Read in : English
நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலின் ஒரு திரைப்படத்தில் நடிப்பதாக இருந்தார். ஆனால், அந்தப் படத்தில் இனி நடிக்கப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளார் தமிழக அமைச்சராகியிருக்கும் உதயநிதி. மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாமன்னன்தான் தனது கடைசிப் படம் என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளார்.
இது ஒருபுறம் இருக்க, இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகிவரும் இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசன் இரண்டு வேடங்களில் நடிக்கிறார் என அந்தப் படத்துக்கு வசனம் எழுதும் எழுத்தாளர் ஜெயமோகன் நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.
சுதந்திரப் போராட்டக் காலத்திற்கு முன்னால் நடந்த சம்பவங்களும் படத்தில் இடம்பெற்றிருக்கும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த ஆண்டு ஜூன் 3 அன்று வெளியான ’விக்ரம்’ படத்தின் ’பத்தல பத்தல’ பாடல் பத்து கோடிப் பார்வைகளைக் கடந்துள்ளது என மற்றொரு செய்தி வெளியாகியிருக்கிறது. அதே விக்ரம் திரைப்படம் ஐஎம்டிபி தளம் வெளியிட்ட 2022இன் பிரபலமான இந்தியப் படங்கள் பட்டியலில் நான்காம் இடத்தைப் பிடித்திருக்கிறது.
விக்ரம் தந்த வெற்றிக்களிப்பு இந்தியன் இரண்டாம் பாகத்துக்கான உற்சாகத்தை கமல்ஹாசனுக்குத் தந்திருக்க வேண்டும்
மொத்தத்தில் கமல்ஹாசன் தொடர்பான இந்தச் செய்திகள் அனைத்தும், 2022ஆம் ஆண்டின் இறுதியில் அவருடைய ரசிகர்களை உற்சாக வெள்ளத்தில் ஆழ்த்தியிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.
விக்ரம் தந்திருக்கும் களிப்பு!
இந்த ஆண்டு வெளியான ’விக்ரம்’ திரைப்படம், எண்பதுகளில் இயக்குநர் ராஜசேகர் இயக்கிய ’விக்ரம்’ படத்தின் இரண்டாம் பாகம் அல்ல. ஆனால், லோகேஷ் கனகராஜின் படம் அறிவிக்கப்பட்ட நாள் முதலாகவே விக்ரம் தொடர்பான எண்ணங்கள் வந்துபோயின. அந்தப் படம் வெளியானபோது, பெரிய வெற்றியைப் பெற்றிருக்கவில்லை. அதற்கெல்லாம் சேர்த்துவைத்து இப்போதைய விக்ரம் கமல்ஹாசனுக்குப் போதும் போதும் என்னும் அளவுக்கு வெற்றியைக் கொடுத்துள்ளது.
இவ்வளவுக்கும் லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்த விக்ரம் மிகவும் சாதாரண பொழுதுபோக்குப் படம். அது இவ்வளவு பெரிய வெற்றியையும் சந்தோஷத்தையும் கமலுக்குக் கொடுத்திருப்பது உண்மையிலேயே பேரதிசயம்.
மேலும் படிக்க: வன்முறை என்ன பாதிப்பை ஏற்படுத்தும்?
விக்ரம் தந்த வெற்றிக்களிப்பு கமல்ஹாசனுக்கு இந்தியன் இரண்டாம் பாகத்துக்கான உற்சாகத்தைத் தந்திருக்க வேண்டும். 2020லேயே அதன் படப்பிடிப்பு தொடங்கியபோதும் இடையில் சுணக்கம் கண்டது. இப்போது மீண்டும் தொடங்கியிருக்கிறது. விக்ரம் போன்ற ஒரு மாபெரும் வெற்றியை எதிர்பார்த்து படப்பிடிப்பை நடத்தி வருகிறார்கள்.
தோல்வியில் இருந்து வெற்றி!
1996ல் ’இந்தியன்’ வெளியானபோது, சிவாஜி கணேசனுடன் கமல்ஹாசன் நடித்த ’நாம் பிறந்த மண்’ படம் பற்றிய பேச்சு எழுந்தது. அந்தப் படம் 1977ல் வெளியானது. சிவாஜி சுதந்திரப் போராட்டத் தியாகி, அவருடைய மகன் வேலைவாய்ப்புக்காகப் போராடும் கமல். படத்தில் ஊழலும் லஞ்சமும் பிரதான இடத்தைப் பிடித்திருந்தன. அந்தப் படத்துக்கு ராஜசேகர் என்பவர் கதை எழுதியிருந்தார். திரைக்கதையைப் படத்தை இயக்கிய வின்சென்டும் வியட்நாம் வீடு சுந்தரமும் இணைந்து எழுதியிருந்தார்கள். வசனத்தை வியட்நாம் வீடு சுந்தரம் எழுதியிருந்தார்.
இயக்குநர் ஸ்ரீதரின் ஆஸ்தான ஒளிப்பதிவாளரான வின்சென்ட் தான் இவர். அந்தப் படம் பெரிய வெற்றியைப் பெறவில்லை. ஆனால், இந்தியன் பெரிய வெற்றிப் படம் என்பதை மறுக்க முடியாது.
ஷங்கரின் முதல் படமான ’ஜென்டில்மேன்’ கூட ’கருப்புப்பணம்’ என்ற பழைய படத்தின் சாயலைக் கொண்டிருந்தது என அப்போது பேசினார்கள். கருப்புப் பணமும் பெரிய அளவில் வெற்றியைப் பெற்றிராத படமே.
இயக்குநர் ஷங்கர் இந்தப் படங்களை எல்லாம் முதலிலேயே அறிந்திருந்தாரா என்பது அவருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். ஆக, தோல்வி அடைந்த படங்களின் சாயல் கொண்ட படங்களையே வெற்றி பெற வைத்த ஷங்கர் பெருவெற்றி பெற்ற ’இந்தியன்’ படத்தின் இரண்டாம் பாகத்தில் சோடை போவாரா என்ன என நம்பிக்கை வைத்து இரண்டாம் பாகத்தை எதிர்பார்த்திருக்கிறார்கள் கமல்ஹாசன் ரசிகர்கள்.
தோல்வி அடைந்த படங்களின் சாயல் கொண்ட படங்களையே வெற்றி பெற வைத்த ஷங்கர் பெருவெற்றி பெற்ற ’இந்தியன்’ படத்தின் இரண்டாம் பாகத்தில் சோடை போவாரா?
இரண்டாம் பாகத்தின் வெற்றி!
இரண்டாம் பாகத்தில் நடிப்பதையும் எண்பதுகளிலேயே தொடங்கிவிட்டார் கமல்ஹாசன். அவரது நடிப்பில் வெளியான ’கல்யாணராமன்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகமான ’ஜப்பானில் கல்யாணராமன்’ 1985இல் வெளியானது.
கல்யாணராமன் பெற்ற வெற்றியை இரண்டாம் பாகம் பெறவில்லை. ஜப்பானில் அப்போது நடைபெற்ற எக்ஸ்போ காட்சிகள் அப்படத்தில் இடம்பெற்றிருந்தன. கமல்ஹாசன் தராத களிப்பை அந்தக் காட்சிகளாக ரசிகருக்குத் தந்திருக்கும்?
அதன்பின்னர் கமல்ஹாசன் இரண்டு பாகங்களாக உருவாக்கிய திரைப்படம் ’விஸ்வரூபம்’. அந்தப் படத்துக்கு இரண்டாம் பாகம் வந்தது எத்தனை பேருக்குத் தெரியும் எனத் தெரியவில்லை.
அந்த அளவுக்குப் படுதோல்விப் படமாக அமைந்தது விஸ்வரூபத்தின் இரண்டாம் பாகம். அப்படியொரு சூழலில் நம்பிக்கை டானிக்காக வந்து சேர்ந்த படம் தான் ‘விக்ரம்’.
மேலும் படிக்க: கமல் ஹாசன் கட்சித் தலைவரா,ஆக்ஷன் ஹீரோவா?: விக்ரம் எழுப்பும் கேள்வி!
களத்தூர் கண்ணம்மாவில் தொடங்கிய கலைப்பயணத்தில் கமல்ஹாசன் எத்தனையோ வெற்றிகளையும் அதற்கு ஈடான தோல்விகளையும் பார்த்துவிட்டார். அவரைப் பொறுத்தவரை திரைப்படம் என்பது ஆத்மார்த்தமான ஒரு கலை; அதன் அத்தனை கோணங்களையும் அலசி ஆராய்ந்து உருவாக்குவதில் அவருக்கு உண்மையிலேயே ஒரு பிரியம் இருக்கிறது. அதுதான் அவரைத் தொடர்ந்து இயக்கிக் கொண்டிருக்கிறது.
கமலின் திரையுலகப் பயணத்தில் பெரிய திருப்புமுனையாக அமைந்த படம் ’நாயகன்’. அதன் இயக்குநர் மணிரத்னத்துடனும் மீண்டும் கைகோத்துள்ளார் கமல்ஹாசன். இந்தப் படங்களை எல்லாம் முடித்துவிட்டு மலையாள இயக்குநர் மகேஷ் நாராயணன் இயக்கவுள்ள படத்திலும் நடிக்க இருக்கிறார். அந்தப் படம் கைவிடப்பட்டுவிட்டது என்று வந்த தகவல்களை மகேஷ் மறுத்திருக்கிறார்.
அண்மையில் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் செய்தியாளர்களைச் சந்தித்த மகேஷ் நாராயணன் ’கமல் படம் கைவிடப்படவில்லை’ என்னும் தகவலைத் தெரிவித்திருக்கிறார்.
ஆக இந்தியன் 2, மணிரத்னம் படம் ஆகியவற்றை முடித்துவிட்டு மகேஷ் உடன் கமல்ஹாசன் இணையலாம். அவை போக, மீண்டும் லோகேஷ் கனகராஜுடன் விக்ரம் 2, வேட்டையாடு விளையாடு படத்தின் இரண்டாம் பாகம் ஆகியவற்றையும் உருவாக்க உள்ளதாகத் தகவல்கள் வருகின்றன.
இந்தச் சூழலில் நடிகர் கமல்ஹாசன் படத்தில் நடிக்க முடியாத சூழல் உதயநிதிக்கு ஏற்பட்டுள்ளது. அமைச்சர் ஆகிவிட்டதால், அவர் நடிக்கும் வாய்ப்பை நழுவ விட்டிருக்கிறார்.
கமல்ஹாசனுக்கு அப்படியொரு வாய்ப்பு இதுவரை அமையவில்லை. அதனால்தான் அவர் இத்தனை படங்கள், பிக்பாஸ் எனத் திரையுலகில் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறார்.
இனியும் அப்படியொரு வாய்ப்பு அமையாமல் இருப்பது அவரது நடிப்பை விரும்பும் ரசிகர்களுக்கு நல்லது. ஒருவேளை அது கமலுக்கும்கூட நல்லதாகவே இருக்கலாம், யார் கண்டது?
Read in : English