Read in : English
ஆயிரம் ஆண்டு பழமையான கலைப்பொருட்கள் உட்பட திருடப்பட்ட பல்வேறு கலைப்பொருட்களை மீட்டெடுத்து அவற்றை அந்தந்த நாடுகளுக்கே திருப்பி அனுப்பும் ஓர் இயக்கம் 2023ல் சூடுபிடிக்கவிருக்கிறது என்பதைப் பல செய்திகள் கூறுகின்றன. வெளிநாட்டு அருங்காட்சியகங்களிலும் தனியார் சேகரிப்பாளர்களிடமும் இருக்கும் பல்வேறு கலைபொருட்களுக்கு இந்தியாவும் உரிமை கொண்டாடி அவற்றை மீட்டெடுக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறது.
கேள்வி என்னவென்றால், விலைமதிப்பற்ற இந்த கலைபொருட்கள் மீண்டு வந்தவுடன் அவற்றின் மதிப்பு என்னவென்று நமக்குப் புரியுமா என்பதுதான். தேசிய அளவிலும் உலக அளவிலும் ஒரு கலாச்சாரச் சுற்றுலாவை வளர்த்தெடுக்கும் சக்தி கொண்டவை இந்தக் கலைப்பொருட்கள். ஆனால் இந்த விசயத்தில் ஏதேனும் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறதா?
திருடப்பட்ட ஏழு கலைப்பொருட்களை இந்தியாவுக்குத் திருப்பியனுப்ப வழியமைத்துக் கொடுக்கும் ஓர் ஒப்பந்தம் இந்தியாவுக்கும் கிளாஸ்கோ அருங்காட்சியகத்திற்கும் இடையே சமீபத்தில் கையெழுத்தாகியிருக்கிறது. அவற்றில் சில ஆயிரம் ஆண்டுகள் பழமையானவை என்று பிபிசி சொல்கிறது. 11 முதல் 14ஆம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தைச் சார்ந்ததாகச் சொல்லப்படும் இந்தக் கலைப்பொருட்கள் 19ஆம் நூற்றாண்டில் திருடப்பட்டவை. அவற்றில் ஒன்று ஹைதராபாத் நிஜாமுக்குச் சொந்தமான நாக வடிவிலான வாள்; அது 1905ல் திருடப்பட்டது.
கடந்த முப்பதாண்டுகளாகப் பழைய கலைப்பொருட்களை மீட்டெடுக்கும் முயற்சி சூடுபிடித்திருக்கிறது. எனினும் 1972லிருந்து அமலில் இருக்கும் ஒன்றிய அரசின் சட்டம் அவற்றைச் சொந்தமாக்கிக் கொள்வதைத் தடை செய்திருக்கிறது. ஆங்கிலேய காலத்துச் சட்டங்களால் திருடப்பட்ட சிலைகளை ஏற்றுமதி செய்வதைத் தடுக்க முடியவில்லை.
திருடப்பட்ட ஏழு கலைப்பொருட்கள் இந்தியாவுக்குத் திருப்பியனுப்ப வழியமைத்துக் கொடுக்கும் ஓர் ஒப்பந்தம் இந்தியாவுக்கும் கிளாஸ்கோ அருங்காட்சியகத்திற்கும் இடையே சமீபத்தில் கையெழுத்தாகியிருக்கிறது; அவற்றில் சில ஆயிரம் ஆண்டுகள் பழமையானவை என்று பிபிசி சொல்கிறது
நாகப்பட்டினம் மாவட்டத்தில் கைலாசநாதர் கோயிலிலிருந்து திருடப்பட்ட செம்பியன் மகாதேவி என்னும் 1000 ஆண்டுகள் பழமையான சோழர் காலத்து மூன்றரை அடி உயர வெண்கலச்சிலை இப்போது வாஷிங்டனில் ஸ்மித்சோனியன் இன்ஸ்டிடியூசனின் ஃபிரீயர் கலைக் காட்சிக் கூடத்தில் இருக்கிறது என்று கூறி அது மீட்கப்படும் என்று 2022 ஜூலை மாதம் தமிழக அரசு அறிவித்தது.
1929 வாக்கில் நியூயார்க்கில் ஹாக்காப் கெவோர்க்கியன் என்னும் தொல்பொருள் ஆய்வாளரிடமிருந்து அந்தச் சிலை வாங்கப்பட்டதாக ஃபிரீயர் கலைக்காட்சி இணையதளம் சொல்கிறது. அந்தச் சிலையின் படம் ஒன்றும் அதில் இடம்பெற்றிருக்கிறது.
தமிழ்நாடு உரிமை கொண்டாடும் பல கலைப்பொருட்களில் இந்தச் செம்பியன் மகாதேவி சிலையும் ஒன்று. அது மீண்டும் இந்தியாவுக்குள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெர்மனி நாட்டைச் சேர்ந்தவர்களால் கொள்ளையடிக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்ட நைஜீரிய பெனின் வெண்கலச் சிலைகள் போன்ற கலைப்பொருட்கள் ஆப்பிரிக்காவிடம் திருப்பிக் கொடுக்கப்படுகின்றன.
சிலைக் கடத்தல்காரன் சுபாஸ் கபூரின் நியூயார்க் கலைக்கூடத்தில் இருக்கும் கலைப்பொருட்கள் உட்பட 307 கலைப்பொருட்கள் இந்தியாவுக்குத் திருப்பி அளிக்கப்பட்டன என்று மான்ஹாட்டன் மாவட்ட அட்டர்னி மெல்வின் எல்.பிராக் ஜூனியர் 2022 அக்டோபரில் தெரிவித்திருக்கிறார். இந்தியா கபூரை ஒப்படைத்ததும் அவர் மீது அமெரிக்கா சட்ட நடவடிக்கை எடுக்கக் காத்திருக்கிறது.
லாஸ் ஏஞ்சல்ஸில் லாக்மா அருங்காட்சியகத்தில் இருக்கும் சோமாஸ்கந்தர் மற்றும் நடனமாடும் சம்பந்தர் சிலைகளை மீட்டெடுக்க உரிமை கொண்டாடி கடந்த அக்டோபரில் மனு அளித்திருக்கிறது தமிழக அரசின் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு.
நாகப்பட்டினம் கைலாசநாதர் கோயிலிலிருந்து திருடப்பட்ட செம்பியன் மகாதேவி வெண்கலச்சிலை இப்போது வாஷிங்டனில் ஸ்மித்சோனியன் இன்ஸ்டிடியூசனின் ஃபிரீயர் கலைக் காட்சிக் கூடத்தில் இருக்கிறது
1991ல் மீட்டெடுக்கப்பட்ட பதூர் நடராஜர் சிலையை போன்று பல கலைப்பொருட்கள் மீட்டு வந்தவுடன் அந்தச் செய்தி ஊடகங்களில் பெரிதாகக் கொண்டாடப்பட்டது. கலாச்சார மீட்டெடுப்பு முயற்சிகளில் வெற்றி பெற்றதாக அரசு புகழ் வெளிச்சத்தில் சுகம் கண்டது.
ஆனால் அருங்காட்சியகங்களில் கலைப்பொருட்களைக் காட்சிப்படுத்தும் வழக்கங்கள் தரமற்றதாக இல்லை என்பது தற்கால அணுகுமுறையில் இருக்கும் பலவீனமாகும்.
ஆங்கிலேயர் காலத்துக் கொள்கைகள் உட்பட ஆரம்பகாலத்து இந்தியக் கொள்கைகள் ஒரே களத்தில் ஒரே நேரத்தில் பாரம்பரியத்தையும் கலைப்பொருட்களையும் காட்சிப்படுத்தும் வழக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தன.
மேலும் படிக்க: சுபாஷ் கபூருக்கு தண்டனை: சிலைக்கடத்தல் குறையுமா?
அதனால் பழமைப் பொக்கிஷங்கள் நிறைந்த முக்கியமான தொல்பொருள் களங்கள் உருவாகின; ஆய்வு நோக்கங்களுக்கு அவை பயன்பட்டன. உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் காட்சிக்கும் அறிவுக்கும் அந்த இடங்கள் விருந்தாகின.
ஆனால் அந்த மாதிரியான முக்கியமான தொல்பொருள் களங்களில் கூட இந்தியத் தொல்பொருள் ஆய்வு மையத்தின் அணுகுமுறை தான்தோன்றித் தனமாகத்தான் இருக்கிறது. ஆறு ஆண்டுகளுக்கு முன்பு மாமல்லபுரத்தில் இருக்கும் பழைய பல்லவ காலத்துச் சிற்பங்களுக்கு அருகில் குறிப்பேடுகளுடன் உட்கார்ந்து குறிப்பெடுக்க கலைஞர்கள் அனுமதிக்கப் படவில்லை. பின்பு தகவலறியும் சட்ட மனு ஒன்றும் பொதுவழக்கு மனுவும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.
அப்போது பதிலளித்த தொல்பொருள் ஆய்வு மையம், குறிப்பெடுக்கத் தடையேதும் இல்லை என்றும், ஆனால் அதற்காகப் பெரிய கருவிகளைப் பயன்படுத்தக் கூடாது என்றும் நீதிமன்றத்தில் கூறியது.
அகழாய்வுக் களத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஆதிகாலக் கலைப்பொருட்களை அங்கேயே காட்சிக்கு வைக்க வேண்டும் என்பது ஒருபுறம் இருக்கட்டும். வெளிநாட்டிலிருந்து மீட்டு கொண்டுவரப்பட்ட இந்திய கலாச்சாரக் கலைப்பொருட்களைப் பொதுமக்களின் பார்வைக்குக் காட்சிப்படுத்த ஒன்றிய அரசிடம் அல்லது மாநில அரசிடம் திட்டம் ஏதும் இருக்கிறதா என்பதுதான் கேள்வி. ஒன்றிய கலாச்சார அமைச்சகத்தின் இணையதளத்தில் ஒன்பது தேசிய அருங்காட்சியகங்களும் ஆயிரக்கணக்கான கலைப்பொருட்களின் விவரங்களும் இடம்பெற்றிருக்கின்றன.
அவற்றில் தமிழ்நாட்டின் 3,606 கலைப்பொருட்கள் உள்ளன. அந்த இணையதளத்திற்குள் மேலோட்டமாகச் சென்று பார்த்தால் விஜயநகரக் காலத்து நடராஜர் சிலை இருப்பது தெரிகிறது. அது தமிழக அரசின் இந்து அறநிலையத் துறையின் கீழ் செயல்படும் நடராஜர் சன்னதியில் கண்டெடுக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.
ஒன்றிய கலாச்சார அமைச்சகத்தின் அருங்காட்சியகப் பட்டியலில் தமிழகத்தின் கலாச்சார வளங்களும் செல்வங்களும் பெரிதாகக் காட்டப்படவில்லை
கோயில்களில் இருக்கும் பாதுகாப்பு அம்சங்கள் குறைவு. அதனால் பல ஆண்டுகளாகக் கோயில் சிலைகள் திருடப்பட்டன; கடத்தப்பட்டன. தமிழ்நாட்டில் வழிபாட்டிலிருக்கும் ஆதிகாலச் சிலைகளைத் தவிர்த்து, மீட்டெடுக்கப்பட்டு கொண்டுவரப்பட்ட சிலைகளைத் தகுந்த பாதுகாப்புடன் பொதுக் காட்சிக்கு வைக்க வேண்டும். கல்வி நோக்கத்திற்காகவும் கலாச்சாரப் பெருமையைப் புரிந்து கொள்வதற்காகவும் அப்படிச் செய்தாக வேண்டும். இந்து அறநிலையத் துறையின் பாதுகாப்பு அறைகள் போன்ற இடங்களில் அவற்றைக் காட்சிப்படுத்தலாம்.
மீட்டெடுக்கப்பட்டு கொண்டுவரப்பட்ட பொக்கிஷங்களை இணையத்தில் கண்டுகளிக்கும் வாய்ப்பை மக்களுக்குத் தரலாம். எனினும் தொல்பொருள் காட்சி அனுபவத்தின் பெரியதோர் அங்கம் நேரில் சென்று தரிசித்தல் தான். இதுதான் உலகம் முழுவதுமான பொதுவான வழக்கம்.
இங்கே ஒன்றிய கலாச்சார அமைச்சகத்தின் மெய்நிகர் அருங்காட்சியகத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் சில மின்னணு தொடர்புகள் வேலை செய்வதில்லை. உதாரணமாக, ஹைதராபாத்தின் புகழ்பெற்ற சலார் ஜங் அருங்காட்சியகத்திற்கான தொடர்பு அங்கே நம்மைக் கொண்டு சேர்ப்பதில்லை.
சிறப்பான சோழர் காலத்து சிலைகள் பல தமிழகத்தின் வசம் இருக்கின்றன. ஆதலால் மீட்டெடுக்கப்பட்ட பெரும் புகழ்பெற்ற சிலைகளையும் கலைப் பொருட்களையும் சென்னையில் மிகப்பெரும் அளவில் நிரந்தரமாகக் காட்சிப்படுத்தும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. தற்போதிருக்கும் அருங்காட்சியகத்தின் அனுபவத்தையும் அதற்குப் பயன்படுத்தலாம்.
ஒன்றிய கலாச்சார அமைச்சகத்தின் அருங்காட்சியகப் பட்டியலில் தமிழகத்தின் கலாச்சார வளங்களும் செல்வங்களும் பெரிதாகக் காட்டப்படவில்லை. தமிழக அரசும் சென்னை அருங்காட்சியகத்தின் கீர்த்தியை முன்னெடுத்துச் செல்லும் விதமாகப் பெரிதாக ஏதும் செய்யவில்லை. அதன் இணையதளம் மோசமான மின்னணு அனுபவத்தையே தருகிறது. அருங்காட்சியகத்தின் புகழ்பெற்ற வெண்கலச்சிலை காட்சிக்கூடத்திற்குச் செல்வதற்கான விவரங்கள் அந்த இணையதளத்தில் இல்லை.
தற்கால தடமாற்றங்களிலும் மடைமாற்றங்களிலும் தொலைந்து போனவை நமது பாரம்பரிய கலை, கலாச்சாரம் பற்றிய அறிவும் பெருமையுணர்வும்தான். முன்பு திருடப்பட்டு கடத்தப்பட்ட பல கலைப்பொருட்களும் சிலைகளும் பொக்கிஷங்களும் அவ்வப்போது மீட்கப்பட்டு தமிழகத்திற்குத் திரும்பி வருகின்றன.
அவற்றை எல்லாம் பாதுகாப்பாக ஓரிடத்தில் காட்சிப்படுத்த வேண்டும். நம் கலாச்சாரப் பெருமையை, தொன்மையை மீண்டும் அவை மீளுருவாக்கம் செய்து தரும். அது இன்றைய தலைமுறைக்குப் பெரிதும் உதவும்.
Read in : English