Read in : English
சில நாட்களுக்கு முன், 2023ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்களின் பட்டியலை வெளியிட்டது தமிழ்நாடு அரசு. அது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
அந்த பட்டியலில், இந்து மக்களின் பண்டிகையான விநாயகர் சதுர்த்திக்கு செப்டம்பர் 17ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. அதைத் தொடர்ந்து, ‘திருக்கணித பஞ்சாங்கத்தின்படி செப்டம்பர் 19ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி. அன்றுதான் விடுமுறை அளிக்கப்பட வேண்டும்’ என்று சிலரும், ‘தமிழ்நாட்டைப் பொறுத்தவரை வாக்கிய பஞ்சாங்கத்தின்படிதான் விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன. அதன்படி செப்டம்பர் 18ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி’ என்று சிலரும் தமிழ்நாடு அரசை வலியுறுத்த ஆரம்பித்துள்ளனர்.
முஸ்லிம் மக்கள் கொண்டாடும் ரம்ஜான் பண்டிகையும், பிறையை அடிப்படையாக வைத்து ஒருநாள் முன் – பின்னாக கொண்டாடப்படும். அவை மதரீதியான சம்பிரதாயங்கள். நாம் அதற்குள் நுழைய வேண்டாம்.
நாம் பேசப்போவது பொது விடுமுறைகள் குறித்து..
உலகிலேயே அதிகமாகப் பொது விடுமுறை விடப்படுவது எந்த நாட்டில் தெரியுமா ?
இந்தியாவில்தான்.
பொது விடுமுறை விடப்படுவதால், இணையம் மூலம் தங்களுக்கான அரசு ரீதியான சான்றுகள் அனைத்தையும் பொதுமக்கள் பெற முடிவதில்லை
ஒன்றிய அரசின் பொது விடுமுறை நாட்கள் 23. இவை தவிர அந்தந்த மாநில அரசுகள் அளிக்கும் பொது விடுமுறை நாட்கள் தனி (தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 24). இதையெல்லாம் வைத்து கணக்கிட்டுப் பார்த்தால் சராசரியாக முப்பது நாட்களுக்கு மேல் வரும் (சில நாட்களில் இரு அரசுகளும் விடுப்பு அளிப்பதால்).
உலக அளவில் ஆகப்பெரும்பாலான நாடுகளில் சராசரியாக ஐந்து நாட்கள்தான் பொது விடுமுறை.
மேலும் படிக்க: 1923இல் சென்னையில் முதல் மே தினம் கொண்டாடிய சிங்காரவேலர்!
சரி, இதனால் என்ன?
பல விஷயங்கள் இருக்கின்றன. ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
அரசு ஊழியர்களோ, தனியார் ஊழியர்களோ தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்தால், ‘அய்யோ.. இவர்களது வேலை நிறுத்தத்தால் பல்லாயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு விட்டதே…’ என்று அரசு (எந்த அரசாக இருந்தாலும்) பதைபதைத்து அறிக்கை விடுகிறதே. இந்த நிலையில், அரசே பொது விடுமுறை என்கிற பெயரில் அரசுப் பணியை – பணியாட்களை இத்தனை நாட்கள் முடக்க வேண்டுமா? நாட்டின் பொருளாதாரம் பாதிக்காதா?
நாட்டில் அரசு ஊழியர்கள் ஒரு சதவிகிதமே இருப்பார்கள். தனியார் ஊழியர்கள் அதற்கு அடுத்து வருவார்கள். அதற்கு அடுத்து ஓரளவு வசதியான வியாபாரிகள். மற்றபடி பெரும்பாலான மக்கள் விவசாயிகள், கூலிகள் உள்ளிட்டவர்கள். தவிர்க்க முடியாமல் தங்களது மதப் பண்டிகைகளை கடன் வாங்கிக் கொண்டாடுபவர்கள்: மற்ற பொது விடுமுறைகள் அன்றும் வழக்கம் போல் உழைப்பவர்கள். ஆக, நாட்டின் ஒரு சதவிகித அரசு ஊழியர்களுக்குத்தான் பொது விடுமுறை, ஓய்வு எல்லாம். மற்றவர்களுக்கு இல்லை.
ஓய்வு எடுக்கட்டுமே!
ஓய்வு அனைவருக்கும் தேவை. அது முறைப்படுத்தப்பட வேண்டும்.
ஆனால், இந்த ஒரு சதவிகித அரசு ஊழியர்களைச் சார்ந்துதான் பொதுமக்கள் அனைவரும் இருக்கிறார்கள். பொது விடுமுறை விடப்படுவதால், இணையம் மூலம் தங்களுக்கான அரசு ரீதியான சான்றுகள் அனைத்தையும் பெற முடிவதில்லை. முதியோர் பென்சன் உள்ளிட்ட பலவற்றுக்கு அரசு அலுவலகங்களை நேரடியாக நாட வேண்டி இருக்கிறது.
இன்னொரு பக்கம் அரசு அலுவலகங்களில், பட்டா மனுக்கள் கட்டிட வரைபட அனுமதி, மின்சார இணைப்புகள், ஓய்வூதியம், கருணை வேலை மனுக்கள் உள்ளிட்டவை வருடக்கணக்கில் நிலுவையில் உள்ளன. பொது விடுமுறை நாட்களால், அரசு ஊழியர்களைத் தவிர்த்து இதர 99 சதவிகித மக்களுக்குத்தான் அவதி.
மறைந்த தலைவருக்கு மரியாதை அளிப்பது என்பது வருடம் முழுதும் அவரது கருத்துக்களைப் பின்பற்றுவது, பரப்புவதுதானே! அவரது பெயரால் விடுமுறையை அனுபவிப்பதா அவருக்குச் செலுத்தும் மரியாதை?
இன்னொரு விசயம்.. பொது விடுமுறை என்கிற பெயரில் தொடர்ந்து வங்கிகள் மூடப்படுவதும் நடக்கிறது. இதனால், வங்கி நடவடிக்கைகளில் மக்கள் ஈடுபட முடிவதில்லை.
இது போன்ற தொடர் விடுமுறை நாட்களில் ஏ.டி.எம்களில் தேவையான பணம் இருப்பதில்லை.
மதரீதியான பண்டிகைகளுக்கு விடுமுறை சரிதானா?
இதற்கான விடைக்குச் செல்லும் முன், சில ஆச்சரிய தகவல்களைப் பார்ப்போம்.
சமணர்கள் கொண்டாடும் மகாவீர் ஜெயந்திக்கு தமிழ்நாடு அரசு மற்றும் ஒன்றிய அரசு இரண்டும் பொது விடுமுறை அளிக்கின்றன.
மேலும் படிக்க: முதலில் ஓணம் பண்டிகை கொண்டாடியது கேரளத்திலா, தமிழ்நாட்டிலா?
2011ஆம் ஆண்டு, இறுதியாக இந்தியாவில் மக்கட்தொகைக் கணக்கெடுப்பு நடைபெற்றது. அதன்படி இந்திய மக்களில் சமணர்களின் சதவிகிதம் 0.37%. அதாவது ஐம்பது லட்சம் பேர். இவர்கள் கொண்டாடும் பண்டிகைக்காக, சுமார் 121 கோடி பேர் கொண்ட நாட்டில் அனைவருக்கும் பொது விடுமுறை. பெரும்பாலானவர்களுக்கு மகாவீர் ஜெயந்தியோ, அதை எந்த மதத்தவர்கள் கொண்டாடுகிறார்கள் என்பதோ தெரியாது.
இவர்களைவிட கூடுதல் மக்கள்தொகை உள்ள மதத்தினரின் விழாக்களும் இப்படித்தான். சில பண்டிகைகளை அந்த மத மக்களே பெரிய அளவில் கொண்டாடுவது இல்லை. இது கண்கூடு.
(இதற்கான தீர்வு இருக்கிறது.. பொறுமையாகப் படியுங்கள்.. நாம் மற்ற கேள்விகளுக்குச் செல்லலாம்..)
மதம் சாராத கொண்டாட்டங்களுக்கும் விடுமுறை விடப்படுகின்றதே.. அது சரிதானா?
மே 1 உழைப்பாளர் தினம். கூலித்தொழிலாளிகளில் இருந்து ஐ.டி. ஊழியர்கள் வரை நிர்ணயிக்கப்பட்டு இருக்கும் எட்டு மணி நேரத்துக்கும் அதிகமாகவே வேலை பார்க்கிறார்கள். வேலை நிச்சயமற்ற சூழல். இன்ன பல பிரச்சினைகள் அதற்குக் காரணம்.
இந்த நிலையில் உழைப்பாளர் தினத்திற்கு விடுமுறை தேவையா?
இன்று சோவியத் யூனியனே தனித்தனியாகப் பிரிந்து முதலாளித்துவ நாடுகளாகி விட்டன. அங்கு மே 1 விடுமுறை நாள் அல்ல. ஆனால் எப்போதும் முதலாளித்துவ நாடாக இருக்கும் இந்தியாவில் மே 1 அன்று அரசு விடுமுறை!
நாட்டிற்காக உழைத்த தலைவர்கள் பிறந்தாளுக்குப் பொது விடுமுறை அளிப்பது சரிதானா?
அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி அன்று அரசு விடுமுறை. காந்தி வலியுறுத்தியவற்றில் மிக முக்கியமான ஒன்று ‘மது அருந்தாமை’. ஆகவேதான் அன்று மதுக்கடைகள் மூடப்படுகின்றன. ஆனால் காந்தி ஜெயந்திக்கு முந்தைய நாள் மது விற்பனை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும். இதுதானே எதார்த்தம்!
மறுபடி இராட்டையில் நூல் நூற்று யாரும் பஜனை பாடுகிறார்களா?
இந்த நிலையில், ‘டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் பிறந்தநாளான ஏப்ரல் 14ஆம் தேதியை நாடு முழுவதும் பொது விடுமுறை தினமாக அறிவிக்க வேண்டும் ‘ என்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ் வலியுறுத்தினார்; அவரது தீர்மானம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
அதே போல ‘நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாளை தேசிய விடுமுறையாக அறிவிக்க வேண்டும்’ என்று ஒன்றிய அரசை வலியுறுத்தி இருக்கிறார் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி.
மறைந்த தலைவருக்கு மரியாதை அளிப்பது என்பது வருடம் முழுதும் அவரது கருத்துக்களைப் பின்பற்றுவது, பரப்புவதுதானே! அதை மறந்துவிட்டு, அவரது பெயரால் விடுமுறையை அனுபவிப்பதா அவருக்குச் செலுத்தும் மரியாதை?
என்னதான் தீர்வு?
நாடு முழுவதும் ஆகஸ்ட் 15 விடுதலை தினம் மட்டுமே பொது விடுமுறை என்று அறிவிக்க வேண்டும். அன்று விடுதலையைக் கொண்டாடலாம், மறைந்த தலைவர்களைப் போற்றிப் புகழலாம்.
அதே போல மாநில அரசுகளுக்கான பொது விடுமுறை தினம் ஆண்டுக்கு ஒருநாள். உதாரணமாக, தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பொங்கல் பண்டிகை. அன்றைய தினம் தங்களது மொழி, பண்பாடு சார்ந்த கொண்டாட்டத்தில் மக்கள் ஈடுபடட்டும்.
மற்றபடி அரசு ஊழியர்களுக்குச் சம்பளத்துடன் கூடிய மூன்று நாட்கள், விழா விடுமுறைகள் அளிக்கலாம். தீபாவளியோ, ரம்ஜானோ, கிறித்து பிறப்போ, மகாவீர் ஜெயந்தியோ அவரவர் விருப்பப்படி ஊழியர்கள் விடுப்பு எடுக்கலாம். மத நம்பிக்கை அற்றவர்கள் வேறு நாட்களில் விடுப்பு எடுக்கலாம். அவை எந்தெந்த நாட்கள் என்பதை அவர்கள் முன்னதாகவே குறிப்பிட்டுவிட வேண்டும்.
இதைக் கணித்து, , ‘நாளை இந்த அரசு அலுவலகம் இருக்கும். இத்தனை பேர் பணிபுரிவர்’ என்று அறிவிப்பு வைத்துவிடலாம். ஆக, இந்த இரு நாட்கள் தவிர்த்து அரசு அலுவலகங்கள் ஆண்டு முழுதும் தொடர்ந்து இயங்கும். மக்களின் பணி நடக்கும்.
எல்லாவற்றையும் விட மதச்சார்பற்ற நாட்டில், மதம் சார்ந்த விடுமுறைகள் இத்தனையா என்கிற அவப்பெயரும் நீங்கும். அதே நேரம், அரசு ஊழியர்களுக்குத் தற்போது அளிக்கப்பட்டு வரும் தனிப்பட்ட விடுமுறை நாட்களைக் குறைக்க வேண்டியதில்லை.
இது நடக்குமா?
அதீத அரசு விடுமுறைகள் குறித்துப் பல வருடங்களாகவே பேசியும் எழுதியும் வருகிறேன்.
ஒன்றிய அரசின் ஊதியக் குழுவும் கடந்த 24.3.2008ல் இது குறித்து ஓர் அறிக்கையை அரசுக்குப் பரிந்துரைத்தது. அதில், ‘தேசிய விடுமுறை நாட்களைத் தவிர மற்ற நாட்களில் அரசு அலுவலகங்கள் திறந்திருக்க வேண்டும். அரசிதழில் வெளியிடப்பட்ட விடுமுறை நாட்களைக் குறைக்க வேண்டும். விழாக்காலங்களில் மற்ற மதத்தினரும் விருப்பமுள்ளவர்களும் பணிக்கு வரலாம்’ என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது வரவேற்கத்தக்க விசயம்.
ஏற்கெனவே கூறியது போல, தேசிய அளவில் ஒரு பொதுவிடுமுறை, மாநில அளவில் ஒரு பொது விடுமுறை நாள் தேவை. அது போதும்!
Read in : English