Read in : English
சமீபத்து மாண்டஸ் புயல் சென்னையில் பெருமழையைக் கொட்டித் தீர்த்துவிட்டது. புறநகர் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மேலும் ஒரு துயர்மிக்க ஆண்டைக் கடந்து வந்திருக்கிறார்கள். சென்னை புறநகர் பகுதிகளில் ’கேட்டட் கம்யூனிட்டிஸ்’ மற்றும் வீடுகளைக் கட்டி விற்ற ரியல் எஸ்டேட் வணிகர்கள் அந்தப் பகுதிகளில் குடியேறும் மக்கள் பளபளப்பான கார்களில் சென்று வருவார்கள்; வண்ணத்துப் பூச்சிகளின் தோட்டங்களில் உலா வருவார்கள்; சூரியவொளியில் குழந்தைகள் ஆனந்தமாக விளையாடுவார்கள் என்றெல்லாம் கவர்ச்சிமிக்க விளம்பரங்களால் மக்களை ஈர்த்திருந்தார்கள்.
ஆனால் களநிஜம் மிகவும் கசப்பானதாக இருக்கிறது. குண்டும் குழியுமான சாலைகளில் வெள்ளம் புரண்டோடியது. குப்பைகளைச் சுமந்துகொண்டு ஓடிய வெள்ள நீரின் துர்நாற்றம் காற்று மண்டலத்தை மாசுபடுத்தியது. அதீதமான ஈரச்சூழலில் பெரிய ஆப்பிரிக்க நத்தைகள் ஆயிரக்கணக்கில் ஊர்ந்து சென்றன.
சென்னை 5,000க்கும் மேலான சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட பெருநகர் என்ற அந்தஸ்தை நோக்கி நகர்வதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. புறநகர் பகுதிகளில் இன்றிருக்கும் மோசமான நிலை கடந்த பத்தாண்டுகளாக நிலவிய அதிகார வர்க்கத்தின் அலட்சியத்தால் உருவானது. பல ஊராட்சிகளுக்கு, நகராட்சிகளுக்கு, ஏன் ஆவடி மற்றும் தாம்பரம் போன்ற மாநகராட்சிகளுக்கும் கூட ‘கட்டுக்கோப்பான நகரமயமாதல்’ என்ற இலக்கை நோக்கிச் செல்லத் தேவையான திறன்கள் இல்லை என்பதே நிதர்சனம்.
மாண்டஸ் புயல் மழையால், சென்னை புறநகர் பகுதிகளில் குப்பைகளைச் சுமந்துகொண்டு ஓடிய வெள்ளநீர் துர்நாற்றம் காற்று மண்டலத்தை மாசுபடுத்தியது; அதீதமான ஈரச்சூழலில் பெரிய ஆப்பிரிக்க நத்தைகள் ஆயிரக்கணக்கில் ஊர்ந்து சென்றன
2005ல் நிகழ்ந்த புறநகர் பகுதி வீட்டு வளர்ச்சி காலகட்டத்திலிருந்து சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாக நடைமுறைகள், ஊழியர் பலம் மற்றும் வளங்கள் ஆகியவை புறக்கணிக்கப்பட்டிருக்கின்றன.
பெரிய நிலங்களை மனைகளாக மாற்றியதில் ஊராட்சிகள் பலவற்றிற்கும் பங்குண்டு; அந்த மனைகளுக்குத் தேவையான வசதிகளும் வளங்களும் இல்லை என்பது தெரிந்தும் அந்த மனைகளுக்குச் சென்னைப் பெருநகர வளர்ச்சி ஆணையம் (சிஎம்டிஏ) ஒப்புதல் அளித்திருக்கிறது. இது தகவலறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட தகவல்.
கட்டுக்கோப்பான நகரமயமாதல் விசயத்தில் சிஎம்டிஏ திறமையோடு செயல்படத் தவறிவிட்டது. நகரமயமாதல் தாறுமாறாக வளர்ந்து கொண்டிருந்தபோது மாநில அரசு எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
மேலும் படிக்க: புறநகர்ப் பகுதிகள்: மெட்ரோவால் புதுவாழ்வு?
ஆர்டிஐ வெளிப்பாடுகள்
அதிகார வர்க்கத்தின் அலட்சியத்திற்கு சிறந்ததொரு உதாரணம் மாங்காடு நகராட்சி (சமீபகாலம் வரை ஊராட்சி). மாண்டஸ் புயல் தாக்கியபோது, மாங்காட்டின் பல பகுதிகள் வெள்ளத்தில் சிக்கின. நீர் செல்ல வழியில்லை. ஏனென்றால் போரூர் ஏரியை நோக்கிப் போகும் எல்லா நீர்ப்பாதைகளும் ஆக்கிரமிப்புகளில் சிக்கித் தவிக்கின்றன. சூரியன் வந்துதான் இந்தப் பகுதிகளை உலர வைக்க வேண்டும் என்பது ஒவ்வொரு ஆண்டும் நிலவுகின்ற கள நிஜம்.
மாங்காட்டில் பத்ரிமேடு வார்டில் ஜீவா நகர் என்ற வீட்டுமனைப் பகுதி 2004ல் உருவாக்கப்பட்டது. சிஎம்டிஏ ஒப்புதலும் கிடைத்தது. சர்வே எண்கள்: 558-3பி2, 559/2, 561/2, 562. சிஎம்டிஏ ஒப்புதல் எண் 134 (ஆண்டு 2003). இவை சிஎம்டிஏ இணையதளத்தில் இருக்கும் தகவல்கள்.
சமீபத்து மாண்டஸ் புயல்மழையின் காரணமாக ஜீவா நகர் வெள்ளத்தில் மாட்டிக் கொண்டதால், அந்த நகரை யாராலும் அணுக முடியவில்லை. ஜீவா நகர் 18 ஆண்டுகளாக இருக்கிறது. அங்கே வெள்ளநீர் வடிகால் வசதி இல்லை. ஆனால் மாங்காடு ஊராட்சிக்கு, அதாவது நகராட்சிக்கு மக்கள் வரிகள் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். 2007ல் முதன்முதலாக ஜீவா நகரில் வீடு கட்டியவர்கள் கிட்டத்தட்ட ஏரியில் குடியிருக்கிறார்கள்.
இந்த எழுத்தாளர் சமர்ப்பித்த ஆர்டிஐ மனுக்களுக்கு சிஎம்டிஏ தந்த பதில் இது. ஜீவா நகர் வீட்டு மனைகளுக்கு சிஎம்டிஏ ஒப்புதல் சில நிபந்தனைகளின் பேரில்தான் கொடுக்கப்பட்டது. ஒன்பது வீட்டு மனைகள் ஒரு வருடத்திற்கு தபால் அலுவலகத்திற்கும் தீயணைப்பு நிலையத்திற்கும் ஒதுக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது.
அரசு எப்போது அந்த மனைகளை விடுவிக்கிறதோ அப்போது அவற்றைக் குடியிருப்பு நோக்கங்களுக்காக விற்றுக் கொள்ளலாம் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டது. (அந்த வீட்டுமனைகளை வகுத்து வளர்த்தெடுத்த நிறுவனம் பிஎல்பி எஸ்டேட்ஸ்). காலம் செல்லச் செல்ல எல்லா மனைகளும் தனியார் பயன்பாட்டுக்கு விற்கப்பட்டன.
பெரிய நிலங்களை மனைகளாக மாற்றியதில் ஊராட்சிகள் பலவற்றிற்கும் பங்குண்டு; அந்த மனைகளுக்குத் தேவையான வசதிகளும், வளங்களும் இல்லை என்பது தெரிந்தும் சென்னைப் பெருநகர வளர்ச்சி ஆணையம் (சிஎம்டிஏ) ஒப்புதல் அளித்திருக்கிறது
ஜீவா நகர் வீட்டுமனைப் பகுதியின் பெளதீக நிலையை சிஎம்டிஏ கவனிக்கவில்லை என்பது வினோதம். அங்கே சாலைகளின் நிலை என்ன, மழையில் தாக்குப் பிடிக்குமா, வடிகால் வசதி எப்படி இருக்கிறது என்றெல்லாம் சிஎம்டிஏ ஒப்புதல் அளிக்கும் முன்பு யோசிக்கவில்லை.
2007ல் மாங்காடு ஊராட்சியிடம் அளித்த தகவலறியும் உரிமைச் சட்ட மனுவொன்றிற்கு பின்வருமாறு நிர்வாக அலுவலர் பதிலளித்தார்: “ஜீவா நகர் தாழ்வான பகுதி. மழை வெள்ளம் தேங்கும் பகுதி. இந்தப் பருவகாலத்து மழையில் வெள்ளப் பெருக்கைத் தடுப்பதற்கு கட்ச் வடிகால்கள் (ஏற்கனவே இருந்தவை) அமைக்கப்பட்டிருக்கின்றன” என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் படிக்க: மூன்றாவது மாஸ்டர் பிளான்: சிங்காரச் சென்னை கனவு பலிக்குமா?
ஆனால் நிஜத்தில் அப்படிப்பட்ட வடிகால்கள் அமைக்கப்படவில்லை. அது தாழ்வான பகுதி என்று தெரிந்தும், உள்சாலைகளின் மட்டத்தை உள்ளாட்சி நிர்வாகம் உயர்த்தவில்லை.
2008 டிசம்பரில் கொடுத்த தகவலறியும் உரிமைச் சட்ட மனுவிற்குப் பதிலளித்த மாங்காடு ஊராட்சி, மெட்ரோ வாட்டர் நிலத்தடி கழிவுநீர் பணிகளில் ஈடுபட்டிருப்பதால் சாலை மேம்பாட்டுப் பணிகளும் தெருவிளக்குப் பணிகளும் தொடங்கப்படவில்லை என்று சொன்னது.
ஆனால் ஜீவா நகரில் கழிவுநீர் வடிகால் கட்டமைப்பு உருவாக்கப்படவே இல்லை. குடியிருப்புவாசிகள் ஆளுக்கு ரூ.10,000 போட்டு உள்சாலைகளை உருவாக்கிக் கொண்டார்கள். அப்போதுகூட ஒப்புதல் அளிக்கப்பட்ட அந்தப் பகுதி வசிப்பதற்கேற்றதாக இல்லை.
2015, 2021, 2022 ஆண்டுகளில் நிகழ்ந்த வெள்ளப் பெருக்கு அந்தப் பகுதியை மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளின. கடந்த சனிக்கிழமையன்று (17.12.2022) உள்ளூர் திமுக கவுன்சிலர் நீரை வெளியேற்றி வேறு பகுதிக்கு மடைமாற்றம் செய்ய ஏற்பாடு செய்திருந்தார்.
புறநகர் ’கிராமங்களில்’ எல்லாம் இந்த நிலைதான் தொடர்கிறது. அந்தப் பகுதிகளில் எல்லாம் ‘கேட்டட் கம்யூனிட்டிகள்’, குடியிருப்புப் பகுதிகள் உருவாக்குவதற்கு சிஎம்டிஏ ஒப்புதல் அளித்துக் கொண்டிருக்கிறது. தற்போது பரங்கிமலை-பூந்தமல்லி சாலை வழியாக அந்தப் பகுதிகளின் ஊடாக மெட்ரோ ரயில் பாதை வேறு வரவிருக்கிறது.
ஆகப்பெரும் முன்னேற்றத்தை மெட்ரோ ரயில் கொண்டுவந்து சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆதலால் மாங்காடு, குன்றத்தூர் பகுதிகளில் சாலைகளை விரிவாக்கம் செய்ய நவம்பர் 11 அன்று சிஎம்டிஏ ஓர் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.
பெருநகரச் சென்னை மாநகராட்சியும் நெடுஞ்சாலைத் துறையும் சென்னையின் மையத்தில் கொண்டு வந்திருக்கும் காங்கிரீட் வடிகால் தீர்வால் உள்பகுதிகள் எதுவும் பயன் பெறவில்லை.
இந்த புறநகர் பகுதிகளில் நீர்நிலைகளை உருவாக்கி வெறுமையாய்க் கிடக்கும் புறம்போக்கு நிலங்களில் வெள்ளநீரை வடிய வைக்கும் திட்டம் எதுவும் தொடங்கப்படவில்லை. திருப்புகழ் குழுவின் இறுதி அறிக்கையில் புறநகர் பகுதிகளில் வெள்ளத்தைக் கையாள்வதற்கான சில வழிமுறைகள் சூசகமாக தெரிவிக்கப்பட்டிருக்கலாம்.
குடியிருப்புவாசிகளின் எதிர்ப்பு
சிறிய புறநகர் பகுதிகளை பெரிய பகுதிகளோடு இணைக்க நினைக்கும் தமிழக அரசின் திட்டத்திற்குக் குடியிருப்புவாசிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அதற்குக் காரணம் புறநகர் உள்ளாட்சி அமைப்புகளின் மோசமான செயற்பாடுதான்.
பூந்தமல்லிக்குப் போகும் மெட்ரோ ரயில் பாதை கடந்து செல்லும் பகுதி அய்யப்பன்தாங்கல். அந்தக் கிராம பஞ்சாயத்தை மாங்காடு நகராட்சியோடு இணைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 15 குடிவாசி சங்கங்களும் ஏராளமான குடிமக்களும் மனு அளித்திருக்கின்றனர்.
அய்யப்பன்தாங்கல் கிராமமாக இருக்கலாம். ஆனால் அங்கே பல ‘கேட்டட் கம்யூனிட்டிகள்’ இருக்கின்றன. மாங்காடு நகராட்சியை விட சென்னை மாநகராட்சி எல்லைக்கு மிகஅருகில் இருக்கிறது ஐயப்பன்தாங்கல் என்று குடிவாசிகள் கூறுகின்றனர். மூன்று கி.மீ. தூரம் தள்ளியிருக்கும் ஜீவா நகர் விசயத்தில் மாங்காடு நகராட்சி செயற்பட்ட விதம் படுமோசம் என்று நினைக்கிறார்கள் அய்யப்பன்தாங்கல் குடிமக்கள்.
சென்னை புறநகர் பகுதிகளில் ரியல் எஸ்டேட் விலைகள் தாறுமாறாக உயர்த்தப்படுகின்றன; ஆனால் மக்கள்தொகை அடர்த்தியின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நிலையில் புறநகர் உள்ளாட்சி அமைப்புகள் இல்லை
நாளேடுகளிலும் சமூக ஊடகங்களிலும் வெளிவரும் பளபளப்பான கவர்ச்சியான ரியல் எஸ்டேட் விளம்பரங்கள் ஒரு வேதனையான நிஜத்தை மறைத்து விடுகின்றன. சென்னையின் புறநகர் பகுதிகளில் ரியல் எஸ்டேட் விலைகள் தாறுமாறாக உயர்த்தப்படுகின்றன. வங்கியில் கடன் வாங்கி வீடு கட்டுவோர் நிறைந்த புறநகர் பகுதிகள் புதிது புதிதாக உருவெடுக்கின்றன.
ஆனால் மக்கள்தொகை அடர்த்தியின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நிலையில் புறநகர் உள்ளாட்சி அமைப்புகள் இல்லை. ஆதலால் அங்கு வசிக்கும் தரம் மிகமிகக் குறைவு.
புதிய குடியிருப்புப் பகுதிகளுக்கு ஒப்புதல் அளிக்கும்போது அலட்சியமான திட்டமிடலும் இளக்கமான விதிமுறைகளைக் கடைப்பிடிக்கும் போக்கும் சிஎம்டிஏவிடம் காணப்படும் குணாம்சங்கள்.
Read in : English