெளிவாகிறது.
பாகிஸ்தான் தரப்பைக் கூட நியாயப்படுத்துகிற இப்படம், நாட்டுக்குழைத்த நல்லவர்கள் மீது இந்திய அரசு கரிசனம் காட்டாது என்கிற விமர்சனத்தை மிகச்சிறிய அளவில் முன்வைப்பது நிச்சயம் சர்ச்சையாகும். பாஜக ஆட்சிக்கு வந்தபிறகு அமீர்கான், ஷாரூக்கான், சல்மான்கானின் ஆதிக்கம் பாலிவுட்டில் சரிந்துவிட்டதாகச் செய்திகள் வெளியாகின. அதையும் இப்படம் கிண்டலடித்திருக்கிறது.
’ஏக் தா டைகர்’ படம் பார்த்தவர்களுக்கு, அதில் வரும் சல்மானின் ’டைகர்’ பாத்திரம் நினைவிலிருக்கும். இந்த படத்தில் ஷாரூக் கானோடு ஒரு சண்டைக்காட்சியில் நடித்திருக்கிறார் சல்மான் கான். படத்தின் இறுதியில்,’30 வருஷமா ஓடி ஓடி டயர்டாகிடுச்சு. நாம வேணா இளைய தலைமுறைக்கு வழிவிடுவோமா’ என்ற ரேஞ்சில் இருவரும் வசனம் பேசுகின்றனர்.
‘அவன் வேண்டாம், இவனும் வேண்டாம்’ என்று இளம் நாயகர்களை நக்கலடிக்கும்விதமாகப் பேசிவிட்டு, இறுதியில் ‘இந்தியாவைக் காப்பாத்த நாமதான் ஓடியாகணும், வேற வழியில்ல’ என்று அவ்விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கின்றனர்.
பாகிஸ்தான் தரப்பைக் கூட நியாயப்படுத்துகிற ’பதான்’, நாட்டுக்குழைத்த நல்லவர்கள் மீது இந்திய அரசு கரிசனம் காட்டாது என்கிற விமர்சனத்தை மிகச்சிறிய அளவில் முன்வைப்பது நிச்சயம் சர்ச்சையாகும்
அதாவது, பாலிவுட்டில் ’கான்’களின் ஆதிக்கம் ஓயாது என்று இருவரும் உறுதி கூறுவது போலவே இக்காட்சி உள்ளது.
படம் நன்றாக இருந்தால் ரசிகர்கள் ஷாரூக்கானை கொண்டாடத்தான் போகிறார்கள். அப்படியிருக்க, இப்படியொரு தெனாவெட்டான காட்சி இடம்பெறுவது நம்மூரில் ரஜினியும் விஜய்யும் அரசியல் ‘பஞ்ச்’ பேசுவது போல ரசிகனை உசுப்பேற்றுகிற வேலைதான்.
பொழுதுபோக்கு எனும் வகையில், ரசிகர்கள் காதில் பூக்கடையையே சூட்டுகிறது ‘பதான்’. இதில் புதிதென்று எதுவுமே கிடையாது. இதுவரை உலகெங்கும் வெளியாகியிருக்கும் ‘ஸ்பை ஆக்ஷன்’ படங்களின் சிறந்த காட்சிகள் பதானிலும் இருப்பதை உணரலாம்.
அதையும் மீறி, நீங்கள் ‘பதான்’ பார்க்க ஒரு காரணம்தான் உள்ளது. ரொம்பவும் சோர்வாக இருக்கும்போது, ‘ஜேம்ஸ்பாண்ட்’, ‘ஈதன் ஹண்ட்’ பாத்திரங்களின் சாகசங்களைப் பார்ப்பது உற்சாகம் கூட்டும். அப்படியொரு பொழுதுபோக்கு மட்டுமே இலக்கென்றால் ‘பதான்’ நிச்சயமாக ரசிக்க வைப்பான்!
Read in : English