Read in : English
பரண் என்ற வார்த்தையே இன்று கிட்டத்தட்ட இல்லை. அந்நாளில் வீடு என்ற ஒன்றிருந்தால் பரண் இருந்தே ஆக வேண்டும். வீட்டில் கக்கூஸ், பாத்ரூம் போல ஒரு அத்தியாவசிய இடம் பரண். இந்த அத்தியாவசியமான இடத்தில்தான், அன்று வீட்டுக்குத் தேவையில்லாத அனாவசியப் பொருள்கள் போடப்பட்டன.
பழைய பாட்டி கால பாத்திரங்கள், உடைந்த ஈஸிசேர். இரண்டு கால் உள்ள முக்காலி. கிழிந்த கல்யாண ஜமக்காளம், வீட்டில் யாரோ என்றோ காலை உடைத்துக் கொண்டபோது வாங்கிய வாக்கர், ஒட்டடை படிந்த ஊறுகாய் ஜாடிகள், வீடியோகேம் காலத்தால் தூக்கி எறியப்பட்ட பல்லாங்குழி. இப்படியாகக் காலம் கழித்த பொருள்களின் கிடங்குதான் பரண்.
இந்த பரண் ஓரத்தில் ஒரு தாத்தா கால டிரங்க் பெட்டி. உள்ளே பக்கங்கள் பழுத்து காதுகள் மடிந்து உடையும் அந்தக்காலப் புத்தகங்கள். ராமபாணப் பூச்சிகளின் வேட்டைக்காடு. இந்த புத்தகக்கட்டுகளிடையே 1950க்கும் முந்தைய பல சுவாரஸ்யமான புத்தகங்கள். அவைகளை ஒவ்வொன்றாக உங்களுக்கு அறிமுகம் செய்கிறோம். புத்தகம் பற்றிய ஒரு சிறு அறிமுகப்பகுதியை அடுத்து ஒரிஜினல் புத்தகத்தின் சில பகுதிகளை அப்படியே கொடுக்கிறோம்.
வெகுஜன திரைப்படத்தில் இடம்பிடிக்கும் அளவுக்கு அன்று பிரபலமாக இருந்த பத்திரிகை ‘சக்தி’
குறிப்பு: இப்பகுதியில் வரும் புத்தகங்களில் பெரும்பாலானவை பதிப்பில் இல்லாதவை. ஆயினும் இவற்றில் சில நூல்களுக்குத் தற்போது மறுபதிப்பு வந்துவிட்டது தெரிந்தது. கூடுமானவரை தற்போது மறுபதிப்பு வராத நூல்களையே இந்தத் தொடரில் போட விழைகிறேன். ஒன்றிரண்டு நூல்கள் புதுப்பதிப்பாக வந்திருந்தாலும் அதில் குற்றம் காணாது, மன்னித்து, அதைப் படிக்கும்படி கோருகிறேன்.
எது அழுக்கு… எது அழகு…
நீங்கள் திகம்பர சாமியார் படம் பார்த்திருக்கிறீர்களா? அந்த நாளில் தம் துப்பறியும் நாவல்கள் மூலம் வெகுஜன கவனத்தை ஈர்த்த துப்பறியும் கதை இது. அந்த வெகுஜன ஈர்ப்பு காரணமாகவே அக்கதையைத் திரைப்படமாகவும் எடுத்தார்கள்.
எனது இந்த முன்னோட்டம் அந்த நாவல் பற்றியோ அல்லது சினிமா பற்றியோ அல்ல. அந்த சினிமாவில் திகம்பர சாமியாராக வருபவர் இளமை சொட்டும் அன்றைய எம்.என்.நம்பியார். ஒரு காட்சியில் அவர் கையில் ஒரு தமிழ் இதழை வைத்திருப்பார். அதில் ‘சக்தி’ என்று போட்டிருக்கும். வெகுஜன திரைப்படத்தில் இடம்பிடிக்கும் அளவுக்கு அன்று பிரபலமாக இருந்த பத்திரிகை ‘சக்தி’.
மேலும் படிக்க: மூச்சடைக்க வைக்காத உரைநடை!
தமிழ் இதழியல் உலகில் சக்திக்கு ஒரு தனி இடமுண்டு. தமிழ் இதழியலின் மூத்த பிதாமகனாக, வழிகாட்டியாக இருந்தவர்கள் யார், எவர் என்ற குறிப்பைத் தயாரித்தால் அதில் சக்தி வை.கோவிந்தனுக்குத் தனி இடம் உண்டு. கோவிந்தனின் உழைப்பையும் தெள்ளிய அறிவையும் தெரிந்துகொள்ள சக்தி ஒரு கண்ணாடி. அன்றே, தரமான படைப்புகளை நல்ல,உயர்ந்த தாளில் அளித்து தமிழ் சமூகத்தின் கண்ணையும் கருத்தையும் கவர்ந்தவர்.
சர்வதேசத் தரத்தில் அழகான புகைப்படங்களுடன் அச்சுத் தொழிலின் அத்தனை நுட்பங்களையும் கொண்டு வெளிவந்தது சக்தி. வெறும் வடிவழகு மட்டும் போதுமா? உள்ளடக்கத்திலும் சக்தி உச்சியில் நின்றது.
அதில் நவதமிழின் மூத்த படைப்பாளி கு. அழகிரிசாமி உட்பட பல படிப்பாளிகளும் அறிஞர்களும் துணை ஆசிரியர்களாக இருந்தனர்.
தமிழ் இதழியலின் மூத்த பிதாமகனாக, வழிகாட்டியாக இருந்தவர்கள் யார், எவர் என்ற குறிப்பைத் தயாரித்தால் அதில் சக்தி வை.கோவிந்தனுக்குத் தனி இடம் உண்டு
அதனால் லயமும் சுருதியும் சேர்ந்து கச்சேரி களை கட்டுவது போல, சக்தி பளிச்சென்று வந்து வாசக உள்ளங்களைக் கொள்ளை கொண்டது. அதற்குத் தமிழ் மக்களின் இதயத்தில் ஒரு இடமும் கிடைத்து பிரபலமும் ஆனது. அதனால்தான் தமிழ் சினிமா காட்சியில் அது ஒரு இடமும் பெற்றது.
மேலும் படிக்க: பெரியார் பற்றி ஒளிவுமறைவற்ற வார்த்தைகள்!
யார் கண் பட்டதோ, அப்படிப்பட்ட சக்தி பத்திரிகை இன்று இல்லை. அதன் வரலாறு பற்றியும், சக்தியின் ஆசிரியர் கோவிந்தன் பற்றியும் ஏற்கனவே பல நல்ல கட்டுரைகளும் ஒன்றிரண்டு நூல்களும் வந்து விட்டன. பரணிலிருந்த தாத்தாவின் பெட்டியில் ஒரு சக்தி இதழ் இருந்ததில் அதிசயமே இல்லை. அது 1949 (தமிழ் ஆண்டு சர்வதாரி) பொங்கல் மலர். இதில் பொ.திருகூட சுந்தரம் எழுதிய ‘நாகரீகம் எது’ என்ற ஒரு சிறிய சுவையான கட்டுரையை இங்கு தருகிறோம்.
Read in : English