Read in : English
அரசுப் பள்ளிகளில் சிறப்பாகப் படிக்கும் மாணவர்களுக்காக பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தொடங்கப்பட்ட “சூப்பர் 30’ திட்டத்தின் கீழ் அந்த அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் படித்த விளிம்பு நிலைக் குடும்பத்தைச் சேர்ந்த அரவிந்த்ராஜ் (வயது 24) எம்பிபிஎஸ் படித்து டாக்டராகியுள்ளார். அந்த சாமானிய ஏழைக் குடும்பத்தின் முதல் தலைமுறை பட்டதாரி அவர்.
அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் படித்து, தனது விடா முயற்சியினால் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்து டாக்டரான கதையை அரவிந்த்ராஜ் நம்மிடம் பகிர்ந்து கொண்டார்:
பெரம்பலூரிலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கொளத்தூர் கிராமம்தான் எனது சொந்த ஊர். கூரை வீட்டில்தான் வசித்து வந்தோம். எனது அப்பா தமிழரசன் டீ கடையில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். சு0பு0ஆம் ஆண்டில் திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டார். குடும்பப் பொறுப்பு முழுவதும் அம்மா கலைச்செல்வியின் தலையில் விழுந்தது. அவர் காட்டில் கூலி வேலை செய்து கிடைத்த வருமானத்தில்தான் குடும்பத்தை நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
எனக்கு நான்கு அக்காக்கள். குடும்ப சூழ்நிலை காரணமாக மூன்று அக்காக்கள் பள்ளிப் படிப்பைத் தொடர்ந்து படிக்க முடியவில்லை. அவர்களும் குடும்ப வருமானத்துக்காக கூலி வேலை செய்வார்கள். எனது கடைசி அக்கா வசந்தகுமாரி மட்டுமே பிளஸ் டூ வரை படித்திருக்கிறார். அவர்கள் அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. பத்தாம் வகுப்பு படிக்கும் வரை நானும் விடுமுறை நாட்களில் கூலி வேலை செய்திருக்கிறேன்.
பத்தாம் வகுப்பு வரை கொளத்தூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழ் வழியில் படித்தேன். டியூஷன் சென்று படிப்பதற்கு வசதி இல்லை. வீட்டில் நானே பாடங்களைப் படிப்பேன். 2013இல் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில் 500க்கு 467 மதிப்பெண்கள் பெற்று பள்ளியிலேயே முதல் மாணவனாகத் தேர்ச்சி பெற்றேன்.
பெரம்பலூரில் மாவட்ட கலெக்டராக தரேஸ் அகமது ஐஏஎஸ் இருந்தபோது அவரது முயற்சியால் அரசுப் பள்ளிகளில் சிறப்பாகப் படிக்கும் மாணவர்களுக்காக, `சூப்பர் 30 திட்டம் தொடங்கப்பட்டது
பெரம்பலூரில் மாவட்ட கலெக்டர் தரேஸ் அகமது ஐஏஎஸ் அவர்களின் முயற்சியால் அரசுப் பள்ளிகளில் சிறப்பாகப் படிக்கும் மாணவர்களுக்காக, சூப்பர் 30 திட்டம் தொடங்கப்பட்டது. அரசுப் பள்ளிகளில் 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் முதல் இரண்டு இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு தங்குமிட வசதியுடன் இலவசமாக சிறப்புப் பயிற்சி அளித்து, அவர்களை பிளஸ் டூ தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுக்க வைத்து மருத்துவ, பொறியியல் கல்லூரிகளில் சேர வாய்ப்பை ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதுதான் அதன் நோக்கம்.
நான் பத்தாம் வகுப்புத் தேர்வில் பள்ளியில் முதலிடம் பெற்றதால், பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தொடங்கப்பட்ட சூப்பர் 30 திட்டத்தின் கீழ் சேர வாய்ப்புக் கிடைத்தது. அது எனது வாழ்வில் முக்கியத் திருப்புமுனை என்றுதான் சொல்ல வேண்டும்.
மேலும் படிக்க: டெய்லர் மகள் கோகிலா இப்போது டாக்டர்!
அதுவரை பிஏ படித்துவிட்டு சிவில் சர்வீஸ் தேர்வு எழுத வேண்டும் என்பதுதான் எனது விருப்பமாக இருந்தது. சூப்பர் 30 பள்ளியில் படிக்கும்போதுதான், நானும் டாக்டராக முடியும் என்று எனக்கு நம்பிக்கையூட்டியவர் கணிதப் பாட ஆசிரியர் பாபு சார்.
பள்ளியில் எங்களுக்குப் பாடம் நடத்துவதற்கு ஒவ்வொரு பாடத்துக்கும் நான்கு ஆசிரியர்கள் இருந்தார்கள். அவர்கள் எங்கள் மீது அக்கறை செலுத்தி பாடம் நடத்துவார்கள். எங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களைப் போக்கி, பாடங்களை விளக்கிச் சொல்வார்கள். மாணவர்கள் எப்படிப் படிக்கிறார்கள் என்பது குறித்து மாவட்ட கலெக்கடர் தரேஸ் அகமது சாரும் தொடர்ந்து அக்கறையுடன் கண்காணித்து வந்தார்.
பள்ளி விடுதியின் வார்டனாக இருந்த பெரியசாமி சார், காலையில் சீக்கிரமே எழுந்து காபியுடன் வந்து எங்களை படிக்க எழுப்புவார். இரவில் படிக்கும் மாணவர்களுக்கு டீ வழங்குவார். அங்கு தங்கியுள்ள மாணவர்கள் மீது தனி அக்கறை செலுத்தி கவனித்துக் கொள்வார்.
பிளஸ் டூ தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுத்துவிட வேண்டும் என்பதற்காக தீவிரமாகப் படித்தேன். பிளஸ் டூ தேர்வில் 1200க்கு 1119 மதிப்பெண்கள் பெற்றேன். மருத்துவப் படிப்பில் சேருவதற்கான கட் ஆஃப் மதிப்பெண்கள் 192.75. அரசு ஒதுக்கீட்டின்கீழ் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிப்பில் இடம் கிடைத்தது. என்னுடன் படித்த மேலும் 3 பேருக்கும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிப்பில் இடம் கிடைத்தது.
மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தாலும், அதற்கான படிப்புச் செலவுக்கு என்ன செய்வது என்று நாங்கள் திகைத்து இருந்தபோது, எனது அக்கா வசந்தகுமாரியின் கணவர் அன்பழகன் எனது படிப்புச் செலவுக்கு பண உதவி செய்தார். அதனால்தான் நான் எம்பிபிஎஸ் படிப்பில் சேர முடிந்தது. தூத்துக்குடியைச் சேர்ந்த நல்ல உள்ளம் கொண்ட தனது பெயரைக் குறிப்பிட விரும்பாத ஒரு டாக்டரும், எனது படிப்பு செலவுகளுக்கு உதவினார்.
மருத்துவக் கல்லூரியில் கல்வி உதவித் தொகை கிடைத்தாலும்கூட, இதரப் படிப்புச் செலவுகளுக்காக கனரா வங்கியில் கல்விக்கடன் வாங்க வேண்டியது வந்தது. பெரம்பலூரில் பள்ளி ஆசிரியர்களாக இருந்த பாபு சாரும் ராமகிருஷ்ணன் சாரும் எனது தேர்வுக் கட்டணத்தைச் செலுத்தி உதவினார்கள்.
மருத்துவக் கல்லூரியில் ஆங்கில வழியில் பாடம் நடத்தினார்கள். பள்ளியில் நான் தமிழ் வழியில் படித்ததால், தொடக்கத்தில் பாடங்களைப் புரிந்து கொள்வதில் தடுமாற்றமாக இருந்தது. சக மாணவர்களின் உதவியுடன் பாடங்களைப் புரிந்து கொண்டு படிக்கத் தொடங்கினேன். படிப்படியாக ஆங்கில அறிவை வளர்த்துக் கொண்டு படிக்கத் தொடங்கிவிட்டேன். 2020இல் எம்பிபிஎஸ் படிப்பைப் படித்து முடித்தேன்.
தற்போது தூத்துக்குடியில் தனியார் மருத்துவமனையில் டாக்டராகப் பணிபுரிகிறேன். சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி இந்திய ஆட்சிப் பணியில் சேர வேண்டும் என்பது எனது ஆசை. அதற்கான தயாராகி வருகிறேன்
தற்போது தூத்துக்குடியில் தனியார் மருத்துவமனையில் டாக்டராகப் பணிபுரிகிறேன். பிகாம் படித்த முதல் தலைமுறை பட்டதாரியான முத்துசெல்வியை காதலித்துத் திருமணம் செய்து கொண்டேன். பள்ளிப் படிப்பை முடிக்க முடியாமல் போய்விட்ட எனது பெரிய அக்கா விஜயகுமாரியின் மகன் கவியரசனும் பெரம்பலூர் சூப்பர் 30 அரசுப் பள்ளியில் பிளஸ் டூ படித்து முடித்துள்ளார்.
நீட் தேர்வு எழுதி அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை. அதனால் எந்தக் கல்லூரியிலும் சேராமல் மீண்டும் நீட் தேர்வு எழுதுவதற்காகத் தயாராகி வருகிறார். அவருக்குத் தேவையான புத்தகங்களை வாங்கிக் கொடுத்து அவருக்கு வழிகாட்டி வருகிறேன்.
மேலும் படிக்க: டாக்டரான மீனவர் மகன்
பெரம்பலூரில் நாங்கள் படித்த அரசுப் பள்ளியில் உள்ள ஜெராக்ஸ் மெஷினை சரிசெய்வதற்காக முன்னாள் மாணவர்கள் உதவி செய்தோம். அதேபோல, அங்குள்ள மாணவர்களுக்கு ஒரு மாத காலத்துக்கு உணவு வழங்கவும் உதவி செய்தோம். நாங்கள் படித்த பள்ளிக்கு முன்னாள் மாணவர்களான நாங்கள் செலுத்தும் சிறிய நன்றிக்கடன் இது.
மருத்துவத் தேர்வு வாரியம் மருத்துவர் பணிக்கான தேர்வு அறிவிப்பை வெளியிட்டால், அத்தேர்வை எழுதி அரசு மருத்துவமனையில் டாக்டராகச் சேரலாம் என்று இருக்கிறேன். இதற்கிடையே சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி இந்திய ஆட்சிப் பணியில் சேர வேண்டும் என்பது எனது ஆசை. அதற்காகத் தயாராகி வருகிறேன் என்கிறார் முதல் தலைமுறை பட்டதாரி டாக்டர் அரவிந்த்ராஜ்.
Read in : English