Read in : English
பிரபல திரைப்பட நட்சத்திரங்கள் நடிக்கும் படங்களின் சுவரொட்டி, நடிகைகளின் படம் இல்லாமல் வெளியிடும் போக்கு சரியானதுதானா என்பது விவாத்துக்குரிய பொருளாகியுள்ளது. தமிழ்நாட்டின் தென்மாவட்டத்துக்குச் செல்லும் ரயில் ஒன்று எழும்பூரிலிருந்து நகர்ந்துகொண்டிருந்தது. அதன் பக்கவாட்டில் ரயில் முழுவதும் வாரிசு படத்தின் விளம்பரம் ஒட்டப்பட்டிருந்தது. முழு ரயில் விளம்பரத்திலும் தென்பட்ட ஒரே முகம் விஜயுடையதுதான். விஜயைத் தவிர வேறு யாருமே அந்த விளம்பரத்தில் இடம்பெறவில்லை. இது ஒருவித ஆச்சரியத்தைத் தந்தது.
அதைப் போல்தான் அஜித் நடித்த துணிவு படத்தின் சுவரொட்டி. அவற்றிலும் பெரும்பாலும் அஜித்தைத் தவிர யாரையும் பார்க்க முடியவில்லை.இப்படங்களின் சுவரொட்டிகள், விளம்பரப் பதாகைகள், நாளிதழ் விளம்பரங்கள் என எல்லாவற்றிலும் நாயகிகளையோ இதர நடிகர்களையோ மருந்துக்குக்கூடப் பார்க்க முடியவில்லை. இந்த இரண்டு படங்களிலும் நாயகிகளாக நடித்த நடிகைகள் யாரென்பதைச் சுவரொட்டியை வைத்துக் கண்டுபிடிக்கவே முடியாது என்பதுதான் யதார்த்தம்.
சுவரொட்டி என்றில்லை, டுவிட்டர் போன்ற சமூக ஊடகங்களில் படங்களை விளம்பரப்படுத்த இடம்பெறும் பெரும்பாலான படங்களிலும் நடிகர்கள் மட்டுமே இடம்பெறுகிறார்கள். வாரிசைப் பொறுத்தவரை, நான்காவது நாள் போஸ்டரில் நாயகியுடன் விஜய் காட்சி தருகிறார்; ஐந்தாவது நாள் போஸ்டரில் பிற நடிகர்கள் தென்படுகிறார்கள். துணிவும் அதே கதைதான். ஒரே ஒரு போஸ்டரில் மட்டும் அஜித்துடன் நாயகி மஞ்சு வாரியர் இடம்பெற்ற படத்தைப் பார்க்க முடிகிறது. இதை யாருமே கண்டுகொள்வதில்லையா அல்லது இதெல்லாம் ஓர் அற்ப விஷயம் என ஒதுக்கிவிடுகிறார்களா என்பது புரியவில்லை.
நடிகர் பார்த்திபன் ஒத்த செருப்பு என்னும் ஒரு படத்தைத் தயாரித்து இயக்கி நடித்திருந்தார். அந்தப் படத்தின் சுவரொட்டிகளில் பார்த்திபன் மட்டும் இடம்பெற்றிருப்பதை நம்மால் புரிந்துகொள்ள முடியும். ஏனெனில், அந்தப் படத்தில் ஒரே ஒரு கதாபாத்திரம் அதுவும் பார்த்திபன் ஏற்று நடித்த கதாபாத்திரம் மாத்திரமே ரசிகர்களின் பார்வைக்குத் தென்படும். ஆகவே, அவரது முகத்தை மட்டுமே சுவரொட்டிகளில் போட்டு விளம்பரப்படுத்துவதில் ஒரு நியாயம் உள்ளது. ஆனால், அஜித், விஜய் போன்ற பெரிய நடிகர்களது படங்களில் அவர்கள் மட்டும்தான் நடிக்கிறார்களா என்ன?
சுவரொட்டி என்பது சாதாரணமான விஷயமாக இருக்கலாம். ஆனால், நடிகைகளது முகங்களே இல்லாத சுவரொட்டி இந்த நட்சத்திர நடிகர்களது படங்களில் நடிகைகளுக்குக் கொடுக்கப்படும் இடத்தை அம்பலப்படுத்துகிறது
சுவரொட்டி என்பது சாதாரணமான விஷயமாக இருக்கலாம். ஆனால், நடிகைகளது முகங்களே இல்லாத சுவரொட்டி இந்த நட்சத்திர நடிகர்களது படங்களில் நடிகைகளுக்குக் கொடுக்கப்படும் இடத்தை அம்பலப்படுத்துகிறது. இது ஒருவகையான ஆணாதிக்க மனப்போக்கு என்பதை அந்த நடிகர்களோ படத்தின் இயக்குநர்களோ அறியாத அளவுக்கு அப்பாவிகளாகவா இருப்பார்கள்?நடிகைகளுக்கு முக்கியத்துவமற்ற போக்கு இப்போதுதான் தொடங்குகிறது எனச் சொல்ல முடியாது. ஏனெனில், எம்ஜிஆர்- சிவாஜி, ரஜினி- கமல் காலத்திலிருந்தே இப்படியான ஓர் அணுகுமுறையைத்தான் தமிழ்த் திரைப்படத்துறையில் காண முடிகிறது.
ஆனால், ரஜினி கமல் காலங்களில்கூட அவர்களது படங்களில் வேண்டுமானால் நாயகிகளுக்கு முக்கியத்துவம் இல்லாமல் இருந்ததே தவிர, சுவரொட்டிகளில் அவர்களது இருப்பு இருட்டடிப்பு செய்யப்படவில்லை. சுரொட்டிகளை முழுவதும் நட்சத்திர நடிகர்களே ஆக்கிரமிக்கும் போக்கு என்பது அஜித், விஜய் போன்ற பெரிய நடிகர்களது படங்களில்தான் அதிகமாக உள்ளது. சமூக ஊடகங்களின் வளர்ச்சிக்கும் இப்படியான போக்குக்கும் ஏதாவது தொடர்பு உள்ளதா என்பதையும் யோசிக்க வேண்டியதிருக்கிறது.
மேலும் படிக்க: பெண்களுக்கு எதிரான சிந்தனைகளைக் கட்டமைக்கும் தமிழ் சினிமா!
தமிழ்ப் படங்களைப் பொறுத்தவரை நாயக நடிகர்களது படங்களில் நடிகைகளுக்குப் பெரிய முக்கியத்துவம் தரப்படுவதில்லை. எம்ஜிஆர் காலத்திலேயே பெண்களுக்கு அறிவுரை சொல்லும் வேடங்களை நாயகர்கள் ஏற்று நடித்திருப்பது மிகவும் சாதாரணமாகக் காணக்கூடியதாகவே இருக்கிறது. பேண்ட் அணிந்த நாயக நடிகர்கள் தமிழ்ப் பண்பாடு என்று சொல்லி நாயகிகளுக்குப் புடவையை வலியுறுத்தும் காட்சிகளைப் பார்த்திருக்கிறோம்.
ரஜினிகாந்த் தன் படங்களில் அநியாயத்துக்குப் பெண் கதாபாத்திரங்களுக்கு அறிவுரைகளாகச் சொல்லிக் குவிப்பார். பெண்கள் குறித்த பிற்போக்குத்தனமான கருத்துகளை அதிகமாகத் தன் படங்களில் அனுமதித்த நடிகருக்கு ஏதாவது பரிசு அறிவித்தால் அதைப் பெறும் முதல் நடிகர் ரஜினி காந்தாகத்தான் இருப்பார்.
எடுத்துக்காட்டாக, அவர் நடித்த மன்னன் திரைப்படத்தில், விஜயசாந்தி நாயகியாக நடித்திருப்பார். அதில், ரஜினிக்கும் விஜயசாந்திக்குமான தொழில்ரீதியான போட்டிதான் திரைக்கதையின் பெரும்பகுதியை ஆக்கிரமித்திருக்கும். படத்தின் இறுதியில் விஜயசாந்தி, வீட்டிலிருந்து சமைத்துப் போட்டுக் கணவனை நல்லபடியாக அலுவலகம் அனுப்பும் மனைவியாக மாறியிருப்பார். இந்தப் படம் வந்து முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது.
இதற்கெல்லாம் இயக்குநரைத் தான் கேள்வி கேட்க வேண்டும் என்று இத்தகைய நட்சத்திர நடிகர்கள் படங்களில் சொல்ல முடியாது. நட்சத்திர நடிகரது படங்களைப் பொறுத்தவரை நடிகைகள் தொடங்கித் தொழில்நுட்பக் கலைஞர்கள் வரை எல்லாமே அவர்கள் முடிவுதான்.
முதல் தமிழ் பேசும்படமான காளிதாஸ் வெளியாகி 90 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. இந்த நீண்ட காலத்தில் நட்சத்திர நடிகர்கள் திரைப்படங்களில் நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட படங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம் என்பதே யதார்த்தம்
முதல் தமிழ் பேசும்படமான காளிதாஸ் வெளியாகி 90 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. இந்த நீண்ட காலத்தில் நட்சத்திர நடிகர்கள் திரைப்படங்களில் நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட படங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம் என்பதே யதார்த்தம். ஓரிரு விதிவிலக்குகள் இருக்கலாமே தவிர பெரும்பாலும் நட்சத்திர நடிகர்கள் படங்களில் அவர்களே ஆதிக்கம் செலுத்துகிறார்கள். நாயகர்களுக்கு அடுத்த இடம்தான் நாயகிகளுக்கு வழங்கப்படுகிறது.
எவ்வளவுதான் சிறப்பான நடிப்புத் திறமை கொண்ட நடிகையாக இருந்தாலும், அவரது நடிப்புக்குத் தீனி போட அவர் விரும்பினால் நட்சத்திர நடிகர்களது படங்களை அவர் தவிர்த்துவிடுவதுதான் அவருக்கு இருக்கும் ஒரே வழி. நடிகை நதியா புகழ்பெற்றிருந்த காலத்தில் அவர் ரஜினி, கமல் போன்ற நடிகர்களுடன் நடிப்பதைத் தவிர்த்துவிட்டார். ரஜினியுடன் ஜோடியாக ராஜாதிராஜா என்னும் ஒரே ஒரு படத்தில் மட்டுமே நடித்திருந்தார்; கமலுடனோ நடித்திருக்கவே இல்லை.
மேலும் படிக்க: சாதி இந்துக்களிடம் பிராமண சிந்தனைகளைக் கொண்டு சேர்க்கும் தமிழ்த் திரைப்படங்கள்!
இது குறித்து தொடர்ந்த விவாதங்கள் எழுந்துகொண்டுதான் இருக்கின்றன. ஆனாலும், இன்னும் நிலைமை பெரிதாக மாறவில்லை. வணிகப் படம் என்பதால் அது நடிகர்களைப் பொறுத்துதான் அமையும் என்று சொல்லப்படுவதை நியாயமான தர்க்கமாக எடுத்துக்கொள்ள முடியாது. ஏனெனில், விஜய், அஜித் போன்ற நடிகர்களது படங்களைப் பார்க்க விரும்பும் ரசிகர்கள் அவர்களை மட்டுமேவா பார்க்க வருகிறார்கள்? அப்படி அவர்களை மட்டுமே பார்க்க விரும்பினால் பிற நடிகர்கள் அவர்கள் படங்களில் நடிக்கும் தேவையே இல்லையே?
தமிழ்த் திரைப்படங்கள் தொழில்நுட்பரீதியாக முன்னேறிவருகிறது. ஆனால், உள்ளடக்கரீதியிலும், கருத்தியல்ரீதியிலும் இன்னும் மேம்பட வேண்டியதிருக்கிறது. நடிகர் அஜித் தன் உருவத்தைப் பற்றிக் கவலைகொள்ளாமல் திரைப்படத்திலும் அதே தோற்றத்தில் காட்சி தருகிறார்; ரசிகர் மன்றத்தைத் தவிர்த்துவிட்டார், தன்னை தல என்று அழைக்க வேண்டியதில்லை என அறிவித்தார். இப்படியெல்லாம் ஒருசில மாறுபட்ட அம்சங்களைக் கைக்கொள்ளத்தான் செய்கிறார். அவை வெறும் விளம்பர உத்தியாக இருக்க வாய்ப்பில்லை என்றே நம்புவோம்.
நடிகர் விஜய் அப்படியான எந்த மாற்றத்துக்கும் முகம் கொடுக்கவில்லை. அவர் ஒருவகையில் எம்.ஜி.ஆர், ரஜினி ஆகியோரை அடியொற்றியே நடைபோடுகிறார். அவருக்கு அரசியல் வேட்கையும் இருக்கலாம் என்பதைப் போன்ற சமிக்ஞைகள் அவரிடம் வெளிப்படுகின்றன.
ஆகவே, அவரிடம் எந்த மாற்றத்தை எதிர்பார்க்க முடியும்? குறைந்தபட்சம் அஜித்தாவது தனது படங்களில் நாயகிகள் கதாபாத்திரம் விஷயத்தில் சற்றுக் கவனம் எடுத்துக்கொள்ளலாம்.
Read in : English